முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

க்ரியா ராமகிருஷ்ணனுக்கு அஞ்சலி



வித்தியாசமான அட்டைப் படங்கள், வடிவமைப்பு, அழகான எழுத்துருக்கள், நேர்த்தியான இடைவெளி கொண்ட வாக்கியங்கள் என க்ரியாவின் புத்தகங்கள் பார்க்க ரம்மியமாக மட்டுமல்ல வாசிக்கவும் இணக்கமாக இருக்கும் - இது அனைவரும் அறிந்தது. ஆனால் அதோடு அவர் தன் பதிப்பகத்தில் வரும் நாவல்களின் வடிவம் சார்ந்து நிறைய வேலை பார்ப்பவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். குறிப்பாக இமையத்தின் நாவல்கள் (அதாவது அவரது முதல் நாவல் முதலே) அவ்வளவு கச்சிதமான வடிவத்துடன் பிசிறின்றி இருப்பதில் க்ரியா ராமகிருஷ்ணனுக்கு பெரும் பங்குண்டு. அதாவது நான் எழுத்துப்பிழை, வாக்கியப்பிழையை திருத்துவதை அல்ல, கதையமைப்பு, கதைக்களன், பாத்திர அமைப்பு ஆகியவற்றில் வேலை பார்ப்பதை சொல்கிறேன். ஒரே துயரம் ராமகிருஷ்ணன் இந்த அறிவை பரவலாக்காமல் தனது சிறிய உலகத்தில் ஒதுங்கி இருந்து விட்டார் என்பது


நான் வாசிக்க வந்த என் பதின் பருவத்தில் காலச்சுவடு பதிப்புத் தொழிலில் உச்சத்தில் இருந்தது. அதன் பிறகு தமிழினி. நான் கணிசமான நூல்களை இந்த இரு பதிப்பகங்களில் இருந்தே வாங்கினேன். க்ரியா எனக்கு முந்தைய காலகட்டம்.

 நான் படிக்கத் தொடங்கிய போதே அதிகப்படியான நூல்கள் சந்தையில் குவியத் தொடங்கி இருந்தன. செம்பதிப்பில் மொத்தத் தொகுப்புகள் வந்திறங்கத் தொடங்கிய காலம். நான் வாங்கிய சு.ரா, பு.பி, அசோகமித்திரன், ஜெயகாந்தன் போன்றோரின் முதல் நூல்களே பெருந்தொகைகள் தாம். இன்னொரு பக்கம் ஜெயமோகன் தான் எழுதுகிற ஒவ்வொரு நாவலையும் இந்தஒட்டுமொத்த தொகுப்புகளுக்குஇணையாகக் கொண்டு வந்து கொண்டிருந்தார். சிறிய செறிவான கச்சிதமான நூல்கள் இந்த பிரம்மாண்ட வரிசைகள் முன் சிறுத்து நிழலில் ஒதுங்க ஆரம்பித்த காலகட்டம் அது.


