Skip to main content

சுந்தர ராமசாமியின் ஆளுமை



எனக்கு நவீன கவிதை அறிமுகமானதே “பசுவய்யா கவிதைகள்” வழியாகத் தான். அப்போது எனக்கு 13 வயதுக்குள் இருக்கும். முஜீப் ரகுமானின் தம்பியான சாதிக் (அவர் நினைவாகத் தான் “ரசிகன்” நாவலின் மையப்பாத்திரத்துக்கு அப்பெயர் அளித்தேன்) எனக்கு நவீன இலக்கிய நூல்களை எடுத்து வருவார். அப்படித்தான் வைரமுத்து, மு.மேத்தா, பாரதியார், பாரதிதாசன் என படித்துக் கொண்டிருந்த என் கைகளுக்கு “பசுவய்யா” வந்து சேர்ந்தார். சு.ராவின் சமூக விமர்சனமும் இலட்சியவாதமும் கச்சிதத்தை கோரும் மொழிநடையும் ஒரு திகைப்பை ஏற்படுத்தின. ஏனென்றால் அவருடைய சமூக விமர்சனமானது நேரடியாக அல்லாமல் நாம் நவீன இலக்கியத்தில் பிரதானமாக கருதுகிற நகைமுரண் வழியாகத் தான் நுட்பமாக வெளிப்படும். வானம்பாடிகளைப் போல நேரடியாக உணர்ச்சிகரமாக சாட மாட்டார். ஆனால் உணர்வுரீதியிலான விடுபடல் கவிதையில் அவருடைய ஒரு பலவீனமாக இருக்கும். (அந்த விடுபடலை பின்னர் ஜெ.மோ மிதமிஞ்சிய பிரக்ஞையாக அடையாளப்படுத்தினார்; எனக்கு அதுவே சு.ராவின் அணுகுமுறை, அது அவருடைய திட்டமிட்ட கொள்கை அல்ல எனத் தோன்றுகிறது.) ஒரு நுட்பமான பகடி - “உபயம்”, “நடுநிசி நாய்கள்” - அவருடைய கவிதைகளைத் திரும்ப படிக்க, திகைக்க வைத்தன. சில கவிதைகளின் பின்னணி புரியாத போது நான் சாதிக்கிடம் கேட்பேன். அவர் சிறிய குறிப்புகளை வழங்கி நீயாகவே புரிந்து கொள் என விட்டு விடுவார். சாதிக் வெளிநாடு சென்ற பிறகு, 15-16 வயதிருக்கும் போது, கலை இலக்கிய பெருமன்ற நட்புகள் வழி எனக்கு பரவலாக நவீன கவிதைகளை படிக்க வாய்ப்பமைந்தது. அப்போது தான் “புளியமரத்தின் கதை”, “ஜெ.ஜெ சில குறிப்புகள்” படித்தேன். ‘துரதிஷ்டவசமாக’ ரஷ்ய இலக்கியமும் - குறிப்பாக தல்ஸ்தாயின் நாவல்கள் - அப்போது என் வாசிப்புக்கு வந்தது. பின்நவீன லத்தீன் அமெரிக்க மாய எதார்த்த இலக்கியம், தமிழின் பின்நவீன சிறுகதைகள், நாவல்களும் என் வாசிப்புப் பட்டியலில் சேர்ந்து கொண்டன. இப்படி ஒரே சமயத்தில் நான் கலந்துகட்டி படித்ததால் வெகுஜன இலக்கியம், இடைநிலை இலக்கியம், நவீன இலக்கியம் என படிப்படியாக வாசிப்பை கொண்டு செல்லாததால், என் இலக்கிய ரசனையானது சற்று வித்தியாசமாக இருந்தது. 13 வயதில் எதைப் படித்தாலும் வாய் பிளந்து ரசித்த நான் இப்போது, உ.தா., “ஜெ.ஜெ சில குறிப்புகள்” நன்றாக உள்ளது, ஆனால் ஆல்பர்ட் காமு இதை விட நன்றாக எழுதுகிறார் அல்லவா? தல்ஸ்தாய் பக்கத்தில் சு.ராவால் வர முடியுமா? மார்க்வெஸ் என்னவொரு அற்புத உலகை கட்டமைக்கிறார் அல்லவா? இவருடைய உலகம் ஏன் இவ்வளவு குறுகலான உள்ளது? இப்படி பல கேள்விகள் எழுந்தன.


