முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் நவீன இலக்கியத்தின் வலதுசாரிகள்




“தமிழக அரசின் இலக்கிய விருதுகள்” கட்டுரையில் ஜெயமோகன் இங்குள்ள இடதுசாரி, திராவிட சார்பு படைப்பாளிகள் பற்றி ஒரு பட்டியல் அளிக்கிறார். இதில் இரண்டு சுவாரஸ்யமான விடுபடல்கள் உண்டு:


1) நிஜமான இடதுசாரி படைப்பாளிகளை புறக்கணிக்கிறார். அவர்களிடத்தில் எஸ்.ரா போன்றோரை இடதுசாரி, திராவிட மனச்சாய்வு கொண்டவர்கள் என்கிறார். நான் ஒருபோதும் எஸ்.ராவை இப்படிக் கண்டதில்லை; இத்தனைக்கும் அவரது கணிசமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். இடதுசாரி பார்வை, சாய்வு என்பது ஒரு எழுத்தாளன் அந்தரங்கமாக தன் நண்பனிடம் மட்டும் வெளிப்படுத்துவது அல்ல தானே? அவர் அளிக்கிற திமுக சார்பு எழுத்தாளர் பட்டியலும் அப்படித்தான் இருக்கிறது. பாமககாரரான கண்மணி குணசேகரனை திமுக பட்டியலில் கொண்டு சேர்த்து விட்டார். எனில் இமையத்தையும் கண்மணியையும் பக்கத்தில் பக்கத்தில் வைக்க முடியுமா, கொள்கை அளவில்?


ஆசான் இவ்விசயத்தில் ஒரு தனித்துவமான கொள்கை கொண்டவர் - அவர் எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை உற்று கவனித்து அதை வைத்து ஒரு முடிவுக்கு வந்து விடுவார். அதில் உடலமைப்பு, தோல் நிறம், சாதி, குடும்பப் பின்னணி, செய்த வேலை, அதில் சம்பாதிக்கும் பணம், குடி, சிகரெட் உள்ளிட்ட ஒழுக்கம் சார்ந்த பழக்கங்கள் என பல விசயங்களும் இருக்கும். இவற்றை வைத்தே அவர்கள் எழுதும் எழுத்தை அவர் மதிப்பிடுவார். அப்படித்தான் மனுஷ்யபுத்திரனின் ஊனமே அவரை இடதுசாரி ஆதரவாளர் ஆனதாக சொன்னார். அப்படித்தான் மாதவிக்குட்டி தனது தோற்றம் குறித்த தாழ்வுணர்ச்சியால் ஆணாதிக்கவாதத்தை எதிர்த்து, பெண் தரப்பில் இருந்து பாலியல் சித்திரங்களை எழுப்பியதாக எழுதினார். அப்படித்தான் தன்னுடைய ‘மூர்க்கமும்’ தனது போர்வீர சாதிப்பின்னணியில் இருந்து மரபணு வழியாக உருவாகி வந்தது என்றார். அப்படித்தான் “ஆசானே இடதுசாரிகள், முற்போக்காளர்கள் ஏன் இந்து வைதீக மரபை மட்டும் எதிர்க்கிறார்கள், அவர்கள் ஏன் கிறித்துவத்தை, இஸ்லாத்தை தாக்குவதில்லை?” என அமிர்தம் சூர்யா ஒரு பேட்டியில் கேட்பதற்கு “அவர்களுக்கு அதை செய்வதற்காக என்.ஜி.ஓக்கள் வழி வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது சூர்யா” என அவர் சொல்கிறார்.


