முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் தந்தை ஒரு கொடுங்கோலர்



என் தந்தை

எனக்கு மூன்று வயதிருக்கும் போது

என்னை அடிக்கடி காற்றில் தூக்கிப் போட்டு

 பிடித்து விளையாடுவார்.

ஒருநாள் நான் கைதவறி கீழே விழுந்தேன்.

எல்லாரும் பயந்தார்கள்.

அன்று நான் அழவில்லை.

அன்றிருந்தே நான் அறிவேன்,

என் தந்தை ஒரு பாசக்காரர்,

என் தந்தை ஒரு கொடுங்கோலர்.


என் தேசத்தை நினைக்கும் போது

எனக்கு என் தந்தை

நினைவுக்கு வருவார் ...

நான் நினைத்துக் கொள்வேன்,

என் தந்தை ஒரு பாசக்காரர்,

என் தந்தை ஒரு கொடுங்கோலர்.


சிறுவனாக நான் இருக்கும் போது

இரவில் அப்பாவின் மாரில் தான் தூங்குவேன்.

என் மீது அவரது வாசனை இருக்கும்.

என் பேச்சில் அவரது சொற்களே இருக்கும்.

என் தீர்மானங்களில் அவரது நம்பிக்கைகளே இருக்கும்.

நான் வளர்ந்ததும்

அவர் என் புதிய வாசனையை வெறுத்தார்.

அவர் என் புதிய சொற்களை மறுதலித்தார்.

அவர் என் புதிய நம்பிக்கைகள் பால் அச்சம் கொண்டார்.

ஆனால் என் அப்பா இதையெதையும் காட்டிக் கொள்ளவில்லை.

அவர் என்னைக் காணும் போதெல்லாம்

விலகிச் செல்ல ஆரம்பித்தார்.

தன்னுடைய முழுமையான பாசம்

தன்னைப் போன்றோருக்கு மட்டுமே

என அவர் ஒவ்வொரு சிறு அசைவிலும் காட்டினார்.


எங்கள் வீட்டில் அவர்

ஒவ்வொருவரிடம் இருந்தும் தனிமைப்பட்டார்.

என் அப்பா என் அம்மாவிடமும் 

“எங்கள் தந்தை ஒரு பாசக்காரர்

எங்கள் தந்தை ஒரு கொடுங்கோலர்.”


ஒருமுறை நாட்டில் கடும் வறுமை ஏற்பட்டது.

யாரிடமும் பணமில்லை. யாரிடமும் தானியமில்லை. 

எங்கள் தெரு மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பினர்.

வானம் பார்த்து நடந்தனர்.

ஒருநாள் என் அம்மா அண்டைவீட்டாருக்கு

சிறிது தானியம் கொடுப்பதைக் கண்ட

 என் அப்பா அதைத் தடுக்கவில்லை.

அவர் ஒரு தேசப்பற்றாளர்.

அதனாலே அவர்

இலவச உணவளிப்பது மக்களை சோம்பேறி ஆக்குமென்றார்.

ஆனால் அவர் என் அம்மாவைத் தடுக்கவில்லை.


அவர் என் அம்மாவின் பெயரில் ஒரு கணக்கை ஆரம்பித்தார்.

அவர் மாதாமாதம் ஒரு சிறுதொகையை அதில் இட்டார்.

அது அவர் எங்களுக்கு அளிக்கும் கடன் என்றார்.

அதற்குள் நாங்கள் வீட்டுச்செலவுகளை நடத்திக் கொள்ள வேண்டும்.

மாதாமாதம் நாங்கள் மேலும் மேலும்

 கடனாளி ஆகிக் கொண்டே வந்தோம்.

அவரைக் காணும் போதெல்லாம் தலையை தாழ்த்திக் கொண்டோம்.

மாலையில் மிகுந்த போதையில் அவர்

தன் தேசம் வறுமையில் அல்லாடுவதைச் சொல்லி கண்ணீர் வடிப்பார்.


எங்களுடைய மூன்று வேளை உணவு ஒருவேளை ஆனது.

எங்களுடைய ஆடைகள் நைந்து போயின.


ஒருநாள் அண்டை வீட்டில் இருந்து 

என் அம்மா சிறிது தானியம் வாங்கக் கண்ட அப்பா

 உணவு வேண்டுமெனில்

இனி தன்னிடம் மட்டுமே வாங்கிக் கொள்ள வேண்டும்

எனக் கட்டளையிட்டார்.

மாலையில் வீடு திரும்பும் போது அவர் கொணரும்

சாப்பாட்டுப் பொட்டலங்களை நாங்கள்

 ரகசியமாய் வீணடித்தோம்.

அதையும் அவர் கணக்கு வைத்துக் கொண்டார்.


வார இறுதியில் அவர் 

எங்களை சுற்றி அமர வைத்து 

கணக்கு வழக்குகளை வாசிப்பார்.

பிறகு உணர்ச்சிகரமாய் பேசுவார்.


நாங்கள் வாழ்நாள் கடனாளிகளாக மாறிக் கொண்டிருந்தோம்.

அம்மா கடனுக்கு தையல் எந்திரம் வாங்கி தைத்தார்.

அப்பளம், ஊறுகாய் செய்து விற்றார்.

நான் மாலையில் டியூஷன் எடுத்தேன்.

என் சகோதரி படிப்பை நிறுத்திக் கொண்டார்.

ஆனாலும் கடன் வளர்ந்து கொண்டே இருந்தது.


நாளிதழ்களில் பசியிலும் நோயிலும் 

மக்கள் கொத்துக் கொத்தாய் மடிந்து விழும் படங்களைக் காணும் போது

குற்றவுணர்வில் கண்களை மூடிக் கொண்டோம்.

