முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தித் திணிப்பின் கதை: காங்கிரஸ்-பாஜக வித்தியாசம்



 1937இல் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைத்தது (ஆங்கிலேயரின் கண்காணிப்பின் கீழ் தான்). ராஜாஜி இங்கு இந்தி படிப்பதை கட்டாயமாக்க, பெரியார் தலைமையில் இரண்டு ஆண்டுகள் இதை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன, இரு போராளிகள் இறந்தனர், ஆயிரத்துக்கும் மேலானோர் கைது செய்யப்பட்டனர். 1939இல் காங்கிரஸ் கட்சி ஆட்சி விலகியதுடன், சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இந்திக் கல்வியை ரத்து செய்தார்.

 1963இல் அதிகாரபூர்வ மொழிகள் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி 1965க்குப் பிறகு இந்தியுடன் சேர்த்து ஆங்கிலமும் ஆட்சி மொழியாகபயன்படுத்தப்படலாம்”. இந்தபடலாம்தான் தென்னக்கத்தில் இந்தி திணிப்பு அச்சத்தை பரவலாக தோற்றுவித்தது. 1964இல் பிரதமர் நேரு காலமானார். லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். காங்கிரஸுக்குள் இருந்த இந்தி ஆதவாளர்கள் என்னதான் அழுத்தம் அளித்தாலும், நேரு ஒரு மிதவாதி, அவர் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக நீட்டிப்பதில் எதிரானவர் அல்ல, ஆனா; சாஸ்திரி அப்படியானவர் அல்ல. அவர் தான் இந்தியை மாநிலங்களில் கட்டாயமாக்கப் போவதாக, இந்தியை மத்திய அரசு பணிமொழியாக்கப் போவதாக தென்னிந்தியாவில் மக்கள் அஞ்சினர். இதை ஒட்டி, 1965இல் வெடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக வரலாற்றையே எப்படி மாற்றி அமைத்தது, தமிழ் தேசிய அரசில் பிரக்ஞையை வலுவாக நிலைபெறச் செய்தது என அறிவோம். 1966இல் சாஸ்திரி காலமானார். அடுத்து 1967இல் காங்கிரஸ் தமிழகத்தில் முறியடிக்கப்பட்டு, திமுக வெற்றி பெற்றது, இங்கு ஏற்பட்ட வலுவான மொழிப்பிரக்ஞை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 1967இல் திருத்த மசோதா ஒன்றை நிறைவேற்றி இந்திரா காந்தி ஆங்கிலமும் இணை மொழியாகத் தொடரும் என அறிவித்தார்.


 ஆனால் இத்துடன் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை - அண்ணாதுரையின் ஆட்சியின் கீழும் மும்மொழிக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்தன, அண்ணா இந்த கோரிக்கைகளை ஏற்று இருமொழிக் கொள்கையை கொண்டு வந்தார். அடுத்து 1986இல் பிரதமர் ராஜீவ் காந்தி தேசிய மொழிக்கொள்கையை கொண்டு வந்தார். இதன்படி எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகளில் திறக்கப்படும், இங்கு இந்தி கட்டாயமாக கற்பிக்கப்படும் எனக் கூறி திமுக போராடியது. 21 போராளிகள் தீக்குளித்து இறந்தனர். கலைஞர் கைதானார். இந்த போராட்டத்தின் முடிவில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என ராஜீவ் தமிழகத்துக்கு உறுதியளித்தார், விளைவாக நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் நிறுவப்படவும் இல்லை.


ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விலகி பாஜக வந்ததும் இந்தித் திணிப்பு என்பது இத்தகைய போராட்டங்கள், கருத்து மோதல்கள், சமரங்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளை மைய அரசு கைவிட்டு, டி-20 போல அடித்தாட ஆரம்பித்தது. 2014இல் பிரதமர் மோடி இனிமேல் அரசு அதிகாரிகள் இணையத்தில் வெளியிடும் செய்திகள், அறிவிப்புகள் இந்தியிலேயே இருக்க வேண்டும் என ஆணையிட்டார். தனது அதிகாரபூர்வ உரைகளிலும், வானொலி உரைகளிலும் மோடி இந்தியை முழுக்க பயன்படுத்தினார். இந்தி-இந்து-மோடி-தேசியம் எனும் நால்முனை இணைவு வெளிப்படையான, எந்த விவாதங்களுக்கும் உட்படாத சர்வாதிகார அரசியல் ஆனது. நீங்கள் இந்தியை கண்டித்தால் அது மோடியை கண்டித்ததாகவும், மோடியை கண்டித்தால் அது இந்துக்களை அவமதித்ததாகும், இந்துக்களை அவமதித்தால் அது தேசத்துக்கு எதிராக செயல்படும் துரோகச் செயலாகும். இன்று தமிழகத்தைத் தவிர பிற மாநில மக்கள் இந்த நான்கு கண்ணிகளில் எதற்கு எதிராகவும் பேச, எழுத, போராட அஞ்சுகிறார்கள். அப்படி ஒரு புனித கட்டமைப்பாக இந்தி இன்று உருவாகி விட்டது.


