முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயா நானாவின் “இன்றைய காந்தி”



இன்றைய இளைஞர்களின் சாதித் திமிர் குறித்தநீயா நானாபைப் பார்த்த போது அதன் காந்திய நிலைப்பாடுதான் என்னை ஆச்சரியப்படுத்தியது, ஏமாற்றத்துக்குள்ளாக்கியது - ஒருவேளை நான் பங்கெடுத்திருந்தால் இதை எடுத்துக்காட்டியிருப்பேன்


சாதிகள் இருக்கட்டும், ஆனால் பரஸ்பரம் வெறுக்காமல், ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒத்திசைவுடன் இருக்கட்டும் என காந்தி வலியுறுத்தினார். அவர் வாழ்ந்த அதே காலத்தில் தான், அம்பேத்கர் சாதி ஒழிய வேண்டும் எனக் கோரினார். அவர் சாதி குறித்த எழுதிய எங்குமே சாதிக்குள் சமத்துவம் பேணலாம் எனச் சொல்லவில்லை, ஏனென்றால் அது ஒரு பாசாங்குப் பேச்சு என அவர் உணர்ந்திருந்தார்.

இவ்விதத்தில், “நீயா நானாவில்சமஸ் ஒரு கச்சிதமான சிறப்பு விருந்தினராக இருந்தார். இந்திய பாரம்பரியத்தின் மையத்தில் உள்ள வைதீக மதத்தின் மீது இருக்கும் புற்றுநோயான சாதியத்தை ஒரு சாதி எதிர்ப்பாளர் இன்னும் நேர்மையாக விமர்சித்து அங்கு பேசியிருப்பார். ஆனால் சமஸ் மேல்சாதிகளின் பதற்றம் எப்படி ஒரு வெறுப்பரசியலாக திரள்கிறது என அங்கே ஒரு கிள்ளலும், இட இதுக்கீடு எப்படி சமூகநீதிக்கு அவசியம் என இங்கே ஒரு விள்ளலுமாகசாதிய சமத்துவத்தைகாந்திய லாஜிக்குடன் பாதுகாத்து அருளாசி கூறினார்.

 எனக்கு இதையெல்லாம் பார்த்த போது எழுந்த கேள்வி சாதியமைப்பை வெறுமனே இனக்குழுக்களின் கூட்டிருப்பாக கருத முடியுமா என்பதே. ஏனென்றால், சாதி என்பதும் இனக்குழு என்பதும் ஒன்றல்ல. இனக்குழு பிற குழுக்களுடன் உறவாடாமல் தனித்து வாழும் ஒன்று. ஆனால் சாதி என்பது ஒரு படிநிலை. படிநிலை இன்றி சாதியில்லை. மனுநீதி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடுகிற அதே படிநிலையைத் தான் இன்றும் பின்பற்றுகிறோம். “நீயா நானாவில்ஒரு சாதிக்காரர் மற்றொரு சாதிக்காரரிடம் கெத்து காட்டும் போது தன்னை மேல் என்று தானே காட்டிக்கொள்ள உத்தேசிக்கிறார் என கோபி கேட்க அதற்கு பதில் சொல்லும் அவர்நாங்க எங்களோட பெருமையைத் தான் காட்டிக்கிறோம், வேறு யாரையும் மட்டம் தட்டலஎன்கிறார். கோபி மீண்டும் மீண்டும்எப்படி மட்டம் தட்டாம உங்க பெருமையை கட்டிக்க முடியும்? எனக் கேட்கிறார். நான் அதையே தான் மொத்த ஷோவையும் நோக்கி கேட்க விரும்பிகிறேன்: “பெருமையும் காட்டாமல், மட்டமும் தட்டாமல் எப்படி சாதிக்குள் இருக்க முடியும்?” முடியாது, ஆனால் அதை வெளியே காட்டி பிரச்சனையை பெரிதுபடுத்தாதீர்கள் என்பதே நீயா நானா அணியின் அரசியலாக இருக்கிறது.


எதார்த்தத்தில் நடப்பது என்ன? சாதிக்கட்சிகளின் தரப்பாக தம்மைக் காட்டிக்கொள்ளும் சில்லுண்டிகள் மட்டுமல்ல, சாதியை மைக்கை பிடித்து முழங்காமல் வாழும் அமைதியான மத்திய வர்க்கத்தினரும் அதே அதிகார அரசியலை தான் நுட்பமாக எடுத்தாள்கிறார்கள். ஒரு தெருவில் நான்கு குடும்பத்தினர் சேர்ந்து பழகும் போது அதற்குள் ஒரு சாதி சார்ந்த வரையறை தோன்றுகிறது, ஒரு அலுவலகத்திலும் இப்படியே நடக்கிறது. சில இடங்களில் சாதிப்பாசம் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இது ஒரு புண். இந்த புண்ணில் சீழ் வந்தால் மட்டும் தான் பிரச்சனை, மற்ற சமயங்களில் புண்ணைத் தடவி பூசை செய்யலாம் என்பதே காந்திய முட்டுக்கொடுத்தல்


அதாவது சாதியமைப்பு அதனளவில் ஆபத்தானதோ அநீதியானதோ அல்ல, சாதித் திமிர், சாதி வன்முறை மட்டுமே தப்பானது என்பது ஒரு மிகப்பெரிய பாசாங்கு. சாதியமைப்புக்குள் இருப்பது ஒரு வைரஸ் தொற்று என்றால், அது ஏற்படுத்தும் கசப்புகளும் வெறுப்பரசியலும் அதன் நோய்க்கூறுகள்


