முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இப்போது பேசாதே எனும் அதிகாரம்



எப்போது ஒருவரை மதிப்பிட்டு எழுதலாம் என்பதைக் குறித்து அடிக்கடி எனக்கு சொல்லப்படும் அறிவுரை ஒருவர் காலமாகும் போது இதைத் தவிர்க்க வேண்டும் என்பது. காரணம் மக்கள் மனம் புண்படலாகாது என்பது. இதையே நீங்கள் ஒருவர் விருது வாங்குவது போன்ற சாதனைகள் படைக்கும் போதும் சொல்லலாம். ஒரு நடிகருக்கு பத்மஶ்ரீ வழங்கப்படும் தருணத்தில் நீங்கள் சுலபத்தில் அவரை விமர்சனபூர்வமாய் மதிப்பிட முடியுமா? அவரது ரசிகர்கள் கொந்தளித்துப் போய் விட மாட்டார்களா? ஆனால் இந்த இரண்டையும் விட்டால் அவரைப் பற்றி பேச வேறு சிறந்த தருணம் ஏது?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை ஒரு துயர நினைவு நாளாக சில இஸ்லாமியர் அனுஷ்டிப்பதுண்டு. எமர்ஜென்ஸி இயற்றபட்ட நாள் வரும் போது அதைப் பற்றி விமர்சனக் கட்டுரைகள் நாளிதழ்களில் வருவதுண்டு. இப்படி நாம் நினைவுகொள்ளத்தக்க எத்தனையோ தினங்கள் வரலாற்றில் உண்டு. அப்போது பேசுகிறவற்றை எப்போதும் பேசலாம் தான், ஆனால் அப்போது பேசும் போது கிடைக்கும் கவனமும் முக்கியத்துவமும் மற்ற சந்தர்பங்களில் இராது. இது ஒரு கருத்தை நோக்கி கவனம் திரும்ப வேண்டும் எனும் நோக்கமே அல்லாது கருத்தாளர் மீது திரும்ப வேண்டுமென்பதல்ல. ஒருவரது மறைவும் அப்படியான ஒரு சந்தர்ப்பமே. அப்போது அவரை அவதூறு செய்யக் கூடாது எனக் கோரலாம். ஆனால் அவரை புறவயமாய் மதிப்பிடலாகாது, அவரை பாராட்ட மட்டுமே செய்யலாம், அல்லது மௌனமாய் போய் விட வேண்டும் என்று வலியுறுத்துவது status quoவை தக்க வைக்க வேண்டும், ஒரு மாற்றுக் கருத்து கவனம் பெற்றுவிடக் கூடாது எனும் விருப்பம் மட்டுமே. அதை மறைக்கத் தான் bad taste, மனம் புண்படுகிறது என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். இதுவே அவர்களுக்கு சாதகமான மாற்றுக் கருத்தென்றால் “சொல்லி விட்டு போகட்டும்” என தள்ளி கைகட்டி நின்று பார்ப்பார்கள்.


யோசித்துப் பாருங்கள், ஒரு அரசியல் தலைவர், நடிகரின் நினைவு தினமன்று அவரை நீங்கள் கராறாய் மதிப்பிட முடியாது. ரசிகர்கள் குமுறி விடுவார்கள். கும்பல் மனப்பான்மை என்றுமே அதை அனுமதிக்காது. ஏனென்றால் ஒரு பிரபலம் அல்லது தலைவரை ஒரு செண்டிமெண்டின் மீது பிம்பமாய் கட்டியெழுப்புகிறோம். உண்மை மற்ற சந்தர்பத்தில் பேசப்பட்டால் பிரச்சனையில்லை, ஆனால் நினைவுதினம் அன்று கூடாது, அப்போது அது கவனம் பெற்று விடக் கூடாது என பதறுவார்கள். ஏனென்றால் கவனம் பெறத்தக்க சந்தர்பங்களை அதிகார மையங்கள் தம் வசம் வைத்துக் கொள்ள, கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். பிக்பாஸில் மங்கலம்-அமங்கலம் பற்றின சர்ச்சை நினைவிருக்கும். சுரேஷ், அர்ச்சனா போன்றோர் பலரும் அவ்வீட்டில் ஒரு மங்கலமான தருணத்தில் விதவைகள் பற்றி பேசப்படுவதை விரும்பவில்லை. சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பிறகு பேசிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். பிறகென்றால் எப்போது? யார் கவனத்திலும் அது இல்லாத போது. கும்பல் கலாச்சாரமும் இப்படி சில சந்தர்பங்களை பிறருக்கு அனுமதிக்காமல் ஒரு அதிகார மையமாகிறது. இதை ‘எங்கள் உணர்ச்சி காயப்படுகிறது’, அசந்தர்ப்பமான பேச்சென்று சொல்லி தம்மை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ளவும் செய்வார்கள்.


இந்த கும்பல் அதிகாரம் இலக்கியத்திலும் வந்து சற்று காலமாகி விட்டது. ஒரு ஆளுமை மறையும் போது வரும் அஞ்சலிகள் மட்டுமல்ல, நினைவு மலர்கள் கூட முழுக்க முழுக்க ஒற்றைக் குரலில் ஒலிப்பது இதனாலே. உங்களது கருத்தை புகழ்ச்சியாக மாற்றினால் அதற்கு ஒரு அதிகாரம் கிடைத்து விடும். இது பேசுவதற்கான அதிகாரம். இதுவே go corona என பாத்திரங்களை முழக்கிய போது பொதுமக்களுக்கு கிடைக்க ஒலியெழுப்புதலின் அதிகாரம். இது ஒலியெழுப்பாதவர்கள் துரோகிகள் எனும் அதிகாரம். தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் போது யாரெல்லாம் எழுந்திருக்காமல் இருக்கிறார்கள் என கண்காணிப்பதில் கிடைக்கும் அதிகாரம். ஒழுக்கத்தின் அதிகாரம். அனுசரித்து செல்வதில் உள்ள அதிகாரம். Status quoவின் அதிகாரம்.


இதில் மிகப்பெரிய கொடுமை அதிகமாய் உணர்ச்சிவசப்படுவது காலமான ஆளுமையுடன் நேரடியான எந்தவித தொடர்பிலும் இல்லாதிருந்தவர்களே என்பது. அவர்களே கம்பை சுழற்றிக் கொண்டு “வாயை மூடுடா” என முதலில் கத்துவது.   


ஆனால் இந்த கலாச்சாரத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. இலக்கிய உலகத்தில் உள்ள இத்தகைய அதிகார விளையாட்டை ரொம்ப காலமாய் கவனித்து வருகிறேன். எப்போதுமே இவர்கள் எதைச் செய்யக் கூடாது என்கிறார்களோ அதையே செய்ய வேண்டும். ஏனென்றால் அதுவே நியாயமாக இருக்கும். நாம் எப்போது பேச வேண்டும் என்பதை நாமே முடிவெடுக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...