முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரியாரின் Fight Club

"சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும் ஆளாயிருத்தல் கூடாது. கட்டுப்பாடுகளுக்கு அடங்கிய சீர்திருத்தம் என்பது ... சிறிதும் பயனற்றது."
- பெரியார்
பெரியார் ஏன் சிறுவயதுப் பெண்ணை தன் முதிய வயதில் மணமுடித்தார் எனும் கேள்விக்கான பதில் மேற்சொன்ன கூற்றில் உள்ளது.
பெரியார் சொல்லும் கட்டுப்பாடானது சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் சமூக உளவியல் கட்டுமானங்கள். 
சொல்லப்போனால் திருமணத்தை நம்புவதும் அபத்தமே. அது தரும் சட்டரீதியான பாதுகாப்பைத் தவிர என பெரியார் நம்பியிருப்பார் என அவரது "பெண் ஏன் அடிமையானாள்?" நூலைப் படிக்கையில் தோன்றுகிறது.

திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை, அதைத்தாண்டி திருமணத்தில் எந்த புனிதமும் இல்லை என அவர் சொல்லுகிறார். அதில் லட்சியங்களுக்கும் இடமில்லை. திருமணம் பரஸ்பர ஆதரவுக்கான, பாதுகாப்புக்கான, குழந்தைப் பேறுக்கான, பணத்துக்கான ஒரு உடன்படிக்கையாகவும் இருக்கலாம். சம்மந்தபடும் ஆண்-பெண்ணுக்கு ஏற்புடையதெனில் அது சரியே. இல்லையெனில் உடைத்து விடலாம். ஒரு வர்த்தக உடன்படிக்கையின் போது நடப்பதுதான் திருமணத்திலும் நடக்கிறது. 

இந்த அனார்க்கிசக் கருத்தை ஏற்க முடியாதவர்களே பெரியார் இளம்வயதுப் பெண்ணான மணியம்மையை மணமுடித்ததைச் சாடுகிறார்கள். திருமணத்தை ஒரு சமூகக்கட்டமைப்பாக முன்னெடுத்து, அதை வைத்து இன்றுள்ள அரச, பொருளாதார இயக்கங்களைக் குறித்த மாயைகளைக் கட்டமைப்பது, நியாயப்படுத்துவது அவர்களுக்கு அவசியமாக இருக்கிறது. பெரியார் இந்த பாவனைகளை உடைத்தார்.

 இங்கு அனேகமாய் எல்லா திருமண உறவுகளும் உள்ளுக்குள் ஒரு 'குறுகின'  நோக்கத்துக்கு உட்பட்ட, எளிய தேவைகளை நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்ட  உடன்படிக்கையாய் தான் இருக்கிறது - பெண்ணுக்கு ஆண் எல்லாம் செய்வது, ஆணுக்குப் பெண் எல்லாம் செய்வது என இருப்பதில்லை; அது ஒரு கனவு, எதார்த்தமில்லை.

திருமணத்தின் மீது ஏற்றப்பட்ட லட்சியங்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகளை உடைத்தாலே பெண்கள் - கூடவே ஆண்களும் - விடுதலை பெற்று விடுவார்கள்.

ஒரு extreme ஆன உதாரணம் தருகிறேன்.
 செக்ஸ் இல்லாத திருமணங்கள் இங்கே எத்தனை? மிக மிக அதிகமாய். ஆனால் வெளியே ஒரு நாடகத்தை போட்டுக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். செக்ஸ் இல்லாவிட்டால் என்ன குழந்தைக்காக வாழ்வோம், வசதிக்காக, பாதுகாப்புக்காக வாழ்வோம் என சமாதானம் கொள்கிறோம். ஆனால் வெளிப்படையாக இதைச் சொல்லாமல் நாடகத்தைத் தொடர்கிறோம். இதை மறைக்காமல் பேசி வைத்துக் கொண்டால் - திருமணம் ஒரு சாதாரண ஒப்பந்தம் மட்டுமே என நம்பிக்கொண்டால் - இப்போதுள்ள பல மனக்கசப்புகளில் இருந்து கொலைக்குற்றங்கள் வரை ஆண்-பெண் உறவில் இராது. வாழ்க்கையில் பசப்பு, சுய ஏமாற்று, பாசாங்கு, அதனாலான துன்பங்கள் இராது. யாரையோ மனதளவில் அண்டியிருந்து பின்னர் நாசமாய்ப் போக வேண்டி வராது.

