Skip to main content

பன்மொழிக் கொள்கையின் அபத்தம்




 பன்மொழிக் கல்வி என்பது கொள்கை அளவில் நியாயமானதே, ஏற்கத்தக்கதே, ஆனால் மேலும் வடிவேலு சொல்வதைப் போல, “உங்கிட்ட பினிஷிங் சரி இல்லையேப்பா”. நீங்கள் இதுவரை தமிழகத்துக்கு பிரஞ்சு, ஜெர்மன், அல்லது இந்தி, சமிஸ்கிருதம் தவிர்த்த இந்திய மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்திருப்பதாகவோ அவர்களை வேலைக்கு எடுத்துள்ளதாகவோ எதிர்காலத்தில் அதற்கு ஒரு காலக்கெடு விதித்திருப்பதாகவோ தெரியவில்லை. ஆக, டிமானிடைசேஷன் போல சரியான திட்டமிடல் இன்றி முரட்டுத்தனமாக சட்டங்களை நிறைவேற்றுகிற நீங்கள் இதையும் அப்படியே செய்து விடுவீர்களோ என அஞ்சுகிறோம். அந்த அச்சத்துக்கான முகாந்திரமும் இருக்கிறது. இத்திட்டம் நடைமுறையில் வரும் போது உலக மொழிகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெரும் தட்டுப்பாடு வரும். தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, வங்காளம், குஜராத்தி, மராத்தி போன்ற மொழிகளைச் சொல்லித் தர ஆசிரியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இந்த மொழிகளிலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கு உள்ள செல்வாக்கு பிற மொழிகளுக்கு தமிழகத்தில் இருக்கப் போவதில்லை. ஆனால் இம்மொழிகளிலும் போதுமான ஆசிரியப் பயிற்சி பெற்றவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்? இப்போதைக்கு இந்தி, சமிஸ்கிருத ஆசிரியர்களே அதிகமாக இருப்பர். ஆக, இந்த மும்மொழித் திட்டத்தை அவசரமாக இப்படித் திணிப்பதன் மூலமாக பாஜக அரசு தமிழர்களை இந்தி மற்றும் சமிஸ்கிருதத்தைக் கற்கும் நெருக்கடியை நோக்கி மறைமுகமாக தள்ளுகிறது என்பதே உண்மை.


ஒரு உதாரணம் தருகிறேன்:

மாணவர்கள் கற்கப் போகும் மூன்றாவது மொழி என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள எந்த மொழியாகவும் இருக்கலாம், இம்மொழி ஆசிரியர்கள் நாடு முழுக்க நியமிக்கப்பட அரசு ஆவன செய்யும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது (4.12). ஆனால் அதே நேரம் மும்மொழி கொள்கையின் ஒரு இலக்கு என்பது தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பது என இது குறிப்பிடுகிறது (4.13). தமிழகத்தில் ஒரு மாணவன் தமிழ், ஆங்கிலத்துடன் தெலுங்கோ மலையாளமோ கற்றால் எப்படி தேசிய ஒருமைப்பாடு சாத்தியமாகும்? தேசிய ஒருமைப்பாடு என்பதே மக்களை மொழி, இடம் கடந்து இணைப்பது தானே? இப்போதைக்கு பாஜக அரசு அது இந்தியாக மட்டுமே இருக்க முடியும் எனும் போது இரு திராவிட மொழிகளை ஆங்கிலத்துடன் படிப்பது எப்படி அது தேசிய ஒற்றுமைக்கான வழியாக அங்கீகரிக்கும்? அதாவது ஒரு பக்கம் எந்த மொழியையும் ஒரு மாநிலத்தின் மீது திணிக்க மாட்டோம் எனச் சொல்லியபடியே அவர்கள் பழத்தில் ஊசியைப் போல இந்தியை தேசிய ஒருமைப்பாட்டின் பெயரில் மறைமுகமாக திணிப்பதை கவனியுங்கள்.

இதற்கு அடுத்ததாக, “மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாக சமஸ்கிருதம் பள்ளிக் கல்வித்திட்டத்தின் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கிய வளமூட்டக்கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும்” என்று வேறு சொல்கிறது - அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமமாக பாவிக்கப்படும் என்று சொல்லிக் கொண்டே இந்தியாவின் ஆட்சி மொழியாகவோ, மக்களின் பேச்சு மொழியாகவோ இல்லாத சமிஸ்கிருதத்துக்கு ஏன் இவ்வளவு தனி முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்? இந்த முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களே இந்த கல்விக்கொள்கையின் அரசியல் குறித்த சந்தேகங்களுக்கு வளமிடுகின்றன.

ஒரு பக்கம் எந்த மொழியையும் கற்பியுங்கள் என்றபடியே இந்திக்கும் சமிஸ்கிருதத்துக்குமான ஆசிரியர்களை அதிகமாய் பயிற்சி அளித்து நியமித்துக் கொண்டு போனால் மறைமுகமாக அது சொல்வதொன்று செய்வதொன்றாகவே முடியும். தமிழக மாணவர்கள் இந்தி / சமிஸ்கிருத கருவறைகள் முன்பு வரிசையாக நின்று, ஐயர் வந்து மணியடித்து சூடம் காட்ட, வாயைப் பொத்தி தரிசனம் பெற வேண்டிய அவலம் ஏற்படும்.

போதுமான மொழி ஆசிரியர்கள் இல்லாதது எங்கள் தப்பல்ல என பாஜக ஆதரவாளர்கள் சொல்லித் தப்பிக்க முடியாது. ஏனென்றால், ஒரு திட்டத்தை திணிக்கும் போது அதைப் பின்பற்றுவதற்கான தயாரிப்புக்கான அவகாசத்தையும் நீங்களே வழங்க வேண்டும். போதுமான மனித வளத்தையும் நீங்களே உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் கைகால்களைக் கட்டி எங்களை நீந்து என கடலுக்குள் தள்ளுவதைப் போல ஆகும். நீங்கள் எங்களுக்கு கோழிக்கறி, மட்டன் வறுவல், கூடவே தயிர்சாதம், சாம்பார் சாதம் என அறுசுவை விருந்து படைக்கிறீர்கள். பார்த்தீர்களா, நீங்கள் அசைவர்கள் என்று தெரிந்தே கோழிக்கறி, மட்டன் எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறோம் என மார்தட்டிக் கொள்கிறீர்கள். ஆனால் கறியை எடுத்து வாயில் போட்டால் உப்புக்கரிக்கிறது. சாப்பிட முடியவில்லை. இப்போது வேறு வழியின்றி நாங்கள் தயிர்சோறு, சாம்பார் சாதத்துடன் திருப்திப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். மும்மொழிக் கொள்கையிலும் பாஜகவினர் நீங்கள் இதையே எங்களுக்கு செய்கிறீர்கள்.


(புத்தகத்தை கிண்டிலில் வாங்க: https://www.amazon.in/dp/B08HD9ZY14/ref=cm_sw_r_fa_apa_0sDuFbVS4BAVZ)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...