முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹிந்து தமிழ் திசை பேட்டி - முழு வடிவம் (1)


தி ஹிந்து கேள்வி: “உலகளாவிய இலக்கியப் போக்குக்கும் தமிழ் இலக்கியப் போக்குக்கும் இடையிலான இடைவெளியை எப்படி பார்க்கிறீர்கள்?”


ஆர் அபிலாஷ் பதில்:


“என்னுடைய வாசிப்பு படி கடந்த இரு பத்தாண்டுகளின் தமிழ் இலக்கியப் போக்கில் சில குறிப்பிட்ட இயல்புகள், தன்மைகள் தென்படுகின்றன; அதில் குறிப்பிடத்தக்கவை

 (1) சமூகவலைதள எழுத்து நமது புனைவு மற்றும் அபுனைவு மொழியில் ஏற்படுத்தி உள்ள தாக்கம்.

(2) புதிய எழுத்தாளர்களின் - தம்மை எழுத்தாளர் என கருதிக் கொள்ளாதவர்களின் - வருகை.

(3) இலக்கிய - இலக்கியமற்ற எழுத்துகளுக்கு இடையிலான தடுப்புச்சுவர் பாதி உடைக்கப்பட்ட நிலையில் இங்குள்ளவர்கள் அங்கும் அங்குள்ளவர்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பது.

(4) குறுநாவல்கள் குறுகிய காலத்தில் எழுதப்பட்டு மின்நூலாக பிரசுரம் பெறுவது அதிகமாகி உள்ளது.

(5) மற்றபடி வழக்கமான இலக்கிய நாவல்கள், சிறுகதைகளின் வடிவம், கதைக்களம், மொழி, அழகியல் போன்ற சங்கதிகளீல் நாம் தொண்ணூறுகளில் இருந்து பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளவில்லை. 

(6) இங்கு தான் உலக எழுத்துக்கும் நமக்குமான மாறுபாடுகள் துலக்கமாகின்றன - தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் அங்கு எழுதும் முறை, எழுதும் ஆட்கள், பிரசுரம் பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாய எதார்த்தம், மிகுபுனைவு, விஞ்ஞான புனைவு, அழிவுகாலப் புனைவு (apocalyptic fiction), பின்நவீன பரீட்சார்த்த புனைவு, எதார்த்த புனைவு, திகில், துப்பறியும் கதைகள் என ஒவ்வொன்றும் அங்கு தத்தம் கிளைகளில் பத்திரமாக இருக்கின்றன. 

(7) மேற்கத்திய பிரசுர உலகில் உள்ள ஒரு தனித்துவமான அம்சம் அரசியல் சமூக கதையாடல்களுக்கு புனைவுலகில் உள்ள தாக்கம். குறிப்பாக, புலம்பெயர்வு காரணமாக பல்வேறு இனங்கள் இணைந்து வாழும் சூழல் அங்கு கடந்த சில பத்தாண்டுகளில் தீவிரமாகி உள்ளது. இது இனங்கள் இடையே உரசலை, அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளையினத்தவர் ஆதிக்கம் செலுத்தும் நிலங்களில் கறுப்பின, ஆசிய மக்கள் தமது அரசியல், சமூக அடையாளம், இடம் என்னவெனும் கேள்விக்கு ஆளாகிறார்கள். இன்னொரு பக்கம் வெள்ளையர்கள் (பெரும்பான்மையினராக இருந்தும் கூட) தாம் ஒடுக்கப்படுவதாய் ஒரு விசித்திர அச்சத்துக்கு ஆளாகிறார்கள். இந்த பின்காலனிய, புலம்பெயர்வு சூழல் ஏற்படுத்தியுள்ள சலனங்களை அவர்களது படைப்புகளில் அதிகமாய் காண்கிறோம். மூன்றாம் பாலினத்தோரின் சிக்கல்கள், நகரமயமான வாழ்வின் மேலோட்டமான, நிலையற்ற இருப்பு ஆகியவை சித்தரிக்கப்படுவதை பார்க்கிறோம். அண்மையில் நான் வாசித்த மிஷெல் வெபக்கின், ஹன்யா யானாகிஹாரா போன்றோரின் நாவல்கள் ஒரு உதாரணம். ஆனால் தமிழ் புனைவுகளில் நாம் இன்னமும் தனிமனித, குடும்பக் கதைகளை, கிராமங்களைத் தாண்டி அதிகமும் செல்லவில்லை (ஈழ இலக்கியம் ஒரு விதிவிலக்கு). தொண்ணூறுகளில் தோன்றிய வித்தியாசமான களங்களில், கதைகூறல்களுடன் புனைவெழுத வேண்டும் எனும் முனைப்பு அதன் பிறகு மாயமாகி விட்டது.

நமது இலக்கிய, வெகுன எழுத்துக்கள் மொழியாக்கப்பட்டு உலகம் முழுக்க, குறைந்தது இந்தியா முழுக்க கொண்டு செல்லப்படாதது, தமிழகத்துக்குள்ளும் பெரும் வாசகப் பரப்பை நம்மால் அடைய முடியாதது நம்மை இப்படி ஒரு சிறிய வட்டத்துக்குள் நின்று கத்தி சுழற்ற வைக்கிறதா? இக்கேள்வியை நான் என் சக எழுத்தாளர்களிடம், வாசகர்கள், நண்பர்களிடத்து வைக்கிறேன்.”


தி ஹிந்து கேள்வி: “நாவல்கள் - தத்துவ நூல்கள் இணையும் புள்ளி என்ன? உங்கள் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடியுமா?”


ஆர். அபிலாஷ் பதில்: 


“நாவல் என்பதை நாம் புலன்களால் பார்த்து உணரும் அனுபவங்களை, தகவல்களை வைத்து மட்டும் சித்தரிக்க வேண்டும் எனக் கோருவதே எதார்த்த, இயல்புவாத புனைவின் அடிப்படை. இத்தகைய எழுத்தால் புலனுலகைக் கடந்த பல விசயங்களை (தத்துவம், அறிவியல், வரலாறு, தொழில்நுட்பம், மீமெய்யியல்) கொண்டு வந்து விரிவை, ஆழத்தை நாவல் போன்ற வடிவத்தில் அடைய முடியாது. இதனாலே ஜெ.மோ, எஸ்.ரா, சாரு, பிரேம் ரமேஷ், பா. வெங்கடேசன், தமிழவன், எம்.ஜி சுரேஷ் போன்றோர் பலவிதமான மொழிகளில், கதைக்களங்களில் புனைவை முயன்று பார்த்தார்கள். உ.தா., ஜெ.மோவின் “விஷ்ணுபுரம்” அத்வைதத்தையும், (மறைமுகமாக) சுதந்திரத்துக்குப் பின்பான இந்திய அரசியல் வரலாற்றையும் தொன்மமாக்கி விவாதிக்கும் ஒரு பேராசைப் படைப்பு. நகுலன், சம்பத், மௌனி போன்றோர் தத்துவத்தையும் உளவியல் / மரபையும் இணைத்து புனைவில் சிந்திக்க முயன்றார்கள். தத்துவம் மட்டுமல்ல எந்தவொரு மாற்று புலத்திலும் புனைவு காலூன்றுவது அதற்கு ஒரு ஆழத்தை கொடுக்கும் என நம்புகிறேன். தத்துவம் எனக்கு பிடித்தமானது என்பதால் தத்துவ கோணம் கொண்ட புனைவுகளை நான் கூடுதலாக கொண்டாடுவேன்.”


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...