முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசானுக்கு ஒரு வேண்டுகோள்



"இலக்கியவாதி என இயங்கும் எவரிடம் சொல்ல எனக்கு ஒன்றே உள்ளது. எது ஒன்றாகவும் ’ஆக’ முயலாதீர்கள். எதுவாகவும் சித்தரித்துக் கொள்ளாதீர்கள். எதுவாக இருக்கிறீர்களோ அதுவாக வெளிப்படுங்கள்."

- ஜெயமோகன்


அன்புள்ள ஆசானே,

எனக்கு உங்களிடம் சொல்ல ஒன்றே ஒன்று உள்ளது: “நாம் உள்ளுக்குள் சாராம்சமாக ஒருவாறு இருக்கிறோம், அவ்வாறே நாம் இலக்கியத்திலும் வெளிப்பட வேண்டும்” எனும் உங்கள் மூடநம்பிக்கையை, 19 நூற்றாண்டில் லிபரல் ஹியூமனிஸ நோக்கை என்று கைவிடப் போகிறீர்கள்? என்று சமகால சிந்தனைப் பரப்புக்கு வந்து நிற்க போகிறீர்கள்? ஒருவர் எழுத்திலும் வெளியிலும் ஒரே ஆளாக இருக்க முடியாது, அவர் விரும்பினாலும் இல்லாவிடிலும். சொல்லப் போனால், வெளியே கூட ஒருவரால் ஒரே ஆளாக இருக்க முடியாது. எழுத்தில் இன்னும் மோசம்: அங்கு நாம் துண்டுத் துண்டாய் உடைபட்டு முன்னுக்குப் பின் முரணாக சிந்தனைகளால், உணர்வுகளால், இருப்பால், இன்மையால் பின்னப்பட்டிருக்கிறோம். யாராலும் பாவனைகள் இன்றி இருக்க இயலாது, ஏனென்றால் பாவனைகள் தாம் வாழ்வே; பாவனைகளுக்கு அப்பால் இன்மையாலான இருப்பு உள்ளது; அதை நான் மறுக்கவில்லை. (ஆனால் அது நிச்சயமாக இந்த வாழ்வை இந்நேரம் அனுபவிக்கும் இப்பிரக்ஞை அல்ல.)


சினிமா பார்க்கிற, குடிக்கிற, அரசியல் களியாட்டத்தில் தன்னை மறக்கிற எழுத்தாளன் தான் எழுத்திலும் இருக்கிறான். அதில் எந்த மாற்றும் குறைந்து போவதில்லை. இன்னும் சொல்லப் போனால், அது தான் இவ்வாழ்வின் சிறப்பே: நாம் ஒரே ஆள் நூறு நூறு பேர்களாக எந்த தொடர்பும் இன்றி கணத்துக்கு கணம், எந்த மைய விசையும், அச்சாணியும் இன்றி தனித்தனியே இருக்கிறோம். நம்மை ஒரு மாலையில் கோர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே இந்த இருப்பின் மகத்துவம், அதன் விடுதலை, அதன் அப்பாலை நிலை.  


இவ்வாழ்வை வாழும் எழுத்தாளன், எழுதும் எழுத்தாளன் இருவருமே இட்டுக்கட்டப்பட்ட நிலைகளே. இதை நீங்கள் ஏற்கும் போதே உங்கள் தேவையற்ற பிடிவாதங்கள், அகந்தை இல்லாமல் ஆகும்.


