Skip to main content

பா. ராகவனின் “யதி”



பா.ராவின் ஆயிரம் பக்க “யதி” நாவலை இன்று தான் படித்து முடித்தேன். படிக்க சிரமமான நாவல் ஒன்றுமல்ல. தொடர்ந்து படித்தால் நான்கைந்து நாட்களில் யாராலும் படித்து முடிக்க முடியும். நான் புத்தகத்தை வாங்கிய நாள் இரவில் முதல் 90 பக்கங்களை படித்து ஒரு வாரம் கழித்து மீண்டும் படித்து விட்டு விட்டு படித்தேன். எந்த கட்டத்திலும் அலுப்பூட்டவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும் - அதற்கு காரணம் பா.ரா கதையை வெளியவயமாக நகர்த்தி விடுகிறார் என்பது. ஆனால் ஆன்மீக வளர்ச்சி, விடுதலை, துறவு, குடும்ப பந்தங்கள், காமம், தாய்-மகன் இடையிலான சிக்கலான உறவைப் பேசும் நாவலாக இது நிறைய உள்விசயங்களை பேச வேண்டியது. ஆக, அந்த அகவயமான இடங்கள் வரும் போது நாவல் இயல்பாகவே சற்று மந்தமாகிறது. ஆனால் இந்த இரண்டையும் - சம்பவங்கள், உள்விசாரணை - அவர் சாமர்த்தியமாக சமநிலைப்படுத்தி கொண்டு போகிறார் என்பதையும் சொல்லியாக வேண்டும். 


நிறைய பேர் சொல்வதைப் போல இது சாமியார்கள், துறவிகள், யோகிகள் பற்றின கதை அல்ல. மாறாக, இது ஒரு ஈடிபல் காம்பிளக்ஸ் கதை. மகன்களுக்கு அன்னையர் மீதான இச்சை, அவர்கள் வளர்ந்து அது பிற பெண்களிடம் இடம்பெயர்ந்து, அது ஒரே பெண்ணை இயல்பாகவே சகோதர்கள் ஒருசேர இச்சிப்பது, அதன் விளைவுகள் எனப் பேசுகிறது. நினைக்கவே ஆபாசமான ஒரு விசயம் இது - ஆனால் அம்மாதிரி விசயங்களை பா.ரா பேசாமல் நம் ஊகத்துக்கு விட்டுவிட்டு அந்நிய பெண்களிடம் மைய பாத்திரங்களுக்கு ஏற்படும் பிரேமை, ஆசை, உடல் அங்கங்கள் மீது அவர்களுடைய மனம் கொள்ளும் ஆட்கொள்ளல் என நகர்த்தி விடுகிறார். அதுவும் நாவலில் வரும் நான்கு சகோதர்கள் தமது அன்னையருக்கு பிறந்தவர்கள் அல்ல என்பது step mom fantasy போல மிக மிக ஆபத்தான் ஒரு தளத்துக்கு செல்ல வேண்டியது. அதை பூடகமாக விட்டு பா.ரா நன்றாக சமாளித்திருக்கிறார். அன்னையல்லாத அன்னை மீதான அன்பு, பொறுப்புணர்வு, அதற்கு நிகராக அவளை கைவிட்டு விலகிச் செல்வதற்கான அவர்களின் தீவிர விழைவு, அவளை எட்டி நின்று துன்புறுத்தும் ஆசை என முரணான உணர்வுகள் இந்த ஆண்களுக்குள் செயல்படுகின்றன. இதை அந்த அன்னையே விரும்பி மறைமுகமாக அவர்களை பின்னிருந்து இயக்கி இருக்கிறார் என நாவலின் முடிவில் திறப்பு வரும் போது கதை இன்னும் இன்னும் சிக்கலாகிறது. இவ்விதத்தில், “யதிக்கு” முன்னோடி தி.ஜாவின் நாவல்கள் தாம் (குறிப்பாக “அம்மா வந்தாள்”). ஆனால் இந்த சிக்கலுக்குள் ஓரளவுக்கு மேல் செல்லாமல், அதற்குள்ளிருந்து அதற்குரிய நாடகீயத்தை உருவாக்காமல், பா.ரா தன்னுடைய பாணியில் வெளியே நின்று சித்தரித்து விட்டு முடியும் தறுவாயில் கூட ஒரு மர்மத்தை தக்க வைக்கிறார். கொந்தளிப்பாக அமைந்திருக்க வேண்டிய நாவலை அவர் விட்டேந்தியாக எழுதிச் செல்கிறார். விமலின் பார்வையில் நாவல் விரிவதும் இதற்கு ஒரு காரணம். ஆனால் அதனாலே படிக்கும் வாசகனுக்கு இதிலுள்ள தி.ஜா நீட்சி புலப்படவே செய்யாது. ஆனால் இது அங்கிருந்து தான் வருகிறது.


