முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு எழுத்தாளனின் அரசியல் நிலைவிளக்கம்

"ஓர் எழுத்தாளன் திமுகவை ஆதரிக்கிறான் என்று கொள்வோம். திமுகவினர் செய்யும் எல்லாவற்றையும் அவன் ஆதரிக்கமுடியுமா? அவற்றுக்கு சப்பைக்கட்டு கட்டமுடியுமா? நாளை அவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் என்ன நிகழுமென்பதற்கு எந்த ஐயமும் தேவையில்லை, இதுவரையிலான ஆட்சிகளில் என்ன நடந்ததோ அதுதான். அதை ஆதரித்தபின் அவன் எதை எதிர்க்கமுடியும், என்ன நியாயம் பேசமுடியும்?

இங்கே இப்போது சகல அநீதிகளும் நிகழ்கிறது, திமுக வந்தால் ஒளிவந்துவிடும் என்று திமுக தொண்டன் சொல்லலாம். திமுக வந்தபின் தமிழகம் ஒளிர்கிறது என்று அவன் கூசாமல் வாதிடுவான். எழுத்தாளன் அன்றும் இன்றும் அவலங்களை, சரிவுகளை, அநீதிகளையே சுட்டிக்காட்டுவான். அவன் பணி அதுவே.

எந்த ஒரு அரசியல்தரப்பையும் ஆதரித்து நிலைபாடு கொள்ள எழுத்தாளனால் இயலாது. சீரிய எழுத்தாளர்கள் இந்தியாவின் காங்கிரஸ் இயக்கத்தையும், கம்யூனிஸ்டு இயக்கத்தையும் ஆதரித்தது உண்டு. திராவிட இயக்கத்தை ஆதரித்தவர்களும் சிலர் உண்டு. ஆனால் அந்த அமைப்புக்கள் அதிகாரம் நோக்கிச் சென்றபோது, அவையே அதிகார அமைப்புகளாக ஆனபோது அவர்கள் விலகிச் சென்றுவிட்டனர்.

இந்த உளநிலை இலக்கியம், பண்பாட்டுச்செயல்பாடு ஆகியவற்றில் ஆரம்ப அறிமுகம்கூட இல்லாதவர்களுக்குப் புரிவது அல்ல. அவர்கள் அதை எழுத்தாளனின் திமிர் என்றே எடுத்துக்கொள்வார்கள். இங்கே பாமரரகள் ஓர் அரசியல்வாதியின், ஒரு சினிமா ஆளுமையின் திமிரை ஏற்றுக்கொள்வார்கள், அவள் முன் கைகட்டி நிற்பார்கள். எழுத்தாளனின் திமிரை கண்டு சீற்றம்கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் பார்வையில் எழுத்தாளன் ஒரு பொருட்டே அல்ல. அவன் என்ன செய்கிறான், அவனுடைய இடமென்ன என்று அவர்களுக்குத் தெரியாது.

இங்கே ஏதேனும் ஒரு கட்சியைச் சார்ந்து பேசும் அனைவருமே எழுத்தாளர்கள் தங்கள் தரப்பை ஏற்று தங்களுடன் சேர்ந்து கொடிபிடிக்க ஏன் வரவில்லை என்று கேட்பார்கள். எந்த ஒரு விவாதம் எழுந்தாலும் பத்துபேர் ‘இந்த எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்?”என்று கேட்டு திட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அது ஏதோ அறச்சீற்றம் போலிருக்கும். ‘எங்கள் அரசியலை ஏற்று எங்கள் கோஷத்தைப் போடு’ என்று மட்டுமே அதற்குப் பொருள். அறமென்பதெல்லாம் இவர்கள் அறியாதது. இவர்கள் தங்கள் தரப்பின் பிழைகளை காணும்போது கண்மூடிக்கொள்வார்கள். எது எழுத்தாளன் பேசவேண்டிய இடம், எப்படி அவன் பேசவேண்டும் என்று இவர்களே முடிவெடுத்துச் சொல்வார்கள், எழுத்தாளன் அடிபணியவேண்டும் என கருதிக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு அரசியல்நிலைபாடே ஆதாரம். கருத்து சிந்தனை ஏதுமில்லை.  ‘இந்த தரப்பு என்னுடையது, இதிலுள்ள எல்லாவற்றையும் நான் நியாயப்படுத்துவேன் எதிர்தரப்பை முழுமையாக எதிர்ப்பேன்’ இவ்வளவுதான் சிந்தனை. இதற்கு தேவையான தர்க்கங்கள், நையாண்டிகள், தாண்டிக்குதித்தல்கள் எல்லாவற்றையும் கற்று வைத்திருப்பார்கள்.

