முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலு மகேந்திரா - ராம் - மாரி செல்வராஜ்: ஒரு பயணம்





பாலு மகேந்திரா - ராம் - மாரி செல்வராஜ்: ஒரு பயணம்


இளந்தலைமுறை இயக்குநர்களில் காட்சிமொழியை அவ்வளவு லாவகமாக பயன்படுத்துபவர் மாரி செல்வராஜ். இலக்கிய எழுத்திலும் தனித்திறன் படைத்தவர். இப்படியானவர்கள் அபூர்வம். அவருடைய பரியேறும் பெருமாள் படத்தின் துவக்க காட்சிகளில் ஒன்றில் நாயகனின் வளர்ப்பு வேட்டை நாயை ரயில் பாதையில் கட்டியிட்டு கொலை செய்வார்கள் சாதி வெறியர்கள். அதைத் தொடர்ந்து அதே ரயில் பாதையில் நாயகனை அடித்து போடுவார்கள் அந்த வெறியர்களில் ஒருவன். அந்த நெஞ்சை உடையச் செய்யும் காட்சியானது அவர் உதவி இயக்குநராக வேலை செய்த ராமின் “கற்றது தமிழின்” கிளைமேக்ஸ் காட்சிக்கான ஒரு homage மற்றும் மீளுருவாக்கம் - ராமின் கிளைமேக்ஸில் காதலர்கள் ரயிலில் விழுந்து அந்த இருளில் தம்மை பலிகொடுப்பதாக குறிப்புணர்த்தப்படும் எனில் இங்கு அந்த துயரத்தின் சாதிய பரிமாணத்தை சுட்டி ராம் தொடாத ஒரு சமூக எதார்த்த சித்திரத்தை இட்டு நிரப்பி இருப்பார். ராமின் படத்தில் அக்காட்சி அவரது குருநாதர் பாலுமகேந்திராவின் “மூன்றாம் பிறை” படத்தில் கமலும் ஶ்ரீதேவியும் வரப்போகும் ரயிலின் தடதட ஒலியைக் கேட்டுணர தடத்தில் காதை வைத்து உட்கார்ந்திருக்கும் குழந்தைமையின் கற்பனாவாத தருணத்தின் உருவகத்தின் homage மற்றும் மீளுருவாக்கமாக இருக்கும். பாலுமகேந்திராவோ இதை சத்யஜித்ரேவின் “பதேர் பஞ்சாலி” படத்தில் வரும் பிள்ளைகள் இருவரும் இதே போல ரயிலின் வருகைக்காக காத்திருக்கும் கவிதையான காட்சியின் நினைவுறுத்தலாக, அர்ப்பணிப்பாக செய்திருப்பார் என்பது என் கணிப்பு. 


ஒரு வங்காளப் படத்தில் நவீன மாற்றத்தின் எதிர்பார்ப்பை உணர்த்துகிற ஒரு காட்சியை அப்படியே தமிழுக்கு மூன்று சிறந்த இயக்குநர்கள் உள்வாங்கி கொண்டு வந்ததில் எங்கெங்கோ பயணித்து  அது என்னென்னவோ அர்த்தங்களை உற்பத்தி பண்ணி ஒரு நிற்காத ரயிலாக எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என நான் “பரியேறும் பெருமாளைக்” கண்ட போது வியந்தேன். காட்சிமொழியின் மேதைமை மாரிக்கு உள்ளதால் தான் அவரால் ஒரு ரொமாண்டிக்கான காட்சியை எடுத்து வந்து பெருந்துயரத்தின் சமூக அவலத்தின் காட்சியாக அதை மீளமைக்க முடிந்தது.

அதே போல் அபபடத்தின் மையச் சிக்கலை கிளைமேக்ஸில் வரும் அந்த தேநீர் கோப்பை பிம்பத்தில் சுருக்கென உறைய வைத்திருப்பார். யாரால் அதை மறக்க முடியும்?


இந்த ரயில் பாதை காட்சி மட்டுமல்ல, கல்லூரி வகுப்பறை, ஆங்கிலத்தின் அதிகார அரசியல், யாருமில்லாமல் தவிக்கும் நாயகனின் வாழ்வில் தேவதையாக தோன்றும் 'ஆனந்தி' (இப்படத்தில் 'ஜோதி'), அவர்களுடைய உறவுக்கு குறுக்கே வரும் விதி என "கற்றது தமிழின்" சாதி அரசியல்படுத்தபட்ட வாசிப்பாகவே "பரியேறும் பெருமாளை" பார்க்க முடியும்.


ராமின் "கற்றது தமிழில்" வரும் தமிழ் தேசியத்தின் கோபத்தின், இருத்தலியத்தின் அவநம்பிக்கையின் இடத்தில் அம்பேத்கரிய புரட்சியை, மானுடவாதத்தின் நம்பிக்கையை வைத்தால் அதனுடன் மாரியின் கற்பனையை, அனுபவத்தை, தனித்துவமான பார்வையை, அரசியலை கலந்தால் "பரியேறும் பெருமாள்" படம் வந்து விடும்.


மாரியின் இரண்டாவது படமான “கர்ணனும்” மற்றொரு சாதனையாக அமையும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அதில் என்னென்ன அரசியல் மீளுருவாக்கங்களை முயன்று பார்த்திருக்கிறார் என்பதைக் காண ஆர்வமாக உள்ளேன். 


வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...