இப்படியான விசித்திரமான ஏதாவது ஒரு தர்க்கத்தைக் கொண்டு அவர் தான் தரும் பட்டியலில் உள்ளவர்கள் இடதுசாரிகள், திராவிடர்கள் எனச் சொல்லுகிறார் எனலாம். இதில் இருந்து அவர் விடுவிப்பவர்கள் பெரும்பாலும் பிராமண எழுத்தாளர்கள் என அவரே அடையாளப்படுத்துவர்கள். அவர்கள் அப்பட்டியலில் இருப்பதில்லை பாருங்கள். உ.தா., பா.ராகவன் தொடர்ந்து வெளிப்படையாகவே திமுகவை ஆதரித்து பதிவிடுகிறார், தனது தற்போதைய “கபடவேடதாரி” தொடரில் சங்கிகளை கலாய்க்கிறார். ஆனால் அவருக்கெல்லாம் திமுக பரிசளிக்காது, அவர் ஒரு பிராமணர் என்கிறார் ஜெயமோகன். அதாவது ஒருவர் எந்த அரசியலை சார்ந்திருக்கிறார் என்பதையும் சாதியைக் கொண்டே முடிவு செய்கிறார். ஒருவர் என்னவிதமான அரசியல் கொண்டிருந்தாலும் அவருடைய சாதியை வைத்து சிண்டு முடிந்து விடுகிறார்.


இன்னொரு பக்கம், இது வலதுசாரிகளுக்கே உள்ள ஒரு பிரமை எனலாம். அமெரிக்காவில் இடதுசாரிகள் அனேகமாக இல்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டு முழுக்கவே அமெரிக்காவில் அமைதிக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் இடதுசாரிகளின் சதி என முழக்கம் போடுவார்கள். அரசுக்கு விரோதமானவர்களை இடதுசாரிகள் என்று சொல்லியே அப்பாவிகளுக்கு மரண தண்டனை கொடுத்த வரலாறு அவர்களுக்கு உண்டு. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஜெர்மனியில் ஆரிய இனவாதிகள் தமது பிரதான விரோதிகளாக இடதுசாரிகளையே முன்வைத்தனர். ஹிட்லர் தன் பிரச்சாரங்களில் மிக அதிகமாக முழங்கியது யூதர்களுக்கு எதிராக அல்ல, இடதுசாரிகளுக்கு எதிராகவே. இப்போதைய பாஜக ஆதரவாளர்களும் இஸ்லாமியரை விட பிரதான விரோதியாக நினைப்பது இடதுசாரிகளையே. இத்தனைக்கும் இங்கு இடதுசாரிகளின் அணி மிக பலவீனமானது. இந்த இடதுசாரி phobia ஆசானுக்கும் உள்ளது. அவர் இதற்காகவே “பின் தொடரும் நிழலின் குரல்” எழுதினார். அதைப் படித்து விட்டு சு.ரா சொன்னதாக சொல்வார்கள்: “ஜெயமோகன் நியாயமாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைப் பற்றியே எழுதி இருக்க வேண்டும்; ஏனென்றால் குமரியில் இடதுசாரிகளுக்கு அப்படி ஒரு வலுவான இருப்பு இல்லை. அவருக்கு செயல்பாட்டு அனுபவமும் இடது அணியை விட ஆர்.எஸ்.எஸ்ஸிலே அதிகம்.”  ஆனால் இடதுசாரி phobia காரணமாக தன்னை சூழ்ந்துள்ள இலக்கியவாதிகள் எல்லாரும் இடதுசாரிகள், தான் மட்டுமே ஒரே வலதுசாரி என அவருக்குத் தோன்றுகிறது.


 2) இந்த கட்டுரையில் ஜெயமோகன் வலதுசாரி, திராவிட வெறுப்பு எழுத்தாளர்களின் பட்டியலையே அளிக்கவில்லை, கவனியுங்கள். இடதுசாரிகள் இருக்கும் போது வலதுசாரிகளும் இருந்துதானே ஆக வேண்டும். இது ஒரு தந்திரமான அரசியல் - இடதுசாரிகள் vs வலதுசாரிகள் என்பதை அவர் இடதுசாரிகள் vs தீவிர இலக்கியவாதிகள் என்று மடைமாற்றுகிறார். அடுத்து இந்த தீவிர இலக்கியவாதிகளில் கணிசமானோர் மறைமுக திமுக ஆதரவாளர்களே என்கிறார். இப்படி வலதுசாரிகளை மறைப்பதன் மூலம், அரசியல் நீக்கம் செய்வதன் மூலம். அவர்களை ஆதரவற்றவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, உருவற்றவர்களாக கட்டமைக்கிறார். இல்லையென்றால் வலதுசாரி எழுத்தின் நியாயப்பாட்டை அவர் உருவாக்க வேண்டுமே. அதற்கு அவகாசம் இல்லை அவருக்கு. அதனால் ஒரு மந்திர வித்தைக்காரனைப் போல தன் அணியினரை நைசாக ஒளித்து வைத்து விடுகிறார். தமிழ் இலக்கியத்தின் வலதுசாரிகளை ஒரு பட்டியலிடுவோமா? எனக்குத் தெரிந்தவர்களை நான் சொல்கிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் கூறுங்கள். என் நோக்கம் வலதுசாரி இலக்கியவாதிகள் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள், இலக்கிய தகுதி அற்றவர்கள் எனக் கூறுவதல்ல. இலக்கியப் பிரதியில் ஒருவரின் அரசியலுக்கு முரணான போக்குகளும் இடம்பெறுமென்றே நம்புகிறேன். ஆகையால் என் பட்டியல் இந்த எழுத்தாளர்களின் கட்டுரைகள், கருத்துக்களை, அரிதாக இலக்கியத்தையும் சார்ந்தே இருக்கும்.

