முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்ணன்


முதலில் எனக்குப் பிடித்த விசயங்கள்:


1) அந்த பரந்துபட்ட திரைச்சட்டகம் - அது ஒரு ஐரோப்பிய செவ்வியல் ஓவியம் போல இருக்கிறது. நிறைய மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள், மீன் என. அவ்வளவு அழகியல் பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்ட கிராமத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. அதுவும் பிற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு இணையாக கொடுக்கப்படும் இடம், இது பாரதிராஜாவின் கிராமிய படங்களில் ஆடுமாடுகள் தோளில் போட்டுக்கொள்ளத்தாக்க உடைமைகளாக வருவதில் இருந்து முழுக்க வேறானது. இது வேறொரு கருத்தியல்.


2) கழுதை, குதிரை, வாள், பருந்து போன்ற உருவகங்களை உணர்ச்சிகரமாக பயன்படுத்தி இருப்பது. இது எனக்கு எண்பதுகளின் புரட்சிகர படங்களை நினைவுபடுத்தியது. இதற்கு முந்தின படங்களிலும் இத்தகைய பண்பு உண்டு. ஆனால் நமது சமகால auteur இயக்குநர்கள் சற்று அந்நியமாக, சிந்திக்க வைக்கும் நோக்கில் உருவகங்களை பயன்படுத்துவார்கள். ஆனால் மாரி இதை செய்வதில்லை என்பதை பாராட்டத்தக்கது. மேலும் உருவகங்கள் துருத்தி நிற்காமல் கதையோட்டத்தின் பகுதியாக உள்ளன. படத்தொகுப்பையும் பாராட்டலாம்.


3) நாட்டார் கலைகளை சரளமாக பயன்படுத்தி இக்கதையை சற்றே மாய எதார்த்த பாணியில் காட்சிப்படுத்தி இருப்பது. கர்ணனின் தங்கை ஒரு நாட்டார் தெய்வமாக படம் நெடுக வருவது வித்தியாசமாக அழகாக இருந்தது. 


4) மேற்சொன்ன நாட்டார் கலைகள் ஊடுபாவும் போக்கு இப்படத்தில் வன்முறையை அழகியலுடன் ரசிக்கத்தக்க வகையில் காட்ட மாரிக்கு உதவுகிறது. பழிவாங்கல் என்பதே ஒரு நாட்டார் சடங்காக மாறுகிறது. அதற்கு முன்கூறலாக அந்த ஆரம்ப காட்சியில் கர்ணன் மீனை பறந்து வெட்டுவது அமைந்திருக்கிறது. (என்ன அந்த காட்சியில் காற்றில் தனுஷ் அடிக்கிற பல்டியை தவிர்த்திருக்கலாம்.) குதிரை, வாள் போன்ற உருவகங்களும் அப்படியே இதற்கு உதவுகின்றன. கர்ணனை ஒரு முழுமையான யதார்த்த கதையாக பார்க்காமல் இருப்பது இதன் ரசனைக்கு உதவும். எனக்கு இதிலுள்ள சண்டைகாட்சி பகுதிகள் ஏனோ Desparado படத்தை நினைவுபடுத்தியது. அப்படத்தில் போல வன்முறையில் சித்தரிப்பதில் ஒருவித சிலாக்கியம் இதிலும் உள்ளது. ஆனால் மிகை-புனைவாக அன்றி எதார்த்தமாக பண்ணியிருக்கிறார்கள்.


5) கொடியங்குளம் வன்முறை கால் நூற்றாண்டுக்குப் பின்னரே இங்கே படமாகிறது என்பதே நமது படங்களின் அரசியலின்மைக்கு சான்று. மாரியின் பங்களிப்பு அவ்வியசத்தில் பாராட்டத்தக்கது. 