பெரியார் இதற்கு எல்லாம் அவசியமில்லை என நினைத்தார். தன் இதயம் சொல்வதை, தன் பகுத்தறிவு ஏற்றதை செய்தார். நியாயம் என்பதை ஒழுக்கத்துடம் பிணைக்கும் போது அது போலித்தனமாகும், போலித்தனத்துக்குப் பணிவதே நம்மை பயந்து நடுங்க, ஊருக்கு அடங்கிப் போகச் செய்கிறது. திருமணம் குறித்த அரசியல் அழுத்தம் ஏற்பட பெரியார் அதையும் புறக்கணித்தார். 

ஒரு கேள்வி: ஒரு ஆண் தன் தேவைக்கேற்ப ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் அதனால் பெண் பாதிக்கப்பட மாட்டாளா? பெண்கள் கவனமாய் இருந்தால் மாட்டார்கள், பெண்களின் தரப்பில் இருந்து ஆண்களே முடிவெடுத்து அவர்களைக் காப்பாற்றுவதாய் நினைத்து முனைவது ஏமாற்றுத்தனம் என பெரியார் சொல்கிறார் - பெண் விடுதலை பெண்களின் பொறுப்பு, அதை ஆண்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். மணியம்மையின் முடிவை மணியம்மை தான் எடுக்க வேண்டும். எடுத்த பின் அதை ரத்து செய்யவும் அவருக்கு உள்ள உரிமையை பயன்படுத்திக் கொள்ளலாம். தனக்கு சமத்துவமில்லை என நினைத்தால் அவர் அதை எதிர்க்கலாம். அது அவரது பொறுப்பு. பெரியார் அவரை விடுதலை செய்கிறேன் என பொய்யுரைக்க மாட்டார். அதுதான் பெரியார். பெண்களுக்காய் யோசிக்கிற ஆண் நான் எனும் பாவனைகளைப் புனைய மாட்டார். "பெண் ஏன் அடிமையானாள்?" நூலில் இதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

காந்தியால் கூட அது முடியவில்லை. கஸ்தூர்பாவிடம் இருந்து பிரிந்து, சரளாதேவி எனும் பெண்ணை மணமுடிக்க நினைத்து பின்னர் அரசியல் நண்பர்களும், ஆதரவளர்களும் அறிவுரைக்க அவர் பின்வாங்கினார். போலியாக இணைந்து வாழ்ந்தார். காந்தி தன் உண்மையை வெளிப்படையாக வைத்தவர். ஆனால் பெரியாரோ காந்தியை விட உண்மையானவர். சமரசங்களில் நம்பிக்கை இல்லாதவர் - இதனால் தான் அவரை அனார்க்கிஸ்ட் என்கிறேன். 

நாம் Fight Club போன்ற படங்களில் பார்த்து ரசித்த விசயங்களை அன்றே செய்து பார்த்தார், சிந்தனை, அரசியல் உலகில் பெரியார் - ஒரு ஆண் ஆணாக இருந்தாலே பெண்கள் தம் போக்கில் நிம்மதியாக சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வார்கள். பெண்களும் பசப்பில்லாமல், ஒழுக்க பாவனைகள், லட்சிய கிரீடம் அணியாமல் தன் தேவையை தெரிவிக்கும் - ஆண் விலங்காக இருக்கும் - ஆண்களையே விரும்புகிறார்கள். (கலாச்சார விலங்குகளே பெண்கள் மீதான வன்முறையில் ஈடுபடுவார்கள், ஆண் விலங்குகள் அல்ல) எல்லா பிரச்சனைகளும் அவர்களின் வாழ்வில் நாம் மூக்கை நுழைத்து நியாயம் பேச நினைக்கும் போதே ஆரம்பித்தது. 

பெரியார் இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர் என்பதே சிறப்பு. கோகுல் தனது ஒரு பதிவில் சொல்வதைப் போல பெரியார் ஒரு ஆல்பா மேல் தான், குற்றவுணர்வு, பயமில்லாத ஆல்பா மேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...