 இயல்பாகவே, தமிழின் இயல்புவாத, எதார்த்தவாத படைப்பாளிகள் மீது, தத்துவ சாரமற்ற நேரடியான சித்தரிப்புகள் மீது, அப்போது எனக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. அகவொளி, உள்ளுணர்வு மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. எழுத்தாளன் தன் அனுபவத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் எனும் கருத்து தவறென பட்டது; எழுத்தாளன் மொழிக்குள் இயங்கும் பிரகிருதி, அனுபவமும் அதற்கு உட்பட்டதே எனத் தோன்றியது. அதாவது, சு.ராவின் கட்டுரைகளைப் படிக்கும் முன்பே அவருடைய சித்தாந்தம், நம்பிக்கைகளுக்கு எதிர்நிலையில் நான் வந்து நின்றிருந்தேன். இதனோடு நான் அன்றாடம் சந்திக்கும் மார்க்ஸிய, தலித்திய சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் ஒரு பக்கமும், அன்று என் வீட்டருகே குடியிருந்த ஜெயமோகன் இன்னொரு பக்கமும் சு.ரா மீது அடுக்கடுக்காய் விமர்சனங்கள் வைத்தபடி இருந்தனர். இந்த எதிர்நிலை சிந்தனைகளின் ஊடாகவே நான் அப்போது சு.ராவின் இலக்கிய கட்டுரைகளை படிக்கத் தொடங்கினேன். இயல்பாகவே அவரது சிந்தனைகளின் போதாமைகளே பெரிதாகப் பட்டன. ஆனாலும் அந்த நேரத்தில் நான் செய்த ஒரு நல்ல விசயம் சு.ராவை நேரில் சந்திக்கையில் மதிப்பீடுகள் இல்லாமல் அவரை எதிர்கொண்டேன். அவருக்கு எதிரான விமர்சனங்களை அறிந்திருந்தேன், ஆனால் அவை என் சிந்தனைகளாக முழுமையாக மாறியிருக்கவில்லை. அந்த பதிபருவத்துக்கே உரிய எல்லா திசைகளிலும் ஒரே சமயம் கால் பாவுகிற குழப்ப புகைமூட்டத்தில் இருந்தேன். 


பதினேழு வயதில் தான் அவரை முதலில் சந்தித்தேன். அப்போது நான் கல்லூரியில் ஆங்கில இலக்கிய படிப்பில் சேர்ந்திருந்தேன். என் படிப்பு வழியாக ஆங்கில நவீன இலக்கியம் அறிமுகமானது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்கள், புனைவாசிரியர்களின் ஸ்டைல், நம்பிக்கைகள் வழி சு.ராவை திரும்ப வடிப்பது ஒரு திறப்பை அளித்தது. என் கல்லூரியில் இருந்து சிறிது தூரத்தில் சு.ராவின் வீடு இருந்தது. ஒன்று போன் செய்து கேட்டுக் கொண்டு அவரைப் பார்க்க செல்லலாம். சும்மா கேட்காமல் கூட போகலாம். அவரிடம் என்னை ஒரு கல்லூரி மாணவனாக அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்போது அவரிடம் எனக்குப் பிடித்த சில பண்புகள் இருந்தன. சு.ராவின் பிறந்த நாளான இன்று அவற்றைப் பற்றியே எழுதப் போகிறேன்:


