முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முழுநேர எழுத்தாளனின் நெருக்கடிகள்



இந்த வீடடங்கு காலம் எனக்கு எந்தளவுக்கு உதவியுள்ளது என யோசித்தால் பெரிதாக இல்லை என்று சொல்ல வேண்டும். நான் இதை பெங்களூருக்கு வேலை மாறி வந்த சூழலை வைத்தே சொல்கிறேன் - பொதுவாக அல்ல. 

1) பல்கலைக்கழகத்துக்கு பக்கமாகவே வாடகை வீட்டை தேர்ந்தேன். 10 நிமிடங்களுக்குள் போய் விடலாம். ஆகையால் வீடடங்கினால் மற்றவர்களைப் போல பயண சலிப்பு இல்லாமல் ஆனது எனக்கு பெரிய அனுகூலமல்ல. 


2) வாய்ப்பிருந்தால் நான் தினமும் பல்கலைக்கழகம் செல்லவே விரும்பியிருப்பேன். ஏனென்றால் அது எனக்கு ஒரு ஒழுங்கை தந்தது. தினமும் நேரத்துக்கு தூங்குவது, ஓரிடத்துக்கு செல்வது, அங்கு ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வது, திரும்பி வருவது என. பெங்களூர் குளிரில் காலையில் எழுவது கடுப்பானது என்றாலும் பழகி விட்டால் பொருட்டல்ல.


3) முதல் மூன்று மாதங்கள் இந்த வீட்டிலிருந்து வேலை பார்ப்பது லகுவாக, வசதியாக, சுதந்திரமாக இருந்தது. ஆனால அதன் பிறகு அதன் குறைகள் தெளிவாகின. 

அ) அலுவலகத்தில் எனக்கென எழுத, படிக்க ஒரு இடம் இருந்தது. வீட்டில் அது இல்லை. குறிப்பாக மாலை 5:30இல் இருந்து 9 வரை பல்கலைக்கழகத்தில் அதிக ஆட்கள் இருக்க மாட்டார்கள். நான் என் அலுவலகத்திலோ நூலகத்திலோ சென்று உட்கார்ந்து எழுதுவேன். வீட்டில் நான் ஒரு சிறிய இடத்தை வகுத்து அங்கு நாற்காலி, மேஜை போட்டாலும் அது ஏதோ குயிலைப் புடிச்சு கூண்டிலடைச்சதைப் போலத் தான் இருக்கும்.


ஆ) நெருக்கடி நடுவே எழுதுவது தான் எனக்கு பழகிப் போனது. முழுநாளும் நீயே திட்டமிட்டு வேலை செய் என்றால் எனக்கு அது சரிப்படாது. பிடிக்காத வேலைகள் நடுவே நேரத்தைக் கண்டுபிடித்து எழுதும் போது என் எழுத்து வேகம் பிடிக்கும். பல்கலைக்கழகத்தில் எனக்கு இரண்டு வகுப்புகள் இருந்து நடுவே ஒரு மணிநேரம் இடைவேளை இருந்தால் நான் முதல் வகுப்புக்கு ஒரு மணிநேரம் முன்பே சென்று வகுப்பு ஆரம்பிக்கும் ஒரு நிமிடம் முன்பு வரை வேகமாய் எழுதிக் கொண்டிருப்பேன். வகுப்பு முடிந்ததும் விட்ட இடத்திலிருந்து அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் சற்று முன்பு வரை எழுதுவேன். இது என் வகுப்பு சரளமாக அமையவும் உதவுவதை பார்த்திருக்கிறேன். எழுதுவதிலும் நெருக்கடி இருக்காது. ஆனால் தொடர்ந்து சில மணிநேரங்களை எனக்கு தாராளமாக அளித்து தேவையான போது எழுது எனக் கொடுத்தால் என்னால் நிம்மதியாக எழுத முடியாது. என்னால் ஒரு போதும் முழுநேர எழுத்தாளன் ஆக முடியாது என நினைக்கிறேன். அது ரொம்ப சலிப்பானது. 