1. பாரதியார் - இவரது வைதீக, சாதிய இந்து தேசியவாதத்துக்கு ஏகப்பட்ட சான்றுகளை கவிதைக்குள்ளே காணலாம். 


2. புதுமைப்பித்தன் - இவரது கட்டுரைகளில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் மீது பிற்போக்கான சிந்தனைகள் வெளிப்படும். சில கதைகளிலும் இவை உண்டு. இது குறித்து தமிழ்ச்சூழலில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இன்னொரு பக்கம் பு.பி தனது புனைவுகளில் இந்த வலதுசாரித்தனத்தை கடந்தும் சென்றிருக்கிறார். 


3. வெங்கட்சாமிநாதன் - வெளிப்படையாகவே திராவிடத்தை, இடதுசாரிகளை எதிர்த்து எழுதியவர். அதே நேரம், நாட்டார் வழக்காற்றியலில் ஆர்வம் கொண்டதும் தான். தனிப்பட்ட வாழ்வில், நான் அறிந்து, சாதிய பாகுபாடு பாராமல் பழகியவர்.


4. கோவை ஞானி - இவர் தமிழ் தேசியத்தையும் வைதீகம் சார்ந்த கலாச்சார இந்துத்துவாவையும் இணைக்க முயன்று, அதை வைத்து இலக்கிய விமர்சனம் எல்லாம் முயன்று பரிதாபமாகத் தோற்றவர்.


5. க.நா.சு - தமிழ் நவீனத்துவத்தில் பார்ப்பனியத்தை நைசாக கலந்தவர். தமிழ் இலக்கியத்தை தனிமனிதவாதம், பெரும்போக்கு அரசியல் மறுப்பின் பெயரில் திராவிட எதிர்ப்பு மனநிலை என மாற்றியவர். இதுவே பின்னர் இங்கு சிறுபத்திரிகை மனநிலையாக உருப்பெற்றது. பகுப்பாய்வின் இடத்தில் ரசனையை முன்நிறுத்தி இலக்கிய வாசிப்பை தன்னிலையின் வெளிப்பாடாக மட்டுமே கண்டவர். உ.தா., ‘இந்த கதை ஒரு உன்னதமான கதை என என் வாசிப்பு எனக்குக் காட்டுகிறது. அது ஏன் எனக் கேட்காதீர்கள், ஏனென்றால் அந்த உணர்வு தர்க்கத்துக்கு உடன்படாது, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்பதே க.நா.சுவின் ரசனை விமர்சனம். (மோடி நல்லவர், நாங்களே இந்துக்களின் பாதுகாவலர்கள், ஏனென்று கேட்காதீர்கள், நம்புங்கள் என சங்கிகள் கோருவதைப் போன்றே இது இருப்பதை கவனியுங்கள்.)   இவருடைய கதைகள், நாவல்களில் உள்ள இந்த போக்கைக் குறித்து நான் எனது முனைவர் பட்ட ஆய்வில் எழுதியிருக்கிறேன். ஆனால் இவரை தீவிர நவீனத்துவராக மட்டும் பார்க்கிற திராவிட சித்தாந்தத்தில் வரும் (தமிழவன் போன்ற) விமர்சகர்களும் இங்கு உண்டு.


