முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரணம்: ஒரு தத்துவார்த்த விளக்கம்



மரணத்தைக் கொண்டாடுவது தற்கொலை வழிவகுக்காதா?

இல்லை.


நமது நவீன உளவியல் மரணத்தை எதிர்மறையாக சித்தரித்ததே உலகம் பூரா தற்கொலைகள் அதிகரிக்க ஒரு காரணம் என நினைக்கிறேன். மற்றொரு காரணம் நகரங்களை மையமாகக் கொண்டு உருவான தாராளவாத பொருளாதாரமும், அதை நிர்வகிக்கிற அரசுகளின் தொடர் கண்காணிப்பும். நமது உடல் நம் வசம் இல்லை, தொடர்ந்து மதிப்பிடப் பட்டுக்கொண்டே இருக்கிறோம். நம் மீதான ஆட்சியாளர்களின் அதிகாரம் இப்படி உடலைக் கட்டுப்படுத்துவதன் மூலமே தோன்றுகிறது. இப்போது நாம் நம்மையே அழித்து இதே அதிகாரத்தை அடைய முயன்றோம். இதுவும் கடந்த ஒரு நூற்றாண்டாய் உலகம் முழுக்க தற்கொலைகள் அதிகரிப்பதற்கு ஒரு காரணம்.

 இதனுடன் தனிமையும் சேர்ந்து கொள்கிறது. தனிமையின் அழகு அது நம்மை நமது இருப்பு குறித்து, காலம் குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது என்பது. அப்போது தோன்றும் துக்கத்தில் ஒரு லாகிரி உள்ளது. மரணம் ஒவ்வொரு மலராக தாவிப் பறக்கும் ஒரு பட்டாம்பூச்சி. அதை துரத்தி செல்வது ஒரு வேட்டை மிருகம் ஒரு மாயமானை வனாந்தரத்தில் துரத்தி செல்வதற்கு சமானமானது. சும்மா மரணத்தைக் குறித்து சிந்தித்தாலே கிட்டத்தட்ட அந்த மாயமான் நமக்குப் புலனாகிறது, அதனைத் துரத்திச் சென்று காலத்தின் எல்லைகளைத் தொட முடிகிறது, ஆனால் அதைக் கடக்க முடியவில்லை என நமக்கு அப்போது புரிகிறது. இதன் அடுத்த கட்டமாகத் தான் நாம் தற்கொலைத் திட்டங்களை வகுக்கிறோம். இதுவரையில் பிரச்சனை இல்லை. மரணம் ஒரு மாயை, அப்படி ஒன்றே உலகில் இல்லை என நாம் புரிந்து கொள்வதில்லை. வாழ்க்கை நெருக்கடிகள் அதிகமாகி கழுத்தை நெரிக்கும் போது அதற்கு ஒரு நல்ல தீர்வு மரணம் என இயல்பாகவே நினைக்கத் தொடங்குகிறோம். திட்டங்கள் செயல்திட்டங்களாகி கசப்பாகி சில நேரம் நிறைவேறியும் விடுகின்றன. விஷப்பாம்போடு விளையாடுகிறவனை அது ஒருநாள் கொத்திவிடுவதைப் போன்றது இது.


நான் ஏன் மரணம் ஒரு கற்பனை என்கிறேன்?

நீங்கள் செத்துப் போன யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? யாராவது மரணத்துக்கு அமேசானில், கூகிளில் ரெவ்யூ எழுதிருக்கிறார்களா? மரணம் மட்டுமே நம்மால் அனுபவிக்க முடியாத, அனுபவிக்க ஆரம்பிக்கும் முன்னரே முடிந்து போகும் அனுபவம். அதனாலே அது நிஜத்தில் இல்லை என்கிறேன். பின்னோக்கி யோசித்தால் மரணமே இல்லையெனும் போது வாழ்க்கை மட்டும் இருக்கிறதா? அதுவும் இல்லை தான், ஆனால் அது இருக்கிறதே. எப்படி? அது மரணத்தைபின்னொட்டாகவைத்து உயிர்த்திருக்கிறது. மரணத்தை எடுத்து விட்டால் வாழ்க்கை குப்பையாகி விடும்

இதைப் பற்றிப் பேசும் மார்ட்டின் ஹைடெக்கர் நம் பிறப்பே மரணத்தில் இருந்து தான் என்கிறார். எப்படி நாம் மரணிக்கும் போது அதை அனுபவிப்பதில்லையோ அப்படியே நாம் இந்த பூமியில் ஒரு பிரக்ஞையாக தோன்றும் நொடியும் இருக்கிறது. இதோ பிறக்கிறேன் என முடிவு பண்ணி யாரும் இங்கு பிறப்பதில்லை தானே. ஆக அனுபவிக்க முடியாத அனுபவத்தில் இருந்தே தோன்றும் நாம் ஒருகடனாளியாகவேதோன்றுகிறோம் என்கிறார். இந்த கடனைக் கழிக்கவே நாம் வாழ்நாள் முழுக்க மரணத்தை நோக்கிப் பயணிக்கிறோம். அதை நோக்கி ஒரு பிச்சைக்காரனாக இறைஞ்சுகிறோம். மரணம் வரும் போது, எங்கிருந்து வந்தோமோ - அனுபவிக்க இயலா அனுபவம் - அங்கேயே போகிறோம் என்கிறார் ஹைடெக்கர்


