முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தி மொழி வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டதா? (1)

 இந்தி என இன்று அறியப்படும் மொழி என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் கில்கிறிஸ்ட் எனும் வெள்ளைத் துரையால் தில்லி மற்றும் அதை ஒட்டின பகுதிகளில் பேசப்பட்ட கரிபோலி எனும் வட்டாரவழக்கில் சமிஸ்கிருதத்தைக் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழி. அவர் ஏன் இந்தியை உருவாக்கினார்?



பத்தொன்பதாம் கட்டத்தில் வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி மொழி பாரசீகக் கலவையால் உருதுவாக உருக்கொள்ளத் தொடங்கி இருந்தது. மற்றொரு பக்கம் ஹிந்துஸ்தானி மொழி வட்டார வழக்காக கரிபோலி பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்த மொழிகளுக்கு இடையே தெளிவான வித்தியாசங்களோ சட்டதிட்டமான வடிவங்களோ இல்லை. இந்த சந்தர்பத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இந்தியர்கள் இப்படி பல மொழி, பல கலாச்சார பிரதேசமாக விரிந்து கிடந்தது சிக்கலாக இருந்தது. அவர்கள் ஒரு மொழிக்குடையின் கீழ் இந்தியர்களை ஒற்றை அடையாளமாக வகுத்துக் கொள்ள விரும்பினர். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து மொழி அறிஞர்கள் பாலி, சமிஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்று தம் சொந்த மொழிக்கு வேதங்கள் மற்றும் மத நூல்களை மொழியாக்கிக் கொண்டிருந்தனர். மாக்ஸ் முல்லர், ஸ்கிளீகல், வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் உதாரணங்கள்.


 அவரைப் போல மேலும் பலர் அப்போது இருந்தார்கள். அவர்கள் இந்தியர்கள் பெரும்பாலும் இந்துக்கள், அவர்களின் மூலம்மொழி, புனித மொழி சமிஸ்கிருதம் என நம்பினர். அவர்களுக்கு இங்குள்ள வட்டார வழக்குகள், தொன்மையான மாற்று மரபுகள், அவைதீக மதங்கள், சிறுதெய்வ வழிபாடுகள் குறித்தெல்லாம் ஒன்று தெரியாது அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லை. அவர்கள் மேற்கில் உள்ள இஸ்லாமிய வெறுப்பை தமது இந்திய ஆய்வுக்குள்ளும் கொண்டு வந்தனர். இந்தியாவுக்கு ஒரு மகத்தான புராதான பழங்காலம் இருந்தது, அதன் பின்னர் மத்திய காலத்தில் இஸ்லாமியர்கள் படையெடுத்து வந்தது இந்தியாவின் பண்பாட்டையும், மதச்சின்னங்களையும் அழித்தார்கள், இது முடிந்து காலனிய காலத்திலே கிறித்துவர்கள் வந்து இந்தியாவை அதன் சீரழிவில் இருந்து காப்பாற்றி மீட்டெடுத்தார்கள் என ஒரு கதையாடலை அவர்கள் வரலாறாக கட்டமைத்தார்கள். (இன்று இந்துத்துவர்கள் முன்வைக்கும் இஸ்லாமிய வெறுப்பு வரலாறு என்பது Indologists என அறியப்படும் இந்த கிறித்துவ காலனியாத இந்திவியலாளர்கள் கட்டமைத்ததே.)


 இந்த இந்தியவியலாளர்கள் ஒருவிதத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு தலைவலியாக அமைந்தார்கள். இந்தியர்களின் தாய்மொழி சமிஸ்கிருதமே, ஆகையால் அதுவே அவர்கள் ஆட்சிமொழியாகவும் இருக்க வேண்டும் என இந்தியவியலாளர்கள் விரும்பினார்கள். ஆனால் இந்தியாவை ஆட்சி செய்ய, அது குறித்து ஆராய்ந்து நிர்வாகம் செய்ய ஆங்கிலேயர்களுக்கு இந்திய நிர்வாகிகளின், அறிவுக்கூலிகளின் படை ஒன்று தேவைப்பட்டது. இவர்கள் சமிஸ்கிருதம் பேசினால் வேலைக்காகாது அல்லவா? அப்படித்தான் மெக்காலே வருகிறார் - அவர் 1835இல் ஆங்கிலேயக் கல்வி சட்டத்தை கொண்டு வருகிறார். இது அடுத்த தலைமுறை இந்தியர்கள் எப்படி தோற்றத்தில் கறுப்பர்களாகவும் மனத்தளவில் வெள்ளையராகவும் இருக்க வேண்டும், அவர்கள் ஆங்கிலேயே இலக்கியம், தத்துவம் போன்றவற்றை பயின்று பண்பாட்டில் மேம்பட வேண்டும் - அதாவது அவர்கள் சமிஸ்கிருதம், வேதம் படித்து இந்தியவியலாளர்களைப் போல மீட்புவாதத்தை முன்னெடுக்காமல் நவீன கல்விக்குள் வர வேண்டும் எனக் கோரியது.


 இது இந்திவியலின் மீட்புவாதிகளில் செவிட்டில் பளிச்சென்று அடித்ததைப் போல ஆனது. அவர்கள் மெல்ல மெல்ல முடங்கினர். இன்றைய இந்தி-ஆங்கில சர்ச்சைகளின் அடிநாதமே இங்குதான் துவங்குகிறது. ஆங்கிலம் படித்தால் நான் அறிவியலை, பகுத்தறிவைக் கற்கலாம், உலக அளவில் உயரலாம், ஆங்கிலம் என்னை வேற்றுமையின்றி அணைத்துக்கொள்கிறது, உங்கள் சமிஸ்கிருதம் அதை செய்யுமா? என அ.ராசா கேட்பதன் வரலாற்றுப் பின்னணி இதுவே. மெக்காலே தனது சுயநலத்துக்காக ஆங்கிலக் கல்வியை கொண்டு வந்தாலும் அதன் பலன்களை அதிகமாய் இந்திய மத்திய வர்க்கம் பெற்றது. இங்கு மகத்தான வளர்ச்சி ஏற்பட்டது. அம்பேத்கர் போன்ற தலித் போராளிகள், தலித் தத்துவ அறிஞர்கள், காந்தி, தாகூர், நேரு போன்ற தேசியவாதிகள், சாவர்க்கர் போன்ற இந்து தேசியவாதிகள் ஒருவிதத்தில் மெக்காலே அமைத்துக்கொடுத்த இந்த ராஜபாட்டையில் நடையிட்டு முன்னேறி வந்தவர்களே. ஆங்கிலக் கல்வி இம்மக்களை வெள்ளையருக்கு அடிமையாக வைக்காமல் எதிர்த்து விடுதலைக்குப் போராட வழிவகுத்தது என்பதே நகைமுரண்.


 ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் மொழிக்கொள்கை குறித்த விவாதங்கள் மீண்டும் தோன்றின. மெக்காலே துரத்திய இந்தியவியலாளர்களின் சமிஸ்கிருத சார்புவாதம், மென் இந்துத்துவா இங்கு முளைவிட்டது. இது எப்படி நடந்தது?


(புத்தகத்தை கிண்டிலில் வாங்க: https://www.amazon.in/dp/B08HD9ZY14/ref=cm_sw_r_fa_apa_0sDuFbVS4BAVZ)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...