Skip to main content

சமகால அரசியல் சமூகப் பிரச்சனைகளை இலக்கியமாக்க முடியுமா? Submission நாவலை முன்வைத்து




மிஷல் வெய்பெக் தற்கால பிரஞ்சு நாவலாசிரியர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறவர். அவரை மகத்தான பிரஞ்சு நாவலாசிரியர் என கருதுகிறவர்களும் உண்டு. அது உண்மையா என்பதற்கு பின்னால் வருவோம். வெய்பெக்கின் Submission நாவல் பற்றி ஸிஸெக் ஓரிடத்தில் குறிப்பிட, அது ஏற்படுத்திய ஆர்வத்தில் நான் உடனே வாங்கிப் படித்தேன். இதை அடுத்து வெய்பெக்கின் வேறு சில நாவல்களையும் படித்தேன். இந்த குறிப்பை நான் எழுதுவதற்கு ஒரு காரணம் வெய்பெக் எழுதுவது போன்ற நாவல்களின் சாத்தியங்களை நாம் தமிழில் பரிசீலிப்பது இல்லை என சுட்டத் தான்.


பொதுவாக தமிழ்ப் புனைவுகள் சில பத்தாண்டுகளுக்கோ ஒரு நூற்றாண்டுக்கோ பின்னால் சென்று ஒரு கதையை மீளுருவாக்கம் பண்ணும் (ஈழ போர் / புலம்பெயர் இலக்கியத்தில் கூட அநேகமாய் இதுவே நடந்தது.). அது வரலாறாகவோ சுய அனுபவக் கதையாகவோ இருக்கும். சமகாலத்தை நாம் எழுதும் போது கூட அது தனிமனித அல்லல்களைத் தாண்டி சமூக நகர்வுகளை, அரசியல் கலாச்சார சிடுக்குகளை பரிசீலிப்பதில்லை என்பது பரவலாக வைக்கப்படும் புகார்இது ஏன்?


ஜெயமோகனைப் போன்றோர் சமகாலத்தை இலக்கியத்தை படைப்பாக்க முயலவே கூடாது என்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அவர்கள் நம்புகிற பத்தொன்பதாம் நூற்றாண்டின் தாராள மானுடநோக்குவாதம் (liberal humanistic; கூடவே formalistic) எனும் விமர்சனப் பள்ளியில் இருந்து வருகிறது. டெரி ஈகிள்டன், டி.எஸ் எல்யட் போன்றோர் இலக்கிய வடிவத்துக்கு, அதன் மரபுக்கு, கலாச்சார தொன்மங்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர். இதன்படி ஏற்கனவே எழுதப்பட்ட மகத்தான இலக்கிய படிமங்களின் சாயலில் தான் அடுத்தடுத்து சிறந்த படைப்புகள் தோன்ற முடியும். ஒரு சிந்தனை அல்லது உணர்வு மக்கள் மனத்தில் ஒரு உருவகமாகப் படிந்து பின்னர் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட படைப்புகள் மூலம் ஆற்றல் மிக்க குறியீடுகளாகவோ படிமங்களாகவோ ஆகும். .தா., தமிழ் இலக்கியத்தை விட ஈழப் போர் இலக்கியத்தில்மண்என்பது ஒரு தீவிரமான குறியீடாக - அது பிளவுபட்ட மண், குருதி சிந்தின மண், இழந்த மண் இப்படி பலவாக இருக்கலாம். அது பெண்ணுடலாகவும் உள்ளது. ஒருவர் ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் அங்குள்ள சாலைகள், மால்களை விட ஏதோ ஒரு மண்ணைப் பற்றி, தனக்கான பூமியைப் பற்றி எழுதும் போதே அது ஒரு ஆழமான தாக்கத்தை வாசகர்களிடம் ஏற்படுத்துகிறது என இந்த விமர்சகர்கள் நம்புகிறார்கள். கார்ல் யுங்கின் கூட்டு நனவிலியையும், மூலப்படிமத்தையும் தமது இந்த பார்வையை நியாயப்படுத்த பயன்படுத்துவார்கள். இதனாலே சமகாலத்தை எழுதலாகாது, எழுத்தாளன் செய்தித் தாள் படிப்பது, அரசியல் சமூக விவாதங்களில் காலம் கழிப்பது வீண் எனும் நிலைப்பாட்டுக்கு வந்து சேர்கிறார்கள் (ஏனென்றால் சமகால மொழியில் மூலப்படிமம் தோன்றாது என நினைக்கிறார்கள்). என்னைப் பொறுத்தமட்டில் இது ஒரு அபத்தமான கருதுகோள். (ஏன் என மற்றொரு பதிவில்.)


