காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பல்வேறு தொழிலதிபர்கள் செழிக்க முடிந்தது, ஆனால் பாஜகவோ தமது மறைமுக முதலீடு பெற்ற ஒரு சில தொழில் நிறுவனங்கள் மட்டுமே மொத்த வளர்ச்சியையும் பெற முடியும் எனும் நிலையை ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு மூலம் ஏற்கனவே இருந்த பணமுதலைகளை பட்டினி போட்டு கொன்றது. வரலாறு காணாத வளர்ச்சியை பாஜகவின் பினாமி தொழிலதிபர்கள் பெற, அவர்களைக் கொண்டு தேர்தலுக்கு பெருவெள்ளம் போல பணத்தை அள்ளி செலவழிக்க பாஜகவால் முடிந்தது. 2019 தேர்தலில் - பாஜகவுடன் ஒப்பிடுகையில் - காங்கிரஸுக்கு செலவு செய்ய சொற்பமான பணமே இருந்தது. அது மட்டுமல்ல, பெரும் முதலீடுகள் மூலமாக பெரும்பான்மையான ஊடகங்கள், தேர்தல் ஆணையம், நிதித்துறை ஆகியவற்றையும் தன் கையில் வைத்திருக்க பாஜகவால் முடிகிறது. கூடவே காங்கிரஸுக்குள் பல மூத்த தலைவர்களை விலைக்கு வாங்கி தமது கொத்தடிமைகளாக, உள்கட்சி கலவரக்காரர்களாக மாற்ற முடிகிறது. தானே அரசு, தொழில் செய்வதும் தானே, அதற்கு முதலீட்டை எந்த வரையறையும் இல்லாமல் சீனா உள்ளிட்ட வெளிநாடுகள், வங்கிகளில் இருந்து பெறுவதும் தானே, நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்தி தொழில் செய்வதும் தானே, அனைத்து ஒப்பந்த பணிகளையும் எடுத்து நடத்துவதும் தானே, இதில் இருந்து வரும் மொத்த பணமும் தனதே எனும்படி இன்று பாஜக அடைந்துள்ள ‘பொருளாதார தன்னாட்சி நிலை’ இதுவரை இந்திய வரலாற்றில் எந்த அரசுக்கும், கட்சிக்கும் இருந்ததில்லை.
இந்த பொருளாதார சர்வாதிகார விருப்பம் தான் அவர்களுடைய “காங்கிரஸ் முக்த் பாரத்” எனும் முழக்கத்துக்கு பின்னால் இருப்பது. ஏனென்றால் தொழில் ஆதிக்கத்தை பொறுத்தமட்டில் அதானிகள் படையெடுக்க இன்னும் நிறைய பகுதிகள் எஞ்சியுள்ளன. உ.தா., அரசு வங்கிகளை முழுக்க கபளிகரம் பண்ணி விட்டு, ஒன்றுமே மிச்சமில்லை என ஆகும் போது அவற்றை மூடி விட்டு அதானி தன் வசப்படுத்துவார். இப்போதுள்ள தனியார் வங்கிகளிலும் அப்போது தன் முதலீட்டை அதிகமாகி கட்டுப்படுத்துவார். நிச்சயமாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் அனைத்து அரசு பள்ளிகள், கல்லூரி, பல்கலைகளையும் மூடி அனைவரும் தனியாரை கல்விக்கு நம்பி இருக்கும் நிலையை ஏற்படுத்தி, கல்வி நிலையங்களை மொத்தமாக தம் பினாமிகளுக்கு பாஜக கொடுத்து விடும். இதுவே மின்வாரியம், ரயில்வே உள்ளிட்டவற்றுக்கும் நடக்கும். நம்ப முடியவில்லையா? இந்த சேதியைப் பாருங்கள்: குஜராத்தில் மின்சார சேவையை வழங்குவது தனியார். அதுவும் அதானியின் நிறுவனம். அவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்ட போது ஒரு குறிப்பிட்ட கட்டணத்துக்கு ஒப்புக் கொண்டார்கள். அதானியின் நிறுவனம் மின்சாரத்தை நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி செய்கிறார்கள். இந்த நிலக்கரியை இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி பண்ணுகிறார்கள். நிலக்கரியின் இறக்குமதி விலை அதிகமாகி விட்டது என்பதைக் காட்டி அதானி குஜராத்தில் மின் கட்டணத்தை உயர்த்தினார். இதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட 2017இல் உச்சநீதிமன்றம் இந்த கட்டண உயர்வு தவறு என அதைக் குறைக்குமாறு தீர்ப்பெழுதியது. ஆனால் அப்போது இந்த தீர்ப்பு நிலுவையில் வந்திருந்தால் அதனையும் நிறுவனம் நட்டம் ஏற்பட்டு கடனில் சரிந்திருக்கும் என்பதால் குஜராத்தில் ஆளும் பாஜக அரசு இத்தீர்ப்புக்கு எதிராக அதிக கட்டணம் வசூலுக்கும் அனுமதியை