Skip to main content

தமிழ் தேசியத்தின் மீது எழுதப்படும் கணக்குகள்

தமிழ் தேசியத்தின் மீது எழுதப்படும் கணக்குகள்

தமிழ் தேசியம் குறித்து பேராசிரியர் ராஜ்குறைக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் இடையிலான பேஸ்புக் நேரலை விவாதத்தைக் கேட்டேன். அதில் ராஜன்குறை சொல்கிற பெரும்பாலான விசயங்களுடன் உடன்படுகிறேன் - திராவிடம் என்பது ஒரு முற்போக்கான, மற்றமை மீதான வெறுப்பற்ற கூட்டமைப்பு தத்துவம், ஆனால் அந்த முற்போக்கும், அரவணைப்பும் தமிழ் தேசியம் என வரும்போது இல்லாமல் ஆகி விடுகிறது, குறிப்பாக தமிழ் தேசியம் பிறப்பு அடிப்படையிலான அடையாள அரசியலாகும் போது, அது இறையாண்மை தத்துவமாக உருவாகும் போது ஆபத்தான ஒன்றாகிறது எனக் கூறுகிறார். இறையாண்மையை சுய-இறையாண்மை, சுய-ஆட்சி என (காந்திய பார்வையில்) உள்முகமானதாக அவர் வரையறுக்கிறார். இறையாண்மைக்கு “இன்னொரு பெயரும்” உண்டு - தேசியம், மற்றமை மீதான வெறுப்பரசியல், ராணுவம் போன்ற வன்முறை, ஒடுக்குமுறை கருவிகள் இந்த கொடூர இறையாண்மைக்கு இருக்கும் (காங்கிரஸ் முதல் பாஜக வரையிலான பல இந்தி-இந்தி தேசியங்கள்) என்கிறார். 
எனக்கிருந்த மாற்றுக் கருத்து திராவிட அடையாளம் என்பது ஒரு மகத்தான நோக்கத்திற்காக மட்டுமே ஏற்பட்டிருக்காது என்பது. அதற்குப் பின்னால் உயர்சாதி, மத்திய சாதி மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் ஆகியோரின் ஒருங்கிணைப்புக்கான நோக்கமும் உண்டு என பலரும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ராஜன்குறை இதன் ஒரு நேர்மறையான லட்சியபூர்வ பக்கத்தை மட்டும் காட்டுகிறார். அதுவும் தேவைதான் நான் மறுக்கவில்லை. ராஜன்குறை பேசும் போது மொழிவெறுப்பற்ற ஒரு பண்பாடு நமக்குண்டு என்கிற தெளிவு ஏற்பட்டது. திராவிட இயக்கம் இங்கு தோன்றி தழைப்பதற்கு தமிழரின் பண்பாட்டிலேயே பல்லடையாள, பன்மொழி இருப்பை ஏற்கிற பண்பு இருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 
தமிழுணர்வை அண்ணா பிறப்பால் அன்னியராக இருப்போரிடத்தான வன்மம் இன்றி முன்வைத்தார் என ராஜன்குறை சொல்வதும் உண்மைதான். இது லட்சியம் - ஆனால் நடைமுறையில் இப்படித்தான் இருந்திருக்குமா?
 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பிறப்பால் மாற்றுமொழியைக் கொண்ட தமிழுணர்வாளர்கள் பங்கேற்றார்கள் என்பது உண்மை தான். ஆனால் இந்தி-இந்தியா vs தமிழ்-திராவிடர் எனும் ஒரு இருமை அங்கு தோன்றும் போது இயல்பிலேயே அது இந்திய இறையாண்மை மீதான அச்சமாக, மிக மென்மையான வன்மமாகத் தானே மாறியது; ஒரே வித்தியாசம் பாதிக்கப்பட்டவர் எனும் இடத்தில் நம்மை வைத்திருந்தோம், இப்போதும் வைத்திருக்கிறோம். அதே நேரம் இந்தி பிரச்சார சபைகள் இங்கு தழைக்கவும் அனுமதித்திருக்கிறோம். “இந்தி தெரியாது போடா”, “இந்தி ஒழிக” போன்ற பிரச்சாரங்கள் “இந்திக்காரர்கள் ஒழிக” என மாறவில்லை. நமது வரலாற்று நாவல்களில் சேர மன்னர்கள் (பாண்டியர், சோழருக்கு இணையாகவே) சதிகாரர்களாக ஆக்கிரமிப்பாளர்களாக வருவதுண்டு, ஆனால் அது மலையாள வெறுப்பாக காட்டப்பட்டதில்லை. பல்லவ மன்னர்களைக் கூடப் போற்றியிருக்கிறோம். யோசித்துப் பார்க்கும் போது இம்மண்ணில் பிறந்ததற்கு சற்றே பெருமைப்படலாம் எனத் தோன்றுகிறது.

