முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்திருக்காவிட்டால்?



தேர்தல் அரசியலில் இருமையாக இரு கட்சிகள் இருப்பது அவசியம். இந்த இரட்டைக் கட்சிகளுக்குள் கோட்பாட்டு ரீதியாக ஒரு புரிந்துணர்வு, கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும். கேரளாவின் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் முழுக்க இருவேறு தத்துவங்களுடன் செயல்படுவதில்லை. தமிழகத்தில் திமுக-அதிமுக இருமையும் அப்படித்தான். இக்கட்சிகளை மக்கள் மாறி மாறி தேர்ந்தெடுப்பதனால் ஒரு மாநிலத்தின் நலனுக்கான அடிப்படைக் கொள்கைகளில், சமூகநீதி, மத நல்லிணக்கம், சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு போன்ற விசயங்களில் ஒரு தொடர்ச்சி இருக்கும். ஆனால் கொள்கை அளவில் முற்றிலும் எதிர்முகாமை சேர்ந்த ஒரு கற்பனை அப்படி தேர்தல் களத்தில் மற்றமையாக தோன்றினால் அது ஆபத்தானதாகி விடும் - அது ஒரு கட்சியை முழுக்க அழித்து விட்டு அங்கு நிரந்தரமாக உட்காரப் பார்க்கும்; அது கொள்கை அளவில் ஒரு மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை, வாழ்வியல் மாற்றத்தை உண்டு பண்ணி மற்ற கட்சி திரும்ப தன்னளவில் தேர்தலில் வென்று வர முடியாத நிலையை ஏற்படுத்தும். மக்களை தமது அடிப்படையான நலன்களுக்கு விரோதமாக சிந்திக்க செய்யும். விளைவாக, ஆட்சியை இழந்த ஒரு கட்சி தன்னை கொள்கை அளவில் அதிகாரத்தில் உள்ள கட்சியை போலச் செய்தாலே தன்னால் உயிர்வாழ முடியும் என நம்பும் இடத்துக்கு நகர்த்தப்படும். 


தேசிய அளவில் இதற்கு சிறந்த உதாரணம் இன்று உள்ள அசகாய வலுக்கொண்ட பாஜக vs  எலும்பும் தோலுமான காங்கிரஸ் இருமுனைப் போட்டி. நீண்ட காலமாக இங்கு [1] இடதுசாரிகள்- [2](அவர்களுக்கு இணக்கமான கட்சிகள்) சிறிது இடதுசாரித்தனம், சிறிது வலதுசாரித்தனம் கலந்து மய்யமாக காங்கிரஸ்-[3]முழு வலதுசாரியான பாஜக என ஒரு கட்சிகளின் இருப்பு உள்ளது. சுதந்திரம் கிடைத்து சுமார் அரை நூற்றாண்டுக்கு இது மய்யமான முற்போக்கு காங்கிரஸ், அதற்கு எதிரணியாக இடதுசாரிகள், மாநில உரிமைகளைக் கோரும் சிறிய கட்சிகள் என ஒரு இருமையாக நீடித்து வந்தது. இது சில முறைகள் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, கூட்டணி ஆட்சி அமையவும், இந்திரா காந்தி போன்ற ஒரு முன்னோடி சர்வாதிகாரியை எதிர்த்து அரசியல் தலைவர்கள் போராடவும் சாதகமான சூழலை ஏற்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் சூழலுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்க அக்கட்சி தயங்க வில்லை - ஒரு காலத்தில் (நேருவிய) சோஷலிச நிலைப்பாடு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 90களில் தாராளவாத பொருளாதாரத்துக்கு இந்திய சந்தையை திறந்து விடுவதில் பெரிய தடை இருக்கவில்லை. நடுநடுவே காங்கிரஸ் வீழ்ந்து ஆட்சி மாற்றம் வந்த போதும் அது இந்தியாவை தலைகீழாக புரட்டிப் போடும் மாற்றங்களை உண்டு பண்ணவில்லை. சொல்லப் போனால் பாஜக 98இல் ஆட்சி அமைத்த போது கூட(இப்போது போல) தமது இந்துத்துவ கொள்கைகளை வெளிப்படையாக நடைமுறைப்படுத்த அவர்கள் துணியவில்லை. இது தொடர்ந்து கட்சிகள் மாறி மாறி அதிகாரத்துக்கு வருவதை சாத்தியமாக்கியது; தேசமும் அதன் மக்களும் கொள்கையளவில் தலைகீழாக்கம் செய்யப்படும் நிலையை ஏற்படுத்தவில்லை. ஆனால் 2014இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்த இடதுசாரிகள்-மய்யம்-வலதுசாரிகள் எனும் ஊசலாட்ட அணுகுமுறை அரசியலில் இருந்து முழுமையான வலதுசாரி அரசியலுக்கு நாட்டை ஆட்படுத்தியது. மற்றமையே சாத்தியப்படாத ஒரு தேர்தல் பிரச்சார சூழல், சித்தாந்த நிலை ஏற்பட்டது. ஏனென்றால் மிகத்தீவிரமான ஒரு மதவாத, தேசியவாத, வலதுசாரி கட்சி கொள்கை ரீதியாக தனக்கு நேரெதிர் முகாமில் இருக்கும் ஒரு கட்சியை மற்றமையாகக் கூட அங்கீகரிக்காது. (ஆனால் ஒப்பிடத்தக்க கொள்கை கொண்ட கட்சிகள் அதை அனுமதிக்கும்.)


