முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்மையியம் - கவிஞர் ராஜசுந்தர ராஜன்



न स्वतो नापि परतो न द्वाभ्यां नाप्यहेतुतः। 

उत्पन्ना जातु विद्यन्ते भावाः क्वचन के चन ।।


ந ஸ்வதோ நாபி பரதோ ந த்வாப்யாம் நாப்யஹேதுத: |

உத்பன்னா ஜாது வித்யந்தே பாவா: க்வசன கே சன ||


நாகார்ஜுனருடைய “மூலமத்யமக காரிகா” நூலின் முதற் சொலவம் இது. இதன் பொருள்: 


ஸ்வ = தன்; பர = பிற; த்வாப்யாம் = இரண்டின்; அஹேது = ஏதிலி (non-cause); உத்பன்ன = உருவாகி; ஜாது = எப்பொழுதும்; வித்யந்தே = அறியப்பட்டு; பாவா: = இருக்கிற; க்வசன = எங்கும்; கேசன = எதுவும்; ந = இல்லை; அபி = மேலும்;


“எங்கும் எப்போதும் உள்ளதனைத்தும் தோன்றி யிருப்பதானது, தன்னிலிருந்தில்லை; பிறிதிலிருந்தில்லை; இரண்டிலிருந்தும் இல்லை; ஏதிலியிலிருந்தும் இல்லை.” 


இந்த நூலை நான் வாசித்துக் கனகாலம் ஆகிவிட்டது. அந்தப் புத்தகத்தையும் தனக்கு வேண்டும் என்று தேவதேவன் எடுத்துச் சென்றுவிட்டார். இப்போது கையிருப்பில் உள்ளது அதற்குப்பின் வாங்கிய புத்தகம். இதைத் தேடியெடுத்துப் புரட்டிப்பார்க்க இன்றுதான் வாய்த்தது. 


காரணம் அபிலாஷ் சந்திரன். அவர் இந்தப் புத்தகத்தின் மீதான தன் உரைகளை, ‘சூன்யவாதம்’ என்று தலைப்பிட்டுத் தொடங்கியிருக்கிறார். இதுவரை இரண்டு உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். அவரது முகநூற் சுவரில் காணக் கிடைக்கின்றன. அவர் வாழ்க! இப்படியோர் அரிதான முயற்சிக்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


இந்தியாவின் ஆகச்சிறந்த படைப்புகள் ராமாயணமோ மகாபாரதமோ அல்ல. அவற்றிற்கு நிகரான படைப்புகள் உலக இலக்கியங்களில் உள்ளன. உபநிஷத்துகள்? ஊக (speculative) தத்துவங்களைத் தாண்டி உலகத் தத்துவ விசாரணையும் எம்மட்டோ முன்னேறிவிட்டது. 


“மூலமத்யமக காரிகா”வில்,


வாழ்த்து = 1; அத். 1 = 14; 2 = 25; 3 = 9; 4 = 9; 5 = 8; 6 = 10; 7 = 34; 8 = 13; 9 = 12; 10 = 16; 11 = 8; 12 = 10; 13 = 8; 14 = 8; 15 = 11; 16 = 10; 17 = 33; 18 = 12; 19 = 6; 20 = 24; 21 = 21; 22 = 16; 23 = 25; 24 = 40; 25 = 24; 26 = 12; 27 = 30. 


ஆக மொத்தம் 449 ஈரடிச் சொலவங்கள் உள்ளன. திருக்குறளை ஒப்பிட மூன்றில் ஒருபங்குதான். அவ்வளவுக்குச் சிறிய புத்தகம். ஆனால் உலகத்தின் தலைசிறந்த புத்தகம் இதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. எப்படி? இன்றைக்கு வருகிற இலக்கியக் கொள்கைகள், தத்துவ முடிபுகள், அறிவியல் உச்சங்கள் அத்தனைக்கும் முன்னோடியாக இதைத் தூக்கிப் பிடிக்கலாம். 


திருக்குறள்? எங்கள் அம்முவிற்கு திருக்குறள் புத்தகம் ஒன்று பரிசாக வந்து சேர்ந்தது. “உலகத்து மக்களினங்களில் தமிழர்கள் கொடுத்துவைத்தவர்கள். காரணம் திருக்குறள். இதை நேரம் வாய்க்கும் போதெல்லாம் படி!” என்றேன். என்றாலும், என்னளவில், அதற்கு இரண்டாம் இடம்தான். முதலிடம் “மூலமத்யமிக காரிகா”விற்கு.


இருக்கட்டும், புத்தர் சொல்லாததை நாகார்ஜுனர் சொல்லவில்லை. அது அப்படித்தானே அமையும். ஆனால் “திரிபிடகம்” முழுக்கப் படித்துத் தேறுவது சாத்தியமா? இந்த இடத்தில்தான் இந்நூல் ஒரு கையேடாக நமக்கு வாய்க்கிறது.


இனி, எனக்குக் கிட்டிய தெளிவு என்னதென்று பார்க்கலாம். மேற்கோள் காட்டப்பட்ட இந்த சொலவத்தில், இதுதான் இதற்குக் காரணம் (cause) என்று ஒன்று இல்லை பாருங்கள்! இந்த நூலே இதுதான். ஓரோர் அத்தியாயத்திலும் வெங்காயத்தை உரிப்பதுபோல் உரித்துஉரித்து ஆகக்கடைசியில் ஒன்றுமில்லை என்று காண்பிக்கப் படும்.


கூடவே, ‘சூன்யம்’ என்பது ஆன்மா போன்று சாராம்சமாக ஒன்று இன்மையே என்றும் தெளிவிக்கும். 


இப்போது நான் எழுதியதை நீங்கள் ஒரு சில்லுப்பேசியிலோ அல்லது கணினியிலோ வாசிக்கிறீர்கள். இதை எழுதுகிற நான் உயிர்வாழ்வதற்காக ஒருகைச் சோறு சாப்பிடுகிறேன். அது ஒரு வயலிலிருந்து வந்த அரிசியினால் ஆனது. அதற்குப் பின் சந்தை, உழவன், வெயில், மழை எல்லாம் இருக்கின்றன. அதாவது ஓரொன்றிற்குள்ளும் இந்தப் பிரபஞ்சமே இருக்கிறது. இருக்கையில், ஆன்மாவிற்கு விசேஷமாக அங்கென்ன வேலை? கடவுள் உண்டென்று மூளைச்சலவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கற்பிதம் அது. 


அப்படி, ஆன்மா அல்லது சாராம்சம் என்றொன்று இல்லை என்று காண்பிப்பதே சூன்யவாதம். அதாவது, பிரபஞ்சத்தின் எல்லா அம்சங்களும் ஒருங்கிணைந்து, ஆத்மா பரமாத்மா என்கிற ஏமாற்று வேலையின் முகத்திரை கிழிப்பது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...