- ஜெயமோகன் 

இந்த பார்வையின் பிரச்சனை இது (1) ஒரு தனிப்பெரும் பூர்வ உண்மையை கற்பனை செய்து அதை எழுத்தாளன் இயல்பாகவே அறிவான் என்பது. அப்படி ஒரு உண்மையே கிடையாது. அறம் என்பதும் ஜெயமோகனைப் பொறுத்தமட்டில் ஒருவித அத்வைத பிரம்மம். அவர் அதை எங்குமே தெளிவாக விளக்கியதில்லை.

 (2) அரசியலை இது 'நடைமுறை அரசியலாக' மட்டும் பார்க்கிறது. நடைமுறை அரசியல் தவறானது, ஊழலால் ஆனது, அரசியல் குவிப்பை கொண்டு வருவது எனும் ஒவ்வாமை அவரிடம் உள்ளது. இது ஒரு மத்திய வர்க்க பார்வை ஆகும். சங்கர் போன்றோரின் படங்களில் திரும்பத் திரும்ப வருவது இது. ஜெயமோகன் இதன் அடிப்படையிலேயே அன்றாட அரசியல் குறித்து எழுத்தாளன் கருத்துக் கூறலாகாது என்கிறார். அதற்குப் பதிலாக மதம், சம்பிரதாயம், கோயில் கலாச்சாரம், கூடவே இவையெல்லாம் கலந்த சாம்பார் சாத இலக்கியம், அவ்வபோது காந்தியம் பற்றி பேசலாம் என்கிறார் - ஆனால் காந்தியே - தேர்தலில் பங்கேற்கவில்லையே தவிர - ஒரு நடைமுறை அரசியல்வாதியே என்பதை மறந்து விடுவார்.
 
(3)  அதிகார அரசியலை, நுண் அரசியலை இது மறுக்கிறது என்பது மூன்றாவது பிரச்சனை.
ஜெமோவின் பார்வை 19ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. அவரை ஆதரிப்பவர்கள் ஜுராசிக் பார்க்கின் ஜீவராசிகள். ஒருவித மீட்புவாதிகள். பழங்கால சமூகக் கட்டமைப்புகள் குலைவதை விரும்பாதவர்கள்.
இன்று நாம் ஒரு தெளிவான அதிகார அரசியலுடன் எதிர்கால இலக்குடன் நகர்ந்து வருகிறோம். அதன் அடிப்படையில் சில கட்சிகளை ஆதரிக்கிறோம். சிலரை எதிர்க்கிறோம் - பாஜகவை எதிர்ப்பது அப்படியான எதிர்கால அனுகூலங்களை கணக்கில் கொண்டு நிகழ்வது. உ.தா., அடுத்த ஐந்து ஆண்டுகளில் சி.ஏ.ஏவின் விளைவாக இஸ்லாமிய தடுப்பு முகாம்கள் இங்கு தோன்றாதிருப்பது ஒரு அவசியம். அதற்கு யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என யோசித்து அதற்கு ஏற்ப அரசியல் பேச வேண்டும் என்பது என் நோக்கம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு, நோக்கம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதைத் தெளிவாக வெளிப்படுத்தி முடிந்தளவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் எனது இன்றைய அரசியல். இது ஒவ்வொரு சொல்லும் ஒரு அதிகார பரிமாற்றத்துக்கான முயற்சி எனப் பார்ப்பது. அறத்துக்காக, பிரம்மனுக்காக பேசுகிறோம் என ஜல்லியடிப்பது அல்ல.