 இன்னொரு பக்கம், நவீன செவ்வியலக்கியம் மீது ஒரு போதாமை உணர்வு, அதிருப்தி, அலுப்பு ஏற்பட்டிருந்தது. பின்நவீனக் கோட்பாடுகள், மாய எதார்த்த சிறுகதைகள், நான்-லீனியர் நாவல்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியம் என தமிழின் திசை மாறத் தொடங்கியிருந்தது. 16 வயது இளைஞனான எனக்கு அப்போது சு.ராவை விட எஸ்.ரா, கோணங்கியே மேல் என ஒரு எண்ணம் ஏற்பட்டிருந்தது. சு.ரா அழகாக எழுதுகிறார், ஆனால் அவரை விட அசலான கலைஞர்கள் பின்நவீன எழுத்தாளர்களே என நினைத்தேன். அவர்களே புதிய வண்ணமயமான மொழியில் எழுதினார்கள், அவர்களே புதிய தத்துவங்கள், கோட்பாடுகள், எழுத்து பாணியை அறிமுகப்படுத்தினார்கள். பு.பியை ரசித்தாலும், சு.ரா இன்னமும் பு.பியை தாண்டி வரவில்லை என நினைத்தேன் (இன்று அந்த மாயை தெளிந்து விட்டது). எனக்கு அப்போது ரஜினி, கமல் எல்லாம் எஸ்.ராவும் கோணங்கியுமே. வரம் வாங்கி வந்த தெய்வம் ஜெ.மோ. ஜெ.மோவிடம் பேசும் போது அவர் நவீனப் படைப்புகளை, குறிப்பாக சு.ராவை ஒரே வரியில் அடித்து நொறுக்கி விடுவார். (ஆனால் நாங்கள் அப்படி நிராகரிப்பதை அனுமதிக்க மாட்டார்.) கலை இலக்கியப் பெருமன்ற வட்டத்தில் தொண்ணூறுகளுக்கு முன்பான இலக்கிய ஆகிருதிகள் அதிகார மையங்கள், சங்கர மடங்கள் எனும் ஒரு புரிதல் இருந்ததால் நானும் நவீன இலக்கிய பிரம்மாக்களின் எதிர்-முகாமில் இருந்தே ஆரம்பித்தேன். இந்த சூழலில் க்ரியாவின் பதிப்பாக்க சாதனைகள், அறிமுகங்கள் எனக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. குட்டி இளவரசன், அந்நியன் போன்ற படைப்புகளை முக்கியமான இலக்கியமாக அப்போது நான் கருதவில்லை. “ஜெ.ஜெ சில குறிப்புகள்கூட ஒரு விசித்திரமான கதை என்பதைக் கடந்துநூற்றாண்டுகளின் தனிமைபக்கத்தில் வர முடியாது என நினைத்தேன். இப்போது திரும்பிப் பார்க்கும் போது எனக்கு முந்தைய தலைமுறையினர் அளவுக்கு என் தலைமுறை படைப்பாளிகளை க்ரியா ராமகிருஷ்ணன் பெரிதும் கவரவில்லை, ஒரு கலகக்காரராக அவர் எங்களுக்குத் தெரியவில்லை எனத் தோன்றுகிறது.


நான் எழுத வந்த போது உயிர்மை ஒரு முக்கிய பதிப்பகமாக இருந்தது. மனுஷ் தன் அஞ்சலிக் குறிப்பில் சொல்வதைப் போல - எந்த எழுத்தாளனுக்கும் தன் புத்தகம் க்ரியாவில் வர வேண்டுமெனும் கனவு இருக்கும் - எனக்கு க்ரியாவில் வந்தாலே போதும் எனும் ஆசை இருந்ததில்லை. உயிர்மையில் வந்தால் போதுமென்றே நினைத்தேன். இதை ஒப்பீட்டுக்காக அல்ல காலம் எப்படி மாறி விட்டிருந்தது எனச் சொல்வதற்காகவே குறிப்பிடுகிறேன். க்ரியா இருபது ஆண்டுகளில் பதிப்பித்த நூல்களை விட பல மடங்கு அதிகமான புத்தகங்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியில் வெளியாகின. படித்தே வாழ்நாளில் தீர முடியாதளவுக்கு நல்ல புத்தகங்கள் மலை மலையாய் குவிந்தன. கடந்த பத்தாண்டுகளில் சில புதிய பதிப்பகங்கள் அழகான அட்டைப்படங்கள், எழுத்துருக்களுடன், நேர்த்தியாக எடிட் செய்து பேஜினேட் செய்த நூல்களை வரிசை வரிசையாக கொண்டு வருகின்றன (“ஸீரோ டிகிரிபதிப்பக நூல்கள் ஒரு உதாரணம்). அதாவது க்ரியா ராமகிருஷ்ணன் பல வருடங்களாய் தேடித்தேடி செதுக்கி உருவாக்கியவை இன்று சில மாதங்களிலேயே பதிப்பாளர்களுக்கு சாத்தியமாகின்றன. இன்று எண்ணிக்கை முக்கியமாக இருக்கிறது. இன்று அசல்-நகல் எனும் இருமை மறைந்து விட்டது. சொல்லப்போனால் நகலாக்கமே (duplication) இன்று படைப்பூக்கமிக்க செயலாக கருதப்படுகிறது. .தா., ஜெ.மோவின்வெண்முரசுநாவல்கள் பல ஆண்டுகளாய் அவர் எழுத எழுத பிரசுரமாகிக் கொண்டே வந்தன. அவற்றை பொறுமையாகப் படித்து திருத்தி மீள மீள எழுதி கச்சிதமான புத்தகங்களாய் கொண்டு வரும் பணியை க்ரியா ராமகிருஷ்ணன் ஒருவேளை எடுத்திருந்தால் அதை முடிக்கவே அவருக்கு 200 வருடங்கள் எடுத்திருக்கும். (அதற்குள் ஜெ.மோ இன்னொரு பத்து லட்சம் பக்கங்கள் நாவலை எழுதியிருப்பார்!)