உரையாடலைப் பொறுத்து அவர் ஜெ.மோவுக்கு நேர் எதிர் திசையில் இருந்தார். ஜெ.மோவிடம் ஒரு வரியை நாம் சொன்னால் அவர் அதற்கு ஒரு மணிநேரம் பதில் சொல்லுவார். அதில் கற்க நிறைய இருந்ததால் நான் அறிவுப்பசியுடன் அவரது கருத்துக்களை, அவதானிப்புகளை உள்வாங்கிக் கொண்டேன். ஆனால் சு.ரா போதனைகள் செய்ய மாட்டார், தன் கருத்துக்களை சுலபத்தில் சொல்ல மாட்டார். அதைத் தனக்கு மிகவும் அணுக்கமான நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள தனியே வைத்திருப்பார். என்னைப் போன்ற இளைஞர்களை அவர் பேச விடுவார். நான் அவரைப் பார்க்க ஐந்து மணிக்கு சென்றால் ஆறு மணி வரையிலான ஒரு மணிநேரத்தில் முக்கால் மணிநேரமும் நானே பேசியிருப்பேன். அவர் நடுநடுவே மிக மென்மையாக உறுதியாக தன் அபிப்ராயங்களை வைப்பார். உணர்ச்சிவயப்படாமல் கேள்விகளை கேட்பார். ஒரு போதும் என்னை மதிப்பிடுவதாக காட்டிக் கொள்ள மாட்டார். அப்படி ஒருவரை நான் அதற்கு முன்பும் பின்னரும் வாழ்க்கையில் கண்டதில்லை. யோசித்துப் பாருங்கள், அவருக்கு என்னிடம் இருந்து கற்க ஒன்றுமில்லை, ஆனால் தன்னிடம் பேசுகிறவரை மதித்து கேட்க வேண்டும் என நம்பினார். நான் பின்னர் ஒரு கல்லூரி ஆசிரியனான பின்னர் இப்பண்பை வளர்த்துக் கொண்டேன். இன்று என்னைப் பார்க்க வருகிறவர்கள் பேசுவதை குறுக்கிடாமல் கவனித்து, சில நேரம், ரசித்துக் கேட்கிறேன். ஏனென்றால் அப்போதே அவர் நமக்கு நிகரானவர் ஆகிறார். அதன் பிறகு நம் மாற்றுப்பார்வையை வைக்கலாம், அதை அவர்கள் மீது திணிக்காமல் கண்ணியமாக பேசலாம். ஆனால் சு.ரா தன் மாற்றுக்கருத்துக்களை கூட நம்மிடம் சொல்ல மாட்டார். கருத்தைக் கேட்டால் மிகச்சுருக்கமாக சொல்லுவார், எனக்குத் தான் கருத்தறியும் பொறுமை இல்லையே, அதனால் அந்த அவகாசத்தையும் அன்று அவருக்கு வழங்கவில்லை. 


அனுபவத்தில் இருந்து மட்டுமே எழுத வேண்டும் என அவர் உறுதியாக நம்பினார். நான் அதை நேரடியாக எடுத்துக் கொண்டு அவருடைய சிறுகதைகள், நாவல்களில் எங்கெல்லாம் அவர் தன் கற்பனையைக் கொன்டு எழுதியிருந்தார் என நிரூபிக்க முயல்வேன். ஏகப்பட்ட கதைகளை என்னால் அப்படி அடையாளம் காண முடிந்தது. அவர் ஒரு சிறிய புன்னகையுடன் இவற்றையும் நான் கண்டு கேட்டே எழுதினேன் என்று சொல்லுவார். வெகுபின்னர், வாழ்வை நேரடியாக அவதானித்து அதை ஒருவர் தன் மொழியால் பெருக்கி, கற்பனையால் நிறமூட்டி எழுதலாம் எனக் கூறுகிறார் எனப் புரிந்து கொண்டேன். இன்று இது ஒரு சரியான பார்வை தான் என ஏற்கிறேன். இலக்கிய கோட்பாட்டு வரலாற்றை படிக்கையில் இது குறித்த ஒரு நெடிய விவாதம் மேற்கில் எழுந்து, அதன் அடிப்படையில் பல அணிகளாக விமர்சகர்கள் பிரிந்து முரண்பட்டு சில நூற்றாண்டுகளாக விவாதித்ததை அறிந்து கொண்டேன். இன்றைய புனைவெழுதுவது சம்மந்தமான நூல்களிலும் அனுபவத்தை சரிவிகிதமாக பயன்படுத்துவதை வலியுறுத்துகிறார்கள் - நீங்கள் ஒரு ஆணாக இருந்து ஒரு பெண்ணைப் பற்றி எழுதலாம், ஆனால் அதன் மைய உணர்ச்சி சார்ந்து ஒருவித அனுபவம் உங்களுக்கு வேண்டும். அப்போதே பிடிப்புடன் எழுத முடியும். Letters to a Young Novelist நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் லோசா இதை வலியுறுத்தும் போது எனக்கு சு.ரா தான் நினைவுக்கு வந்தார். 


ஒருமுறை நான் பஷீரின் நாவல்களை தளும்பத் தளும்ப புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தேன். “அப்படியா நினைக்கிறீங்க?” என ஒரு சிறிய உதட்டுச் சுழிப்புடன் சொன்னாரே ஒழிய தனது பஷீர் மீதான நிலைப்பாட்டை காட்டி விடக் கூடாது என கவனம் செலுத்தினார். அப்போது நான் எங்கள் பாடத்திட்டத்தை ஒட்டி உலகளவில் அதிகம் பேசப்படாத படைப்பாளிகளையும் படித்து விட்டு சு.ராவிடம் அவர்களை விவாதிப்பேன். அவர் “நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டதில்லையே” என்று நகர்ந்து விடுவார். அது அவருடைய ஈகோவைக் காயப்படுத்தாது; தன் வாசிப்பே மேலானது என காட்டிக் கொள்ளும் முனைப்பும் இராது.