இந்த இளைஞர்கள் ஏன் இப்படி வெளிப்படையாக சாதித்திமிர் காட்டுகிறார்கள் என மேம்போக்காக இதை அலசாமல் இரண்டு கேள்விகளைநீயா நானாஅணி எடுத்தாண்டிருக்க வேண்டும்:


1) பொருளாதார, சமூக வளர்ச்சியால் சாதிப்படிநிலையில் ஒரு நடுக்கம், மறுசீரமைவு நடிக்கும் போதே கலவரங்கள் துவங்கி சாதித்திமிர் அடவாடித்தனங்கள் நிகழ்கின்றன. அதாவது, கீழே இருக்கும் சாதிக்காரர்கள் மேலே வரத் துவங்கும் போதே மேல்சாதிக்காரர்களிடம் இருந்து எதிர்ப்பு ஒரு வன்முறையாக, அகந்தையாக வெளிப்படுகிறது - இதை ஒருவர் லேசாக சுட்டிக்காட்டினார், ஆனால் கோபி பட்டும்படாமல் கடந்து விட்டார். ஆக அமைதி என நாம் கேட்பது சாதி அமைப்புக்குள் பெரிய மாற்றங்கள், நிலைகுலைவுகள் வராமல் இருந்தபடி இருக்க வேண்டும் என்பதே. நாளை தாழ்த்தப்பட்டோர் கூடுதலாக மேலே வர நேர்ந்தால் இதைவிட அதிகமான வெறுப்பரசியல் தோன்றத்தான் செய்யும் - அது (சமஸ் சொல்வதைப் போல) மேல்சாதியினரின் ஒரு தற்காப்பு உத்தி அல்ல, சாதியமைப்பு தன்னை மறுசீரமைப்பு செய்வதற்கான உத்திஇந்த சிக்கலுக்குள் செல்லாததனால் இந்த அத்தியாயம் மேலோட்டமாகி விட்டது. கடைசியில் எல்லாரும் பரஸ்பரம் அறிவுரை சொல்லி சமாதானமாகி விட்டார்கள். ஆனால் வெளியே போய் இப்படியே தான் இருப்பார்கள், வேறு வழியில்லை.


2) சாதிக்கும் மதத்துக்குமான, பாகுபாடுகளுக்கும் இறை எனும் கருத்தாக்கத்துமான தொடர்பைப் பற்றி பேசியிருக்க வேண்டும். ஒரு முழுமுதல் தனி உண்மை என இறைவன் தோன்றிய பின்னரே முழுமுதல் இனம், முழுமுதல் ஆண்ட வர்க்கம், முழுமுதல் சாதி என ஒவ்வொன்றும் அதன் சாயலில் ஏற்படுகிறது. இறைவனைக் கொல்லாமல், அதனுடனே தனிப்பெரும் தகைமை கொண்ட ஒவ்வொரு கருத்துருவையும் கொல்லாமல், சாதியைக் கொல்ல முடியாது. இந்தியாவில் வைதீகக் கடவுளர் சாதியின் ஆன்மாவாக இருக்கிறார்கள் என்றால், மற்ற நாடுகளில் கர்த்தர் அல்லாவும் மக்களை ஏற்றுத்தாழ்வுக்குள் ஆழ்த்துகிறார்கள்; நீட்சே சொன்னதைப் போல தாழ்வுமனப்பான்மையை, குற்றவுணர்வை இந்த உலகியல் வாழ்க்கை மீது ஏற்படுத்தி, அதில் இருந்து மீள நீங்கள் மதத்தைப் பின்பற்ற வேண்டும் என பிரச்சாரம் செய்து ஒரு பெரிய அநீதியான அதிகார அமைப்பை கட்டியெழுப்புகிறார்கள். வைதீக மதத்தினர் இந்த தாழ்வுணர்வை வளர்த்தெடுத்தே இந்தியா முழுக்க அடிமைப்படுத்தினால், கிறித்துவ காலனியவாதிகள் உலகம் முழுக்க கிறுத்துவைக் கொண்டு போய் கறுப்பர்களையும் பிறரையும் தாழ்வுணர்வு கொண்டவர்களாக ஆக்கி இனவாதத்தை முன்னெடுத்தார்கள்; அதற்கு முன்பு வெள்ளையர்கள் தமக்குள்ளே ஏற்பட்ட சமூகப்பிளவுகளை நியாயப்படுத்தவும் கர்த்தரை பயன்படுத்தினார்கள்.

 நீங்கள் வாழ்க்கையை சாராம்சப்படுத்துவதன், essentialize பண்ணுவதன் அரசியலைப் பேசாமல் சாதியை, இனவெறியை பற்றி பேச முடியாது.

இதைத் தொடாமல், ஏதோ வெங்காய் விலையேற்றம் போல இதை ஒரு பேச்சுவார்த்தையில் முடிக்கிறோம் என கையாண்டதே, 90 வருடங்களுக்கு முன்பு காந்தி பேசிய அதே அபத்தமான லாஜிக்கை வைத்து, அம்பேத்கரில் இருந்து பெரியார், அயோத்திதாசர் வரை யாரையும் தொடாமல் இதைப் பேசியதே “நீயா நானா” குழுவினர் செய்த தவறு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...