துறவு பூணும் நான்கு சகோதர்களின் பாத்திரங்களில் என்னை மிகவும் கவர்ந்தது வினய் தான். அவனிடம் தன்னை இன்னதென நிலைநிறுத்திக் கொள்ள இயலாத தவிப்பு, கொந்தளிப்பு, சடேரென்று முந்தின கணத்தின் நிலைப்பாட்டை உதறி இன்னொன்றுக்குள் புகுந்திடும் ஆவேசம், ஒருவித குழந்தைமை உள்ளது. அவனுடைய பரிதவிப்பும், சுய இரக்கமும் வாசகனை ஈர்ப்பவை. இந்நாவலை வினய்யின் கண்ணோட்டத்தில் இருந்து எழுதி இருந்தால் இது ஜெ.மோவின் “விஷ்ணுபுரத்தின்” ஒரு பகுதியை ஒத்திருந்திருக்கும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதனால் விமலின் தரப்பை பா.ரா தேர்ந்திருப்பது “யதிவை” ஜெ.மோ சாயலில் இருந்து காப்பாற்றி இருக்கிறது.


 மூத்த அண்ணனும், பரிபூரண சித்தனாக சித்தரிக்கப்படுபவனுமாகிய விஜய்யின் பாத்திரத்தை பிற சகோதர்களின் நினைவுகளின் ஊடாக மட்டுமே பா.ரா சித்தரித்துள்ளது சிலாகிப்பானது. விஜய் ஒரு தொன்மம். ஒரு லட்சிய தொன்மம். மூன்று சகோதர்களும் இறைவனை நாடியல்ல, அவனைப் பின் தொடர்ந்தே சென்று துறவை அடைகிறார்கள். (அதனாலே அட்டைப்படத்தில் மூன்று துறவிகளின் பாதங்கள் மட்டும் உள்ளன.) துறவு குறித்த தனிநபர்களின் பயணத்தை குடும்பம் எனும் வட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் எனும் பா.ராவின் நோக்கம் விஜய்யின் இந்த தொன்ம நிலையால் சாத்தியமாகிறது. ஏனென்றால் விஜய் தனது காமம் குறித்த சிக்கல்களை தன் சகோதரர்களைக் கொண்டு தனக்காக வாழச் செய்கிறான் என ஒரு குறிப்பு நாவலில் வருகிறது. இதை விமல் உணர்ந்தவன் என்பதாலே அவனை மட்டும் நேரில் சந்திக்க விஜய் தயங்குகிறான் என்றும். வருகிறது. மேலும் விஜய்யில் ஆரம்பித்து அவனுடனே முடியும் இந்நாவலில் ஒரு பாத்திரத்தின் வாழ்வை பலர் வாழ்கிற ஒரு உளவியல் நுணுக்கமும் - ஒருவித கடப்புநிலைவாதம் (transcendetalism) - உள்ளது. இதை முராகாமி தன் நாவல்களில் வெளிப்படையாக மாய எதார்த்தமாக கையாண்டிருப்பார். பா.ரா இதையும் நுட்பமாக சாதித்திருக்கிறார்.


