முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கியமும் சாதியும்



பிராமண அழகியல் எனும் கற்பிதம் நீண்ட நாட்களாக இங்கு நிலவுகிறது. அதற்கு எந்த முகாந்திரமும், தர்க்கமும் இல்லை என்பதுதான் விசித்திரம்.

 பிராமணர்களின் புனைவில் ஒரு வழுவழுப்பான பிடிகொடுக்காத தன்மை, லசாராவின் தேவி வழிபாடு போன்ற ஒரு வித பெண்மை வழிபாட்டு மனநிலை, தி.ஜாவிடம் (பின்னர் பாலகுமாரனிடமும்) காணும் காமத்தை புனிதமாக்கும், புதிராக்கும், ரொமாண்டிக்காக பார்க்கும் போக்கு, எல்லா முகாம்களிலும் சென்று சமரசமாய் இருப்பதாய் சொல்லப்படுவது, “எலைட்டிசம்”, அடுத்தவர்களை சதா மட்டம் தட்டும், தன் அதிகாரத்தை ஏற்கக் கோரும்மேல்சாதித் திமிர்”, சொந்தசாதியினருடன் சுலபத்தில் சேர்ந்து முகாம் அமைப்பது இப்படி பல போக்குகளை அடையாளப்படுத்தி சாடுகிறார்கள் இந்தபிராமண அழகியலை ஒழிப்போம்போராளிகள். ஆனால் பிராமண எழுத்தாளர்கள் மத்தியில் கூட இதற்கு நேரெதிராக எழுதினவர்கள் உண்டு. நீங்கள் தி.ஜாவையும் லா..ராவையும் ஜி.நாகராஜனையும் ஒரே தட்டில் வைக்க முடியும்? தான் வாழ்ந்த காலத்திலே சொந்த சமூகத்தினரால் ஒரு பைத்தியம் என முத்திரைகுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர் பாரதியார் - அவரிடம் பிற்போக்கான, முற்போக்கான கருத்துக்கள் இறைந்தது கிடக்கும். அவரை சாதியளவில் மதிப்பிடுவதென்ன கருத்தளவில் கூட - இதை ஏற்கிறவர் என - வரையறுக்க முடியாது.


என்ன கொடுமை என்றால் இதைப் படிக்கும்போதே உங்களுக்குத் தோன்றியிருக்கும் இந்த போக்குகள் எல்லா எழுத்தாளர்களிடமும், அவர்களின் முகாம்களிலும் உண்டே என

 

 உடனே நம்ஒழிப்போம்போராளிகள் பிராமணியத்தை பிற சாதியினரும் வரித்துக்கொண்டு அவர்களைப் போலவே எழுத முயல்கிறார்கள் என்கிறார்கள். இது எம்.என் ஶ்ரீனிவாசின் சமிஸ்கிருதவாதத்தை சமூகவியலில் இருந்து உருவி இலக்கியத்தில் பயன்படுத்தும் முயற்சி. ஆனால் இலக்கியத்தின் நோக்கமேதன்னைக் கடந்து செல்வதுஎன்பதால் இலக்கியத்தில் சமிஸ்கிருதவாதமெல்லாம் இல்லை என்பேன். அதாவது ஒரு மத்தியசாதி / தாழ்ப்பட்ட சாதி படைப்பாளி பிராமண வழக்கை பயன்படுத்தினால், பிராமண மதச்சடங்குகளை பின்பற்றினால் அது பிராமணியத்தை தழுவுவது ஆகும். ஆனால் இலக்கியத்தில் இது அப்படியல்ல என இலக்கியம் குறித்து அடிப்படை அறிவு கொண்ட யாரும் சொல்வார்கள்.


இந்த நோக்கு ரொம்ப ஆபத்தானது என நினைக்கிறேன் - நீங்கள் பிராமணர்களின் படைப்புகளில் வெளிப்படுவதுபிராமண அழகியல்எனச் சொன்னால் அது மறைமுகமாக ஒவ்வொரு சாதிக்காரனும் தன் சாதி அழகியலையே தன் படைப்புகளில் வெளிப்படுத்துகிறான் என ஆகி விடும். அதை யாருமே ஏற்க முடியாது.