மரணம் ஒரு அழகிய உருவகம் என மட்டுமே ஆகும் போது, அதை அனுபவிக்க எத்தனிப்பதே இவ்வாழ்வின் மகத்தான தேட்டமாக, கடனைக் கழிக்கும் பணியாக ஆகிறது. விளையாட்டு, சிரிப்பு, கேலி கிண்டல், அழிவு விருப்பம், வன்முறை, செக்ஸ், உணவு ருசி, உடற்பயிற்சி, மாரத்தான் ஓட்டம், கலை சார்ந்த ஈடுபாடுகள், மொழி, ஆன்மீகம், அழகியல், இசை, நடனம், கூட்டு செயல்பாடுகள், உடலுழைப்பு, படைப்பாக்கம், எழுத்து என ஒவ்வொன்றுமே இக்கடனை கழிக்கும் வழிகள். (இந்த உடலால் சும்மா இவ்வுலகில் இருப்பதே நம் இருப்பை உணர போதும் என்கிறார் ஹைடெக்கர்.)


 ஆனால் மரணத்தை எதிர்கொள்ளாமல் நம்மைத் தடுப்பது, தொடர்ந்துகடனாளியாகவேவைத்து நம்மை துக்கத்தில் ஆழ்த்துவது இந்த முதலீட்டிய சமூகமே. ஒரு நுகர்வோனாக வாழ்ந்தாலே வாழ்க்கை மகத்தானதாகி விடும் என இது நம்மை திசை திருப்புகிறது. “தொடர்ந்து பணம் ஈட்டு, அதை செலவு செய்என முதலீட்டியம் ஒரு பக்கமும், இணைசேர்ந்து குடும்பத்தை உருவாக்கிடு என சமூகம் இன்னொரு பக்கமும் நம்மை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. மரணத்தை நோக்கி பாயும் நமது இருப்பை உணர விடாது தடுப்பதில் நம் குடும்பத்துக்கு ஒரு பெரும் பங்கு உள்ளது. மரணத்தின் இடத்தில் ஒரு அழகிய உருவகமாக அதுகுழந்தையைக்கொண்டு வருகிறது. ஒரு குழந்தை மட்டும் பிறந்து விட்டு வாழ்க்கைக்கு அர்த்தம் வந்து விடும் என நினைக்கிறோம். ஆனால் பிறந்த சில மாதங்களிலேயே (முலைகுடி நின்றபின்) குழந்தை நம்மிடம் இருந்து விலகி செல்ல ஆரம்பிக்கிறது. அடுத்து குழந்தையை வளர்ப்பது, அதற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவது எனகடன்பட்ட நெஞ்சத்தைமறக்க முயல்கிறோம். குழந்தை மேலும் மேலும் நம்மை விட்டு தள்ளிப் போகிறது. வயோதிகம் வருகிறது. ‘ஐயோ வாழாமல் போய் விட்டோமே, இனிமேலாவது வாழ வேண்டுமேஎன கிடந்து அடித்துக் கொள்கிறோம். அப்போது ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, மாரடைப்பு என ஒவ்வொன்றாக வந்து நம்மை மீண்டும் பணத்தின் அடிமையாக்குகிறது. எப்படியாவது ஆயுளை நீட்டிக்க வேண்டும் எனும் ஆசை வளர்ந்து உண்மையான வாழ்வை மறந்து போகிறோம். நிறைய வயோதிகர்களின் வாழ்க்கை அதிருப்தியின் உச்சமாக இருப்பது தொடர்ந்து உடல் குறித்த பிரக்ஞையுடன் அச்சத்துடன் வாழ வேண்டி வருவதனால் தான். அதை மறக்க அவர்கள் அடுத்தொரு உருவகத்தைக் கண்டுபிடிக்கிறார்கள் - ‘பேரக் குழந்தை’. அதை வளர்ப்பதில் தம்மை மறந்து மரணப் படுக்கையில் அதன் கையைப் பற்ற நினைத்து அந்த அனுபவிக்க இயலாத அனுபவத்தை தழுவி செத்துப் போகிறார்கள்.


இதை விட மரணத்தை அதன் ரத்தச் சூட்டுடன் அனுதினமும் உணர்கிற வாழ்க்கையை வாழ இயல்பதே ஒரு கொடுப்பினை.


