முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூக்குத்தி அம்மன்



கல்ட் அமைப்பு ஒன்று குறித்த படம், எங்கு பார்த்தாலும் வேளிமலை தெரிகிற பச்சைபசேலான எங்களூர் நாகர்கோயிலில் எடுக்கப்பட்டது ஆகிய காரணங்களுக்காக சுமாராகவேனும் இருக்கும் என நான் வெகுவாக எதிர்பார்த்த படம்மூக்குத்தி அம்மன்”. அதனால் தீபாவளியன்று முதல் வேலையாக அதைப் பார்க்க உட்கார்ந்தேன். ஏங்கல்ஸ் ராமசாமி எனும் ஆர்.ஜெ பாலாஜி முன் மூக்குத்தி அம்மன் தோன்றுகிற அந்த காட்சி வந்ததும் இந்த படம் நிச்சயம் படுத்து விடும் எனப் புரிந்து போனது. ஏனென்றால் படம் அங்கிருந்து அல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்?

 ஒரு படத்தை அதன் முதல் 8 நிமிடங்களுக்குள் ஆரம்பித்து விட வேண்டும் என்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவின் ஒரு சாபக்கேடு முதல் முப்பது நிமிடங்களை பாத்திர அறிமுகங்களுக்கே செலவழிக்கிறார்கள். இண்டெர்வல் பிளாக்கின் போது பிரதான பாத்திரம் அல்லது நாயகன் எதிர்கொள்ளும் ஒரு எதிர்பாராத தடையை காட்ட வேண்டும். ஆனால் நம்மவர்கள் அப்போதுதான் நாயகனின் இலக்கையே காட்டுவார்கள். கதையில் ஒருவரது விழைவே இயக்குவிசையாக இருக்க வேண்டும். இதில் அப்படி ஒன்றே இருப்பதாகத் தெரியவில்லை. நாயகன் பல சமயங்களில் அம்மனுக்கு டம்மியாக இருக்கிறான். அம்மனின் விழைவை பற்றியதே கதையெனில் அம்மனுக்கு சகல சக்தியும் உள்ளது. அவருக்கு தடைகள், சிக்கல்கள் இருக்க முடியாது. ஆக கதையே இருக்க முடியாது. இந்த கதையை எழுதியவர்மை டியர் குட்டிச்சாத்தானையாவதுஒரு மாடலாக வைத்திருக்கலாம். அதாவது சின்னச் சின்ன வித்தைகள் செய்வது தவிர வேறெந்த ஆற்றலும் இல்லாத ஒரு எளிய சிறுதெய்வம். அந்த தெய்வத்தின் களங்கமின்மை, அதன் சவால்கள் என கொண்டு போயிருந்தால் அம்மன் மீது ஒரு இரக்கம் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டு நம்பகத்தன்மையும் அதிகமாகும்.

 அல்லதுகடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்கதையை இதன் இயக்குநர் படித்திருக்கலாம். அதில் சிவபெருமான் சாமான்யராக வரும் போது நிகழும் பகடியே சுவாரஸ்யம். அதைப் போல அம்மனை மக்களோடு மக்களாக உலவ விட்டிருக்கலாம், நயனுக்கு நவீன உடைகளை அளித்து கதையை வண்ணமயமாக்கி இருக்கலாம். “இப்ப என்னாங்கிற?” போன்ற தொனியை அம்மனாக அவர் பேசும் செந்தமிழுடன் முரணாக்கினாலே நகைச்சுவை இருக்கும். ஆனால் இந்த அம்மன் ஏதோ மாலில் இறுக்கமான ஜீன்ஸுடன் உட்கார்ந்து பானிபூரி தின்கிற இளம்பெண்ணைப் போல படம் முழுக்க எனக்கென்ன எனத் தோன்றுகிறார். அவ்வப்போது முகம் சிவக்கிற கொடுமை வேறு.


அல்லது பழைய பாணி அம்மன் படங்களை நினைவுபடுத்தும் விதமாக எடுக்க வேண்டுமென்றால், ஒரு பக்தி சொரூபமாக, சரியான நேரத்தில் இறுதியில் மட்டும் காட்சி கொடுக்கிறவராக அம்மனைப் படைத்திருக்கலாம். ஆனால் இப்படத்தில் இரண்டுங்கெட்டானாக இருக்கிறது.