 2019 செப்டம்பரில் இந்தி நிவாஸின் போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாஇந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைக்கக் கூடிய, உலக அளவில் இந்தியாவுக்கு தனித்த அடையாளத்தை பெற்றுத் தரக்கூடிய மொழி இந்தியே.” என்றார். இது சர்ச்சையாகி, அங்கங்கே கடுமையான கண்டனங்கள் எழ, போராட்டங்கள் வெடிக்க ஷா தான் ஒரு கோரிக்கையை மட்டுமே வைத்ததாக பின்வாங்கினார். ஆனால் புலி பின்வாங்குவது பாயத்தானே! இதைத் தான் இப்போது இந்த புதிய கல்விக் கொள்கையில் முன்வைக்கப்படும் மும்மொழிக் கொள்கை, அதை ஒட்டி சம்ஸ்கிருதத்துக்கு மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, இந்தி ஆசிரியர்களை நாடு முழுக்க வேலைக்கு எடுக்க வைக்கப்படும் திட்டம், ஏற்கனவே இந்தியா முழுக்க இந்தி ஆசிரியர்களின் எண்ணிக்கை பெருக்கப்பட்டுள்ளது ஆகியவற்றில் நாம் காண்கிறோம். முதலில், கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி இருந்தாக வேண்டும் எனும் வலியுறுத்தல் கடுமையான எதிர்ப்பை சம்பாதிக்க அதை பாஜக அரசு திருத்தி இப்போது மூன்றாவது மொழியாக எம்மொழியும் இருக்கலாம் எனச் சொல்லி உள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே மறைமுகமாய் இந்தியைத் தவிர வேறு மொழியை நம் பிள்ளைகள் தேர்வு செய்ய முடியாத நிர்பந்த நிலையையும் பாஜக அரசு உண்டு பண்ணுவதைப் பார்த்தோம். கூடுதலாக, 2019இல் அமித் ஷா அளித்த விளக்கத்தையும் இந்த மும்மொழிக் கொள்கையின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்: “தாய் மொழியை ஒரு குழந்தை கற்க வேண்டும் என்றேன், ஆனால் தாய்மொழி என்றால் இந்தி மட்டும் அல்ல. என் சொந்த மாநிலத்தை சேர்ந்த குழந்தை என்றால் அது குஜராத்தியை தாய்மொழியாகக் கற்கலாம். ஆனால் மூன்றாவது மொழியாக இந்தியே இருக்க வேண்டும்.” பாஜகவின் பிரதான தலைவர் ஒருவரின் கூற்று இது. பாஜகவின் நேரடியான நிலைப்பாடும் இதுவே. 2017 ஏப்ரலில் இந்திய ஜனாதிபதி நாடாளுமன்றக் குழு ஒன்றின் பரிந்துரைக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தார் - “இந்த பரிந்துரைப்படி மனித வள அமைச்சகம் இந்தியை ஒரு கட்டாயப் பாடமாக்குவதற்கு எல்லா விதமான தீவிர முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.”  என்பதே ஜனாதிபதியின் கூற்று.

2014இல் மத்திய அரசின் பரிந்துரைகளில் ஒன்றான அமைச்சர்கள் இந்தியிலே உரையாற்ற வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்தியா முழுக்க இந்தியை கட்டாயமாக கற்றுக்கொடுக்காத பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனும் மற்றொரு பரிந்துரையை ரத்து செய்தார்.

பாஜகவின் இதுவரையிலான இந்த இந்தி திணிப்பு கூற்றுகளுக்கு மாறாக மும்மொழிக் கொள்கை இருக்க முடியாதில்லையா?


 காங்கிரஸ் முன்பு செய்ததைப் போல கட்டாய இந்திக் கல்வி மாநிலங்களுக்கு இல்லை என பாஜக கூறியதில்லை. ஆனால் கல்விக்கொள்கையில் கூடாரத்துக்குள் ஒட்டகத்தின் தலையைப் போல மூன்றாவது மொழி உங்கள் தேர்வு என சமத்காரமாகச் சொல்லி கொண்டு வருகிறது. இதைப் பற்றி நியூஸ் 18 சேனல் விவாதத்தின் போது எஸ்.ஆர் சேகரிடம் கேட்கப்பட்ட போது அவர் வெளிப்படையாகவேமூன்றாவது மொழிக்கான கட்டமைப்புகளை உருவாக்குவது, நிதியை சேகரிப்பது, ஆசிரியர்களை பயிற்சியளித்துக் கொண்டு வருவது மாநில அரசின் பிரச்சனை, அதை மத்திய அரசின் தலையில் உன்மத்தம் கூடாதுஎன்றார். ஆனால் சமிஸ்கிருதத்துக்கு சிறப்பு கவனம் கொடுத்து அதை வளர்ப்பதற்கான கட்டமைப்புகளை அளித்து, நிதியை வாரி வழங்கி, துரிதமாக பல லட்சம் சமிஸ்கிருத ஆசிரியர்களையும் மத்திய அரசு உருவாக்கும், அது தவறில்லை என அவர் கூறினார். இந்த முரணை நாம் கவனிக்க வேண்டும்.   

 


இப்படி சுதந்திரத்துக்குப் பின்னரும் காங்கிரஸ் கட்சி சமிஸ்கிருதத்தையும் இந்தியையும் முன்னெடுத்தாலும் தற்போதைய பாஜக அரசைப் போல வலுக்கட்டாயமாய் மக்கள் அனைவரும் இந்தி பேசியே ஆக வேண்டும் என அவர்கள் மிரட்டவில்லை. மற்றொரு பக்கம், காங்கிரஸார் தமக்கான ஒரு நிரந்தர ஓட்டு வங்கியை இந்த இந்தி நிலப்பரப்பைக் கொண்டு அவர்கள் உத்தரவாதம் செய்தனர். இதனால் பாதிக்கப்பட்ட அசலான இந்திய மொழிகள் பல.  


புத்தகத்தை கிண்டிலில் வாங்க: https://www.amazon.in/dp/B08HD9ZY14/ref=cm_sw_r_fa_apa_0sDuFbVS4BAVZ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...