ஒரு ஆணை மூலம் அதானிக்கு அளித்தது. இதில் குறிப்பிடத்தக்க வினோதம் என்னவென்றால் நிலக்கரியை விற்கும் இந்தோனிஷிய நிறுவனத்தில் கணிசமான பங்குகளையும் அதானியே வைத்திருக்கிறார். அதாவது கட்டண உயர்வுக்கு அதானி தந்த காரணம் போலியானது. இப்போது அதிக மின்கட்டணம் மூலம் மக்களிடம் இருந்து பணத்தை உருவி அவர் தன் நிலக்கரி நிறுவனத்துக்கு அதிக லாபம் பெற வழிவகை செய்கிறார். ஆனால் வெளியே பார்க்க அவரது மின் உற்பத்தி நிறுவனம் லாபம் இன்றி தத்தளிப்பதாக தெரியும். இப்படி குண்டு வைப்பதும் அவர் தான், அதை எடுப்பதும் அவர் தான். அவருடைய லாபமானது பாஜகவின் பணமும் தான்.
அரசு நிறுவனங்களை ஒழித்துக் கட்டி அந்த இடத்தில் தனியார் நிறுவனங்களை கொண்டு வந்து பாஜக அரசு சாத்தியப்படுத்த உத்தேசிப்பது கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி அல்ல, சொந்த கட்சியின் நிதி வளர்ச்சியை தான். அதானிகள் படையெடுக்கும் முன்பு இந்த பொது நிறுவனங்கள் தரும் இலவச அல்லது குறைந்த கட்டண சேவைகள் மத்திய, கீழ்மத்திய, ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் காப்பாற்றி வந்தன. உ.தா., கோவிட் தொற்று அமெரிக்காவில் பரவிய போது அங்குள்ள பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் செலவு செய்ய பணமில்லாமல் பலரும் வீட்டிலேயே பதுங்கிக் கொண்டார்கள். ஆனால் இந்தியாவிலோ அரசு மருத்துவமனைகள் இலவசமாகவே பல கோடி பேரை காப்பாற்றியது. இல்லையென்றால் நோய்வாய்ப்பட்ட மத்திய வர்க்கத்தினர் தம் சேமிப்புத் தொகைகளை தனியார் மருத்துவமனைகளில் செலவழித்து பிச்சைக்காரர்கள் ஆகியிருப்பார்கள். ஆனால் இந்த பாதுகாப்பு வளையம் மக்கள் வரும் பத்தாண்டுகளில் இருக்காது. பாஜகவின் ‘தொலைநோக்குத் திட்டமே’ மெல்ல மெல்ல அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், கல்லூரிகளை மூடி அனைத்தையும் தனியார்மயமாக்கி அந்த போர்வையில் அனைத்தையும் தம் கட்சியின் சொத்தாக்கி, பினாமிகள் மூலம் மக்களின் பணத்தை சூறையாடுவதே. இன்று அரசு மருத்துவமனைகளை விமர்சிக்கும், இலவசங்களை வெறுக்கும் பல மத்தியவர்க்கத்தினர் அன்று உண்மையை உணர்ந்து கொள்ளும் போது எதுவுமே மிஞ்சியிருக்காது. அதானி இன்றி இந்தியாவில் ஒரு புல் கூட அசையாது எனும் நிலை ஏற்படும். இன்று போல ஒரு பெருந்தொற்று ஏற்பட்டால் மக்களால அரசு மருத்துவமனையில் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது. சிகிச்சை வசதிகள் இருக்காது. அமெரிக்காவில் வசதியில்லாதவர்கள் கல்லூரிக்கு போக முடியாது. அதற்கு வங்கிக்கடன் வாங்க வேண்டும். அங்கு கீழ்மத்தியவர்க்கம் வீடற்றவர்களாக வாகனங்களிலும் தெருவோரமாகவும் வசிக்கிறார்கள். அந்நிலை அதை விட மோசமாக இந்தியாவுக்கும் வரும் என்பதில் ஐயமில்லை. அப்போது நீங்கள் தனியாரை குற்றம் சாட்ட முடியாது, ஏனென்றால் மக்களுக்கு வர வேண்டிய மறைமுக நிதி உதவியை பாஜக பிடுங்கி அப்போது தனியாருக்கு கொடுக்காது, தமது பினாமி கார்ப்பரேட்டுகள் மூலம் தனது சொந்த பாக்கெட்டில் வைத்து கொள்ளும். ஏனென்றால் அப்போது திறந்தநிலை சந்தை பொருளாதாரம் இருக்காது, அதனிடத்தில் ஒற்றை கார்ப்பரேட்வாதமே இருக்கும். அந்த மொனோபோலியாக பாஜகவின் அதானிகள் இருப்பார்கள். இன்று பாஜகவை ஆதரிக்கும் நவதாராளவாதிகள் அன்று பேச்சற்று போவார்கள். வணிகத்தில் இன்றுள்ள போட்டிக்களம் அன்றிருக்காது. பாஜகவே தேசம், பாஜகவை கேள்வி கேட்பது தேசத்துரோகம் என்பதால் மக்களும், வியாபாரிகளும் இதை கேள்வியின்றி ஏற்றுக் கொள்ள நேரும்.
அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளிலும் அதானியே முதலீடு செய்து, மொத்த பொருளாதாரத்தையும் தன் கையில் எடுத்துக் கொள்வார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. திமுகவை அழிக்க வேண்டும் என அவர்கள் விரும்புவது அக்கட்சியின் தொழிலதிபர்களை காலி பண்ணி, பொருளாதார ஆற்றலை விழுங்கிக் கொள்ள வேண்டும் எனும் நோக்கிலே. அடுத்த 30-40 ஆண்டுகளில் இந்தியர்கள் அனைவரும் பாஜக முதலீடு கொண்ட ஏதாவது ஒரு தனியார் நிறுவனத்தில் தான் பணி செய்து கொண்டிருப்போம். யாருக்கும் சொந்தமாக ஒரு துண்டு விவசாய நிலம் இருக்காது. கடலில் மீன் பிடிக்கும் உரிமையை மீனவர்கள் பறிகொடுப்பார்கள். இதை யாருமே எதிர்க்க, விமர்சிக்க முடியாது - ஏனென்றால் பாஜகவே இந்திய தேசம், பாஜகவின் பினாமிகளே இந்தியா எனும் ஒரு சித்திரத்தை அப்போது வலுவாக ஏற்படுத்தி நம்மை நம்ப வைத்திருப்பார்கள். நாட்டின் மொத்த நிதியும் அவர்கள் வசம் இருக்கையில் வேறு எந்த கட்சியாலும் தேர்தலை சந்திக்க முடியாமல் போகும். காங்கிரஸை முழுக்க முழுங்கிய பிறகு ஆரம்பத்தில் பெயரளவுக்கு ஒன்றிரண்டு பி-, சி-டீம் கட்சிகளை வைத்திருப்பார்கள். அதன் பிறகு தேர்தல் ஒழியும் போது அவையும் தேவையிராது.
இங்கு “தாமரை மலர வேண்டும்” என பாஜக விரும்புவது இந்த வணிக நலன்களை, திட்டங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு தான். அதாவது, நாட்டின் மொத்த பொருளாதாரமும் ஒரு கட்சியின் கட்டுப்பாட்டில் வரும் போது, ஒவ்வொரு குடிமகனும் பாஜகவின் பினாமிகள் அளிக்கும் சம்பளத்தை வாங்கியே சோறுண்ண வேண்டும் எனும் நிலை வரும் போது, தேர்தலே தேவையிராது. அப்போது பாஜக தேர்தலை ரத்து பண்ணும், நாம் யாரும் அதை எதிர்த்து கேள்வி எழுப்ப மாட்டோம், ஏனென்றால் பாஜக தலைமை நமது பிக்பாஸ் ஆகி விடும். பிக்பாஸை எதிர்த்து அவருக்கு கீழுள்ள பங்கேற்பாளர்கள் பேச முடியுமா? முடியாது. சமூக பொருளாதார அமைப்புகளே நமது சிந்தனையை, நம்பிக்கையை, சித்தாந்தங்களை பண்பாட்டை, உணர்வலைகளை தீர்மானிக்கும் என்பதால் பாஜகவால் வாழும் மக்களும் அவர்களுக்கு இணங்கியே சிந்திப்பார்கள். சுமார் 300 ஆண்டுகள் நாம் பிரித்தானிய காலனிய அரசை தலைவணங்கி ஏற்றுக் கொண்டது இதே போல அவர்கள் நமது ஒட்டுமொத்த சமூக பொருளதார அமைப்புகளை துல்லியமாக கராறாக கட்டுப்படுத்தினார்கள் என்பதாலே. அடுத்த இரு நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் விழித்துக் கொள்ளாவிடில் அதுவே இந்தியாவுக்கு திரும்பவும் நடக்கப் போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை.
