முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜல்லிக்கட்டில் இருந்து வேளாண் சட்ட போராட்டங்கள் வரை



ஒரு போராட்டத்துக்கு, பேரணிக்கு அரசு அனுமதி தருகிறது, அரசு பணிந்து போகிறது, காவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றால் போராளிகள் அங்கே சுதாரித்துக் கொள்ள வேண்டும். நாம் இதை ஜல்லிக்கட்டின் போது பார்த்தோம். அதுவே வேளாண் போராட்டங்களின் போது மீண்டும் நிகழ்கிறது. தில்லிக்கு முன்னேறி சென்று பேரணி நடத்துவதே ஒரு மோசமான திட்டம் தான். அதுவும் அப்பேரணியை போலிசார் தடுக்காமல் தள்ளி நின்று, போராளிகளில் சிலர் சீக்கிய கொடியை ஏற்ற விட்டு விட்டு, ஏற்கனவே இப்படித்தான் திரைக்கதை இருக்கும் என தெரிந்து கொண்டு தலைப்புகளுடன், வசனங்களுடன் தயாராக இருந்த டைம்ஸ் நவ் போன்ற சேனல்களின் துணையுடன் விவசாயிகளை கலவரக்காரர்களாக சித்தரித்து இப்போது போலீசை வைத்து அடித்து நொறுக்குகிறார்கள். புலியை வேட்டையாட ஆட்டை கட்டி வைத்து வேட்டைக்காரன் காத்திருப்பது போல ஜியின் அரசு குடியரசு தினத்தன்று காத்திருந்து தன் வேட்டையை நிகழ்த்தி விட்டது. 

செங்கோட்டைக்கு சீக்கிய கொடியுடன் அல்ல, தேசியக் கொடியுடன் சென்றிருக்க வேண்டும். தலைநகரம் முழுக்க விவசாயிகள் தேசியக் கொடியுடன் அணிவகுத்து அதை கம்பத்தில் ஏற்றியிருந்தால் அரசு திகைத்து போயிருக்கும்.


காந்தியின் போராட்ட முறையில் விவசாயிகள் கற்றுக் கொள்ள இரண்டு முக்கிய பாடங்கள் உண்டு:

1) எந்த போராட்டத்தையும் பேச்சுவார்த்தை, பேரம் ஆகியவற்றைத் தாண்டி கொண்டு செல்லக் கூடாது. கோரிக்கையை ஏற்க வைப்பதல்ல, குரலைக் கேட்க வைப்பதே ஒரு போராட்டத்தின் இலக்கு. ஒரு கட்டத்தில் விவசாயிகள் அரசின் உத்தரவாதத்தை ஏற்று பின்வாங்கியிருக்க வேண்டும். அது அடுத்து மீண்டும் ஒரு தேவை வரும் போது திரண்டு போராட அவர்களுக்கு ஆற்றலைத் தரும். எந்த அரசையும் முழுமையாக உங்களால் மண்டியிட வைக்க முடியாது. இப்போதைக்கு தற்காலிகமாய் சட்டங்களை பின்வாங்குவது போதும் என விவசாயிகள் நினைத்திருந்தால் இப்போராட்டம் பெரும் வெற்றி பெற்றிருக்கும்.


2) அரசும் காவல்துறையும் வாய்ப்பளித்தாலும், தூண்டினாலும் போராளிகள் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. ஏனென்றால் ஆங்கிலேயர் இங்கு ஆண்ட போதும் வன்முறையானது இறையாண்மையின் உரிமை மட்டும் தான். இப்போதும் அப்படித்தான். வன்முறையை போராளிகள் கையில் எடுக்கும் போது அவர்கள் இறையாண்மையின் விரோதிகளாக சித்தரிக்கப்பட்டு கொடூரமாய் நசுக்கப்படுவது அரசுக்கு சுலபமாகும். இனி விவசாயிகள் போலிசாரை நோக்கி லத்தி வீசுகிற காட்சிகளை மீண்டும் மீண்டும் காட்டி போலீஸ் வன்முறையை இந்த அரசு நியாயப்படுத்தும். விவசாயிகளின் தார்மீக உரிமை மீது நிரந்தரமாய் கரியைப் பூசும்.


எதிர்கால போராட்டங்கள் காந்தியின் இந்த அடிப்படை நெறிகளைப் பின்பற்றி நிகழட்டும். அடி எப்போதும் போராளிகள் மீது விழ வேண்டும். ரத்தத்தை எப்போதும் போராளிகளே சிந்த வேண்டும். திரும்ப அல்ல. சமரசத்துக்கு தயாராக இருக்க வேண்டும். நிரந்தர வெற்றியை விட தற்காலிக வெற்றிகளை இலக்காக்கி கொள்ள வேண்டும். மக்களின் நன்மதிப்பை இழக்காமல் போராட வேண்டும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...