6) இப்படத்தில் கர்ணனுக்கும் ஏமனுக்குமான காட்சிகள் ஒரு bromance போன்றே உள்ளது. கிளைமேக்ஸிலும் நாயகனுக்கு ஒரு உணர்ச்சிகர தூண்டுதலை, உந்தித்தள்ளலை அளிப்பது தாய் அவமானப்படுத்தப்படுவதோ காதலி கடத்தப்படுவதோ அல்ல. காலங்காலமாக நம் படங்களில் அப்படித்தான் வரும். ஆனால் “கர்ணனிலோ” தாத்தா நெருப்பில் குளிப்பதே அந்த emotional pushஐ அளிக்கிறது, கர்ணனுக்கும் நமக்கும். அதே போல தங்கையின் நினைவைத் தூண்டும் தாத்தாவின் கனவு, காவல் நிலையத்தில் நின்று துணிச்சலாக பேசி அடிவாங்கி அந்த காயங்களால் காலமாகும் வயதான, இளைஞர்களான ஆண்கள், கர்ணனின் காலைப் பற்றி அவனை ஊரை விட்டு போகக் கேட்கும் பெரியவர்கள், முதலில் காவலர்களை நோக்கி கல்லை வீசி எறியும் சிறுவன் என முழுக்க முழுக்க இது ஆண்களின் உணர்ச்சித் தளமே. நீண்ட காலமாக பெண்களை மன எழுச்சிக்கான பாத்திரங்களாக இவர்கள் காட்டிக் காட்டி அதைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பெண்களுக்குமே அலுத்திருக்கும். இப்படத்திலும் ஆரம்பத்தில் ஒரு இளம்பெண்ணின் உருவத்தை ஆபாசமாக ஒரு மேல்சாதிக்காரர் வரையும் காட்சி வருகிறது. ஆனால் அக்காட்சி முடியும் போது அடிவாங்கி அவமானப்படுவது அவளுடைய அப்பாவே.  


7.  சந்தோஷ் நாராயணனின் அபாரமான இசை.


இனி குறைகள்:


8. கொடியங்குளம் இன அழித்தொழிப்பு முயற்சி இப்படத்தில் வருவது போல வெறுமனே ஒரு உயர்சாதி போலீஸ் அதிகாரியின் வெறியினால், அகங்காரத்தால் நிகழ்ந்தது அல்ல. அதன் பின்னால் சசிகலாவின் சாதி வெறியும், அதிகார குவிப்பை உறுதிப்படுத்தும் பதற்றமும் இருந்தது. அவர் அனுப்பிய இனவெறி விலங்குகளான சில போலீஸ் அதிகாரிகள் இருந்தார்கள். அவர்களுடன் தாக்குதல் நடந்த நாள் கூடவே களமிறங்கிய தேவர் சாதி அடியாட்கள் இருந்தார்கள். அம்மக்களின் கௌவரத்தை அழிக்க மட்டுமல்ல, அவர்களுடைய பணத்தை, நகைகளை கொள்ளையடிப்பது அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர்கள் அன்று கிராமத்தை விட்டகன்ற போது வீட்டு வாயில்களில் ஊர் தலித்துகளின் கைகால்கள் வெட்டப்பட்டு சிதறிக்கிடந்தன. அவர்கள் அன்று திட்டமிட்டு கிணறுகளில் நஞ்சைக் கலந்தார்கள். தலித் பெண்களை பலாத்காரம் செய்தார்கள். இதையெல்லாம் ஒப்பிடும் போது மாரி இப்படத்தில் காவலர்கள் + தேவர் சாதி அடியாட்களை நல்லவர்களாகவே காட்டி இருக்கிறார். உண்மையில், அவர்கள் வெறும் லத்தி சார்ஜ் மட்டும் செய்வதற்காக, சிலரை கைது செய்வதற்காக வரவில்லை. அவர்கள் கொல்ல, கொள்ளையடிக்க, பெண்களை பலாத்கார செய்ய வந்தார்கள். உடம்பை முண்டமாக்க வந்தார்கள். நிஜக் காவலர்களின் தீமை இப்படத்தில் முழுக்க காட்டப்படவில்லை என்பது மட்டுமல்ல, கிளைமேக்ஸ் வன்முறை நிகழும் முன்பு உயர்சாதி தலைவர் தனக்கு இதில் உடன்பாடில்லை எனச் சொல்லி நகர்ந்து விடுகிறார். இதுவும் உண்மையில்லை. அதிமுக, கொடியங்குளத்தை ஒட்டிய ஊர்களில் வசிக்கும் தேவர்கள், காவல் துறை இம்மூன்று தரப்பினரையும் ரொம்ப சீண்டவோ விமர்சிக்கவோ வேண்டாம் எனும் அழுத்தம் மாரிக்கு இருந்திருக்கலாம். வேறு யாராவது இந்த உண்மைகளை முழுமையாக அம்பலப்படுத்தி மற்றொரு படம் எடுக்க வேண்டும். அப்போதே பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு நீதி கிடைக்கும். (அதோடு இந்த கொடுங்குற்றத்துக்கு காரணமாக இருந்த அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகளை சிறையில் தள்ளும் காலமும் ஒருநாள் வர வேண்டும்.)

