முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராஜன் குறையின் “மறுப்புக்கு” ஒரு மறுப்பு



தமிழினி இணையதளத்தில் நான் எழுதிய “இந்து ராஷ்டிரம் குறித்து தெரிதா என்ன சொல்வார்?” எனும் கட்டுரைக்கு ராஜன் குறை ஒரு எதிர்வினையை அதே இணையதளத்தில் இம்மாதம் எழுதியிருக்கிறார். அதை எதிர்வினை, விமர்சனம் எனக் கூறுவது கூட மிகையே - ஒருவித மறுப்பு என்பேன். நான் எதைக் கூறினேன், அவர் எதை மறுத்தார்?

நான் கூறியது:

இந்து ராஷ்டிரத்தின் உருவாக்கம், அதன் செயல்முறை குறித்ததல்ல அக்கட்டுரை. அது இந்துத்துவர்களின் வாதமற்ற வாதங்கள், அவர்களுடைய கோடாபாட்டு நிலைப்பாடுகளில் உள்ள ஒருவித “அ-காலமான” நோக்கு பற்றின விளக்கம். ஏன் இந்துத்துவர்களுடன் தர்க்கபூர்வமாய் விவாதிக்கும் போது நமக்கு அவர்கள் பைத்தியமாகவும் அவர்களுக்கு நாம் துரோகிகளாகவும் தோன்றும்படியாக ஒரு பெரும் பள்ளத்தாக்கு இரு தரப்புக்கும் இடையில் தோன்றுகிறது என இக்கட்டுரை பகடியாய் அலச முயல்கிறது. அதற்கு தெரிதாவின் பார்வையை கடன்வாங்கிக் கொள்கிறது.

ராஜன்குறை சொல்வது:

 என் கட்டுரையில் என்ன பிழை, அது ஏன் தவறு என அலசி நிறுவுவதோ அல்லது வெறுமனே இதுதான் பிரச்சனை என குறிப்பிடுவதோ நியாயமான விமர்சனமாக இருக்கும். ஆனால் ராஜன்குறை இந்த பாணியிலான அலசலால் என்ன பயன் எனக் கேட்கிறார். “பயன்” என்பதை அவர் எப்படி புரிந்து கொள்கிறார் எனத் தெரியவில்லை. இந்துத்துவ கனவை, லட்சிய சிந்தனையை நான் பகுத்தறிவினால் புரிந்து கொள்ள முடியும் என நம்புவில்லை. பின்னமைப்பியல் உளவியல், தெரிதாவின் பார்வை (அதை விமர்சனம் எனக் கூறுவதை தெரிதா ஏற்க மாட்டார்) கொண்டு இதைப் புரிந்து கொள்ள முடியுமா என முயல்கிறேன். அதையும் நான் இங்கு ஆய்வு முறையில் நிறைய மேற்கொள்களுடன் (லக்கான், தெரிதா என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என விளக்கி, அவர்களின் சொல்லாடல்களுடன்) விரிவாக அலசுவதில்லை; நான் என்னுடைய எந்த கட்டுரைக்கும் ஆய்வு முறைமையை பயன்படுத்துவதில்லை, அது வாசிப்பின் சரளத்தை தடை செய்யும் என்பதால். ராஜன்குறை இதற்குப் பதிலாக ஆட்சியியல், குடியாட்சி குறித்த லட்சியவாத தத்துவ / கோட்பாட்டு சிந்தனைகள், வரலாற்றுவாதம் சார்ந்து இதை எழுதியிருக்க வேண்டும் என்கிறார் அது அவரது முறைமை - குறிப்பாக, ஒவ்வொரு சிந்தனைக் குறுக்கீட்டையும் ஒரு நீண்ட வரலாற்று மரபின் ஒரு கண்ணியாகப் பார்ப்பது. 

