நடிகை சித்ரா - அதிகாரத்தின் விலை
நடிகை சித்ராவின் மரணத்துக்கும் நடிகர் சுஷாந்தின் மரணத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது - அரசியல் பெருந்தலைகளின் நிழல் விழுந்த மரணங்கள் அவை. சுஷாந்த் விசயத்தில் மகாராஷ்டிர துணைமுதல்வரே சம்மந்தப்பட்டிருக்கிறார் என்றால் சித்ரா விசயத்தில் எம்.எல்.ஏ, அமைச்சர் போன்றோர் பெயரவில் சம்மந்தப்பட்டிருப்பதாக குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிகைகளில் சொல்கிறார்கள். அதனால் தான் காவல் துறை இவ்வளவு அவசரமாக தற்கொலை எனச் சொல்லி வழக்கை முடிக்கப் பார்ப்பது. யோசித்துப் பாருங்கள்: ஹேமந்த் தான் அடித்து தொங்க விட்டார் எனச் சொல்லி விட்டால் அடுத்து அந்த ஆள் வெளியே வந்து இன்னின்ன அரசியல் தலைகள் பற்றி எனக்கும் சித்ராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாகியதால் கொன்றேன் என ஊடகத்திலோ நீதிமன்றத்திலோ சொல்வார். தேர்தல் வர இருக்கும் சமயத்தில் இது அரசியல் தலைவர்களுக்கு சிக்கலாகும். அதனால் ஒரு பக்கம் தற்கொலை என்று சொல்லி ஹேமந்தையும் பாதி காப்பாற்றி, தற்கொலைக்கு அவரும் ஒரு காரணம் என பாதியில் பாதி காப்பாற்றாமல் செக் வைத்து, ஓவராக மீடியாவில் பேசி தம்மை காண்டாக்கும் சித்ராவின் அம்மா பெயரையும் குற்றபத்திரிகையில் சேர்த்து, அதிமுக தலைகளை ஒட்டுமொத்தமாக காப்பாற்றி ஒப்பேற்றி வைத்திருக்கிறார்கள் போலிசார். தூக்குமாட்டிக் கொள்பவரால் தமது கைகளை அந்நேரம் உயர்த்தி முகத்தைத் தொட முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் முதற்கட்ட மருத்துவ அறிக்கையில் சித்ராவின் நகத்தில் உள்ளவை அவரது திசுக்களே, அவரே தன் முகத்தை பிராண்டி காயத்தை ஏற்படுத்தினார் என நாணயமற்ற அதர்க்கமான குறிப்பை எழுதியிருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தேவை இப்போது அனைவரும் அமைதி சாதிப்பதே. ஏனென்றால் அமைதி தான் அதிகாரத்துக்கு நாம் கொடுக்கும் விலை.
பெரிய அரசியல் அதிகாரத் தொடர்புகள் சில நேரங்களில் நமக்கு பாதகமாகி விடும். சிலரது முகத்திரைகள் கிழியக் கூடாது என குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டு நமக்கு நீதி கிடைக்காமல் போய் விடும். இது ஒரு படிப்பினை.

Comments