நாங்கள் சொல்லிக் கொண்டோம்,

“எங்கள் தந்தை ஒரு பாசக்காரர்

எங்கள் தந்தை ஒரு கொடுங்கோலர்.”


எங்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில்

அப்பா எங்களுடன் உரையாடலை

 முற்றிலும் துண்டித்துக் கொண்டார். 

அதன் பின்

அப்பா மாதம் ஒருமுறை

ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.

வீட்டிற்கு முன் அமர்ந்து

அவர் உணர்ச்சிகரமாக தேசிய கீதத்தை பாடுவார்.

அவர் கண்ணீர் தளும்ப எங்களுக்கு தன் பாசத்தை அள்ளித் தருவார்.

குடும்பத்தின் வளர்ச்சிக்கு, கட்டுப்பாட்டுக்கு

நாங்கள் செய்ய வேண்டியவற்றை பட்டியலிடுவார்.

நாங்கள் பசியின் சுடர் அணையாத கண்களுடன்

பார்த்திருப்போம்.

இறுதியாக, அவர்

எங்களிடம் கருத்துக் கேட்பார்.

நாங்கள் வாய் திறந்தால் 

அவரது கண்கள் நெருப்பைக் கக்கும். 

நாங்கள் மௌன சாட்சிகளாக இருக்க

 பழகிக் கொண்டோம்.

நாங்கள் மனத்துக்குள்

ஒருமித்த குரலில் சொல்லிக் கொள்வோம்,

“நம் தந்தை ஒரு பாசக்காரர்

நம் தந்தை ஒரு சர்வாதிகாரி”.


அப்போது ஒரு பெருச்சாளி

எங்களுடைய சிக்கன உணவை 

துவம்சம் செய்தது.

அதைக் கொல்ல நாங்கள்

பொறியை வைத்து காத்திருந்தோம்.

மாட்டியது பெருச்சாளி.

அது எங்கள் வீட்டு உணவுகளை

 தினந்தினம் உண்டு

அசைய முடியாதபடி பருத்துப் போயிருந்தது.

சிறிய கண்கள் மின்ன

எங்களிடம் பார்வையில்

தன்னை விட்டுவிடும்படி மன்றாடியது.

“நாம் ஓரினம்

நமக்கு ஒரே தெய்வம்

நமக்கு ஒரே தலைவன்

நமக்கு ஒரே எதிரி

நமக்கு ஒரே வயிறு”

நாங்கள் ஒரு சாக்கில் அதைப் போட்டு

தரையோடு அடிக்க தயாரானோம்.

அப்போது எங்கிருந்தோ வந்த அப்பா

சாக்கை வாங்கி வெளியே போனார்.

அவர் அதை ஒரு வயல்வெளியில்

திறந்து விடுவதை நான் பார்த்தேன்.


அதன் பிறகு அவ்வப்போது 

அது எங்கள் உணவு மேஜையில்

அடுக்களை மேடையில் 

வந்து அமர்ந்து

சிலநேரம் துணிச்சலாக

சிலநேரம் தன்னடக்கத்துடன்

 உணவருந்தும்.

நாங்கள் அதைத் தொட துணியவில்லை.


ஒருவேளை உணவு கூட இன்றி

ஒருநாள் நான்

வாடிய முகத்துடன்

பள்ளிக்கு செல்லும் வழியில் 

வயல்வரப்பு பொந்தின் வாயிலில்

அந்த பெருச்சாளியை கண்டேன்.

அது திரும்பிப் பார்த்து எனக்கு முகமன் கூறியது.

அப்பா சொல்லிக் கொடுத்ததாக

தேசப் பண்ணை பாடிக் காட்டியது.

அது சற்று வித்தியாசமாக இருந்தது.

தேசத்தை ஒரு அன்னையாக அன்றி தந்தையாக

உருவகித்தது.

நான் சொன்னேன்,

“என் அப்பா ஒரு பாசக்காரர்

என் அப்பா ஒரு கொடுங்கோலர்”

அது சொன்னது,

“பாசமே கொடுங்கோன்மை”

அது மேலும் கூறியது,

“சகோதரா, 

அன்னையரின் பாசம் நம்மை முதுகெலும்பு அற்றவராக்குகிறது

தந்தையரின் பாசமோ நம்மை உருக்கு போலாக்குகிறது.

அது இல்லாதவரின் வயிற்றில்

 பாலை வார்க்கிறது

அது உள்ளவரின் வயிற்றில்

 பசியின் அனலை வளர்க்கிறது

தேசத் தந்தையே உன்னை வணங்குகிறேன்.”

 

அப்போது பொந்தில் இருந்து

என் அப்பா வெளிப்பட்டார்.

அவர் தன் கையில் நெளிந்த பெருச்சாளிக் குஞ்சுகளை

 தூக்கிப் போட்டு விளையாடினார்.

நான் ஆச்சரியத்துடன் பார்த்திருக்க 

பெருச்சாளியிடம் சொன்னார்,

“மறந்து விடாதே,

உன் உயிர்

நானளித்த கடன்.

உன் குழந்தைகள்

கடன் இட்ட குட்டிகள்.

மறந்து விடாதே,

பாம்புகள் உன் வளையைச் சுற்றி

வளைய வருகின்றன.

நான் மட்டுமே உன் காவல் தெய்வம்.

மறந்து விடாதே,

பாசம் மட்டுமே நீ 

எனக்கு செலுத்தும் நன்றிக் கடன்.”

கருத்துகள்

Ram இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ், கவிதையின் ஒவ்வொரு வரியும் " மோடி மோடி " என கதறுகிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...