தமிழ் சமூகத்தால் எழுத்தாளர்கள் காய விடப்படுகிறார்கள் என அதிகம் புலம்பிய எழுத்தாளர் சாருவாகத் தான் இருப்பார். “அகாலம்” தொடரில் நிறைய இடங்களில் இது குறித்த சுயபகடி வருகிறது. எழுத்தாளர்களுக்கு ஓரளவுக்கு எழுத்து மூலம் வருமானம் வந்தால் நன்றாகத் தான் இருக்கும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதைக் கடந்து பார்த்தால் அங்கீகாரம், புகழ் எல்லாம் தமிழ் எழுத்தாளனுக்கு தேவையற்ற நெருக்கடியை, அழுத்தத்தை கொண்டு வந்து விடும் என நினைக்கிறேன்.
உங்கள் எழுத்தை1000-10,000க்குள் ஆட்கள் படிப்பதே வசதியானது. இப்படி எழுதினால் அப்படி சொல்வார்களோ, அப்படி அடிப்பார்களோ, இப்படி உதைப்பார்களோ என யோசிக்காமல், வாசகர்களை “மாட்டை போல சொறிந்து கொடுக்காமல்”, துணிச்சலுடன் சுதந்திரமாக எழுதலாம். எவ்வளவு குறைவாக வாசிக்கப்படுகிறானோ அந்தளவுக்கு எழுத்தாளன் அதிகமாக ரிஸ்க் எடுக்க முடியும்.
ஒரு உ.தா., ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் இருந்து சுமார் பதினைந்து ஆண்டுகளில் தமிழில் கணிசமான புனைவெழுத்தாளர்கள் எதார்த்தவாத எழுத்துக்கு சட்டிப்பானை சகிதம் குடிபெயர்ந்து விட்டார்கள். இதற்கு எந்த கோட்பாட்டு, கொள்கைரீதியான காரணமும் இல்லை. இந்த காலகட்டத்தில் இணையம், பிரசுரத்தில் நிகழ்ந்த ‘புரட்சியால்’ அதிக வாசகர்களை போய் அடைந்து விட முடிகிறது. அதிக வாசகர்கள் படிக்க சுலபமானது மாய எதார்த்தம் அல்ல, எதார்த்த கதைவடிவமே. அதே போல இன்று நாடகீயமான உணர்ச்சிகரமான கதைகள் அதிகமாய் எழுதப்படுகின்றன. மேற்சொன்ன காரணம் தான். கவிதையை எடுத்துக் கொண்டால் இறுக்கமான, உள்மடிப்புக் கவிதைகள் அரிதாகி விட்டன. உணர்ச்சிகரமான, தன்னிலைக் கவிதைகள், நேரடிக் கவிதைகள், கதைகூறும் கவிதைகள் அதிகமாகி விட்டன. இன்றைய கவிதைகள் படிக்க அவ்வளவு சவாலாக இல்லை - இந்த எளிமையை சிலர் கவிதையின் பரிணாம வளர்ச்சி எனலாம். நான் இதை வெகுஜன ஊடகத்துக்கு அது முக்காடு விலக்கி வந்து கலகலப்பாய் பேச முயல்வதன் விளைவு என்கிறேன். கட்டுரைகளும் இன்று தகவல்கள், அரசியல் சரிநிலை, ஏற்கத்தக்க கருத்துக்கள் என தேய்வழக்காகி விட்டன. புதிய ஒன்றையும் அறிமுகப்படுத்த முடியாது; அறிவார்ந்து வாதிட்டால் வாசகன் பின் தொடர மாட்டான்; அதனால் சுலபத்தில் உட்கொள்ளும் வகையிலான பத்திரிகைத்தனமான கட்டுரைகளையே சிறு, நடுநிலை இதழ்களிலும் எழுதுகிறோம்.
300இல் இருந்து 3000 வாசகர்களை அடைந்ததற்கே இவ்வளவு படாதபாடு பட்டு எழுத்தை லகுவாக்க, ஜனரஞ்சகமாக்க முயல்கிறோம் என்றால், சாரு எதிர்பார்ப்பது போல நாம் மூன்று லட்சம் வாசகர்களை அடைந்தால் என்னவாகும் யோசியுங்கள்.
அதிக வாசகர்கள் என்றால் எழுத்து ஜனரஞ்சகமாகி விடும் என நான் கூறவில்லை; உலக அளவில் அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் சமரசமின்றி எழுதி வருகிறார்கள். ஆனால் நமக்கு அந்த எதிர்பார்ப்பின் அழுத்தத்தை சமாளிக்கத் தெரியவில்லை என நினைக்கிறேன். 80 வயது தாத்தாவுக்கு 18 வயது மணமகள் கிடைத்ததைப் போல ஆகி விடுகிறோம். நிறைய மேக் அப் போட்டுக் கொண்டு பற்கள் கிடுகிடுவென ஒலியெழுப்ப வித்தைகள் பயில்கிறோம். இது முழுக்க முழுக்க தமிழ் எழுத்தாளனின் பலவீனத்தால் வருவதே. (நானும் நீங்களும் இதற்கு விதிவிலக்கில்லை.)
