புதிய தலைமுறையில் ராகுல் காந்தியின் பேட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று விசயங்கள் தோன்றின:
1) தினமும் ஜிம்முக்கு போய் பைசப்ஸ் ஏற்றியிருக்கிறார். சின்னப் பையன் போல அதைக் காட்டும்படி ஷார்ட் ஸ்லீவ்ஸ் டிஷர்ட் அணிந்திருக்கிறார். இதை பிற இளம் அரசியல் தலைவர்களும் (அதாவது 60 வயதுக்கு உட்பட்ட 😉 ) பின்பற்றலாம்.
2) வகுப்பில் பின்னிருக்கையில் இருந்து “டேய் சப்பாணி இங்க வாடா” என்றழைக்கும் பாணி பேச்சை அவர் இன்னமும் மாற்றவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியை ‘திருடன்’ என அழைத்தது பாதகமானது. தொடர்ந்து அரசை விமர்சித்து கிண்டலடித்து மட்டம் தட்டாமல் மாற்றுத் திட்டங்களைப் பற்றி பேசுவது அவசியம். (தேஜஸ்வி யாதவ்விடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம்.) என்னதான் நடப்பு அரசின் மீது நாம் அதிருப்தியாக இருந்தாலும் ஒரு பிரதமர் ஆனவர் இந்நாட்டின் தந்தையை போன்றவர். அவர் நம் இறையாண்மையின் குறியீடு. அவர் நம் ஒட்டுமொத்த அதிகார அமைப்பின் சிகரம். அவரை ஒரு ஊடகவியலாளர், சமூகவலைதள செயல்பட்டாளர், அறிவுஜீவி மறுக்கலாம். ஆனால் அவரைப் போன்று நாளை ஆக விரும்பும் ஒருவர் செய்யக் கூடாது. “இந்த அரசின் செயல்பாடுகளில் குறைகள் உள்ளன. இதை வேறுவிதமாக செய்வதற்கு இன்னின்ன திட்டங்கள் என்னிடம் உள்ளன.” எனப் பேசி மக்கள் மனதில் ஒரு கனவை கட்டி எழுப்ப வேண்டும். அரசியலில் விமர்சனம் அல்ல கனவுகளும் திட்டங்களுமே எடுபடும். இந்த எளிய உண்மை ஏன் இன்னமும் ராகுலுக்குப் புரியவில்லை?
3) கடந்த முறை தேர்தல் பரப்புரைக்கு வந்த போதும் இப்போது போன்றே ராகுல் பொத்தாம்பொதுவான பிரச்சனைகளைப் பேசுகிறார். தமிழ் மாநிலத்துக்கு குறிப்பான பிரச்சனைகளை கையில் எடுப்பதில்லை. எடப்பாடி அரசின் ஊழலில் இருந்து பொருளாதார ரிதியான இடது ஒதுக்கீட்டை முன்னெடுத்து பாஜக சமூக நல அரசியலை காலி பண்ண நினைப்பது, பொதுத்தேர்வுகளின் மூலம் தமிழர்களை காயடிப்பது, சசிகலாவை மருத்துவமனையில் சிறைவைத்து மிரட்டி அரசியல் பண்ணுவது என என பல பிரச்சனைகளை தொட்டுப் பேசலாம். ஆனால் ராகுல் உத்தராகாண்டுக்கு பேசக் கூடிய அதே பேச்சையே தமிழகத்துக்கும் பேசுகிறார். இது அவரது பரப்புரையின் ஒரு முக்கிய பலவீனம்.
இந்த விளையாட்டுப் பிள்ளை என்றைக்கு நிஜ அரசியல்வாதி ஆகி ... நினைக்கவே தலை சுற்றுகிறது!
உடல் வன்மை வந்து விட்டது, நா வன்மை எப்போது வரும் பரட்ட?

Comments