தமிழில் சமகால இலக்கியமும் உள்ளது. இமையத்தின்வாழ்க வாழ்க”, “பெத்தவன்போன்ற பல படைப்புகள் சமகாலத்துடன் தீவிரமாக உரையாடுகின்றன. விநாயக முருகனின்ராஜீவ் காந்தி சாலைபோன்ற வேறு சில நாவல்களும் (இ.பாவின் “குருதிப் புனல்” ஒரு தட்டையான நாவல் என்றாலும்) நினைவுக்கு வருகின்றன. ஆனால் தமிழில் இது ஒரு மிகச்சிறிய வட்டமே. நினைவேக்கக் கதைகள், குடும்பக் கதைகள் எனும் பெயரில் சாதி வரலாறுகள், தனிமனிதன் சிக்கல்களைப் பேசும் கதைகளே இங்கு அதிகமாக எழுதப்படுகின்றன. இன்று நீங்கள் டிக்டாக், யுடியூப் போன்ற தளங்களில் காண்கிற வாழ்நிலை மாற்றம், சிதைவான கேளிக்கை உலகம், முரண்பட்ட மனநிலைகள் நம் இலக்கியத்தில் வெளிப்படுவதில்லை. இதை ஒரு குறையாக அல்ல, ஒரு பதிவாகவே வைக்கிறேன்


இதற்கு நேர்மாறாக, மேற்கில் சமகால உலகை உடனுக்குடன் பதிவு செய்யும் போக்கு, வருங்காலத்தை கற்பனை செய்யும் futuristic போக்கு நீண்ட காலமாகவே காணப்படுகிறது. ஆர்வல்லின்விலங்குப் பண்ணை”, “1984”, எலிசனின் “Invisible Man”, ஹக்ஸிலியின் “Brave New World”, ஜோசப் ஹெல்லரின் “Catch 22” நல்ல உதாரணங்கள். அதே போல கூட்ஸியின் நாவல்கள் இப்போதைய தென்னாப்பிரிக்க அரசியல் சமூக நிலையின் உள்ளார்ந்த முரண்களை ஒரு வெள்ளையின ஆணின் பார்வையில் இருந்து எந்த சமரசமும் பாவனையும் இல்லாமல் முன்வைப்பவை. அதற்கு ஒரு காரணம் ஐரோப்பாவில் மத அமைப்புகள், மரபின் பிடிகள் கழன்று போய் சில பல நூற்றாண்டுகள் ஆகின்றன, அதனாலே ஐரோப்பியர் அறிவியல் கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், நவதாராளாவாத நகரமயமாக்கலின் விளைவுகளை தமது மரபான சிந்தனைகளுடன் முரண்பட வைத்து, அம்மோதலின், கொந்தளிப்பின் விளைவாக புது தத்துவ, இலக்கிய படைப்புகள் அங்கு தோன்ற செய்கிறார்கள். ஆசிய சிந்தனைப் புலத்தில், இலக்கியத்தில் இது நிகழாதபடி மரபின், மதத்தின், சாதிப், பாலினப் படிநிலையின் பிடி வலுவாக இருக்கிறது. நமது சமூகங்கள் நகரத்தில் உடலையும் கிராமத்தில் மனத்தையும் வைத்திருக்கின்றன. இதனால் சமகாலத்தை சிந்திப்பது, எழுதுவது ஐரோப்பியர்களுக்கு இயல்பாக இருக்கிறது. சமகால அரசியல் கலாச்சார, அறிவியல் சூழலை பரிசீலிக்கும் இலக்கியங்களும் அங்கு அதிகமாய் தோன்றுகின்றன. ஆனால் நமக்கு அது குறித்த ஒரு ஒவ்வாமை உள்ளது.