இந்திய இறையாண்மை உள்முகமாய் தோன்றி சமூகநீதிக்கான மாற்றமாக வளர்ந்து பின்னர் அதிகாரக் குவிப்பைக் கோரும் இந்திய தேசியமாக மாறியிருக்கிறது என ராஜன்குறை கூறுகிறார். வரலாற்றைப் பார்க்கும் போது இந்த இரு போக்குகளும் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரசுக்குள் இணைந்தே வளர்ந்திருக்கிறது எனத் தோன்றுகிறது. காங்கிரஸில் இஸ்லாமியருக்கு சமத்துவம் கிடைக்க வாய்ப்பில்லை என ஜின்னா சும்மாவொன்றும் கூறவில்லையே? அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கினாலும் மேற்தட்டு, மேல்சாதி, பிற்போக்குத் தலைவர்களை கணிசமாகக் கொண்ட கட்சியாகத் தான் காங்கிரஸ் இருந்தது. (பட்டேல் அந்த கும்பலுக்குத் தலைவராக இருந்தார்.) அதே கும்பல் தான் காந்தியின் கோரிக்கையை மறுத்து இந்தியை தேசிய, ஆட்சி மொழியாக்க வேண்டும் எனக் கோரினர்; அதற்கு செவிசாய்த்து காங்கிரஸ் தனக்குள் இருக்கும் ஆதிக்கவாத இறையாண்மைக்கு வளமிட்டது. 1947க்குப் பிறகு காங்கிரஸ் செய்த எதுவுமே புதிதில்லை. அவற்றுக்கான வேர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நம் வரலாற்றில் இருந்தது. கோட்சே ஆரம்பத்தில் ‘காங்கிரஸ்’ ஆதரவாளர் தானே. பிரிவினையின் போது தோன்றிய இஸ்லாமிய-பாகிஸ்தானிய வெறுப்பலை என்பது அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் இந்திய இறையாண்மை தோற்றுவித்த ஒன்றல்ல. அதற்கு முன்பே அது இங்கு இருந்தது. இந்துத்துவர்கள் வந்து சேர்ந்துள்ள இடத்துக்க்கான துவக்கப்புள்ளி அன்றைய காங்கிரசில் நிச்சயமாக உள்ளது. எனில் இறையாண்மை எப்போதும் இத்தகைய உள்முரணான, அந்நியன்-அம்பி சங்கதியாகத் தான் இருந்தாக வேண்டுமோ? இது நான் ராஜன்குறையிடம் கேட்க விரும்பும் கேள்வி.