நான் நவ-காலனியவாத படையெடுப்பு என பாஜகவை குறிப்பிடுவது சும்மா பயமுறுத்த அல்ல. அதானி போன்றோர் மூலம் இன்று பாஜக வெளிநாடுகளில் முதலீடுகளை செய்கிறது. அதே போல வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐரோப்பிய வங்கிகளிடம் இருந்து நிதியை கடனாகப் பெற்று தொழில் தொடங்கி நடத்துகிறது. இப்போது இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்த வணிக நலன்களை கருத்திற் கொண்டு பாஜக அரசு அந்நிய சக்திகளை எதிர்க்க தயக்கம் காட்டுகிறது. விளைவாக, சீனா எப்படி 38,000 சதுர அடி கிலோமீட்டர்கள் இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. இதை வெளிப்படையாகவே அவர்கள் செய்வது, அங்கு சீன குடியிருப்புகளை ஏற்படுத்துவது, நமது பிரதமர் ஒரு வார்த்தை கூட சீனாவுக்கு எதிராக பேச மாட்டார் எனத் தெரிந்தே தான். குஜராத்தி பனியாக்களுக்கு பணமே கடவுள். பாஜகவின் பல லட்சம் கோடிகள் அந்நிய மண்ணில் முதலீடு செய்யப்படும் போது, இந்தியாவில் அந்நிய முதலீடு பெற்று அவர்களின் பினாமி நிறுவனங்கள் வளம் கொழிக்கும் போது இந்தியாவின் ஒரு சிறிய பகுதியை அவர்கள் பிடிப்பதை பாஜக கண்டு கொள்ளாது. பாஜக மூலம் ஐரோப்பிய, சீன நவகாலனிய சக்திகள் இந்தியாவை மீண்டும் ஆக்கிரமிக்கிறது, காலனியாதிக்கம் செய்கிறது என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை. அடுத்த நான்கைந்து நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக வென்று விட்டால் நமது நாட்டின் குடுமி முழுக்க அயல் சக்திகளின் கையில் இருக்கும். யார் வேண்டுமானாலும் மிரட்டுவார்கள், நாம் அமைதியாக போவோம், அவ்வப்போது பாகிஸ்தானில் உள்ள பனைமரங்கள் மீது ஏவுகணை செலுத்துவதைத் தவிர.
பாஜகவின் வளர்ச்சி என்பது பார்ப்பனிய-பனியா கூட்டணியின் வெற்றி மட்டுமே என காஞ்சா இலையா சொல்வதன் இதன் அடிப்படையில் தான். பாசிசம் எழுச்சி பெறுவது எச்சூழலில் என Fascism: What is It and How to Fight It எனும் தனது சிறிய முக்கியமான நூலில் அலசிய டிராட்ஸ்கி பொருளாதார நிலையின்மை தோன்றி, அதனால் தேக்கம் ஏற்படும் போது, வணிகர்கள் ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையை ஒரு கைப்பற்றப்பட்ட வாடிக்கையாளர்களாக, தொழிலாளர்களாக மாற்றி, சூறையாட நினைக்கும். அப்போது அதற்கு துணையாற்றும் நோக்கில் ஊடகங்கள் உள்ளிட்ட பிற அமைப்புகளின் துணையுடன் பொது எதிரிகள் - சிறுபான்மையினர் மற்றமையாக - கற்பனை பண்ணப்பட்டு தேசியவாத அலை ஏற்படுத்தப்பட்டு, ஒரு வசீகரமான ஆதிக்கவாத தலைவரின் கீழ் நாட்டின் பிரஜைகள் கட்டுக்குள் கொண்டு வரப்படுவார்கள். ‘ஜனநாயக விழுமியங்கள் வளர்ச்சியை பரவலாக்கி, அது பண உற்பத்தியை ஒரு புள்ளியில் குவிக்கவும், மேற்தட்டுக்கும், மேல்மத்தியவர்க்கத்துக்கும் உரித்ததாக ஆக்க விடாமல் அனைவருக்குமானதாக மாற்றி விடுகிறதே’ என எலைட்டுகளும், எலைட்டுகளுக்கு அடுத்தபடியாய் தம்மை கருதுகிற பிற மக்களும் நினைக்க ஆரம்பிப்பதே பாசிசத்தின் துவக்கப் புள்ளி (இந்தியாவில் சமூகநல, இடதுஒதுக்கீட்டு, சிறுபான்மை ஆதரவு கொள்கைகளை தொடர்ந்து சாடுகிற ஒப்பாரியாக இருக்கிறது). ஒரு நாட்டில் முதலீட்டியம் முற்போக்கு, ஜனநாயக விழுமியங்களின் ‘இடையூறுகள்’ இன்றி சம்பாதித்து குவிக்க விரும்பும் போது அது தோற்றுவிப்பதே பாசிச அரசியல் என்கிறார் டிராட்ஸ்கி. பாசிசம் என்பதை ஒரு மேதைமை பொருந்திய, வசீகரமான, மக்கள் செல்வாக்கு மிக்க சர்வாதிகாரியின் ஆட்சி பாணி, வலதுசாரி சிந்தனையின் விளைவு, ஆதிக்கவாத அரசியல் என்றெல்லாம் பார்ப்பது நோய்க்குறியை நோயாக தவறாக அடையாளம் காண்பதே. இந்த பார்வைக்கு சிறந்த உதாரணம் நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லியுள்ளது போன்ற பொருளாதார மந்தநிலையில் நாடே வளர்ச்சியின்றி நிலைகுலையும் போது பெரும்பணக்காரர்களான அதானியும் கூடவே அம்பானியின் கற்பனை காண முடியாத பிரமாண்ட வளர்ச்சியை பெற்றிருப்பதே. ஜெர்மனியிலும், இத்தாலியிலும் பாசிசம் மோசமான பொருளாதார மந்தநிலையின் போதே எழுந்து நிலைப்பெற்றது. எப்படி இனவாதம், மிகையான இனப்பெருமிதம், பெரும்பான்மைவாதம், யூத வெறுப்பு, யூத அழித்தொழிப்பு திட்டங்கள் போன்றவை மீதெல்லாம் அங்குள்ள பெரும்பணக்கார வர்க்கத்துக்கு அக்கறையிருந்ததில்லையோ, அவ்வாறே இந்து தேசியவாதம், மோடியின் சர்வாதிகாரம், மதப்பிரிவினைவாதம் போன்ற விசயங்கள் மீதெல்லாம் இந்திய பெரும்பணக்காரர்களுக்கு அக்கறையில்லை; இவை தம் மீது கவனம் திரும்பாதிருக்க உதவும் கதையாடல்கள் என அவர்கள் அறிவார்கள். “பாசிச பாஜக” என நாம் முழுங்கினால் அவர்கள் புன்னகையுடன் அதை வேடிக்கை பார்ப்பார்கள். நாம் உண்மையை புரிந்து கொள்ளும் போது அவர்கள் நாட்டை விட்டே காலி செய்திருப்பார்கள்; அல்லது மீண்டும் ஜனநாயக விழுமியங்கள் மேலெழுவதறான ஆதரவு நடவடிக்கைகளில் மறைமுகமாக உதவுவார்கள்.