இந்த விரிவான பின்னணியில் வெய்பெக்கின் Submission போன்ற நாவல்களை விவாதிப்பது உதவும். ஏனென்றால் அந்நாவல் ஒரு கற்பனையான எதிர்கால பிரான்ஸில் நடக்கிறது. இஸ்லாமியர், ஆசியர்கள், கறுப்பர்கள் நம் நிலத்தை ஆக்கிரமித்து, அதிகாரத்தை கைப்பற்றி, நம்மை சிறுபான்மை ஆக்கி விடுவார்கள் எனும் அச்சம் ஐரோப்பிய சமூகங்களின் அடிமனத்தில் உள்ளது. இதை Great Replacement Theory என்கிறார்கள் (ஆர்.எஸ்.எஸ் இதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அங்கிருந்து கடன்வாங்கி இங்குள்ள இந்து மக்களிடம் இஸ்லாமியர் குறித்து அச்சத்தை விதைத்தார்கள்.) 2015இல் வெளியான இந்நாவலில் 2022ஆம் ஆண்டில் பிரான்ஸில் வரும் தேர்தல் கற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் களத்தில் இஸ்லாமிய சமூகம் ஒரு வலுவான கட்சியை வைத்திருக்கிறது. அதற்கு இடதுசாரிக் கட்சி உள்ளிட்ட சிலர் ஆதரவளிக்கிறார்கள். தேசியக் கட்சி அதற்கு எதிராக நிற்கிறது. Ben Abbes எனும் வசீகிரமான இஸ்லாமிய தலைவரை முன்வைத்து நடக்கும் பிரச்சாரம் வெற்றி பெற்று இஸ்லாமியர் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள். இதனால் சமூகத்தில் ஏற்படும் கலாச்சார மாற்றங்களை Francois எனும் வயதான வெள்ளையின பேராசிரியரின் பார்வையில் இருந்து சித்தரிக்கிறார் வெபெக். அத்துடன் Francoisஇன் தனிப்பட்ட நெருக்கடியான வாழ்க்கை, எதிர்காலம் மீதான அவநம்பிக்கை, திசையின்மை, குழப்பங்கள், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு இந்த அரசியல் சமூக மாற்றங்கள் எப்படி தீர்வளிக்கின்றன என்று சொல்லி நாவலை முடிக்கிறார் வெபெக். இந்த நாவல் பல லட்சம் பிரதிகள் விற்று பெரும் வணிக வெற்றியைப் பெற்றது. அத்துடன், இதில் தென்படும் இஸ்லாமிய வெறுப்பு, தேய்வழக்கான நோக்கு, ஆண்-மைய வாதம், பிற்போக்கு சிந்தனை ஆகியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. நாவலின் முதல் பாதியில் சராசரி ஐரோப்பியருக்கு இஸ்லாமிய ஆக்கிரமிப்பு குறித்துள்ள அச்சம், தேய்வழக்கு சிந்தனைகள் வெளிப்பட்டால், பிற்பகுதியிலோ இதே இஸ்லாமிய ஆதிக்கத்தின் ஒரு நேர்மறையான (அதேநேரம் தட்டையான தேய்வழக்கான) சித்திரமும் உள்ளது. இந்த நாவலின் சுவாரஸ்யம் என்பது இந்த வெளிப்படையான தன்மை தான்.


 ஐரோப்பாவில் நகரமயமாக்கலின், தாராளவாதத்தின் தாக்கம் வெகுமுன்பே உணரப்பட்டதனால் அங்கு குடும்ப அமைப்பு சிதைந்து ஒருவித அவநம்பிக்கை, சுயமோக, அனார்க்கிச கலாச்சாரம் ஏற்பட்டது எனும் விமர்சனம் நீண்ட காலமாய் உள்ளது. இதற்கு கிறித்துவத்தை ஒரு தத்துவ அடிப்படையாக வைத்து விமர்சித்தவர் நீட்சே. Fordism என சொல்லப்படும் பெரு உற்பத்தி சார்ந்த எந்திரமயமாக்கல் வாழ்வில், இருத்தலில் / உளவாதலில் ஏற்படுத்தும் பிளவுண்ட தன்மையை ஹைடெக்கர் விமர்சித்து தன் தத்துவத்தை உருவாக்கினார். இந்த பின்னணியில் இருந்தே தன் நாவலை ஆரம்பிக்கும் வெய்பெக்கின் நாயகன் கத்தோலிக்க கிறித்துவ மீட்புவாதத்தில் தனக்கு மீட்சி கிடைக்குமா எனத் தேடுகிறார். ஆனால் அது அங்கே வெறுமையாக மட்டுமே இருக்கிறது. அப்போதுதான் இஸ்லாமிய ஆதிக்க அரசியல் பிரான்ஸில் நடைமுறைக்கு, அதிகாரத்துக்கு வருகிறது, சௌதி அரேபிப வணிக பெருமுதலாளிகள் பெரும் முதலீட்டையும், அதன் வழி தன் கலாச்சார, மத இறக்குமதியையும் செய்கிறார்கள். பிரான்ஸ் தலைகீழாக உருமாறுகிறது. கிறித்துவர் என்ற காரணத்துக்காக பல்கலைக்கழகத்தில் Francoisக்கு கட்டாய ஓய்வு கொடுக்கிறார்கள். இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்களுக்கு உடனடியாய் பதவி உயர்வுகள் கிடைக்கின்றன. பெண்கள் புர்கா அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பலதார மணம் சட்டபூர்வமாகிறது. Francois பின்னாளில் சந்திக்கும் பல்கலைக்கழக முக்கிய நிர்வாகி அவரை இஸ்லாத்துக்கு மாறும்படி ஊக்கப்படுத்துகிறார். அதன் பிரதிபலன்களாக அதிக சம்பளம், நிறைய மனைவிகள், உறுதியான குடும்ப அமைப்பு, ஆண்-மைய சமூக அமைப்பு ஆகியவை கிடைக்கும் என Francoisக்குத் தோன்றுகிறது. அவர் மதமாறுவதற்கு உடன்படுவதுடன், இனிமேல் ஐரோப்பிய சமூகங்களுக்கு இதுவே சிறந்த தீர்வாக இருக்கும் என பரிந்துரைப்பதுடன் நாவல் முடிகிறது