சாதி அரசியலை ஒட்டி ஒரு படைப்பை பகுப்பாய்வு செய்வதை புதுமைப்பித்தனுக்கு ராஜ் கௌதமன் செய்துள்ளார். காலனிய காலத்தில் தோன்றிய அரசியல் சமூக நகர்வுகளை ஆதாரமாய் காட்டி எப்படி வரலாறு மாறி வந்துள்ளது, அதனால் வெள்ளாளர்களின் சமூகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்புகள், தத்தளிப்புகள் என்ன, அவை எப்படி இலக்கியத்தில் வெளிப்படுகிறது என அவர் தரவுகளுடன் விவரிக்கிறார். இந்த வாசிப்பும் முழுக்க ஏற்புடையது அல்ல என்றாலும் அவர் உருவாக்குகிற வரலாற்றுச்சித்திரம் ஆழமானது எனும் அளவுக்கு முக்கியமானது.

இதை வைத்து நாளை ஒருவர் இங்கு ஒரு வெள்ளாள மனப்பான்மை உள்ளது, அதை எல்லா வெள்ளாள கவிஞர்கள், புனைகதையாளர்களின் படைப்பிலும் பார்க்கலாம் எனக் கூற முடியுமா? முடியாது. வெள்ளாளர்களிடம் பரவலாக பிராமணிய எதிர்ப்பும், தமிழ்தேசியப் போக்கும் உண்டு என ராஜ் கௌதமனை வைத்து ஒருவர் கூறலாம். ஆனால் இவை இரண்டும் இல்லாத வெள்ளாள எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும்

இப்படிப் பேசுவது நாடார்கள் வியாபார மனநிலை கொண்டவர்கள், செட்டியார்களில் இதிலேயே சற்று வித்தியாசமானவர்கள், தென்மாவட்டத்துக்கு சமூகத்தினர் வன்முறையாளர்கள், குமரிமக்கள் மலையாள மனப்பான்மை கொண்டவர்கள் என ஆளாளுக்கு முத்திரை குத்துவதில் போய் முடியும். இவர்களிடம் உரையாடும் போதே இந்த தேய்வழக்கை மீறி ஆயிரமாயிரம் முரண்கள் இவர்களிடமே இருப்பதே, இந்த முரண்களைக் கடந்து நம்மைப் போன்ற மனிதர்களே இவர்கள் எனக் காண்கிறோம். வாழ்க்கையிலே இப்படி எனில் இலக்கியத்தில் இவர்கள் சாதியைக் கடக்காவிடில் ஒரு ஆழமான பிரதியை உருவாக்கவே முடியாது

ஒரு சமூகத்தின் கலாச்சாரக் கூறுகள் ஒரு படைப்பாளியிடம் வெளிப்படலாம், அது அவன் வளரும் சூழலினால் தோன்றுவது, மரபணுவால் அல்ல. இங்குதான் நான் ஜெயமோகனிடம் இருந்து மாறுபடுகிறேன்: அவர் தொடர்ந்து எழுத்தாளர்களை அவர்களது சமூகப்பின்னணியை வைத்து உளவியல் வரையறை செய்கிறார் - தன்னையே நாயர் உளவியல் கொண்டவன், கட்டுப்படுத்த முடியாத கோபமும், தொடர்ந்து அலைகழியும் மனநிலையும் கொண்டவன் என்கிறார். (ஆனால் ரொம்ப நிதானமான சாதுவான நாயர்களையும் நான் கண்டிருக்கிறேன்.) அண்மையில் ராஜன் குறையை கடுமையாய் தாக்கி ஜெ.மோ எழுதின கட்டுரைகளிலும் பிராமண உளவியலை அவர் வரையறுத்து, அதுவே ராஜன் குறையிடம் வெளிப்படுகிறது என்றார். காந்தியிடம் வெளிப்பட்டது பனியா சமூகத்தின் சமரசப் பேச்சுவார்த்தை உளவியல் தந்திரமே, அதுவே பின்னர் அஹிம்சைக் கோட்பாடாக உருப்பெற்றது என்றார். இந்த சித்திரம் அபத்தமானது. ஒரு பனியா அரசியலில் வந்தால் காந்தி ஆக முடியுமா? எனில் ஏன் மற்ற பனியாக்கள் பாஜகவில் சேர்ந்து வன்முறையைக் கோரும் அரசியலை முன்னெடுக்கிறார்கள்? ஏன் இன்னும் ஆதரிக்கிறார்கள்? இதைச் சொல்லும் போதே ஏன் இந்துத்துவாவை கடுமையாய் எதிர்க்கும்பனியாக்களும்இருக்கிறார்களே என்றும் கேட்க வேண்டும்.

