முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாட்டுக்கு ஒரு தலைவன்


பேஸ்புக் தட்டச்சத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் எழுதும் தன்னம்பிக்கையை அளித்தது போல, யார் வேண்டுமானாலும் படக்கருவி முன் தடுமாறாமல் பேசும் பழக்கத்தை செல்போன்கள் அளித்ததைப் போல, கிளப் ஹவுஸ் விடிய விடிய பாடும் துணிச்சலை நிறைய சாமான்யர்களுக்கு கொடுத்துள்ளது. நடைமுறையில் தாம் பாடினால் முகம் சுளிப்பவர், கிண்டலடிப்பவர்கள் தவறாமல் இதில் பாராட்டி விடுவதால் அச்சம் முழுக்க மறைந்தது போல பாடுகிறார்கள். இதையெல்லாம் ‘மறைந்திருந்து’ கேட்பதற்கென்றே ஒரு குழு உள்ளது - எனக்கு ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் எப்.எம் வானொலி வந்த போது விடிய விடிய கையடக்க வானொலியை ஒலிக்க விட்டு தூங்காமல் கிடந்த நாட்கள் நினைவு வருகின்றன. ஆனால் நான் இதை எழுத வந்தது முழுக்க வேறொரு நோக்கத்திற்காக:


இந்த கிளப் ஹவுசெல்லாம் வருமுன்பே என் அப்பா ஊரில் ஒரு கிளப் ஹவுஸ் நடத்தினார். இரவு ஏழு மணிக்கு மேல் முழுபோதையில் கண்கள் சிவக்க அவர் ராஜ்கிரண் போல லுங்கியை உயர்த்தி கட்டிக் கொண்டு வீட்டு வாசலில் படுத்து எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடத் தொடங்குவார். நாங்கள் யார் சொன்னாலும் வீட்டுக்குள் வரவோ பாட்டை நிறுத்தவோ மாட்டார். பெரும்பாலும் 11 மணிக்கு மேல் நாங்களாக அவரை இழுத்து உள்ளே போட்டு விட்டால் தான் மெல்ல பாடிப் பாடி வீட்டுக்குள்ளே தூங்கிப் போவார். அப்பா பாடுவது இங்கு கிளப் ஹௌசில் இன்னிசை மன்னர்களைப் போல எந்த இசை போதமும் இல்லாமல், ‘நான் பாடுறது தாண்டா பாட்டு, கேட்கறதுன்னா கேளு’ எனும் கணக்கில் இருக்கும். நடுநடுவே நிறுத்தி அண்ணா, எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி போன்ற காலமான தலைவர்களின் பெயர்களை உரக்க கூவி இரங்கல் தெரிவிப்பார். அப்படியே அந்த துயர மனநிலையை ஒட்டிய ஒரு பாடலை ஆரம்பிப்பார்.


அப்பா இப்படி அந்த தெருவுக்கே பொழுதுபோக்காளராக திகழ்ந்தார். குழந்தைகளான எங்களுக்கும் அது பெரும் வேடிக்கையாக இருக்கும். காலையில் மகா சீரியஸாக, முறைத்துக் கொண்டு திரியும் அப்பா மாலையில் குதூகலமான பேர்வழியாக மாறுவது எங்களுக்கு பிடித்திருந்தது. அவருக்கு புற்றுநோய் வந்ததும் குடிப்பதையும் கூடவே பாடுவதையும் நிறுத்தினார். எங்கள் தெருவின் தொன்மையான கிளப்ஹவுஸ் இப்படி முடிவுக்கு வந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...