 உ.தா., வலதுசாரிகளை எதிர்ப்பது எனும் இலக்கு கொண்ட ஒருவர் யூதவெறுப்பை கண்டடைந்து கண்டிக்கும் அதே நேரம் பாலஸ்தீன சார்பு அரசியலையும் பேசலாம்.  அதே நேரம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உலகளவில் சில நாடுகளின் வரலாற்றைப் பொறுத்து கண்டித்து உரையாடலாம். ஆனால் இந்திய அரசியல் களத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வலதுசாரி அரசியலில் பெருவாரியாக பங்கேற்க முடியாதபோது அவர்களைக் கண்டிக்காதிருப்போம். பங்குபெறும் போது (ஒவைஸி) கண்டிப்போம், எதிர்ப்போம். இங்கு எல்லா சிறுபான்மை மதவாதமும் அல்ல,  வலதுசாரி தேசிய அரசியலுக்கு துணை போகும் சிறுபான்மை மதவாதம் மட்டுமே பிரச்சனை. 

பொதுவான காலாதீதமான ஒரு அரசியல் நிலைப்பாடு என்னைப் பொறுத்தமட்டில் இல்ல. எழுத்தாளனின் அரசியல் அப்படியே இருக்க வேண்டும். அதனாலே யோகி ஆதித்யநாத்தை போல இஸ்லாமியரை நேரடியாக வெளிப்படையாக எதிர்க்கும் இந்துத்துவர் மேல் என்கிறேன். "நான் பாஜக ஆதரவாளன் அல்ல, நான் இஸ்லாமியரை வெறுக்கவில்லை, ஆனால் ... " என சுற்றிவளைத்துப் பேசும் பாசாங்காளர்களை எதிர்க்கிறேன். அவர்கள் மிக மிக ஆபத்தானவர்கள். 

ஆம் ஒரு எழுத்தாளன் இருமையை கடந்து இருண்மையை பரிசீலிக்க வேண்டும், ஆனால் கட்டுரைகளில், சமூகவலைதளங்களில் அல்ல. புனைவில், கவிதையில் அதை அவன் செய்யலாம். நேரடி வாழ்வில், உரையாடலில் அவன் வெளிபடையாக ஒரு தரப்பை எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்ப தன் அரசியலை செய்ய வேண்டும். அன்றாட வாழ்விலும் இருண்மையுடன் தடவித் தடவிப் பேசுகிறவன் பாசிசத்தை நோக்கி சாயவே வாய்ப்பதிகம். ஏனென்றால் மனித மனம் தீர்வை நோக்கி பாய்வது, அதுவும் வலுவான அதிகாரமிக்க தீர்வுகளை நோக்கி. ஜெர்மனியில் சில எழுத்தாளர்களை ஹிட்லரை ஆதரிக்க நேர்ந்தது இந்த 'இருண்மையில்-எப்போதும்-குத்தவைத்திருப்போம்' குழப்பத்தினாலே.

எல்லாரையும் எதிர்ப்பது, அதற்கு ஒரு கற்பனாவாத அறம் சார்ந்த நியாயத்தை கொடுப்பது, பின்னணியில் அடிப்படைவாதத்தை ஆதரிப்பதே ஜெ.மோவின் அரசியல். இடதுசாரி, 
திராவிட எதிர்ப்பை அவர் அதிகாரத்தை எதிர்ப்பது என்று நியாயப்படுத்தவும் செய்வார். அது அவரது விருப்பம். ஆனால் அவர் நேர்மையாக அதை ஒத்துக் கொள்வதில்லை என்பதே சிக்கல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...