இ) ஒவ்வொரு எழுத்தாளனைப் பொறுத்தும் இது மாறும் - எழுதுவதை விட வேலை செய்வது சுலபமானது, குறைந்த சவால் கொண்டது என நினைக்கிறேன். வேலை பழகி விட்டால் எந்திரத்தனமாக செய்து கொண்டிருக்கலாம். குழுவாக வேலை செய்யும் போது நம் பங்குக்கு ஒரு சிறிய குறிப்பான பணியை செய்து கொடுத்தால் போதும். ஆனால் எழுதும் போது அந்த பணியின் ஒட்டுமொத்த பொறுப்பும் நம் தலை மீது வந்து உட்கார்ந்து கொள்கிறது. குறிப்பாக நாவல் எழுதும் போது. அந்த பதற்றத்தில் வேலையை தள்ளிப் போட்டபடி இருப்போம். என்னதான் முயன்றாலும் எழுத்து 50-50 தான் என நினைக்கிறேன். நிறைய முயற்சி எடுத்தாலும் ஒரு கதை மோசமாக அமைந்து விடும். ஆனால் வேலையில் முயற்சி எடுத்தால் அத்தகைய ஏமாற்றங்கள் இராது. அங்கு கற்பனை, தற்செயல், தீவிர மனக்குவிப்பு போன்றவற்றுக்கு பெரிய வேலையில்லை. அதனாலே வேலைக்கு போவது எழுதுவதை விட சுலபம்.

ஈ) ஒரு முழுநேர எழுத்தாளன் 18 மணிநேரமும் எழுதப் போவதில்லை; அதே 2-4 மணிநேரங்கள் தாம். மிச்ச 12-14 மணிநேரங்களை அவன் வேறு விசயங்களுக்கு திட்டமிட வேண்டும். வாசிக்கலாம், தூங்கலாம், ஓய்வெடுக்கலாம், டிவி பார்க்கலாம், குடிக்கலாம், காதலிக்கலாம். ஒரு கட்டத்துக்கு மேல் இவை போரடித்து விடும்.

உ) வீட்டுக்குள்ளே இருக்கும் போது மக்களுடன் நேரடியாக பழகும் வாய்ப்பு மிக மிக குறைவதால் உணர்வு ரீதியான மோதல்கள், சமரசம், அந்த டிராமா, சுவாரஸ்யம் இல்லாமல் ஆகிறது. வாழ்க்கையில் நகர்வே இல்லை. அதே வாழ்க்கை, நாட்காட்டி மட்டும் தேதியை மாற்றுகிறது எனத் தோன்றுகிறது. இதனால் தான் முழுநேர எழுத்தாளர்கள் அடிக்கடி பயணம் சென்று யாரிடமாவது வம்பு பண்ணி, நட்பை முறித்து, நட்பை உண்டு பண்ணி, சவால்களை உண்டு பண்ணி, எதிர்கொண்டு, அதுவும் அலுத்ததும் எழுதுவதற்கு தனிமையை நாடுகிறார்கள். வேறு சில எழுத்தாளர்கள் கோயில் கோயிலாக பயணம் போவது இதற்கு மாற்றாகத் தான்.

ஊ) என்னுடைய வாழ்வின் மிக வண்ணமயமான நாட்கள்  2009-12 காலத்தில் கல்லூரியில் வேலை செய்த நாட்கள். அதன் பிறகு ஓரளவுக்கு முனைவர் பட்ட ஆய்வு நாட்களை சொல்லலாம். உட்கார்ந்து எழுதின நாட்கள் அல்ல, என்னதான் எழுதுகிற அந்த சில மணிநேரங்கள் அற்புதமான அனுபவம் என்றாலும்.

எ) எனக்கு எழுத உகந்த சூழல் சற்று இரைச்சலான, மக்கள் சுற்றிலும் நடந்து கொண்டிருக்கிற சூழல். அதனாலே நான் ஒரு கபேவுக்குப் போய் ஒரு காப்பி வாங்கி வைத்துக் கொண்டு மக்களைப் பார்த்தபடி அவர்கள் பேசுவதைக் கேட்டபடி எழுதுவேன். சென்னையில் நான் தேநீர் கடைகளில் போயிருந்து மகிழ்ச்சியாக எழுதுவேன். அப்போதே மனம் சுலபத்தில் குவியும். என் மனத்தின் குரலை இது மௌனமாக்குகிறது என நினைக்கிறேன். தனிமையில் எனக்கு எழுத ஆரம்பிக்கவே நிறைய நேரமெடுக்கும்.