6. ஜெயகாந்தன் - இதை நான் விளக்கத் தேவையில்லை. ஜெ.மோவின் கலாச்சார இந்துத்துவத்திற்கு முன்னோடி இவர் தான்.


7. அசோகமித்திரன் - மோடி 2014இல் ஆட்சி அமைத்த போது “என்ன செய்யப் போறீங்க மிஸ்டர் மோடி?” என நான் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் மோடி குறித்த ஏற்பட்டுள்ள மிகைப்படுத்தப்பட்ட சூப்பர் மேன் பிம்பம் விரைவில் சரியும் என வாதிட்டிருந்தேன். அதைப் படித்து விட்டு அசோகமித்திரன் என்னிடம் ஒரு இலக்கிய கூட்டத்தில் வைத்து சற்று புண்பட்ட குரலில் “மோடி இப்போ தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார். ஏன் அவருக்கு அவகாசமே அளிக்காமல் அவசரமாக ஒரு முடிவுக்கு வரீங்க?” என வருத்தப்பட்டார். அவரது “பதினெட்டாவது அட்சக்கோடு“ முழுக்க இஸ்லாமிய வெறுப்பு விரவிக் கிடக்கும். ஆனால் கதைசொல்லியின் நோக்கில் இறுதியில் மனிதநேயத்தின் உச்சத்தில் அவன் அந்த சிறுபான்மை வெறுப்பைக் கடப்பதாக காட்டியிருப்பார். ஆனால் நாவலில் உள்ள வேறு விஷமத்தனங்களுக்கு எங்கும் மறுப்போ முரணான கருத்துக்களோ இராது.


8. ஜெயமோகனே தான் - இவர் ஒரு கலாச்சார இந்துத்துவவாதி. பொருளாதாரரீதியாகவும் பொதுத்துறைகள் ஒழிந்து அந்த இடத்தில் தனியார்மயம் வர வேண்டும் என்கிறவர். தக்கலையில் இவர் வேலை பார்த்த போது ஆர்.எஸ்.எஸ் பெரியவர்களுடன் நல்லுறவில் இருந்தார். அரவிந்தன் நீலகண்டனை ஒரு இளைஞராக இவரது வீட்டில் வைத்து பார்த்திருக்கிறேன். “விஷ்ணுபுரம்” நாவலை ஒரு ஆர்.எஸ்.எஸ் பதிப்பகம் விற்றது, விளம்பரப்படுத்தியது என காலச்சுவடு விமர்சன நிகழ்ச்சியில் எஸ்.ரா கடுமையாக விமர்சித்தது நினைவிருக்கும். சாராம்சமான ஒரு இந்திய உளவியல், ஓர்மை, அடையாளம் உண்டு என நினைக்கும் இவர் அதை ஒருவர் கண்டடைய இந்திய காவிய மரபில் இருந்து கதைகூறும் வடிவம் உருவாக்கப்பட வேண்டும் எனச் சொல்கிறார். இதற்காகவே “வெண்முரசு” எனும் பிரம்மாண்டமான நாவல் தொடரை நீண்ட காலமாக எழுதினார். மென் இந்துத்துவ அணுகுமுறை கொண்ட வாசகர்களையும், இந்துத்துவா என்றால் என்னவென்றே அறியாத, இந்து மத ஈர்ப்பு கொண்ட வாசகர்களையும் ஒரு சேர இப்படைப்பால் தன் பக்கம் ஈர்த்தார்.  திராவிடம் மீதான அவருக்கு வெறுப்புக்கு அது வைணவத்தை தாக்குகிறது (என்றோ ஒருநாள் தாக்கியது) என்பதே காரணம். இடதுசாரிகளுக்கு எதிர்த்தரப்பாக வெளிப்படையாகவே தன்னை முன்வைப்பவர். இந்த வெளிப்படையான மதவாதமே ஜெயமோகன் மீதான் ஈர்ப்புக்கு முக்கிய காரணம் என பொ.வேல்சாமி நிறப்பிரிகை கட்டுரையில் சொல்கிறார். அது ஒரு நல்ல அவதானிப்பு என்பேன். வைணவ இந்து மதம் கலாச்சார ரீதியாக ஒடுக்கப்படுகிறது, அது இலக்கியத்துக்கும், நம் பண்பாட்டுக்கும், இந்தியா எனும் தேசிய ஓர்மைக்கும் பாதகமானது என நம்புகிறவர். இவர் சாதீயவாதி அல்ல என்பதை என் தனிப்பட்ட அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதே போல இறை நம்பிக்கையற்றவர் என நினைக்கிறேன். அவருடைய வீட்டிலோ அலுவலக அறையிலோ சாமி படங்களை நான் கண்டதில்லை. மதச்சின்னங்களை பெரும்பாலும் அணியவும் மாட்டார். அதனாலே இவரை கலாச்சார இந்துத்துவர் என்கிறார்கள். சாவர்க்கரைப் போன்ற இந்துத்துவர்கள் இறைமறுப்பாளர்களாக, மத சடங்குகளுக்கு எதிரானார்களாக இருந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஆக, வரலாற்றில் இதற்கு ஒரு தொடர்ச்சி உண்டு.