இந்த விசயங்களை பெரிய கவனச்சிதறல்கள் இன்றி கோவையாக, சரளமாக, நகைச்சுவையாக, நகைமுரணுடன் விவாதிப்பதே இந்நாவலின் சிறப்பு. Francoisஇன் இந்த மதமாற்ற முடிவும் கூட மேலோட்டமானதே; அடுத்து ஒரு அரசியல் மாற்றம் வந்தால் அவர் திரும்ப கத்தோலிக்க மதத்துக்கு தாவி, இஸ்லாமிய விரோதியாகி விட ரொம்ப யோசிக்க மாட்டார் என்பதையும் இந்நாவல் குறிப்புணர்த்துகிறது. அதுவும் நன்கு படித்த எழுத்தாளரான ஒரு பேராசிரியர் இப்படி மேம்போக்காக சிந்திக்கும் அளவிலே கலாச்சாரம் இருக்கிறது எனக் காட்டுவதே இந்நாவலின் உச்ச பகடிவெய்பெக்கின் மொழிநடை சற்றே ஹருகி முராகாமி, ஆல்பர்ட் காமு போன்றோரை நினைவுபடுத்துவது. அன்றாடங்களின் சாதாரணத்துவத்தை முக்கியப்படுத்துவது. Francois ஒரு புராதன கத்தோலிக்க மடாலயத்துக்கு செல்லும் போது அவர் ஒரு மகத்தான மெய்யியல் அனுபவத்தை அங்கு நாடினாலும் அவரது மனம் அங்குள்ள குளிர், புகை பிடிக்க வசதி இல்லாத அவலம், அங்கு கிடைக்கும் உணவு ஆகியவற்றாலே ஆக்கிரமிக்கப்படுகிறது. அவர்இஸ்லாம் மீதான கேள்விகள்எனும் ஒரு பிரசித்த மதபோதக நூலை படிக்கும் போதுபலதார மணம்எனும் அத்தியாயத்துக்கே முதலில் செல்கிறார். தன் காதலியை நினைவுகூறும் போது அவளது முகம் அல்ல, பின்பகுதியே தனது மனத்தில் முதலில் தோன்றுகிறது என்பதை அவர் மறைப்பதில்லை. தத்துவம், இலக்கியம் என சிந்தித்து, உரையாடினாலும் அவரது மன இயக்கத்தை இவை பாதிப்பதில்லை - செக்ஸ், உணவு, பொருளியல் வசதிகள் போன்றவை தான் தனக்கு முக்கியம் எனக் காட்டுகிறார். இந்த முரண் சுவாரஸ்யமாக இருக்கிறதுஇன்னொரு வசீகரம் இதில் இழையோடும் நகைமுரண். இது தென்னாப்பிரிக்க நாவலாசிரியர் கூட்ஸியின் Disgrace நாவலை நினைவுபடுத்துகிறது. ஆனால் மனித மனத்தின் சற்றும் எதிர்பார்க்க முடியாத முன்னுக்குப் பின் முரணான சிந்தனையை, உணர்வுச் சிக்கல்களை கூட்ஸி அளவுக்கு வெய்பெக்கால் சித்தரிக்க முடிவதில்லை என்பதே இந்நாவலின் வீழ்ச்சிக்கு காரணம் எனத் தோன்றுகிறது - இஸ்லாம் அரச மதமானால் எல்லா ஆண்களுக்கும் மூன்று நான்கு இளம் மனைவிகள் கிடைப்பார்கள், குடும்ப அமைப்பு வலுப்பெறும், ஆண் சமூகத்துக்கு உளவியல் சிதைவோ அவநம்பிக்கையோ இராது என இதன் கதைசொல்லி பத்தாம்பசலியாக நம்பி விடுகிறார். இஸ்லாமிய சமூகங்கள் வேறு சமூகங்களின் அளவுக்கு நவீன சமூகத்தின் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்பவை தாம், எல்லா இஸ்லாமிய மக்களும் பலதர மணம் பண்ணுவதில்லை என நாம் அறிவோம். இந்த மிகை, பத்தாம்பசலித்தனம், எளிமைப்படுத்தல் இந்நாவலின் பிற்பகுதியை சிக்கல்களோ ஊடுபாவல்களோ இன்றி மிகவும் தட்டையாக்கி விடுகிறது.   