4) எல்லாருக்கும் வேலை முக்கியம் - வெறும் சம்பளத்துக்காக மட்டுமல்ல என்பதே என் வாதம். அதற்காக 16 மணிநேர அடிமை வேலையாக இருக்கக் கூடாது; முழுநேர வெட்டி வேலையாகவும் இருக்கலாகாது. எழுத்தாளர்களுக்கு எழுதுவது போக மிச்ச நேரத்தில் சமூகத்துடன் நேரடியாக உறவாடும் சிக்கலான வேலைகள் உதவும் என நினைக்கிறேன் - எழுத்தின் நெருக்கடியில் இருந்து விலகியிருக்க உதவும். ஹெமிங்வே முழுநேர எழுத்தாளரான பின் திரும்பத் திரும்ப ஏன் தன் போர் அனுபவங்களைப் பற்றி எழுதினார் என யோசியுங்கள். இரண்டு உலகங்களுக்கும் ஒரு சமநிலை இருக்க வேண்டும். அது இந்த வீடடங்கின் போது சற்று உருக்குலைந்து விட்டது.


5 ) நேற்று எங்கள் வீட்டருகே உள்ள ஒரு பல் மருத்துவரின் கணவரைக் காட்டி பல்லவி ஒன்று சொன்னாள். அவர் வீட்டோடு மாப்பிள்ளை. அவர்களுக்கு சொந்தமாய் சில கடைகள் உள்ளன. அவற்றை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். வேலை இல்லாவிட்டாலும் அந்த வருமானமே போதும். கூட, கிளினிக் வருமானம். கணவர் கிளினிக்கில் போய் இருந்து கூட மாட மனைவிக்கு உதவி விட்டு ஊர் சுற்றுகிறார். நான் அவளிடம் இந்த வேலையற்ற வேலை தான் ரொம்ப கொடுமையானது என்றேன். நான் அவளிடம் விக்டர் பிராங்கிள் எழுதிய Man’s Search for Meaning புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டேன். 