9. ஜெயமோகனின் ‘மடமான’ விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தை சேர்ந்த அவரை எழுத்தில் அப்படியே பிரதி எடுக்க முயல்கிற சுரேஷ் பிரதீப், அனோஜன் போன்றவர்கள். சுரேஷ் பிரதீப்பின் முதல் நாவலில் ஒரு பின்நவீன தன்மை இருந்தது. ஆனால் அண்மைக் கட்டுரைகளில் அப்பட்டமான கலாச்சார இந்துத்துவாவே வெளிப்படுகிறது. அவர் அயோத்திதாசரைக் கூட இந்துத்துவ பாதையில் கைபிடித்து அழைத்து செல்ல முயல்வதை, அயோத்திதாசரின் வைதீக எதிர்ப்பை மறைத்து அவரை வெறுமனே ஒரு தலித் அரசியல் தலைவராக மட்டுமே சித்தரிக்க முயல்வதை பார்க்கலாம். ஜெ.மோ ஆரம்பித்து வைத்த புரோஜெக்டை அப்படியே அட்சரம் பிசகாமல் முன்னெடுக்கும் சீடர் இவர். இவர்கள் இருவரையும் போன்று வேறு சிலரும் இருக்கிறார்கள் என்றாலும் அறியப்பட்ட பெயர் எனும் அளவில் குறிப்பிடுகிறேன்.

10. வண்ணநிலவனின் அரசியல் கட்டுரைகளை நான் படித்ததில்லை. ஆகையால் அவரைப் பற்றி உறுதியான கருத்தை சொல்ல இயலவில்லை. ஆனால் அவரைப் பற்றி அப்படியும் ஒரு பார்வை உண்டு. சோ. தர்மன், கி.ராவின் புனைவுகளில் உள்ள சிறுபான்மையினர் மீதான காழ்ப்பு குறித்தும் விமர்சனங்கள் எழுந்ததுண்டு. சோ. தர்மனைப் பொறுத்தமட்டில் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் வரும் வரையில் அவர் பேஸ்புக்கில் ஒருவித இந்துத்துவ சாயலுடன் எழுதினார் என்பதும் உண்மையே. கி.ராவைப் பொறுத்தமட்டில் அவருடைய நாவலான கோபல்ல கிராமத்தில் வரும் இஸ்லாமிய படையெடுப்பு ஒரு வெறுப்பு மனநிலையை வெளிப்படுத்துகிறது எனும் விமர்சனம் உண்டு. கி.ரா சொல்லும் இந்த இஸ்லாமிய படையெடுப்பே வரலாற்றுரீதியாக உண்மையல்ல, அது ஒரு பொதுப்புத்தி கருத்து மட்டுமே என நிறுவுகிற கட்டுரை ஒன்றை படித்திருக்கிறேன் (கலிபோர்னியா பல்கலையின் வரலாற்று பேராசிரியரான சஞ்சய் சுப்பிரமணியம் எழுதியது). ஆனால் கி.ராவுடைய இடதுசாரி பார்வையையும் அவரது கதைகளில், அபுனைவுகளில் கண்டிருக்கிறேன். ஆகையால் இவர்களை வெளிப்படையான இந்துத்துவர்கள் என உறுதிபட கூற நான் சற்று தயங்குவேன். என்னிடம் அதற்கான தரவுகள் இல்லை. இனி உங்கள் பட்டியலைக் கொடுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...