சு.ராவிடம் உரையாடியுள்ள அல்லது அவரிடம் சில சொற்களைப் பகிர்ந்துள்ள நண்பர்கள் அவர் தமக்கு மரியாதை அளிக்கவில்லை எனும் கசப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் நான் அவரளவுக்கு கண்ணியமாக அனைவரையும் எதிர்கொள்ளுகிறவரை இதுவரைக் கண்டதில்லை. சொல்லப் போனால் என் அப்பா சு.ராவைப் போல இருந்திருக்கக் கூடாதா என நான் ஏங்கியிருக்கிறேன். அந்த விதத்தில் அவர் ஒரு லட்சிய மனிதர். 


அதே நேரத்தில் உணர்ச்சிகரமாக நம்மைக் கண்டதுமே அரவணைத்து கண்கள் மின்ன பவா செல்லத்துரை போல பேசக் கூடியவர் அல்ல அவர். பேசிய ஐந்தாவது நிமிடமே நம்மை சீடனாக ஏற்கக் கூடிய ஜெயமோகனும் அல்ல அவர். கலை இலக்கியப் பெருமன்ற நண்பர்களைப் போல ஒரு பதினைந்து வயது சிறுவனிடம் பேசினால் தம்மையும் பதினைந்து வயதினராக கருதி இறங்கி வந்து உரையாடக் கூடியவரும் அல்ல. அவர் நாம் மேற்கத்திய நாவல்களில் காணும் கனவானைப் போன்றவர் என சிலர் சொல்லியிருக்கிறார்கள்.  அது உண்மை தான், ஆனால் அந்த பாவனையை அவர் செயற்கையாக மேற்கொள்ளவில்லை; அது அவருடைய ஆளுமையின் ஒரு பகுதி. அது அவருடைய ஒரு இயல்பு.


அவர் ஒருமுறை கூட என்னுடைய எந்த கதை உங்களுக்குப் பிடிக்கும் எனக் கேட்டதில்லை. தன் எதிரில் உள்ளவர் தன்னைப் புகழ வேண்டும் என எதிர்பாராமல் பேசுகிற ஒரே எழுத்தாளன் அவர் தான் என்பேன். அப்படி அவர் எதிர்பார்த்து கேட்டிருந்தாலும் தப்பில்லை. ஆனால் தன்னை எழுத்தாளனாக அல்ல சகமனிதனாக முன்வைக்கவே பிரயத்தனம் கொள்வார். நீங்கள் ஒரு டீ மாஸ்டராக இருந்தாலும் பிரச்சனையில்லை, நீங்கள் சு.ராவின் வாசகனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவரிடம் போய் உங்களுக்குப் பிடித்த தெரிந்த விசயங்கள் பற்றி பேசலாம். கேட்டுக் கொண்டு அடுத்து உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி, குடும்பம், பொருளாதார நிலை பற்றி விசாரிப்பார். இது ஒரு நல்ல பண்பு - அவர் யாரையும் தீவிர இலக்கியம் நோக்கி மடைமாற்ற பிரயத்தனிக்க மாட்டார். நீங்க அத்திசையில் நீச்சலடிப்பதாகத் தெரிந்தால் இதையிதை படியுங்கள் எனச் சொல்வார். ஆனால் ஒரு போதும் தன் புத்தகத்தை எடுத்து நீட்டி ஒரு விற்பனை பிரதிநிதி போல நடந்து கொள்ள மாட்டார். அட, தன் குடும்ப பதிப்பகத்தின் காலச்சுவடு பிரதியைக் கூட நீட்ட மாட்டார். “நான் தமிழின் முன்னணி எழுத்தாளன் தெரியுமா” எனும் பிரகடனம் இருக்காது. நாமாகப் போய் அவரது கதைகளைப் பாராட்டினாலும் ஒரு சிறிய புன்னகையுடன் எடுத்துக் கொள்வார். புளகாங்கிதமடைந்து தோள்களைப் பற்றி அணைத்து “ஆங் இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன், கமான் கமான்” என அழுத்த மாட்டார். இந்த பண்பே அவரை தனித்துக் காட்டும்.