9. என்னதான் காட்சிமொழி சிறப்பாக இருந்தாலும், உணர்வுரீதியாக இப்படம் திருப்தி அளிக்கவில்லை. காரணம் இது ஒரு தனிமனிதனின் கதையா இல்லை ஊரின் கதையா எனும் குழப்பம் இயக்குனருக்கு இருந்திருக்கிறது. இதை ஓரளவுக்கு சரி செய்யவே அவர் துவக்கத்தில் சாலையில் கிடந்து சாகும் சிறுமியை கொண்டு வந்து அவளுடைய சாவை கர்ணனுடன் தொடர்பு படுத்துகிறார். ஆனால் கர்ணனின் தேவை தான் என்ன என்பது தெளிவாக இல்லை. அவன் அதை அடைகிறானா என்பதும் தான். அவன் தனக்கு நேரும் பிரச்சனைகளுக்கு விடை தேடுகிறான், மோதுகிறான், அடிபடுகிறான், இறுதியில் பழிவாங்குகிறான், மீண்டு வருகிறான். இந்த தொடர் செயல்களில் அவனுடைய தனிப்பட்ட முயற்சிகள், திட்டங்கள், தீர்மானங்கள் ஒன்றுமில்லை என்பதை கவனிக்கலாம். இந்த போதாமையை உணர்ந்தோ ஏனோ இயக்குநர் நிறைய உணர்ச்சிகரமான காட்சிகளை அங்கங்கே வைக்கிறார். பொதுவாக இப்படியான ஊர் மக்களுக்கு நீதி கோரும் கதைகளில் ஊர்ப்பிரச்சனை ஒரு பின்னணியாக மட்டும் வரும். அதனுள் ஒரு தனிமனிதன், அவன் சம்மந்தட்ட சிலர், அவர்களுடைய ஒரு பிரச்சனை (அது ஊர்ப்பிரச்சனையுடன் மறைமுகமாக சம்மந்தப்பட்டிருக்கும்), அவன் அதை எப்படி சரி செய்து தீர்வு காண்கிறான் என இருக்கும் (“அசுரன்”, “காலா”, ஷோபா சக்தியின் “தீபன்” ). அப்படி எடுக்கப்படும் போது அந்த பாத்திரத்துடன் மனம் ஒன்றி கதையை உணர்ச்சிகரமாகத் தொடர வசதியாக இருக்கும். ஏனென்றால் திரைக்கதையானது அடிப்படையில் சிறுகதையின் நீட்டிக்கப்பட்ட வடிவம். அதில் ஊரின் கதைகளை சொல்வது கடினம். மாரி அவ்விசயத்தில் தான் கோட்டை விட்டிருக்கிறார்.

10. தனுஷுக்காக வைக்கப்பட்ட ஹீரோயிசக் காட்சிகள் எடுபடவில்லை, கதையுடன் பொருந்தவில்லை.

11. நடிகர்களின் தேர்வு - ரஜீஷா விஜயன், கௌரி கிஷன் ஆகியோரின் தோற்றம் இப்படத்தில் பொருந்தவில்லை. ஏதோ கொடியங்குளத்துக்கு சுற்றுலா வந்தவர்களைப் போல இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்களை இவர்களிடத்தில் தேர்வு செய்திருக்கலாம். அல்லது பாலுமகேந்திரா போல கறுப்பழகிகளை கொண்டு வந்திருக்கலாம். அதே போல, யோகி பாபு, ஷண்முகராஜா போன்றோரின் வேற்று மாவட்ட தமிழ் உறுத்தலாக இருக்கிறது. இவர்களுக்கு இன்னும் பயிற்சி அளித்து நெல்லை மொழியை ஒழுங்காக பேச வைத்திருக்கலாம். ஒரு நல்ல படத்தில் இத்தகையோரைப் பார்க்கும் போது பழைய தோனி அணியில் சீனியாரிட்டிக்கும், நட்சத்திர மதிப்புக்குமாக வயசாளிகளை தூக்கி சுமந்தது நினைவு வருகிறது. ஒரு புதிய களம், கதை, பிரச்சனை, அழகியல் என வரும் படத்தில் துணைப்பாத்திரங்களையும் புதிதாக எடுக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.