 இப்போட்டியில் காங்கிரஸால் நிலைக்க முடியாததற்கு ஒரு பிரதான காரணம் அதற்கான வெளியை பாஜக ஒரு போதும் அளிக்காது என்பது தான் - பாஜக கொள்கை அளவில் காங்கிரஸுக்கு முழுக்க எதிர்முகாமை சேர்ந்தது என்பதால் மக்களையும் அது தொடர்ந்து மதவாத அரசியலில் ஈடுபடுத்தி மூளைச்சலவை செய்வதால், அது வாக்கரசியலில் வெற்றியையும் அவர்களுக்கு தருவதால், காங்கிரஸ் இனி தன்னைத்தானே மூளைச்சலவை செய்து கொண்டு தீவிர வலதுசாரி கட்சியாக மாறினாலே ஈடுகொடுக்க முடியும் எனும் நெருக்கடி ஏற்படுகிறது; நிதியளிக்கும் பெருமுதலாளிகளும் காங்கிரஸ் அவ்வாறு தன்னை மறு உருவாக்கம் பண்ணாதவரை அல்லது மக்களின் கொள்கை நிலைப்பாடு மாறியதாக வெளிப்படையாக தெரியாதவரையில் அக்கட்சிக்கு உதவ முன்வராது. ஆக காங்கிரஸ் ஒரே சமயம் கொள்கையளவிலும் நிதியளவிலும் மக்கள் ஆதரவளவிலும் தான் வெளியே தள்ளப்பட்டு விட்டதாக உணர்கிறது; அவநம்பிக்கை கொள்கிறது. இந்த அவநம்பிக்கை அறிவுஜீவிகள். அரசியல் ஆய்வாளர்கள், அரசு அதிகாரிகள் மத்தியிலும் பரவுகிறது. விளைவாக மக்களாட்சியின் தார்மீக வலிமையை நாம் இழந்து, சர்வாதிகாரத்தை நோக்கி சாய்கிறோம். இப்போதுள்ள நிலையில் நாம் ஒன்று தீவிர மதவாத அரசியலையோ அல்லது மயமான மதவாத, சாதிய, தேசியவாத அரசியலையோ மட்டுமே மத்தியில் ஆட்சியில் அமர வைக்க முடியும். இந்த இடப்பெயர்வானது கொடூரமான அல்லது இதமான சர்வாதிகாரிகளிடம் நம்மை நிரந்த அடிமையாக வைத்திருக்கும். தப்பிக்கவே முடியாது. மேலும், நமது நாட்டைப் பொறுத்தமட்டில், தீவிர வலதுசாரிகள், மதவாதிகள் மக்களாட்சிக்கு அனுகூலமானார்கள் அல்ல. போகப் போக அவர்கள் தேர்தலற்ற ஆட்சி முறையை கொண்டு வரவே விரும்புவார்கள்.