தேசிய அரசியல் இப்படித்தான் உள்முரண்களுடன் - சமூகநீதி, ‘அந்நிய வெறுப்பு’ என - வளர முடியுமெனில், இஸ்லாமியர்களை வெறுத்து ஒடுக்கியபடியே அவர்களை அரவணைத்து ஒன்றிணைத்து காங்கிரஸின் இறையாண்மையால் செய்ய முடிந்தது எனில், மிக பிற்போக்காய் இருந்தபடியே முற்போக்கையும் ஏற்க முடிந்தது எனில், அதுவே எதார்த்தம் எனில், மற்ற அடையாளவாத தேசியவாதங்களால் அது ஏன் முடியாது?
 உ.தா., கடந்த இருபதாண்டுகளில் இங்கு பல தமிழ் தேசிய அமைப்புகள், கட்சிகள் தோன்றி உள்ளனர்; அவர்களில் சிலர் தெலுங்கு போன்ற மாற்று மொழியை பிறப்படையாளமாய் கொண்டவர்களை எதிர்த்து பேசுவதுண்டு. அதனால் இங்கு தெலுங்கர்கள் தாக்கப்பட்டதுண்டா? இல்லையே. இந்த இயக்கங்கள் வளர்ந்தால் அப்படியான ஒரு வன்முறைக் கலாச்சாரம், அரசியல் தோன்றும் என்பதையும் நான் ஏற்கவில்லை. அப்படி ஆகும் என நினைப்பது உள்ளும் புறமும் ஒன்றே எனும் அமைப்புவாத சிந்தனை. உள்ளுக்கும் புறத்துக்கும் அப்படியான நேரடியான தொடர்பு இருப்பதில்லை - சித்தாந்தம், சிந்தனை, கருத்துக்கள் ஆகியவை நமது நடவடிக்கைகளுக்கு தூண்டுகோலாக அல்லாமல் ஒரு வெற்றுக் குறிப்பானாகவே இருக்கின்றன. இக்குறிப்பானின் நோக்கம் மக்களைத் திரட்டி அதிகாரத்துக்கு எதிராகப் போராடுவதே. உ.தா., திராவிடக் கொள்கை என்பது தமிழக அரசியலில் ஒரு வெற்றுக் குறிப்பான், அது வழிகாட்டும் வேதம் அல்ல. அதனாலே திராவிடத் தலைவர்களில் சிலர் அவைதீகர்களாக, இறைமறுப்பாளர்களாக இருந்தும் - தொடர்ச்சியாக அண்ணாவுக்குப் பின் கலைஞர் என இருமுறை முதல்வர்களாக அவர்கள் இருந்தும் - இங்கு கோயில் கலாச்சாரத்துக்கு, வைதீகத்துக்கு எந்த பாதகமும் அதனால் ஏற்படவில்லை. 

ஏன் தமிழ் தேசிய இயக்கங்களை மட்டும் நாம் ஒரு அவநம்பிக்கையுடன் பார்க்க வேண்டும்? காங்கிரசுக்குக் (திமுகவுக்கு) கொடுக்கிற சலுகையை ஏன் அவர்களுக்கு அளிக்கக் கூடாது?

இங்கு நான் சொல்வதில் ஒரு பிழை இருப்பதாக நீங்கள் கருதலாம், தமிழ் தேசியமும் இந்து தேசியமும் ஒன்று தானே என நம்புகிறவர் நீங்கள் எனில். நீங்கள் கேட்கலாம்: தமிழ் தேசியத்துக்கு அளிக்கிற சலுகையை ஏன் இந்து தேசியத்துக்கு அளிக்கக் கூடாது?

இரண்டுக்குமான வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் - தமிழ் இனம் எனும் உணர்வின் அடிப்படையில் மக்கள் திரள்வது தமிழ் தேசியம். இந்து எனும் உணர்வின் அடிப்படையில் தோன்றுவது இந்து தேசியம். இரண்டுக்குமான பிரதான வித்தியாசம் தமிழர்களுக்கு என்று ஒரு நிலம், மொழி, இனம் உண்டு, அது இந்துக்களுக்கு இல்லை என்பது. இந்து என்பது ஒரு உணர்வு மட்டுமே. அதற்கென நிலம், மொழி, இனம் எதுவும் இல்லை. இதை இந்துத்துவர் செயற்கையாக கட்டமைக்க வேண்டும் (ஹிட்லர் ஜெர்மனியில்‘ஆரியர்களைக்’ கட்டமைத்ததைப் போல). செங்கல் சிமிண்ட் வைத்து அல்ல, தொடர் கலாச்சார, அரசியல் நிகழ்த்துதல் வழியாக. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட வேண்டிய இந்த அழுத்தமே அவர்களைத் தொடர்ந்து வன்முறையிலும், இருமை கட்டமைப்பிலும் ஈடுபடச் செய்கிறது. இந்த நெருக்கடி தமிழ் தேசியவாதிகளுக்கு என்றும் இருந்ததில்லை, இருக்கவும் செய்யாது, அதனால் அவர்கள் தம் “எதிரிகளை” ஒரு குறியீடாக கருதுவார்களே அன்றி, அவர்களை நிஜமென நிரூபிக்கும் கட்டாயத்துக்கு ஆளாக மாட்டார்கள். தமிழ் பேசினாலே, தமிழ் மண்ணில் இருந்தாலே தமிழன் தானே, அவனை கட்டமைக்க அவசியமில்லையே.