அவர் தான் உரையாடும் போது தன் சமூக, கலாச்சார அடையாளத்தை கழற்றி வைக்க முயல்வார். அங்கு இரு காதுகளாகவும் ஒரு குரலாகவும் மட்டுமே இருப்பார். தன்னில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள சதா முயல்வார். எழுத்திலும் ஒரு விதத்தில் அவர் இதையே முயன்றார். தன்னுடைய எழுத்தின் குரலைக் - அதைத் தன் மனசாட்சியாகக் கருதிக் - கொண்டு மட்டுமே பேசினார்.


மிதமிஞ்சி அன்பை, பாசத்தை, பரிவைக் காட்டுவது தடுமாற்றங்களுக்கு இட்டுச் செல்லும் என அவர் நினைத்திருக்கலாம்.


அவரிடம் நான் கவனித்த இன்னொரு விசித்திர குணாதசியம் ஒரு சாதாரண சந்திப்பைக் கூட மரியாதைபூர்வமாக அதிகாரபூர்வமாக மாற்றுவது. அவரைப் பார்க்க வீட்டுக்கு சென்றால் எதாவது வேலையில் இருப்பார். அவருடைய உதவியாளர் நம்மை சற்று நேரம் காத்திருக்க சொல்வார். தேநீர் வரும். பத்து நிமிடத்தில் இருந்து அரைமணிநேரம் கூட இருக்கலாம். ஆனால் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவார். சிறப்பாக ஆடையணிந்து, தலைசீவி ஒரு நேர்முகத் தேர்வுக்கு செல்பவரைப் போல வந்தமர்வார். நான் பார்த்த எழுத்தாளர்கள் எல்லாரும் கலைந்த தலையுடன், அதே அழுக்கு லுங்கியுடன் நம்மருகே வந்து உட்கார்ந்து “வாடே” என்று பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் சு.ரா எப்போதும் உரையாடலை ஒரு கண்ணியமான நிகழ்த்துகலையாகக் கண்டதால் அதற்கென இடம், காலம், ஆடை, தோற்றம் ஆகியவை முக்கியம் என நினைத்தார். எனக்கென ஒரு மணிநேரமோ ஒன்றரை மணிநேரமோ தீர்மானித்திருப்பார். அந்த நேரத்தை எனக்கு முழுதாகக் கொடுத்து விடுவார். ஒரு வினாடி கவனம் பிசகி எதையாவது யோசிக்கவோ வேறுவேலைகளில் மூழ்கவோ மாட்டார். ஒருநாள் நான் அவர் வீட்டில் சற்று அதிக நேரம் இருந்து விட்டேன். அவர் சரியாக எட்டு மணிக்கு சன் நியூஸ் பார்ப்பார் போல. அன்று எட்டு மணி ஆனதும் “வாங்க நியூஸ் பார்க்கலாம்” என்று சொல்லி பேச்சை அங்கேயே துண்டித்தது போல டிவியை இயக்கி செய்தியில் மூழ்கி விட்டார். அது முடிந்ததும் உரையாடலை தொடர்ந்தார். எனக்கு அன்று இது வேடிக்கையாக இருந்தது. இதுவே ஜெயமோகன் என்றால் நேரங்காலம் தெரியாமல், சுற்றி நில அதிர்வு வந்தாலும், தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார். அன்று என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாரும் அப்படித்தான்; எங்களுக்கு நேர ஒழுங்கு பொருட்டில்லை. ஆனால் சு.ரா ஒரு வேற்றுகிரக மனிதர்.


சு.ரா எனக்கும் தபால் அட்டை அனுப்பி இருக்கிறார். ஒரு நாளைக் குறித்து அன்று வந்து விடுங்கள் என்பார். என் அம்மா “உனக்கெல்லாம் யாருடா இது லெட்டர் போடுறாங்க?” என விசித்திரமாகப் பார்ப்பார். சு.ராவைப் பார்க்கப் போகுமுன் நான் அந்த தபால் அட்டையை பல நூறு முறை படித்து விடுவேன். போனால் ஒன்றும் பிரமாதமாக முக்கியமாக இருக்காது. வழக்கம் போல எதையாவது கேட்டு விட்டு அமைதியாக நான் பேசக் கேட்டுக் கொண்டிருப்பார். நான் ஒருமுறை என் கதையைக் கொடுத்தேன், அவர் கருத்தறிய. அது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்:


