முதலிரு அத்தியாயங்கள் படித்தேன். அந்த காலத்து பழைய ஸ்டுடியோ படப்பிடிப்புகளின் பின்னணியில் ஒரு காதல் கதை. அழகான உவமைகள், படப்பிடிப்பு நடைமுறை, தொழில்நுட்ப விசயங்கள் என நுண்விவரணைகள் என ரசிக்கத்தக்க அம்சங்கள் உண்டு.
ஒரு ஆச்சரியமான விசயம் முதல் அத்தியாயத்தில் இருந்த அப்பட்டமான அசோகமித்திரன் சாயல். நான் ஜெ.மோவின் எந்த புனைவிலும் பிற எழுத்தாளர்களின் சாயலை பெரிதாக பார்த்ததில்லை. பழைய படைப்புகளில் சு.ராவின் சாயல் இருக்கும், ஆனால் அதை ஜெ.மோ சாமர்த்தியமாக மறைத்து விடுவார். இந்த குறுநாவலில் கிட்டத்தட்ட அசோகமித்திரனின் குரலே நமக்கு காதில் ஒலிக்கிறது. எப்போதெல்லாம் கற்பனாவாத, நாடகீய தருணங்கள் எழுகின்றனவோ அப்போதெல்லாம் ஜெயமோகன் மீண்டு வந்து கோலோச்சுகிறார்.
ஆனால் ஒரு நாவலுக்கான தீவிரமான உணர்ச்சிப் புள்ளி, அவிழ்க்க சிக்கலான முடிச்சு இன்னும் உருவாகவில்லை என நினைக்கிறேன். இப்போதைக்கு எண்பதுகளின் பாக்கெட் நாவலைப் போலத் தோன்றுகிறது. ஆனால் ஜெ.மோ எதை எழுதினாலும் அதில் தனதான ஒரு ஒளியைக் கொண்டு விடுவார் என்பதால் அவரது வாசகர்கள் அவர் பட்டுக்கோட்டை பிரபாகர் போல எழுதினாலும் படித்து விடுவார்கள்.

Comments