அவரது வரலாற்றுவாதத்தில் எனக்குள்ள பிரச்சனை அது ஒரு லட்சியத்தை முன்வைத்து ஒரு படிநிலையை உண்டுபண்ணி, அத்தனை எத்தனங்களும் மனிதன் ஒரு மேலான இடத்தை அடைவதற்காக செய்யப்படுபவை, இந்த வரலாற்று வளர்சிதை மாற்றங்களில் சிலநேரங்களில் பாதகமான விளைவுகளும் ஏற்படும், அவற்றை எப்படி சரி செய்வது என வந்து முடியும். இந்த மானுட-மையவாதத்துடனும் எனக்கு உடன்பாடில்லை. அதனாலே அச்சு எந்திரத்தின் கண்டுபிடிப்பு, எந்திரமயமாக்கல், காலனிய படையெடுப்புகள், நவீன மனித சுயத்தின் உருவாக்கம் என கோவையாக வாசித்து, இன்றுள்ள அரசியல் எதார்த்தத்துக்கு வந்து ஒரு நேர்கோட்டு சித்திரத்தை உண்டு பண்ணுவதை நான் விரும்புவதில்லை. இது வேண்டாம் என்றல்ல, ஆனால் இது மட்டும் போதாது என்கிறேன். ஏனென்றால் இது சுலபத்தில் வரலாற்று மாந்தர்களை கட்டமைத்து, அவர்களை மையத்தில் கொண்ட இயக்கங்களுக்கு ஒரு கதையாடலை உருவாக்கி, நடைமுறை தளத்தில் நிகழும் முரணான, ஒழுங்கின்மையான அதிகார நகர்வுகளுக்கு ஒழுங்குமுறையை, நியாயத்தை அளிக்கும். அவரைப் போல ஒரு சிறந்த அறிவார்ந்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி அதன் மூலம் ஊழல், குடும்ப அரசியல் போன்ற நடைமுறை “ஒழுங்கின்மைகளை” (chaos) நான் நியாயப்படுத்த முயலமாட்டேன். தெளிவான குளத்தில் ஒரு சிறிய கல்லை விட்டெறிவது, அப்போது நிகழும் கலவரத்தை ரசிப்பது, அதன் சிதறலுக்கு ஒரு சிறிய நியாயத்தை உருவாக்குவது மட்டுமே என் இலக்கு. இது “இரைச்சல்” என ராஜகுறை சொன்னால் அது அவரது விருப்பம். ஆனால் அது ஒரு நியாயமான விமர்சனம் என சொல்ல மாட்டேன். நியாயமான விமர்சனம் ஒரு சிந்தனை ஓட்டத்தின் தளத்துக்குள் நின்றே செய்யப்படுவது, தெரிதாவைக் கொண்டு நிகழ்த்தப்படும் சிந்தனையை தெரிதாவை மட்டும் அல்லது அவரை ஒத்த பின்னமைப்பியல் தத்துவ ஞானிகளை வைத்து உரசிப்பார்ப்பது, அலசுவது. முழுக்க வெளியே நின்று பார்த்து ஏன் ஒரு வரலாற்று சித்திரத்தின் அடிப்படையில் சிந்திக்க மாட்டேன் என்கிறாய் என எரிச்சல்படுவதல்ல. இந்த விசயத்தைப் பற்றி மரபார்ந்த முறையில் இப்படித்தான் பேச வேண்டும் என வாய்க்கால் பரப்பை நிறுவுவதல்ல.


மற்றபடி, ராஜன்குறை மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவரது சிந்தனைகள், எழுத்துக்கள் முக்கியமானவை. சமூக அரசியல் தளத்தில் அவர் நீதியின் பக்கம் நிற்பவர், எந்த கணத்திலும் துளியும் பிசகாதவர், தத்தளிக்காதவர், ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக பேசுபவர். இந்த “எதிர்வினையால்” அவர் மீதான என் மதிப்பீடு மாறப்போவதில்லை. அவர் இவ்விசயத்தில் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது (ஒரு பக்கம் அது நியாயமல்ல என ஏமாற்றமளித்தாலும்) எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக, ஆழமாக எழுதுவது எப்படி என்பது குறித்து சில படிப்பினைகள் எனக்குக் கிடைத்துள்ளன. அதற்கு அவருக்கு என் நன்றி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...