என் அப்போதைய எழுத்தாள நண்பர்கள், ஆசான்களிடம் ஒரு கதை, கவிதையைக் கொடுத்தால் தாம் நம்பும் கதைகள், கவிதைகள் என்னவென நீண்ட உரையாற்றுவார்கள். அவர்களுக்குப் பிடித்த படைப்புகளை படிக்கக் கோருவார்கள். அப்பாணியில் எழுதக் கேட்பார்கள். ஆனால் சு.ரா ரொம்ப எளிமையாக ஒரு கருத்து சொன்னார்: “நீங்கள் உணர்கிற ஒன்றை இக்கதையை நான் படிக்கையில் என்னால் உணர முடியவில்லை. அப்படி உணர்த்தும் படி நீங்கள் எழுத வேண்டும்.” நான் மாய எதார்த்த பாணியில் எழுதியதால் அவர் அதை விரும்ப வில்லை, அதன் பின்பு ஒரு அரசியல் உள்ளது என்றெல்லாம் அப்போது நான் நினைத்தாலும், சில பத்தாண்டுகளுக்குப் பின்பே அவர் சொன்னது ஒரு முக்கியமான விசயம் எனப் புரிந்தது - எந்த பாணியில் எழுதினாலும் ஒரு கதையின் நோக்கமானது நான் உணர்வதை - அப்படியே அல்லது நேர்மாறாக, தெரிந்தோ தெரியாமலோ - உங்களுக்கும் உணர்த்துவது தான். அதன் பின்பே நாம் அக்கதையின் சிந்தனைகள், நம்பிக்கைகளுடன் உடன்படுவது, மறுத்து வாதிடுவது நடக்கும். ஆனால் இதுதான் அடிப்படை. 


எழுத ஆரம்பித்த பிறகும் நான் திரும்பத் திரும்ப படித்த படைப்பாளி சு.ரா தான். அவருடைய பார்வையுடன் முரண்பட்டாலும், அவரிடம் துலங்குகிற ஒரு தனிச்சிறப்பு அவருடைய மறுக்க முடியாத நேர்மையே - தான் நம்புவதை மட்டுமே அவர் நேர்மையாக முன்வைக்கிறார், படித்ததை, கேட்டதை அல்ல. அதில் உள்நோக்கங்கள் இருக்காது. அவர் தனது சமகாலத்தவர் மீது வைத்த கராறான இலக்கிய மதிப்பீடுகளும் இப்படி தான் நினைப்பதை, நம்புவதை பொய்ப்பித்தலாட்டம் இல்லாமல் முன்வைக்க வேண்டும் எனும் பிடிவாதத்தில் இருந்து வருபவை தாம். அவருடைய மதிப்பீடுகளில் இந்த தொடர்ச்சியை நாம் காண முடியும். “ஜெ.ஜெ சில குறிப்புகள்”, “புளிய மரத்தின் கதை” போன்ற நாவல்கள் அவருடைய சிறுகதைகள் அளவுக்கு வலுவானவையோ சிக்கலானவையோ அல்ல. ஆனால் இந்நாவல்களிலும் பளிச்செனத் தெரிவது அவர் அரசியல்சரித்தன்மை அற்ற, பாசாங்குகள் இல்லாத கலாச்சார நம்பிக்கைகளே. அவற்றை நேரடியாக கவலையில்லாமல் முன்வைக்கிறார் எனும் பண்பே. “மனிதனுக்கு சொறிந்து கொடுக்காதே” என்பதே அவர் நிஜமாகவே நம்பினார். தனிப்பட்ட உரையாடல்களிலும் பின்பற்றினார். அந்த பண்பை அவர் தன் கவிதையில், புனைவில் ஒரு வசனத்தில் முன்வைக்கும் போது அது நம்மை வலுவாக தாக்குகிறது. பொய்யற்று இருப்பது ஒரு இலக்கிய தகுதி. அது சு.ராவுக்கு ஒரு தனி இடம் அளிக்கிறது.

 அண்மையில், Storytel செயலியில் “ஜெ.ஜெ” நாவலைக் கேட்ட போது அது சின்ன வயதில் எனக்கு ஏற்படுத்திய அதே தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம் இந்த பண்பு தான். ‘நான் தவறாகக் கூட எழுதுவேன், ஆனால் அதை நான் பாசாங்கற்று பொய்யொன்றி சொல்கிறேன்’ எனும் துணிச்சல் அவரை நான் இன்றும் ஒரு வாசகனாக மதிப்பதற்கான காரணங்களில் ஒன்று.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...