நாம் ஒரு மோசமான தலைவரை பழித்து விட்டு அவருக்கு வாக்களித்த மக்களை அப்பாவிகளாக காண முடியுமா? நீங்கள் சமைத்த சாப்பாடு கேவலமாக இருக்கிறது எனில் சாப்பாட்டை மட்டும் பழிப்பதில் அர்த்தமுண்டா? சமைத்தவர் அல்லவா பொறுப்பேற்க வேண்டும். அப்படி சமைக்க காரணமாக இருந்த சூழலை அல்லவா அகற்ற வேண்டும்.
இன்று தேசம் உள்ள நிலைக்கு இந்திய மக்களின் மதவெறியும் அதன் காரணமாக அவர்கள் இரு தேர்தல்களில் பாஜகவை ஆதரித்தது முக்கிய காரணம். இந்த மதவெறி மட்டுப்படாவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளும் பாஜக ஆண்டு இந்நாட்டை சுடுகாடாக்கும்!
ஆனால் நாம் இந்த படுபாதக நிலைக்கு வாக்காளர்களுக்கு உள்ள பங்கைப் பற்றி பேசாமல் தொடர்ந்து "மோடி ஏமாற்றி விட்டார்" என புலம்பிக் கொண்டிருப்போம். ஏனென்றால் மக்களாட்சி அமைப்பின் முக்கியமான பலவீனம் ஒன்றைப் பேச நாம் தொடர்ந்து தயங்கி வருகிறோம் - அது தேசியவாதமும், மதவாதமும் எப்படி மக்களாட்சியின் சாவுமணிகள் என்பது.
எந்த மக்களாட்சியிலும் இந்த இரண்டுக்கும் தடையில்லை; ஏனென்றால் அரசியல் தலைவர்களுக்கு மக்களை திசைதிருப்பி சுரண்ட இவை தேவையாக உள்ளன. மோசமான குரூரமான தலைவர்கள் இந்த இரண்டையும் பயன்படுத்தி சர்வாதிகாரிகள் ஆகிறார்கள்; தன்னலத்துக்காக ராணுவத்தை ஏவி அண்டை நாடுகளை உடைக்கிறார்கள், உள்நாட்டுப் போரை ஏற்படுத்துகிறார்கள், அந்த போர்ச்சூழலால் தேசியவாத அலையைத் தூண்டி தேர்தலில் வென்று வலிமையான தலைவர்கள் என பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். மேற்கில் இதற்கு முசோலினி, ஹிட்லரில் இருந்து டிரம்ப் வரை ஏராளமான உதாரணங்கள் உண்டு. இதை வலதுசாரி அரசியலின் எழுச்சி என நாம் கடந்து விட முடியாது. ஏனென்றால் அது உண்மை அல்ல. மேற்கில் மதவாதமும் இனவாதமும் என்றால் இந்தியாவில் மதவாதமும் சாதிய அடிமை மனநிலையும் மக்களாட்சியின் சாவுமணிகளாக உள்ளன. உலகம் முழுக்க பெருமுதலாளிகள் மக்களை கேள்வியெழுப்பும் விழைவற்ற அடிமைகளாக தக்க வைக்க இந்த இரண்டையும் ஊடகங்கள், மத நிறுவனங்கள், ஆயுத உற்பத்தி, கட்சிக்கான நிதியுதவி மூலம் ஊக்குவிக்கின்றன.
இந்த விசயத்தில் நமது ஜீக்குப் பின்னால் வரலாற்றில் இந்திரா காந்தியும் அவரது மகன் ராஜீவ் காந்தியும் இருக்கிறார்கள். இருவரையும் நான் ஜீயை விட கொடூரமான தலைவர்கள் என்பேன். அவர்களை ஆதரித்த மக்களுக்கு அன்றிருந்த அதே தேசியவாத வெறி, சர்வாதிகார ஆதரவு மனநிலை தான் இன்றும் ஜீயை அதிகாரத்தில் தக்க வைக்கிறது. அது ஒரு கொடுவாள், அதை யாரும் எடுத்து பயன்படுத்தலாம் என நமது அரசியலமைப்பு - மறைமுகமாக, நைசாக - அனுமதிக்கிறது. அதனால் தான் மதச்சின்னங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்துவதை, மதத்தின் பெயரால் பிளவுவாதத்தில் ஈடுபடுவதை தடை செய்ய காந்தி, நேரு என யாருமே பெரிய முயற்சிகள் எடுக்கவில்லை. தாகூரைப் போன்ற சிலர் மட்டுமே தேசியவாதத்தின் ஆபத்தை அறைகூவி வந்தார்கள். ஆனால் அன்றைய காந்திய ஆதரவு, இந்து மதவெறியின் அலைகளில் இந்த எச்சரிக்கைகள் அடித்து செல்லப்பட்டன.
யோசித்துப் பாருங்கள் - இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு ஏற்பட்ட மிகப்பெரிய கலவரங்கள் மதத்தின் பெயரால் ஜின்னாவாலும் இந்து மகாசபை தலைவர்களாலும், ஆங்கிலேய அதிகாரிகளின் துணையுடன், நடத்தப்பட்டவை. விளைவாக பாகிஸ்தான் பிரிவினை, கொடூரமான படுகொலைகள் நிகழ்ந்தன. கொஞ்சமாவது பொறுப்புணர்வு இருந்திருந்தால் அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் "மதத்தையும் அரசியலையும் தனித்தனியாக பாவிக்க வேண்டும், ஒரு அரசியல் மேடையில் ஒரு மதத்தலைவர் வந்தாலோ, அவர் ஒரு கட்சியை ஆதரித்துப் பேசி அதை அக்கட்சி கண்டிக்காவிடிலோ, அக்கட்சி மதச்சின்னங்களை எந்த ரீதியிலாவது பயன்படுத்தினாலோ அது நிரந்தரமாக தடை செய்யப்படும்" என ஒரு சட்டத்தை இயற்றி இருக்க வேண்டும். ஒரு மதசார்பற்ற நாட்டின் அரசியல் அப்படித் தானே இருக்க வேண்டும்?
ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை; ஏனென்றால் India after Gandhi நூலில் ராமசந்திர குஹா சொல்வதைப் போல அன்றைய காங்கிரஸுக்குள் ஏகப்பட்ட சங்கிகள் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டனர். அதனாலே மதவாதத்தின் விளைவாக காந்தி படுகொலையான பின்னரும் அதை ஒரு பெரிய ஆபத்தாக காங்கிரஸ் கருதாமல், அப்படுகொலைக்கு தார்மீக ஆதரவும் உதவியும் வழங்கிய ஆர்.எஸ்.எஸ்ஸை தற்காலிகமாக தடை செய்தது. இந்த துரோகம், பாசாங்கு, தவறு பின்னர் இந்திராவின் வடிவில் இந்தியாவையும் ராஜீவின் வடிவில் ஈழத்தமிழர்களையும் பாம்பாக மாறிக் கொத்தியது. அதே தவறு தான் 2014இல் காங்கிரஸின் முழுமையான அழிவுக்கும் இந்தியா ஒரு சர்வாதிகார அடிமை நாடாக மாறவும், இப்போது கொரோனா இரண்டாம் அலையின் போது நாட்டை ஒரு சுடுகாடாக்கி இருக்கிறது.
மக்களாட்சி அமைப்பை காப்பாற்ற ஒரே வழிதான் - மோடியை கண்டிப்பது, விமர்சிப்பது நோய்க்குறியை சாடுவதற்கு சமம். அது வீண். நோய் என்பது மதவாதமும் அதனுடன் கைகோர்க்கும் தேசியவாதமுமே. சட்டரீதியாக அதை தடை செய்து ஆர்.எஸ்.எஸ், பாஜகவை முடிவுக்கு கொண்டு வருவது மட்டுமே ஒரே தீர்வு.
மோடி வெறும் பொம்மை மட்டுமே. அவருக்குப் பின்னர் ஆயிரமாயிரம் மோடிகள் தோன்றுவார்கள். நீண்ட காலமாய் இடதுசாரிகள் ஆண்ட, கல்வி அறிவுமிக்க மேற்கு வங்கம் இப்போது இந்துத்துவ வெறியால் ஆட்பட்டுள்ளது, அங்கு பாஜக சொற்ப காலத்தில் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது ஒரு சான்று. இது இனி நாடு முழுக்க நிகழும். தமிழர்களாலும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என உறுதியாக சொல்வேன்.
போதை மருந்தைக் கொடுத்து ஒரு இளைஞனை அடிமையாக்குவதைப் போன்றது மதவாதத்தைக் கொண்டு தேர்தல் அரசியல் பண்ணுவது. அது ஒரு அநீதியான, எளிமையான தந்திரம். அதை மக்களே முறியடிப்பார்கள் என எதிர்பார்ப்பது போதை அடிமை ஒருவர் தானாக மீள்வார், அதுவரை அவர் போதை மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம் என சொல்வதைப் போன்றது. அப்படி மக்களே ஒருநாள் பாஜகவை முறியடித்தாலும் அவர்கள் காங்கிரஸுக்கு உள்ளாகவே ஒரு சர்வாதிகாரியை மீண்டும் ஒருநாள் மேலெடுப்பார்கள். அல்லது பாஜகவை வேறொரு புதுத்தலைமையுடன் ஆதரிப்பார்கள். நம் வரலாறு இதைத் தான் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. ஏதாவது ஒரு மக்கள் தலைமை விழிப்புணர்வு பெற்று போராடி இதை ஒரேயடியாக ஒழித்துக் கட்டினால் உண்டு.
மக்களாட்சியில் சர்வாதிகார கட்சி மட்டுமல்ல அக்கட்சியை உள்ளூர விரும்பும் மக்களும் கெட்டவர்கள் தாம்; சிறுபான்மையினரை ஒடுக்குகிறது, தம் மதத்தை முன்னெடுக்கிறது என்பதற்காக ஒரு குரூர மகிழ்ச்சியுடன் ஒரு மதவாத தேசியத் தலைமைக்கு வாக்களிக்கும் மக்களும் கெட்டவர்கள் தாம். ஏனென்றால் அவர்கள் தமக்காக அல்ல இல்லாத ஒரு எதிரிக்காக, ஒரு கற்பனையான மற்றமை மீது அதிகாரம் செலுத்த வாக்களிக்கிறார்கள். அவர்களும் நிச்சயமாக கொடூரமானவர்களே, மக்களாட்சிக்கு விரோதமானவர்களே. இன்றைய கொரோனா சுடுகாடுகளில் எரியும் நெருப்பை மூட்டியவர்கள் அவர்களும் தாம். மக்களாட்சி மீது தாம் மூட்டிய தீயில் இன்று தாமே எரிய யாரை பழிப்பது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
வாக்காளர்களுக்குள் உறைந்து இருக்கும் இந்த தீமையின் கரு வளர்ந்து தலையெடுக்கும் சூழல் உருவாக ஒரு தேசம் அனுமதிக்கக் கூடாது! அதை எப்படி செய்வது என மக்களாட்சியின் ஆதரவாளர்கள் சிந்திக்க வேண்டும்.

Comments