 சமகால நகரமய வாழ்வின் நெருக்கடிகளைப் பேசும் நாவல்களைப் படிக்க விரும்புவோருக்கு இந்நாவலை பரிந்துரைக்கிறேன். இதன் 320 பக்கங்களை நீங்கள் ஒன்றிரண்டு நாட்களில் வாசித்து விடும் அளவுக்கு சரளமான மொழி நடை. ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிக்கிறேன் - மிஷல் வெய்பெக் நிச்சயமாய் மகத்தான எழுத்தாளர் அல்ல. ஆனாலும் சமகாலத்தை எழுதுவதன் சவால்களை எதிர்கொண்டமைக்காக அவரைப் பாராட்டலாம். ஏனென்றால் அரை நூற்றாண்டுக்கு, சில பத்தாண்டுகளுக்கு பின் சென்று எழுதும் போது நாம் வரலாறாகி விட்ட ஒன்றி மீது மற்றொரு வரலாற்றுக் கதையாடலை கட்டியெழுப்புகிறோம். அது எந்தளவுக்கு உண்மை என்று தான் மறுப்பு வரும், ஆனால் இதை நீ எப்படி எழுதலாம் எனக் கேட்க மாட்டார்கள். அதனாலே, சமகாலத்தின் சாட்சியாக நின்று ஒன்றை சொல்ல அசாத்திய துணிச்சல் வேண்டும் - உங்களைத் தவறாக தலைகீழாக புரிந்து கொண்டு சாடுவார்கள், தூற்றுவார்கள். உங்கள் வழக்குக்கு நீங்கள் மட்டுமே சாட்சியாக இருப்பதைப் போன்றது இது. மேலும் கடந்த காலத்தை எழுதும் போது நாம் ஒரு இடைவெளியை நம் இருப்புக்கும் புனைவுக்கும் இடையில் உண்டு பண்ணுகிறோம்; .தா., “பெத்தவன்கதையை சற்றே மாற்றி அது அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்ததாக இமையம் சித்தரித்திருந்தால் அதை நாம் சுலபத்தில் கடந்திருப்போம். அது நம் மனசாட்சியை உலுக்கியிருக்காது. அதே போல, கடந்த காலம் குறித்த ஒரு ஏக்கம், மயக்கம், சிலாகிப்பு இத்தகைய படைப்புகள் மீது ஏற்படுகிறது. இது ஒரு கற்பனாவாதத்தை சிலநேரம் தோற்றுவிக்கிறது. ஜெ.மோவின்காடு”, “வெள்ளை யானைபோன்றவை என்னதான் நுட்பமான படைப்புகளாக இருந்தாலும் மேற்சொன்ன நேர்மறை / எதிர்மறை கற்பனாவாத சித்தரிப்புகளுக்கு உதாரணங்களாகவும் உள்ளன. ஆனால் “Submission”, “Disgrace” போன்ற சமகால அரசியல், சமூகப் பிரச்சனைகளைப் பேசும் புனைவுகள் நம்மை, ஒரு சமூகமாக நமது அபத்தங்களை, உள்முரண்களை ஒரு கண்ணாடியாகக் காட்டுகின்றன; அவை காட்டும் சித்திரத்தை நாம் ஏற்றுக்கொண்டோ மறுத்தோ ஆக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கின்றன. வரலாறு எனும் துடைப்பத்தால் காலத்துக்கு வெகுபின்னால் பெருக்கித் தள்ளி எதார்த்தத்தில் இருந்து தப்பிக்க அனுமதிப்பதில்லை. அதனாலே ஒரு தனி முக்கியத்துவம் பெறுகின்றன.  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...