மேலும் சில கேள்விகள்: ஒரு இயக்கத்தின் வளர்ச்சியை, போக்கை - மரபான மார்க்ஸியர்களை, சம்பிரதாயமான வரலாற்றாசிரியர்களைப் போல நேர்கோட்டில் பார்ப்பது சரியா? ஒரு இயக்கத்தின் சிந்தனைப் போக்கை அதன் தலைவர்களின் கருத்தாக ஒற்றைப்படையாக, முரணற்றதாக பார்ப்பது சரியா? முன்னுக்குப் பின் முரணாகவே அரசியல் இயக்கங்கள் இருக்கும் போது அவற்றை தெளிவான லட்சியப் பாதை கொண்ட நகர்வுகளாகக் காணலாமா? 

இந்த கோணத்தில் நோக்கும்போது தமிழ் தேசியம் எதிர்காலத்தில் பாசிசமாகத் தான் மாறும் என சந்தேகிப்பதில் எந்த நியாயமும் இல்லை. அதில் சமூகநீதிப் பார்வை இல்லை என தடாலடியாக மறுப்பதிலும் நியாயமில்லை. ராமதாஸ் ஒரு தமிழ் தேசியத்தை முன்னெடுத்ததால் எல்லா தமிழ் தேசிய இயக்கங்களும், சமூகநீதியின்றி செயல்படும், பிற்போக்காய் மாறும் என நான் சந்தேகப்பட அவசியமில்லை. ஏனென்றால் தமிழுணர்வை முன்னிறுத்துகிற சுபாவம் விடுதலை சிறுத்தைகளுக்கும் உண்டே. அவர்கள் சாதி வெறியைத் தூண்டவில்லையே. வை.கோ, மே 17, நாம் தமிழர் போன்ற இயக்கங்கள் வரை மிகப்பிற்போக்கான அரசியலை ஆதரித்ததாகவோ, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவோ நாம் பார்க்கவில்லையே. ஆம் சங்கிகளும் இன்று ஒரு பக்கம் பலவீனமாக தமிழுணர்வை தூக்கிப் பிடிக்கிறார்கள், ஆனால் அதற்காக அவர்களும் பிற தமிழ் தேசியவாதிகளும் ஒன்றாகி விடுவார்களா? அவர்களால் குறளை ஒரு வைதீக எதிர்ப்புப் பிரதியாக ஏற்கவோ, சங்கர மடத்தில் கைகட்டி நின்றபடி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனக் கோரவோ, கம்பராமாயணத்தை எரிக்கவோ முடியாது; பக்தி இலக்கியம் தமிழுணர்வுக்கு ஈடாகவும் செய்யாது. ஆக தமது எல்லையை சங்கிகள் நன்றாகவே அறிவார்கள். மேலும், அண்மையில் பாஜகவுக்கு எதிராக எழுந்த மிகப்பெரிய அலை கல்விக்கொள்கையில் இந்தித்திணிப்பு எதிர்ப்பு, “இந்தி தெரியாது போடா” ஆகியவை தானே - இந்த விசயத்தில் பாஜக தவிர்த்து அனைத்து இயக்கங்களும் ஒன்றாய் நின்றதைப் பார்த்தோம். 
இன்றைய சூழலில் மொழி அடிப்படையிலான தேசியத்தின் பயன் என்ன?
தமிழ் தேசியம் என ஒன்று இல்லாவிடில் இந்து எனும் உணர்வின் கீழ் தமிழர்கள் ஒன்றுதிரட்டப்படுவது அடுத்த மூன்று பத்தாண்டுகளில் நிச்சயம் நிகழும். இங்கு ஏற்கனவே வலுவான வைதீகக் கலாச்சாரம் உண்டு; சங்கிகளுக்கும் தமிழகத்துக்கும் இடையில் நிற்பது தமிழுணர்வு மட்டுமே. திராவிட இனவுணர்வு தமிழுணர்வின் ஒரு மேலான லட்சியவாத வடிவம். இன்றைய கவன ஈர்ப்பு, மற்றமை-எதிரி கட்டமைப்பு அரசியல் சூழலில் திராவிடத்துக்கு நடைமுறை மதிப்பு இருக்காது.