 பிராமணர்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நிலையை மாற்றி தம் அதிகாரத்தைப் பேண காய் நகர்த்துபவர்கள் என ஜெ.மோ சொல்வது உண்மை எனில் ஏன் நம் வரலாறு நெடுக பொறுமையின்றி வன்முறையில் குதித்து அரசியல் படுகொலைகள் செய்த பிராமணர்கள் வருகிறார்கள்? காந்தி என்கிற பனியாவைக் கொன்றது ஒரு பிராமணர் தானே? இன்றும் .பியில் உள்ள பிராமணர்கள் தமிழக பிராமணர்களைப் போல இல்லை - அண்மையில் என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே எனும் தாதா ஒரு பிராமணர். அவரை அங்குள்ள பிராமண சமூகம் ஒரு நாயக பிம்பமாக ஆக்கியிருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?


ஒவ்வொரு சமூகத்துக்கும் குறிப்பிட்ட மொழிப்பிரயோகங்கள், தொன்மங்கள், வழக்காறுகள், நம்பிக்கைகள், செண்டிமெண்டுகள் இருக்கலாம். மரபுவழியாக அவர்களுக்கு ஒரு தோற்றமும் ஆளுமையும் தொகுக்கப்பட்டு உருவாகியிருக்கலாம். ஆனால் இது வெளிசமூகத்துக்கு அவர்களைப் பற்றி ஏற்படும் மனமயக்கமே. உள்ளே போய் பார்த்தால் இந்த வெளித்தோலுக்குப் பின்னே ஆயிரம் முரண்படும் வகைமைகள் இருக்கும். ஆனாலும் தமக்கென ஒரு தேய்வழக்கான பிம்பம் உருவான பின்னர் இச்சமூகத்தினரும் தம்மை அறியாமல் வெளியே இந்த பிம்பத்துக்கு, ஆளுமைத்தொகைக்கு ஏற்ப நடந்து கொள்ளத் தொடங்குவார்கள். இது சமூக உளவியல் அல்ல, சமூக பிம்பத்துடன் அவர்கள் கொள்ளும் ஒரு சமரசப் பேச்சுவார்த்தை. கமலஹாசன் தன்னைத் தொடர்ந்து பிராமணப் பின்னணியில் வரும் பரமக்குடிதேவராகக் கட்டமைக்க முயல்வதும் இப்படியான ஒரு பிரக்ஞைக்கு அப்பாலான ஒரு செயல்பாடே. இந்த இரண்டு சமூகங்களுக்கும் நடுவே தன்னை வைத்து தப்பித்துப் போகும் யுக்தியை கமல் மட்டுமல்ல நம்மைப் போன்ற பலரும் செய்கிறோம்


ஆனால் வெளியே இருந்து இதைப் பார்க்கிறவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது; தட்டையாக நம்மை சுருக்கிப் பார்ப்பதே அவர்களுக்கு அனுகூலம். என்னதான் இருந்தாலும் பிராமண புத்திதான் கமலிடம் வெளிப்படுகிறது எனத் தேடிப்பிடித்து நிரூபிக்க முயல்வார்கள், அடுத்தவரைக் குத்தும் இதே விரல் தம் கண்களை நோக்கியும் விரைவில் நீளும் எனப் புரிந்து கொள்ளாமல்.


செல்வேந்திரன் இந்த சாதி முத்திரை அஸ்திரத்தை ஜெயமோகனின் மேஜை டிராயரில் இருந்தே திருடியிருக்க வேண்டும். அதை வைத்து சு.வெவை அவர் சாதி அரசியல் கட்டத்துக்குள் சிறைவைத்து சம்பவம் செய்யப் பார்க்கிறார். இது ஒரு தனிப்பட்ட குத்துச்சண்டையாக இருக்கு வரையில் பிரச்சனையில்லை - ஆனால் இதை ஒரு இலக்கிய விமர்சன அணுகுமுறையாக அவரும், அவரை அடுத்து வேறு சிலரும் மாற்ற முயல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.


இலக்கியமும் வாழ்க்கையும் எப்போதும் இந்த சில்லறைத்தனங்களுக்கு அப்பாலே இருக்கிறது, இலக்கியக் காவலர்கள் தாம் தம் சில்லறைத்தனங்களைக் கடந்து வர வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...