“எதுவாக இருக்கிறீர்களோ” என ஒன்றை நிறுவுகிறீர்கள் அது எப்படி அவ்வாறு தோன்றியது? பிறப்பிலேயா? பிறப்பில் என்றால் கூட காலம், உலகம் அனுபவங்கள், தாயின் அண்மை, மொழி ஆகிய சார்புகளாலே “எதுவாக இருக்கிறோமோ” அது தோன்ற முடியும். எனில் அது “எதுவாக இருப்பது” அல்ல தானே? “எதுவாக இருக்கிறோமோ” அது ஒன்றாக தற்காலிகமாக சார்புநிலைகளால் தோற்றுவிக்கப்படும் ஒன்றல்லவா? சரி அது அதற்கு முன்பே கருவில் திருவாக இருந்தது, தாயின் வயிற்றில் “ஏதோ ஒன்றாக இருக்கிறோம்” என சொல்வீர்கள் என்றால் அங்கும் காலம், உயிரி ரசாயன மாற்றங்கள், தாயின் உடல், அந்த உடல் இருக்கும் சுழல் என பல விசயங்கள் “அதைத்” தோற்றுவிக்கின்றன. சாராம்சமாக, தாய் தந்தையின் நீட்சியாக கூட நாம் இருக்க முடியாது. இதை அப்படியே அள்ளி எடுத்து எப்படி மொழியில் கடத்த முடியும்? இதை எப்படி பூரணமாக படைப்பனுபவமாக்க முடியும்? ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒருவன், அந்த ஒவ்வொன்றுக்குள்ளும் பலவாறாக தனக்குள்ளே நூறாயிரம் முறை முரண்படும் ஒருவன் எப்படி எழுத்துக்குள் “கலப்பின்றி, பொய்யின்றி” வந்து உட்கார முடியும்?

 

உங்களுடைய இந்த மூடநம்பிக்கையே ஒருவர் தன்னுடைய மரபை மட்டுமே உள்வாங்கி வெளிப்படுத்துகிறார், மரபு அடிப்படையில் சாராம்சமானது, அதன் பல்வேறு முகங்களே பண்பாட்டு வெளிப்பாடுகள் என்றெல்லாம் நம்ப வைக்கிறது. (இதுவே உங்களுடைய கலாச்சார இந்துத்துவா என சிலர் அடையாளப்படுத்துவது.) இதுவே ஒரு பெண்ணால் தன் உடலை எழுத்தில் கடக்க முடியாது; ஒரு மாற்றுத்திறனாளியால் தன் அனுபவத்தை மீறி எழுத்தில் வெளிப்பட முடியாது; உன் சாதியும், மதமுமே உன் எழுத்தில் நீயாக வேண்டும் என்றெல்லாம் உங்களை நம்பவும் அதை வெளியே இளைஞர்களிடம் போதனை செய்யவும் வைக்கிறது. 


உங்களை நம்பி பின் தொடரும் ஒரு கூட்டம் இளைஞர்கள் இதே காலாவதியான, ஆழமற்ற, தவறான எண்ணங்களை தாம் எழுதும் கட்டுரைகளில் வெளிப்படுத்தும் போது பார்க்க பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் எந்த கதையை எடுத்தாலும் இதில் அந்த எழுத்தாளனின் வாழ்க்கை பொய்யாக வெளிப்படுகிறதா, நேர்மையாக வெளிப்படுகிறதா என ஏதோ எழுத்தாளன் ஒரு காபரே டான்ஸர் எனும் கணக்கில் உற்று நோக்குகிறார்கள். கலையை ஒரு கருவியாக, உண்மையை மொண்டு எடுத்து விளம்பும் துல்லியமான முன்வைக்கிறார்கள். இந்த அபத்தமான சிந்தனைகள், கருதுகோள்கள் கடந்த ஒரு நூற்றாண்டில் பல்வேறு விவாதங்கள் வழி முறியடிக்கப்பட்டு விட்டன. நமது மரபில் கூட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவை தர்க்கத்துக்கு புறம்பானவை என நிரூபிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு விட்டன. நீங்கள் ஒரு பக்கம் எல்லாரையும் அவர்கள் வாழ்ந்த, வாழ்கிற வாழ்க்கையை இலக்கியத் தராசில் அளந்து மதிப்பிட்டு முத்திரை குத்துகிறீர்கள் என்றால், அவர்களும் இன்னொரு பக்கம் அதே உறையில் முத்திரை பதிக்கும் தபால் ஆபீஸ் பணியை கருத்தாக செய்து வருகிறார்கள். சதீஷ் ஶ்ரீனிவாசனுக்கு எழுதிய இந்த பதிலில் கூட இதைத் தான் செய்கிறீர்கள்.


  இதையெல்லாம் பார்க்க வருத்தமாக இருக்கிறது.


அதனால் தான் கேட்கிறேன்: இதை எப்போது நிறுத்துவீர்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...