விக்டர் பிராங்கிள் ஒரு உளவியலாளர். யூத வகை முகாமில் சிறைவைக்கப்படுகிறார். அங்கும் அவர் எல்லாவகையாக உடலுழைப்பு சார்ந்த வேலைகளிலும் ஈடுபடுகிறார். சாதாரண உணவுக்கு, ஓய்வுக்கு கூட தினம் தினம் போராடுகிற வாழ்க்கை. ஒவ்வொரு தினமும் உயிருடன் இருப்பதே பெரிய சாதனை. அது அந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட ஒரு அடர்வனத்தில் மிருகங்களிடம் இருந்து தம்மை பாதுகாக்க, அதனிடையே உணவை சேகரித்து உண்டு, உறங்கி வாழும் நொடிக்கு-நொடிக்கு போராடும் வாழ்க்கை. திகைப்பான, பயமான, சவாலான, கலாச்சார, அறிவார்ந்த அடையாளங்கள் கழன்று போன, மானமோ கௌரவமோ நாகரிகத்தின் பிரக்ஞையோ இல்லாத வாழ்க்கை. ஆனால் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட யூத மக்கள் திரும்ப இயல்பு வாழ்க்கைக்கு மீண்ட பிறகு தான் அவர்களுக்கு பெரும் சவாலே காத்திருக்கிறது. இயல்பு வாழ்க்கை வதைமுகாம் வாழ்க்கையை விட கொடூரமாக அவர்களுக்குப் படுகிறது. வதைமுகாம் வாழ்வில் இருந்து ஆழமான ஒரு திருப்தி அவர்களுக்கு இந்த வாழ்வில் இல்லை. அர்த்தமற்றதாக உள்ள இந்த வாழ்க்கை அவர்களை சிதைக்க அவநம்பிக்கையால் சூழப்பட்டு மனப்பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த வதைமுகாம் survivors பெருமளவில் பின்னர் மனநோயாளிகளாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிராங்கிள் ஒரு புதிய தெரப்பியை உண்டு பண்ணுகிறார் - இதன்படி மனிதனுக்கு மகிழ்ச்சியாக வாழ அவசியம் பாதுகாப்பு, உணவு, செல்வம் அல்ல, அன்றாட இருப்பில் உணர்கிற அர்த்தம் மட்டுமே. இந்த அர்த்தம் கிடைக்க வாழ்க்கையில் நெருக்கடியும் சவாலும் வேண்டும். நாகரிக வாழ்வில் அது இல்லாததால் அதை நாமே உண்டு பண்ண வேண்டிய தேவை உள்ளது. தமிழில் இதற்கு ஜி.நாகராஜன் ஒரு சிறந்த உதாரணம். அவர் தேடி சென்ற அந்த சவாலான இரவு வாழ்க்கை, ஒரு வேட்டை மிருகமாக தன்னை அவர் கற்பனை செய்து கொண்டது தனது அன்றாட வாழ்வின் அர்த்தமின்மையினால் ஏற்படும் அழுத்தத்தில் இருந்து தப்பிக்கவே என நினைக்கிறேன். அவர் கண்முன்னே அவரது நண்பரான சு.ரா லட்சியவாதத்தால் ஒரு கண்ணாடி மாளிகையை எழுப்பி இதில் இருந்து மீள முயல, நாகராஜன் அந்த கண்ணாடி சுவர்களை உடைத்து கொண்டு தன்னை அழித்து அதிலிருந்து மீள முயன்றார். இதற்கு நேரெதிரான வாழ்க்கையை வாழ்ந்த அசோகமித்திரன் திரும்பத் திரும்ப வறுமையின் நெருக்கடிகளைப் பற்றி பேசியது அது மட்டுமே அவரது எதார்த்தம் என்பதால் அல்ல. அவரது முதுமையில் அவர் ஒரு வசதியான மத்திய வர்க்க வாழ்க்கையை வாழ்ந்தார். ஆனால் மனதளவில் அவர் அதற்குள் இருக்க விரும்பவில்லை. அதைப் பற்றி அதிகமும் எழுதவும் இல்லை. வறுமையின் கேள்விகளே அவருக்கு என்றும் அர்த்தபூர்வமாக இருந்தன. 


நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உள்ள நடைமுறைகள் இந்த அர்த்தமின்மையில் இருந்து நம்மை மீட்க தோன்றியவை தாம்; யூத வதைமுகாம்கள் மிக மிக தீவிரமான கொடுமையான ஒரு வாழ்க்கையில் கைதிகளைத் தள்ள, திரும்ப நிதானமான வாழ்க்கைக்கு திரும்பியவர்களுக்கு அது தீவிரமே அற்றதாக, சவால்களோ இலக்குகளோ அற்றதாகத் தோன்றியது. ஆனால் இந்த எளிய சவால்கள் கொண்ட நடைமுறை வாழ்க்கை சீர்குலைந்தால் கூட மக்களுக்கு அதைத் தாங்கிக் கொள்ள முடியாது என நினைக்கிறேன். அதனாலே மிதமிஞ்சிய போதைப்பழக்கம், செக்ஸ் நாட்டங்கள், மதவாத அரசியல், கல்ட் அமைப்புகளின் கம்யூன் வாழ்க்கை, வார இறுதி கூட்டுப் பயணங்கள், கார், பைக்கில் சாகச விளையாட்டுகள், ரியாலிட்டி ஷோக்கள் போன்றவற்றில் மத்திய, மேல்-மத்திய வர்க்க மக்கள் இன்று வேறுவகையில் அர்த்தத்தை நாடுகிறார்கள். இவை தோன்றியவுடனே கலைந்து போகும் அர்த்தங்கள் என்பதால் திரும்பத் திரும்ப தினமும் நாடுவதற்கு ஏற்ப இருக்கின்றன. அர்த்தத்தை நாடுவதே இன்று ஒரு சாகச விளையாட்டாக, நுகர்வாக மாற்றப்பட்டுள்ளது.