 இதனாலே எப்போதும் கலை மத்திய வர்க்க குடும்பஸ்த வாழ்க்கைக்கு எதிர் திசையில் நிற்கிறது. இதனாலே திருமணம் செய்து கொண்ட கலைஞர்கள் அதில் பொருந்திக் கொள்ளாமலே இருக்கிறார்கள். இதனாலே சமகாலத்தில் நகரங்களில் இளையதலைமுறையினர் திருமணத்தை தொடர்ந்து ஒத்திப் போடுகிறார்கள். இதனாலே ஐரோப்பிய சமூகங்களில் குழந்தைப் பிறப்பு வெகுவாக குறைந்து போய் வயோதிகர்களின் எண்ணிக்கை குறைந்தபடி இருக்கிறது. பின்நவீன காலம் மரணத்துக்கு அணுக்கமாய் சென்று அதனுடன் ஜாக்கிங் செய்ய, சூதாட, அதன் கையைப் பற்றி பப்பில் குதித்து லயிக்க முயல்கிற காலம்.  


இனி ஆரம்பித்த இடத்துக்கே வருகிறேன். நமது உளவியல் மட்டுமல்ல அறிவியலும் கூடத் தான் மரணத்தை தவறாக நமக்கு விளக்கியிருக்கிறது. அறிவியல் இந்த உடலை ஒரு கருவி எனக் கருதும் போதே, அதற்கு பழுது ஏற்பட்டு செயல்பட முடியாமல் நின்று போவதே மரணம் என ஒரு கருதுகோளை அது வைக்கிறது. ஆனால் ஒரு கருவியை நம்மால் உருவாக்க முடிவதைப் போல ஏன் உயிரை உண்டாக்க, உயிரின் துவக்கத்தை, முடிவைஉணர’, ‘அனுபவிக்கமுடியவில்லை எனும் கேள்வியை அது சாமர்த்தியமாக தவிர்க்கிறது. மாறாக வாழ்க்கையை வசதியாக பாதுகாப்பாக அனுபவிக்க தன்னால் உதவ முடியும் என்கிறது.


 அப்படி முடியாது போகும் போது அதை ஒரு நோய்மை எனச் சொல்லிக் கொண்டு நவீன உளவியல் வருகிறது. அது மனிதனின் இயல்பே மகிழ்ச்சியாக இருப்பது என்கிறது. அதற்கான மன அழுத்த மருந்துகளை கண்டுபிடிக்கிறது. அது துக்கத்தை அழிக்கும் இடத்தில் தோன்றுவது வெறுமை எனும் போது மனிதன் வாழும் ஆற்றலையே இழக்கிறான். இந்த மருந்துகளை வைத்து போராடிப் போராடி அலுத்துப் போய் அவநம்பிக்கையில் பலர் தற்கொலை பண்ணுகிறார்கள். ஏனென்றால் தற்கொலை சாத்தியம், தற்கொலை ஒரு உண்மை என நம்ப வைப்பதே நமது அறிவியலும் உளவியலும் தான். ஒரு செல்போனை ஸ்விட்ச் ஆப் பண்ணுவதைப் போல வாழ்வையும் பண்ணலாம் என அது நமக்கு தவறாக சொல்லித் தருகிறது. நிறைய நண்பர்களை உருவக்குவது, சமூக மதிப்பை உற்பத்தி பண்ணுவது, ‘நிறைவானவாழ்க்கையை வாழ்வது மகிழ்ச்சிக்கான ஆதாரம் என அது பொய் சொல்லுகிறது. இது முடியாமல் தன்கடன் சுமையைஎதிர்மறையாய் உணர்கிற மனிதன் குற்றவுணர்வுடன் தற்கொலை பண்ணுகிறான்.


மரணம் என்பதே இல்லை, அது நம்மால் கட்டமைக்கப்படுகிற ஒன்று என அறிவுபூர்வமாய் சொல்லிக் கொள்வதே தற்கொலையை தவிர்ப்பதன் ஒரே சிறந்த வழி.

மரணத்தைக் கொண்டாடுவது தற்கொலைக்கு வழிவகுக்காது. அகோரிகளை பிணங்களுடன் இருக்க, பிணங்களைத் தின்ன நம் கலாச்சாரம் பயிற்றுவித்தது இதனாலே, நெற்றியில் திருநீரை அணிந்துநான் ஒவ்வொரு நொடியும் மரணத்துடன் இருக்கிறேன்என மகிழ்ச்சியுடன் நம்மைப் போன்றோரை அது அறிவிக்கச் சொன்னது இதனாலே.


தொழில்நுட்பத்தின் இடையூறுகள் இன்றி வாழ்க்கையை தடையின்றி வாழ முயல்வதும் நம்மை மரணத்துக்கு வெகு அருகில் இருந்து தீக்காய உதவும். தள்ளிப் போனால் குளிரில் வாடி விடுவோம். ரொம்ப பக்கத்தில் போனால் பொசுங்கிப் போவோம். மரணம் எனும் அந்த அக்னியை வழிபடுவோம். அதில் குளிர்காய்வோம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...