முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு சந்திப்பு


நேற்று கீர்த்திகா தரனின் மகன் நிகினை சந்தித்தேன். நான் சந்தித்த இளைஞர்களில் சற்று வித்தியாசமானவர். 

பொதுவாக இன்றைய மாணவர்கள் கூகிளுக்குள் பிறந்தவர்கள். கூகிளுக்குள் தூங்கி விழித்து அதற்குள்ளே பல்துலக்கி துப்பி ஒரு நாளை துவக்குகிறவர்கள். அவர்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை - எதைப் பற்றியும் சொற்பமான சில தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு தெனாவெட்டுடன் இருப்பார்கள். என் வகுப்புகளில் இந்த மாணவர்களை தகவலால் ஆச்சரியப்படுத்த முடியாது எனத் தெரிந்தே ஒரு மாற்றுப் பார்வையுடன் பேச முயல்வேன். நிகின் இந்த இளைஞர்களிடம் இருந்து ரொம்ப வித்தியாசமாக தெரிகிறார் - அவர், என்னுடைய தலைமுறையினரைப் போல, எதையும் கேட்டு அறியும் ஆர்வம் கொண்டவர்:


 நான் சின்ன வயதில் எந்த எழுத்தாளரை, ஆசிரியரைக் காண சென்றாலும் அணுக்கமாக அன்பாக பேசி அவர்களுடைய இதயத்தில் இடம்பிடிக்க முயல மாட்டேன். என் கைவசம் இருக்கும் கேள்விகளுடனே செல்வேன். போனதும் ஒவ்வொன்றாக கேட்க ஆரம்பிப்பேன். அவர்கள் சொல்லுகிற பதில்களில் இருந்து எனக்கு எழும் சிறுசிறு கேள்விகளை எழுப்புவேன். ஒரு மாணவனாக நான் வகுப்பில் கேள்வி எழுப்பத் தொடங்கினால் மற்ற மாணவர்கள் தூங்கி விடுவார்கள். என் இளமை முழுக்க நான் இப்படி கேள்வி கேட்பவனாக, எதையும் சுலபமாக ஏற்றுக் கொள்ளாமல் குறுக்குக் கேள்விகள், மறுப்புகள் என விவாதத்தை வளர்ப்பவனாக இருந்தேன். இந்த உலகமே எனக்கு ஒரு வகுப்பறை. இயல்பாக நலம் விசாரித்து, வம்பு தும்பு பேசி, கேட்பவரை புகழ்ந்து வசீகரித்து உரையாடலை வளர்த்து அவருக்கு வாக்குறுதிகள் அளித்து அவ்வுரையாடலை முடிக்கிறவனாக நான் இருக்கவில்லை. அது எப்படியென்றே எனக்குத் தெரியவில்லை. அந்த கெட்டப் பழக்கம் இன்றும் என்னிடம் தொடர்கிறது. இந்த small talk எனும் சம்பாஷணை முறை எனக்கு ரொம்ப அலுப்பூட்டுகிற காரியம். கூடிப் போனால் எனக்கு நெருக்கமாகி விடும் நண்பர்களிடம் எதாவது நகைச்சுவை சொல்லி விளையாட்டாக இருப்பேன். அதுவும் அரிது தான். எந்த உரையாடலும் எனக்கு ஒரு புதிய சிந்தனையை, கற்பனையை அளிக்க வேண்டும், அதில் இருந்து நான் ஒரு கட்டுரையோ கதையோ எழுத முடிய வேண்டும் என எதிர்பார்ப்பேன். சென்னை வந்த பிறகு நான் இன்னொரு வகையான இளைஞர்களை வாசகர்களாக சக எழுத்தாளர்களாக சந்தித்தேன். அவர்கள் அபிப்ராயங்களால், கருத்துக்களால் நிறைந்திருந்தார்கள். எதைச் சொன்னாலும் ஒரு மாற்றுப் பார்வையை வைக்க வேண்டும் என நினைப்பார்கள் - அதற்கும் நாம் சொல்கிற விசயத்துக்கும் சம்மந்தமே இல்லை என்றாலும். குடிக்க ஆரம்பித்தால் அதுவும் இல்லை. ரொம்ப லோக்கலாக இறங்கி எல்லாரையும் திட்டுவது, காயப்படுத்துவது என சாடிஸ்டுகளாகி விடுவார்கள். இவ்வளவு படித்தவர்களுக்கு குடிக்க மட்டும் தெரியவில்லையே என நான் கவலைப்படுவேன். அதன் பிறகு தான் நான் மேலே குறிப்பிட்ட கூகிள் தலைமுறை தோன்றியது. அதற்கு அடுத்து வாட்ஸாப், பேஸ்புக் தலைமுறை. எனக்குத் தெரிந்த ஒரு அஸ்ஸாமிய நண்பர் தமிழகம், அதன் அரசியல், மொழிப்பற்று பற்றி நாம் யாருக்கும் தெரியாத கதைகளை சொல்வார்; தமிழ் மண்ணில் கால் பதித்திராத உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்டால் “வாட்ஸாப்பில் படித்தேன்” என ‘தன்னம்பிக்கையுடன்’ சொல்வார். இவர்களால் எதைக்குறித்தும் யாருடனும் கவலையில்லாமல் வலுவாக அபிப்ராயங்கள் சொல்ல முடியும். கேட்டால் ஆதாரம் காட்டவா என வாட்ஸாப்பை திறப்பார்கள். ஒரு தலைமுறையே இப்படி விவாதங்கள் சாத்தியமில்லாத ஒரு முட்டுசந்தில் நிற்கிறது.