 தமிழில் என்றில்லை, உலகம் முழுக்க இன்று இதுவே நிலை - சின்னச் சின்ன பிழைகள் இல்லாத பதிப்புகளே இன்றில்லை; வடிவ ரீதியான பிசிறுகளை பொருட்படுத்தாமல் வாசிப்பனுபவமும் பிம்ப கட்டமைப்புமே முக்கியமாகி விட்டன. எழுத்து ஒரு சீரியசான சாகச விளையாட்டாகி விட்டது


ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் இருந்தே புத்தகங்களை பலவித தலைப்புகளில் கொண்டு வருவது, எல்லாருக்கும் மேடை அமைத்துக் கொடுப்பது, இலக்கியத்துக்கும் சமூக அரசியல் பிரதிகளுக்குமுனான எல்லைக்கோட்டை அழிப்பது, பெரிய மேடைகளில் நூல் வெளியீடுகள் நிகழ்த்தி, நூல்களை ஒரு விவாதப் பொருளாக தொடர்ந்து வைத்திருப்பது, சமூகவலைதளங்கள் உள்ளிட்ட புதிய ஊடகங்களை பயன்படுத்தி விளம்பரப்படுத்துவது, மின்நூல்கள், ஒலிநூல்கள் என புத்தகங்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்வது என பிரசுரம் முழுக்க வேறொன்றாக வளர்ந்து விட்டது. மொழியாக்கத்தை பொறுத்தமட்டில் கடந்த சில பத்தாண்டுகளில் காலச்சுவடு உலகம் முழுக்க உள்ள எத்தனையோ மொழிகளில் இருந்து நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்து தந்துள்ளது. கண்ணன் ராமகிருஷ்ணனை நிச்சயமாய் இவ்விசயத்தில் முந்தி விட்டார். மொழியாக்க உரிமை பெற சர்வதேச புத்தகக் கண்காட்சிகளுக்கு செல்வது, முகவர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பது இன்று முக்கியமாக உள்ளது. க்ரியா ராமகிருஷ்ணனுக்கு இதெல்லாம் தெரிந்திருந்தது, அவருக்கு நிறைய தொடர்புகளும் ஆங்கில பிரசுர உலகில், மேற்குலகில் இருந்தன, ஆனாலும் க்ரியா ராமகிருஷ்ணன் கடந்த மூன்று பத்தாண்டுகளாய் சற்று பின்தங்கி விட்டார் எனச் சொல்ல வேண்டும். அவரது பாணி வழக்கொழிந்து விட்டது


மற்றொரு பக்கம், அவரது மகத்தான பங்களிப்பான தற்காலத் தமிழ் அகராதி இன்னும் எத்தனைக் காலமானாலும் ஒரு தவிர்க்க முடியாத பிரதியாக இருக்கும். நான் சில வருடங்கள் மாலைமலரில் ஒரு சிறிய யூனிட்டில் வேலை செய்தேன். அப்போது எனக்கு தமிழ் மொழியாக்கத்திலும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. பெரும்பாலான நேரம் க்ரியாவின் அகராதியுடனே இருப்பேன். தினமும் வேலைக்கு செல்லும் போது என் பையில் அந்த அகராதி இருக்கும். ஒரு சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் வேண்டுமா, வட்டாரச் சொற்களின் பொருள் வேண்டுமா, உபரியான தகவல்கள் வேண்டுமா, க்ரியாவின் அகராதியை புரட்டுவதே ஒரே வழி. இன்று இணையதளங்கள் ஓரளவுக்கு அந்த இடத்தை எடுத்துக் கொண்டு விட்டன என்றாலும் அது ஒரு அற்புதமான புத்தகமே.


க்ரியா ராமகிருஷ்ணனின் மறைவு ஒரு காலகட்டத்தின் மறைவு. அவருக்கு அஞ்சலிகள்.

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...