முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெருந்தேவியுடன் ஒரு உரையாடல்


நேற்று பிரக்ரிதி இலக்கிய அமைப்பின் சார்பில் கவிஞர் பெருந்தேவி ஸூம் சந்திப்பில் கவிதை வாசித்து, வாசகர்கள், மாணவர்களுடன் உரையாடினார். ஆங்கில கல்விப்புலம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழ் படைப்பாளிகள் கலந்து கொண்டால் அதைக் காண நான் ஆர்வம் கொள்வேன். மேலும், கவி பெருந்தேவி வேறு. அவர் நிகழ்வை ஆரம்பித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது: “இந்த பெருந்தொற்றில் நமது அரசு நம்மை கைவிட்டு விட்டது, இந்த மக்களை இத்தேசம் தவிக்க விட்டு விட்டது” என சொல்லி, இச்சூழலில் கவிதை எழுதுவதும் அதைப் பகிர்வதுமே தனக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருகிறது என்றார். நான் பார்த்த பெரும்பாலான கல்விப்புல எழுத்தாளர்கள் தமக்கும் சமூகத்துக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல, ஏதோ இலை, தழை, பூ, காற்று, இலக்கியம் மகத்தானது, வாழ்வு அதி அற்புதமானது என மிதந்தபடி இருப்பார்கள். ஆனால் பெருந்தேவியைப் போன்ற தமிழ் படைப்பாளிகளும் மலையாள மண்ணை சேர்ந்த கவிஞர்களும் இதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன். 



தனது கவிதைகளை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக அவர் வாசித்த போது, அவர் கவிதைகளை வாசிப்போருக்கு தமிழில் மட்டுமே உணர்தற்குரிய சில நுணுக்கங்களை ஆங்கில வாசகர்களுக்கு ஒரு போதும் கடத்த முடியாது எனத் தோன்றியது. குறிப்பாக பெருந்தேவி போன்று ஊடுபனுவலாக்கம் (intertextuality) கொண்ட ஒரு கவிஞருக்கு இது வெகுவாக பொருந்தும். 


அடுத்து, பெருந்தேவி தமிழ் கவிதை உலகில் கொண்டு வர முயலும் எதிர்-கவிதை அழகியல். அது ஆங்கிலக் கல்விப் புலத்தில் உள்ளோருக்கும், ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கே சற்று அந்நியமான விசயம் தான். தமிழில் நவீன, பின்நவீன கவிதைகளின் வரவுக்குப் பின்பும் ஒரு கற்பனாவாத தொடர்ச்சி உள்ளது. குறிப்பாக நமது கவிஞர்கள் பயன்படுத்தும் உருவகங்கள், குறியீடுகளில், செண்டிமெண்டுகளில் இதைக் காணலாம். இன்னும் நமது நவீன கவிதை நகரங்களுக்கு முழுமையாக வரவில்லை, அல்லது நகரங்களில் கால்பாவியபடி கிராமத்து வீதிகளில் கற்பனை உலா போகிறது என நினைக்கிறேன். இதற்கு விதிவிலக்கு உண்டென்றாலும், பொதுவான போக்கு மேற்சொன்னது தான். ஆனால் எதிர்க்கவிதை இந்த மிகைப்படுத்தப்பட்ட செண்டிமெண்டுகளை உடைத்து விட்டு அன்றாட வாழ்வின் அனைத்து விசயங்களை நோக்கியும், பாவனைகள் இன்றி, கவிதையை அழைத்து வரலாம் என்கிறது. தமிழில் இதே காரணத்துக்காகத் தான் எதிர்-கவிதைக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என நினைக்கிறேன். கூட்டத்திற்கு பிறகு இதைக் குறித்து பெருந்தேவியுடன் விவாதித்தேன்.


 கவிதை எழுதுவதற்கான சூழல், வெளி குறித்து அவர் பேசியதும் சுவாரஸ்யமாக இருந்தது. குறிப்பாக தன்னால் இந்தியாவில் இருக்கும் போது தான் கவிதை எழுத முடிகிறது, தன் காதில் தொடர்ந்து தமிழ் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டியது படைப்பூக்கத்துக்கு அவசியம் என்றார். ஒரு தமிழ் எழுத்தாளனாக என்னால் அவருடன் உடன்பட முடிந்தது. சொல்லப் போனால், இந்த சமூக வலைதளமும் அதனூடாக தொடர்ந்து உரையாடலும் சாத்தியப்படாவிட்டால் நான் முழுக்கத் துண்டிக்கப்பட்டிப்பேன் எனத் தோன்றுகிறது.


சும்மா சீண்டிப் பார்க்கலாம் என “நீங்க தான் அந்த ஶ்ரீவள்ளி என இப்போதாவது ஒப்புக்குவீங்களா?” எனக் கேட்டேன். வழக்கம் போல ரொம்ப தீவிரமாக அதை மறுத்து விட்டார். அதற்கான நியாயங்கள் - உணர்வுரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் - அவருக்கு உள்ளன என நினைக்கிறேன். எப்படி புக்காவஸ்கியை அவருடைய “பெண் வெறுப்புடன்” ஏற்கிறீர்கள் என்று கேட்டேன். ஒரு வாசகன் அன்னப்பறவை போல கசடை நீக்கி விட்டு சிறப்பானதை ஏற்க வேண்டியது தான் என்றார். நான் ஒரு விளையாட்டுக்காகத் தான் அக்கேள்வியை கேட்டேன். மற்றபடி, புக்காவஸ்கியிடம் பெண் வெறுப்பு இல்லை, அவர் பெண்களை எந்த கற்பனாவாதமும் அரசியல் சரிநிலைகள் இன்றி சித்தரிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.


தமிழிலும் இது போன்ற உரையாடல்களை யாராவது ஒருங்கிணைக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...