திராவிடம் எனும் அவைதீக, ஆரிய எதிர்ப்பு, முற்போக்கு கொள்கை ஒரு நெடுந்தொலைவு இலக்கு - அதை ஒரு அரசியல் கொள்கையாகக் கொண்டு மக்களைத் திரட்டுவது, ஆட்சியின் போது செயல்படுத்துவது சுலபம் அல்ல. “ஆரிய மாயை” எழுதிய அண்ணாவாலே அதை செயல்படுத்தி ஆரியவாதத்தில் இருந்து தமிழகத்தை மீட்க முடியவில்லையே. ஆனால் இட-ஒதுக்கீட்டை செயல்படுத்தி சமத்துவத்தை நோக்கி கால் எடுத்து வைக்க முடிந்ததே. இப்படித்தான் ஒரு பக்கம் அநீதியை ஊக்கப்படுத்தும் ஒரு பக்திப் / வைதீக / சாதிய பண்பாட்டை அனுமதித்துக் கொண்டே நீதியை நிலைநிறுத்தவும் திமுக முயன்றது. இவ்வாறு ஒரு உள்முரணுடனே ஒவ்வொரு இயக்கமும் நகர முடியும் என்கிறேன். சமூக இயக்கமென்பது இப்படித்தான் இருக்க முடியும். திமுகவின் வெற்றியே அது ஆரிய-எதிர்ப்பு ஒரு வெற்றுக் குறிப்பான் என அறிந்திருந்ததே. (வெற்றுக் குறிப்பானை நேர்மறையாகவே இங்கு பார்க்கிறேன். ஏனென்றால் கொள்கை நேரடியாக முழுமையாக செயல்படுத்தப்பட்டால் அது பாசிசம் ஆகி விடும், நல்ல கொள்கைகள் கூட.) 

எதிர்காலத்தில் தமிழ் தேசிய இயக்கங்களின் அணியை தம்முடன் திமுக இணைத்துக் கொண்டு அவர்களை வைத்து செமையான அரசியலை செய்ய முடியும் என நினைக்கிறேன். திமுகவால் நேரடியாக செய்ய முடியாத அரசியலுக்கான - கூட்டணியில் இல்லாத - ஒரு B team ஆக அவர்கள் செயல்பட முடியும். 

தமிழ் தேசிய இயக்கங்கள் இங்கு செய்துள்ள ஒரே குற்றம் - தம் இருப்பை நீட்டிக்கும் பொருட்டு - ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கத் தொடங்கியதே. அது இன்று அவர்களை சங்கிகளிடம் பெட்டி வாங்கும் அளவுக்குத் தள்ளி இருக்கிறது. இவர்களுக்கு முட்டுக்கொடுப்பது என் நோக்கமல்ல, ஆனால் வரலாற்றில் எங்கெங்கோ சிந்தின குருதிக்கான கணக்கை இவர்களின் பெயரில் எழுதுவது நியாயமல்ல என்பதாலே இவ்வளவு பர்னிச்சரை உடைக்க நேர்ந்தது எனச் சொல்லி...

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...