இதனாலே முழு சுதந்திரமான தனக்கான வாழ்க்கை எழுத்தாளனைக் கொன்று விடக் கூடும் எனத் தோன்றுகிறது. அவனால் அன்றாட நுகர்வு அனுபவங்களில் முழுத் திருப்தி அடைய முடியாது. அவனால் வேலை, குடும்பம், குழந்தை என போலியாய் இளித்துக் கொண்டிருக்கவும் முடியாது. எல்லாரையும் போல அவனுக்கும் நடைமுறை வாழ்வின் சின்னச் சின்ன சவால்கள் வேண்டும். கூடுதலாக தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் துன்பங்கள், சிக்கல்களை கவனித்து அவற்றுடன் தொடர்புறுத்தி மற்றவர்களுக்காக குருதி சிந்தி அதைத் தொட்டு எழுதுவதும் அவசியம். தன் வாழ்க்கை நிலையானதாக இருந்தால் அவன் மற்றவர்களின் நிலையற்ற வாழ்க்கையில் தன்னை இருத்தி சிந்தித்து அங்கிருந்து எழுத வேண்டும். அது சமூக அரசியல் சிந்தனைகளால் நிகழலாம். மக்களுடனான தொடர்ச்சியான உரையாடல்களினால் நிகழலாம். ஒரு பாதி இப்படியென்றால், மற்றொரு பாதி - இந்திய வாழ்க்கையில் இப்போதைக்கு - வெளியே சென்று செய்கிற வேலை மூலமாகவே நிகழ வேண்டும். ஹெமிங்வே போல அவனால் வேட்டையாடவோ குண்டுகள் பொழியும் போர்க்களத்தின் மத்தியில் வாழவோ முடியாது.

கருத்துகள்

silviamary.blogspot.in இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களின் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பவை 100% உண்மை என்பதை நானும் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன். வேலை இல்லை என்றால் நிறைய எழுதலாம் என்ற எண்ணம் எனக்கும் கூட இருந்தது. ஆனால் அது உண்மை இல்லை என்பதை நான் வேலை இல்லாமல் வீட்டிலிருந்த நாட்களில் உணர்ந்து கொண்டேன். எனக்கு கொரோனாவினால் வேலை போகவில்லை. அதற்கு முன்பே வேலை போய்விட்டது. சரி எதற்கு இனிபோய் ஒரு கம்பெனியில் கடிகார முட்களைத் துரத்தும் வேலையில் சேர்ந்து வருத்திக் கொள்வது? மனைவியின் சம்பாத்யம் வருகிறது. போதும். ஓய்வில் இருந்தால் நிறைய எழுதலாம் என்று சிரத்தையாக வேலைகூட தேடவில்லை. ஆனால் நான் ஆசைப்பட்டபடி எதுவும் நடக்கவில்லை. பரபரப்பாக வேலைக்குப் போயிக் கொண்டிருந்த நாட்களை விட வேலிஅக்குப் போகாமல் வீட்டிலிருந்த நாட்களில் எழுதியது மிகமிகக் குறைவே...! பெரும்பாலும் முந்தைய காலங்களில் எழுதியவற்றை திருத்திக் கொண்டு தான் இருந்தேன். புதிய ஆக்கங்களுக்கான் மனநிலையே வாய்க்கவில்லை.சரி, வேலைக்கே போய்விடலாம் என்று நினைக்கும் போது கொரோனா வந்து புதிய வேலை வாய்ப்புகளையும் காலி பண்ணிவிட்டது. என்னை யாரென்று நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஒரே ஒரு சிறு தகவல்: நீங்கள் நடுவராக இருந்து தேர்ந்தெடுத்த சென்னைக் கதைகளின் - கிழக்குப் பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டி - முதல் பரிசு பெற்ற சிறுகதையை எழுதியது அடியேன் தான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...