சுருக்கமாக, ஒப்பிடத்தக்க முற்போக்கு கொள்கை கொண்ட கட்சிகள் மற்றமையாக, எதிர்க்கட்சியாக இருப்பதே மக்களாட்சி ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு அவசியம். முற்போக்கினரிடம் இருந்து முழுமையாக மாறுபடும் தீவிர வலதுசாரி கட்சி அல்ல.


தமிழகம் இந்நிலையை நோக்கி எதிர்காலத்தில் பயணித்து வருகிறது என்பதே வருத்தத்துக்குரிய சேதி - அதைத் தடுக்க இரண்டு சாத்தியங்களே உள்ளன:

  1) மத்தியில் உள்ள கட்சி அடுத்தடுத்த பாராளுமன்ற தேர்தல்களில் எப்படியோ ஆட்சியை இழக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே என்பதால் அடுத்ததைப் பார்ப்போம்.

   2) இங்கே திமுகவுக்கு மற்றமையாக அதிமுக தொடர்ந்து இருப்பது. வருங்காலத்தில் அதிமுக அழிந்து, அடுத்த 20-30 ஆண்டுகளுக்கு பாஜக மத்தியில் நீடித்து, இங்கு திமுகவும் பலவீனப்பட்டு அதை பயன்படுத்தி பாஜக ஆட்சியைப் பிடித்தால் பத்தே ஆண்டுகளில் இன்று இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நிலை தமிழகத்துக்கும் ஏற்படும். பரந்துபட்ட மதவாத மனப்பான்மை, மூளைச்சலவை, பிளவுவாதம், இந்தியை, வைதீகத்தை மையமிட்ட தேசியவாதம் போன்றவை மக்கள் மனத்தில் ஆழமாக இறங்கும். அவ்வளவு சீக்கிரம் தமிழகம் மாறி விடுமா எனக் கேட்டால் நிச்சயமாக மாற முடியும் என்றே சொல்வேன். ஏனென்றால் பாஜகவின் சித்தாந்தம் மக்களின் பண்பாட்டில் ஒன்று கலந்த பிறகு அதற்கு மற்றமையாக ஒரு திராவிட கட்சி இயங்குவது அசாத்தியம். மத அளவில் தன்னை உருமாற்றிக் கொண்ட ஒரு மொழிவழி தேசியக் கட்சி அல்லது மய்யமான வலதுசாரி கட்சி  - நா.த.க, ம.நீ.ம போல - தோன்றி பாஜகவுக்கு மற்றமையாக உட்கார முடியுமே ஒழிய திமுக, அதிமுகவால் முடியாது. 


முத்தாய்ப்பாக, ஸ்டாலினுக்குப் பின்னும் திமுக இருக்க உதயநிதி அல்ல அதிமுகவே அவசியம். 


இதையே கலைஞர் ஒருமுறை தன் உதவியாளரிடம் சொல்லியதாக செந்தில்வேல் தன் யுடியூப் சேனலில் சொல்லிக் கேட்டேன் - அதாவது “எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்தது திமுகவுக்கு நல்லது, அல்லாவிடில் நாம் தொடர்ந்து இங்கு மாநில கட்சி vs தேசிய கட்சி எனும் இருமைக்குள்ளே மாடிக் கொண்டு இருப்போம், அது கட்சியின், மாநிலத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல” என்று. இது உண்மையென்றால், கலைஞர் ஒரு தீர்க்கதரிசி தான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...