முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தில் பிரச்சனை என்றால் சக-எழுத்தாளர்களிடம் அறிவுரை கேட்கலாமா?



பேரிஸ் ரெய்வூவின் Writers at Work தொடரில் வரும் ஒரு பேட்டி எழுத்தாளர் கேரியுடனானது. அதில் அவரிடம் நீங்கள் உங்கள் சக எழுத்தாளர்களுடன் பேசி உங்கள் படைப்பில் உள்ள டெக்னிக்கலான பிரச்சனைகளை சரி செய்ய முயன்றதுண்டா எனக் கேட்கிறார்கள். அதற்கு கேரி சொல்லும் பதில் கூர்மையானது: “உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்கள் மட்டுமே தேர்வு காண முடியும், எழுதும் அனுபவம் வழியாக”.


அவர் இதை சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் ஒரு நாவலின் அல்லது சிறுகதையின் தொழில்நுட்ப பிரச்சனையானது அதனுடைய குறிப்பிட்ட வடிவம் சார்ந்ததாகவே இருக்கும். அதை விலகி நின்று பார்த்து உணரும் திறன் இல்லாத போது நாம் அதற்குள்ளே மாட்டிக் கொள்வோம். எப்படி எழுதினாலும் கதை சரியாக வராது, எதோ ஒன்று அதை ஜீவனற்றதாக மாற்றும். அப்போது உங்களுக்கு அதைப் பற்றி ஒரு சக படைப்பாளியிடம் அரற்றுவதற்கு சபலம் வரும். அவரிடம் நீங்கள் உங்கள் நாவலின் / கதையின் ஒற்றை வரியை, நீங்கள் சொல்ல நினைப்பதை மட்டுமே சொல்ல முடியும். நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிற பிரதியின் இறுதி வடிவத்தைக் காணாமல் அவரால் உருப்படியாக எந்த அறிவுரையும் தர இயலாது. மாறாக உங்கள் புனைவின் களமோ, உணர்வுநிலையோ அவருக்கு ஈர்ப்பாய் இல்லையென்றால் உங்களை அவநம்பிக்கை ஏற்படும் விதமாய் (வேண்டுமென்றே அல்ல) பேசி விடவும் வாய்ப்புண்டு. அப்படியே நீங்கள் படைப்பை முடித்த பின் கரட்டுப் பிரதியை அவரிடம் கொடுத்து கருத்துக் கேட்டாலும் அதிலுள்ள பிரதானமான பிரச்சனையை அவரால் ஒருவேளை சுட்டிக் காட்ட முடியுமே ஒழிய தீர்வு சொல்ல முடியாது. அதனால் தான் கேரி ஒரு எழுத்தாளன் எழுதி மட்டுமே தன் எழுத்திலுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும் என்கிறார். ஏனென்றால் ஒவ்வொரு படைப்பின் சிக்கலும் உங்கள் அகச்செயல்பாட்டோடு, அதை எழுதுகிற போது நீங்கள் வாழ்கிற வாழ்வினோடு, உங்கள் வாசிப்பு, வாழ்க்கைப் புரிதல்கள், செண்டிமெண்டுகள், உங்களுக்கே உரித்தான முட்டாள்தனங்களுடன் சம்மந்தப்பட்டது. ஒருவேளை உங்களுக்கு ஒரு தனிப்பட்ட மனத்தடைக்கும் உங்கள் நாவலின் வடிவத்தில் உள்ள சிக்கலுக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம். ஆகையால் நீங்களே தான் அதனோடு முட்டி மோதி சிடுக்கை அவிழ்க்க வேண்டும். அது உங்களுக்கு முக்கியமான படிப்பினைகளைத் தரும்.


இன்னொரு விசயம்: ஒவ்வொரு எழுத்தாளனும் தன் நாவலை / கதையை ஆரம்பித்து வளர்த்தெடுக்கிற பாணி தனித்துவமானது. சிலர் ஒரு உருவகத்தை வைத்து, சிலர் ஒரு அனுபவத்தை, ஒரு உணர்வெழுச்சியை மனத்தில் வைத்து, வேறு சிலர் ஒரு கருத்தை புனைவாக்கும் நோக்கில் அதை உள்முரணாக எடுத்தாண்டு, இன்னும் சிலர் பாதியில் இருந்து கதையை ஆரம்பித்து தன் போக்கில் எழுதுவார்கள்.சிலர் முழு கதைக்களனையும் துல்லியமாக திட்டமிட்டு - கொத்தனார் வீட்டை செங்கல் செங்கல்லாக வைத்து கட்டியெழுப்புவதைப் போல - செய்வார்கள். இப்படி கதையை அமைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறதென்றால் அது நீங்கள் கதையை சொல்ல விரும்பும் பாணியில், அதற்கு பயன்படுத்தும் முறைமையில் தோன்றும் ஒரு ஆதாரப் பிரச்சனையாக இருக்கும். இதை இன்னொரு எழுத்தாளனிடம் விவாதிப்பதோ உங்களுக்குள் நீங்களே நினைத்து புலம்புவதாலோ கனவு காண்பதாலோ சரி செய்ய முடியாது. எழுத்துக்களத்தில் குதித்து நீங்களே அந்த துள்ளிப் பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளிப்பட்டு அழிச்சாட்டியம் பண்ணும் ‘புனைவை’ பிடிமாடாக்க வேண்டும். சிலமுறை விழுவீர்கள், அவநம்பிக்கை தோன்றும், ஆனால் விடாமல் முயன்றால் உங்கள் பிடிக்கு அது மாட்டி விடும். அதன் பிறகு அடுத்தடுத்த படைப்புகள் சுலபமாகும்.


அதனால் தான் (வாசித்தோ விவாதித்தோ அல்ல), எழுதித் தான் எழுத்தை கற்றுக் கொள்ள முடியும் என்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...