ஆனால் நான் மேலே சொன்ன நிகின் ஒரு கால எந்திரத்தில் பின்னே சென்று விட்டவர். நேற்று வந்ததும் அவர் பேசிய முறை அப்படியே சின்ன வயதில் என்னை கண்ணாடியில் பார்ப்பதைப் போல இருந்தது. எனக்கு தத்துவத்தில் ஆர்வமுண்டு, அது குறித்து எழுதியிருக்கிறேன் என்பதால் என்னைப் பார்க்க வருமுன்னே சில எளிய தத்துவக் கேள்விகளுடனே வந்திருந்தார். ஏதோ விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பது போல கேள்விகளைக் கேட்டார். எனக்கு தத்துவஞானிகளில் யாரைப் பிடிக்கும் என்றார். நாகார்ஜுனர் என்றேன். உடனே தனக்குத் தெரியும் எனக் காட்டிக் கொள்ள முனையாமல் ஏன் பிடிக்கும், அவர் என்ன சொல்லியிருக்கிறார் எனக் கேட்டார். நான் எளிமையாக நாகார்ஜுனரை விளக்க முயன்றேன். நவீன மனிதனுக்கு, நவீன வாழ்க்கைக்கு ஏற்ற தத்துவ சிந்தனையாளர் யார் என்றார். உடனே புரிந்து கொள்வதற்கு ஏற்ற, நவீனச் சிக்கல்களுக்கு பொருந்திப் போகிற கருத்துக்களை பேசியவர் ஹைடெக்கர் தான் என்றேன். அதன் பிறகு அவர் கேட்டுக் கொண்டதால் ஹைடெக்கர் “தொழில்நுட்பம்” பற்றி சொன்னதை நாங்கள் இருந்த இடம், எங்கள் முன்னிருந்த கண்ணாடிக் கோப்பையை வைத்து விளக்கினேன். ஒரு தத்துவத்தை அது எழுதப்பட்ட காலத்தில் எழுந்த கருத்துக்கள், சிந்தனைப் பள்ளிகளின் பின்னணியில் வைத்தே படிக்க வேண்டுமா எனக் கேட்டார். அது வரலாற்று வாசிப்பாகி விடும் என்றேன். அது எழுதப்பட்ட இடங்களுக்கு செல்வது பயனளிக்காதா என்றார். அதற்கும் தத்துவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, நாம் இப்போது இருக்கிற இடம் இவ்வாறு நாளை இருக்கப் போவதில்லையே என்றேன். அடுத்து மற்றவர்களுக்கு போரடிக்கிறதே என சம்பாஷணையை பொதுவான விசயங்களுக்கு, அரட்டைக்கு நகர்த்தினோம். ஆனால் நிகின் கவலையே படாமல் மீண்டும் தத்துவக் கேள்விகளுக்கு என்னை இழுத்து வந்தார் - நான் இதை உள்ளூர ரசித்தேன். சின்ன வயதில் எனக்கும் இந்த பழக்கம் இருந்தது, சந்தர்ப்ப சூழல் பற்றி கவலையே பட மாட்டேன். கிளம்பும் போது அவருக்கு நான் ஆயுஷ், நேஹாவுடன் இணைந்து எழுதிய ஹைடெக்கர் குறித்த நூலை (Plop) பரிசளித்தேன்.  


அவர் போன பின் எனக்கு இப்படித் தோன்றியது: காலம் மாறி விட்டது என நாம் அங்கலாய்க்கத் தேவையில்லை. காலத்தாலும் மாற்ற முடியாதவர்களாக சிலர் இருந்து கொண்டே இருப்பார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...