இறுதியாக இங்கே ஒரு முக்கியமான கேள்வியை நாம் எழுப்பலாம்: இந்தியாவின் பெரும்பணக்காரர்கள் பாஜகவின் பினாமி முதலீட்டாளர்கள் என சொன்னேன் அல்லவா, எனில் அவர்களும் இவர்களும் ஒன்று அல்லவா? ஆம் ஒன்று தான். அது தான் இன்றுள்ள அரசியல் சூழலை மிகவும் சிக்கலானதாக்குகிறது. நோய்க்குறியே நோயாக, போதே நோய்க்குறியாக உள்ள சூழலில் இன்று வாழ்கிறோம். இந்த சமூகப்பொருளாதார சூழலை தனக்கேற்ற சுலபத்தில் சுரண்டும் சந்தையாக உருமாற்ற பாஜக எனும் சுயநல முதலீட்டிய சக்தி தோன்றி, அதற்கான அரசியல் சித்தாந்த மொழியையும், கலாச்சார சூழலை ஒரு முகமாக சூடிக் கொள்ளவும் செய்கிறது. டிராட்ஸ்கியின் காலத்தில் இருந்ததைப் போல இன்று நீங்கள் மதத்தை முதலீட்டியத்தின் கருவியாக காண முடியாது. மதவாத தேசியம் தன்னை தக்க வைக்க தனிப்பெரும் முதலீட்டீய சக்தியாக தன்னை மாற்றுகிறது; அதற்கு ஒருமுகமாக ஒரு சர்வாதிகாரியை உருவாக்குகிறது. இந்த சுயநல முதலீட்டியம், இன்னொரு பக்கம், தன்னை தக்க வைக்க மதவாத தேசியத்தை காப்பாற்றி பெருக்குகிறது; அது தன் முகம் ஒரு சர்வாதிகாரி என வெளிப்படையாக அறிவித்து அவரை கொண்டாடுகிறது. இந்த சர்வாதிகாரியோ தானே மதவாத தேசியவாதம், தானே முதலீட்டிய பெரும்பணத்தின் உரிமையாளன் (மோடி அதானியின் விமானத்தில் பதவியேற்க பறப்பது, பல லட்சம் மதிப்பிலான ஆடைகளை அணிவது), தானே தேசம் என கூச்சமில்லாமல் பறைசாற்றுகிறார். இந்த சூழலில் நாம் மதவாதத்தை மதப் பற்றாக, மதப்பற்றை தேசப்பற்றாக, தேசப்பற்றை பிரதமர் வழிபாடாக, சர்வாதிகாரத்தை பிரதமரின் தன்னம்பிக்கையாக, துணிச்சலாக, அதை தேசத்தின் பெருமிதமாக குழப்பிக் கொள்கிறோம். இன்று ஒருவர் பாசிசத்தை கண்டித்தாலே அது ஒட்டுமொத்தமாக தேசத்தின் நலன்களை ஒருவர் சாடுவதாக பார்க்கத் தொடங்கி உள்ளோம். இத்தனையையும் கொண்டு அதானிகளை ஆதரிப்பதையும் நாம் நியாயப்படுத்துகிறோம். எது எதனை உற்பத்தி பண்ணுகிறது என சுலபத்தில் பிரித்தறிய முடியாத சூழலில் இருக்கிறோம்.
ஆங்கிலேயர்களுக்கு அடுத்த படியாக ஒரு மிகப்பெரிய படையெடுப்பு காவிப் படைகளின் படையெடுப்பே. அது மறைமுகமாக ‘பனியாக்களின்’ படையெடுப்பே. அதுவும் மறைமுகமாக மேற்கத்திய நாடுகள், சீனா போன்ற வல்லரசுகளின் கூட்டணியுடன் நிகழும் ஒரு நவகாலனிய படையெடுப்பே. ஒரே சமயம் அது தம் கட்சியின் சர்வாதிகார நிலைப்புக்கும் உதவுவதாலே நாக்பூர் பார்ப்பனர்கள் அதை அனுமதிக்கிறார்கள். முக்கியமாக, இன்று பனியா-பிராமண கூட்டணி என்பது (இந்திய முதலீடுகள் அனைத்தையும் கையில் வைத்திருக்கிற உள்நாட்டு, வெளிநாட்டு) பனியாக்களே இந்துத்துவர், இந்துத்துவர்களே பனியாக்கள் என மாறியுள்ள நிலையில் நாம் பாசிசத்தில் இருந்து விடுபட யாரிந்த பனியாக்கள் எனும் கேள்வியை இன்னும் தீவிரமாக எழுப்ப வேண்டும். இந்துத்துவரின் ஆதிக்கத்தில் குஜராத்திய பனியாக்கள் மட்டுமல்ல சீன கார்ப்பரேட்டுகள் உள்ளிட்டு அயல்நாட்டு பனியாக்களும் கூட்டிணைந்துள்ளதால் நாம் இதை ஒரு மார்வாரி, பார்ப்பனிய ஆதிக்கமாக மட்டும் சுருக்கி விடக் கூடாது. இது அதை விட தேச எல்லைகள் தாண்டிய மிகப் பிரம்மாண்டமான ஆதிக்கவாத கூட்டமைப்பு. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் கீழ் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய கிளர்ச்சி காலனிய ஆட்சிக்கு எதிராக ஏற்பட்டது. அது மீண்டும் இங்கு நிகழுமா? பரங்கிகளுக்கு அடுத்தபடியாக நாம் இந்த நவகாலனிய பனியாக்களை விரட்டுவோமா?
நன்றி: தமிழினி.காம்


Comments