ஜெனேயின் A Thief’s Journal எனும் சுயசரிதை நாவலை படித்து வருகிறேன். அதில் அவர் பேசுவதை ஒத்த deviantஆன விசயங்களை நம் எழுத்தாளர்களாலும் எழுத முடியும், ஆனால் அவர் பயன்படுத்தும் மொழியை நிச்சயமாக நாம் கையாள மாட்டோம். ஜெனேயின் எழுத்தில் அப்படி ஒரு தத்துவார்த்த ஆழம், உள்முரண்களின், உருவகங்களின் அடர்த்தி உள்ளது. அதைப் படித்தவுடன் வாசகனுக்குப் புரியாது என ஜெனே கவலைப்படவில்லை. இதுவே என் கலை, இதுவே நான் சொல்ல வரும் அனுபவம், இது வெறுமனே மேட்டர் கதையோ, சாகச அனுபவமோ அல்ல எனும் தெளிவு இருந்தது. இத்தனைக்கும் சிறைக்குள் இருந்தபடி அப்படி யோசிக்க அவரால் முடிந்தது.
ஆனால் நாம் இக்கதையை எழுதினால் நேரடியான கிளர்ச்சியான சம்பவங்களை மட்டும் எடுத்து, நிறைய கண்ணீரும் கூக்குரலும் கலந்து ஒரு தன்னிரக்க பிரதி ஆக்கி விடுவோம். ஏனென்றால் அதுவே வாசகனுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம். இந்த வாசக அழுத்தத்தைப் பற்றித் தான் நான் பேசுகிறேன். ஜெனேயின் எழுத்துக்கள் பல லட்சம் பேரை சென்றடைந்தன. அவர் வசதியாக ஒரு செலிபிரிட்டியாக வாழ முடிந்தது. ஆனால் அந்த நிலைமாற்றத்தை அவரால் சமாளித்து எழுதவும் முடிந்தது. நமக்கு அந்த அங்கீகாரத்தில் பத்து சதவீதம் கிடைத்தாலே நாம் பாலகுமாரன் ஆகி விடுவோம்.
சம்பத்தின் “இடைவெளி” அல்லது நகுலன், மௌனி (அல்லது இன்றைய கோணங்கி) பாணியிலான பரீட்சார்த்த, சிக்கலான, நிறைய இடையூறுகள் கொண்ட பிரதிகளை நாம் இன்று உருவாக்கததற்கு காரணம் அது வாசகனுக்குப் புரியாதோ எனும் பயம் தான். அதற்கு சௌகர்யமாக இவர்களை பழித்தும் நிராகரித்தும் ஜெ.மோ போன்றவர்கள் சொல்லும் கருத்துக்களை நாமும் இறுக்கப் பற்றிக் கொள்கிறோம். அதை வைத்து நம் பயத்தை நியாயப்படுத்துகிறோம்.
வாசகர்களின் முதிர்ச்சியையும் குறிப்பிட வேண்டும். ஒருவேளை நாம் பரவலான வாசகர்களை அடையும் போது அவர்கள் முதிர்ச்சியற்றவர்களாக இருப்பதை அடையாளம் கண்டு, அவர்களுக்காக நம்மை மாற்றிக் கொள்கிறோமோ? ஒருவேளை அன்றைய பிரான்ஸில் ஜெனே போன்ற ஒரு திருடனுக்கு, ஆண் விபச்சாரிக்கு அந்த பிரச்சனை இருந்திருக்காது. இப்போது அமெரிக்காவில் ஒரு பால் ஆஸ்டருக்கு அச்சிக்கல் இல்லை. ஆனால் இந்திய ஆங்கிலப் புனைவில் - என்னதான் ஆங்கிலம் படிக்கிற, வெளிநாடுகளில் வாழ்கிற மேற்தட்டு வாசகர்கள் என்றாலும் - எழுத்தை ஜனரஞ்சகமாக்கும் நெருக்கடி ஒரு விக்ரம் சேத், அமிதாவ் கோஷ், அரவிந்த் அடிகாவுக்கு உள்ளது. ஒருவேளை இது நம் இந்தியத் திருநாட்டின் தனித்துவமான ஒரு கோளாறாக இருக்கலாம்.
அந்தந்த கணத்தின் மகிழ்ச்சிக்காக எழுத முடிவதே எழுத்தாளனின் சொர்க்கமாக இருக்க முடியும். வாசகர்களின் எதிர்பார்ப்பு, சக எழுத்தாளனின் மதிப்பீடு, மூத்த எழுத்தாளனின் ஆசீர்வாதம் / நிராகரிப்பு மூன்றையும் மறந்து விட்டு எழுத முடிய வேண்டும். கடும் எதிர்பார்ப்பின் மத்தியிலும் துணிந்து இஷ்டத்துக்கு எழுதும் முதிர்ச்சி வரும் வரை நாம் இந்த “மூத்திர சந்தில்” இருப்பதே நலம்!

Comments