 சித்தர்கள் நாய்களாவது, துறவிகளிடம் பேசுவது, இது அவர்களின் கற்பனையா, அல்லது நிஜமா எனும் பூடகம், அதிலுள்ள மாய எதார்த்தமும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. எதார்த்த படைப்பில் அங்கங்கே மாய எதார்த்தத்தை பயன்படுத்துவது சுலபம் அல்ல; ஆனால் இது மாந்திரிகம், ஆன்மீகம், சித்து விளையாட்டுகள் சார்ந்த கதை என்பதால் எதார்த்தத்தின் நடுவே மாய எதார்த்தம் துருத்திக் கொண்டு தெரியவில்லை. முக்கியமாக, பிற சித்து விளையாட்டுகள், மாய மந்திர சாகசங்கள் வரும் போது அவற்றை விமலின் பார்வையில் பகடி செய்து மறுக்கும் பா.ரா சித்தர்கள் நாய்களாகி பேசுவது, இறுதியில் விஜய் தன்னை ஒளியாக்கி தன் தாயின் சிதைக்கு நெருப்பூட்டி தானும் உயிர்துறப்பதை அப்படி கேள்வி கேட்காமல் தவிர்த்து விடுகிறார். இதுவும் கதைக்குள் மாய எதார்த்தத்தை உறுத்தாமல் தக்க வைக்க உதவுகிறது. இந்த விசயத்தை படிக்கும் வாசகன் சுலபத்தில் உணராதவகையில் புத்திசாலித்தனமாக பா.ரா செய்திருப்பது பாராட்டத்தக்கது.


நாவலில் இன்னொரு அழகான பகுதி விமலுக்கும் அவனது குருநாதருக்கும் இடையிலான உரையாடல்கள், அவர்களுடைய உறவு, அதிலுள்ள பாசம், கருணை, பரிவு, ஒரு குழந்தையை போல தன் சீடனை கவனித்துக் கொள்ளும் குருவின் பக்குவம். அந்த பெயரைத் துறந்த குருநாதர் எனக்கு சு.ராவை நினைபடுத்தினார். அச்சுஅசலாக அவர் பேசுவது, நடந்து கொள்வது, அவருடைய ஸ்டைல், பக்குவம், நிதானம் நான் நாகர்கோவிலில் சு.ராவிடம் பலமுறை கண்டுள்ளவை. சொல்லப்போனால் ஜெ.மோவின் “நினைவின் நதியில்” புத்தகத்தை இப்பகுதி நினைபடுத்துகிறது.


இந்நாவலின் பலவீனம் (1) விமல், வினோத் உள்ளிட்ட பல பாத்திரங்கள் உறைந்த நிலையிலே, பெரிய தடுமாற்றங்கள், சின்னச்சின்ன மாற்றங்கள் இன்றி இருப்பது. நாவலின் இறுதி அத்தியாயத்தில் தான் விமலின் பார்வையில் ஒரு சிறிய மற்றம் வருகிறது. இது நாவலின் வேகத்துக்கு, வளர்ச்சிக்கு தடை போடுகிறது. (2) இதை பா.ரா ஒரு தொடராக எழுதியதால் நிறைய அத்தியாயங்களில் மீளக்கூறல் இருக்கிறது. ஒரு முக்கியமான வெளிப்பாடு நிகழத் தேவைப்படும் போது பா.ராவின் உபமனம் அதை தள்ளிப் போட விரும்புகிறது என நினைக்கிறேன். ஆகையால் ஏழெட்டு அத்தியாயங்களை தேவையில்லாமல் நடுவே நுழைத்து விடுகிறார். இந்த அத்தியாயங்களையும் மீளக்கூறல் வரும் இடங்களையும் கத்தரித்தால் சுலபமாக 300 பக்கங்களை குறைக்க முடியும். இன்னும் கச்சிதமாக எழுதியிருக்க முடியும். 


“யதியை” ஆங்கிலத்தில் மொழியாக்கினால், பெங்குயின் போன்ற பிரசித்தமான பதிப்பகங்கள் வெளியிட்டால் நல்ல வரல்வேற்பு பெறும் எனத் தோன்றுகிறது. அதற்கான ஒரு “அகில இந்திய” சங்கதி இதில் உள்ளது. (ஜெ.மோவின் “விஷ்ணுபுரத்துக்கும்” அந்த potential உள்ளது.) ஆனால் அது நடக்க பா.ரா எதையாவது பயங்கர சர்ச்சையாக எழுதி அதை வைத்து சங்கிகள் அவரை ஊர் ஊராக துரத்தி, தாக்கி, அல்லது அவர் கைதாகி அதை ஆங்கிலப்பத்திரிகைகளும் ஊடகங்களும் கவனப்படுத்தி, உலகப்புகழ் பெற வேண்டும். எதற்கு, நல்ல மனுஷன், இப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...