சிறுதெய்வமொன்று பெருதெய்வ வியாபாரியான ஒரு கல்ட் சாமியாரை எதிர்க்கக் கிளம்புகிறது என்பது ஒரு சுவாரஸ்யமான ஒற்றை வரி. ஆனால் அதை கதையாக்குவதில் கோட்டை விட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ரொம்ப குழந்தைத்தனமாக அபத்தமாக முடிந்து விட்டது


நயன்தாரா என்னதான் கஜகஜ என ஒரு அம்மன் கெட்டப்பில் வந்தாலும்என்னை ஏதாவது பண்ணேன்என்கிற மாதிரி ஒரு மஜாவான உடல்மொழியைக் காட்டுகிறார். இது உறுத்தலாக இருக்கிறது


மற்றொரு பிரச்சனை: ஒரு கல்ட் அமைப்பு தீயது, நில ஆக்கிரமிப்பை செய்கிறது, அதனால் அதை எதிர்க்க வேண்டும் என்பது கதையாகாது. அந்த ஆக்கிரமிப்பினால் நேரடியாக பாதிக்கப்படும் ஒருவன் அதை மீட்க செய்வதே கதையாக இருக்கும். அவசர உப்புமா போல அவசர கதையொன்றை தயாரித்து நயனின் தோற்றம் மற்றும் பாலாஜியின் நகைச்சுவையை வைத்து சமாளிக்க முயன்றிருக்கிறார்கள்.


இந்த படத்தில் எனக்குப் பிடித்தது இதன் அரசியல் மட்டும் தான். வெறுமனே சண்டை, காதல், நடுநடுவே தலித் / இடதுசாரி அரசியல், பெண்ணியம் தூவி மசாலா படங்கள் வரும் சூழலில், நித்தி எனும் ஒரு மகத்தான சப்ஜெக்ட் பிறந்து ஒரு சூறாவளியாக சுற்றின தமிழ் மண்ணில் ஏன் அதைப் பற்றியெல்லாம் ஒரு படம் கூட இன்னும் வரவில்லை? வீடு, குடும்பம், பங்காளி சண்டை, பெண்ணுடல் போன்றவற்றைத் தாண்டி இங்கே பேச நூறு நூறு கதைகள் இருக்கின்றன என்பதைமூக்குத்தி அம்மன்காட்டுகிறது. என்ன இதை ஒழுங்காக எடுத்திருந்தால் இன்னும் சில நல்ல பகடிகள் வந்திருக்கும். “மூடர் கூடம்எடுத்தாரே நவீன் அல்லதுசூப்பர் டீலக்ஸ்தியாகராஜன் குமாரராஜா கையில் எடுத்திருக்க வேண்டிய ஒற்றைவரி இது.


இப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி: நாயகன் தன் தங்கையை பள்ளிக்கு கொண்டு போய் விட்டுவிட்டு அங்கு எதிர்படும் சிஸ்டரிடம் தன் தங்கை இப்போதெல்லாம் சாப்பிடுமுன் பிரேயர் பண்ணுகிறாள், ரகசியமாய் சிலுவை வரைகிறாள், “நாங்க ஆர்த்தொடெக்ஸ் ஹிந்தூஸ் சிஸ்டர்என்று புகார் சொல்லுவான். அதற்கு சிஸ்டர் நாங்கள் யாரையும் மதமாற்றுவதில்லை என்று விட்டு, அப்பெண் குழந்தையை ஒரு கிறித்துவப் பெயரால் குறிப்பிடுவார். (நகைமுரணைப் பாருங்கள்.) அப்பெயரால் பின்னர் அவன் அவளை அழைக்க அவள் திரும்பிப் பார்ப்பாள். இதை ஏன் பிடித்திருக்கிறேன் என்றால் எங்களூரில் மிஷினரி பள்ளிகளில் படிக்கும் இந்துப் பிள்ளைகளில் சிலருக்கு கிறித்துவம் மீது ஒரு பிடிப்பு வந்து விடும். இது நேரடியான மதமாற்றம் அல்ல. அந்த சூழலில் இருக்கிற மாணவர்களுக்கு அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பதின் பருவத்தில் தேவாலய இசை, சடங்குகள், விவிலியம் மீது பற்று ஏற்படும். சிலர் ரகசியமாய் வீட்டில் விவிலியத்தை வைத்து படிக்கவும், ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்துக்கு போகவும் செய்வார்கள். எனக்குத் தெரிந்த யாருக்கும் அப்படியான பற்று மதமாற்றம் வரை சென்றதில்லை (ஆனால் காதலுக்காக கிறித்துவத்துக்கு மாறுவது என் உறவுகள் இடையிலேயே நடந்ததுண்டு.) எனக்குத் தெரிந்து இதுவும் தமிழ் சினிமாவில் பேசப்படாத ஒரு சங்கதி. ஏனென்றால், நாம் ஒன்று படங்களில் சிறுபான்மையினரே இல்லாமல் உலகமே இந்துக்களால் ஆனது என்கிற மாதிரி சித்தரிப்போம், இல்லாவிட்டால் கிறித்துவர், இஸ்லாமியர் குற்றங்குறையற்ற தூய ஆத்துமாக்கள், ஆத்ம சோதரர்கள் என ஒரு பில்ட் அப் கொடுப்போம். ஆனால் மதங்களிடையே உள்ள இந்த சின்னச்சின்ன பதற்றங்களை நகைச்சுவையுடன் தொட்டுக்காட்டுவது முக்கியம். கொஞ்சம் வலிந்து பேசினால் அது மதக்காழ்ப்பாகி விடும். இந்த படத்தில் அதை சரியாக கையாண்டிருக்கிறார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...