முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதை, எப்படி, எவ்வளவு எழுதுவது?





எழுத்தாளர்கள் தினமும் எழுந்ததும் ஒரு கதை அல்லது 500 சொற்களாவது எழுதுவது பற்றி விஜய மகேந்திரனின் பதிவைப் பார்த்தேன். ஒரு காபி குடித்த வேகத்தில் ஜெயமோகன் ஒரு சிறுகதை எழுதும் வினோதத்தையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஏன் மற்ற எழுத்தாளர்களால் அது முடிவதில்லை? இது குறித்த என் கருத்துக்களை கீழெ தொகுத்திருக்கிறேன்:


1. தினமும் எழுதுவது நல்ல பழக்கம். ஆனால் நிறைய எழுதுவது அவசியமல்ல. மிகக் குறைவாகக் கூட தினமும் எழுதலாம். எழுதியதை திருத்தி செறிவாக்கலாம். தொடர்ந்து எழுத்துக்குள் இருக்க வேண்டும், ‘உற்பத்தித் திறன்’ முக்கியமல்ல.

2. ஜெயமோகன் ஊரடங்கு காலத்தில் தொடர்ச்சியாக எழுதிய கதைகளைக் கண்டு நிறைய பேர் வியந்தார்கள். கமல் கூட பிக்பாஸில் வியந்து பேசினார். ஜெயமோகன் தான் நிறைய எழுதுவதால், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரும் நாவலை எழுதியதால் தன்னை ஒரு ‘பெரிய எழுத்தாளராக’ கருதுகிறார். இன்னொரு பக்கம் நிறைய எழுதுவதால் அவையெல்லாம் தரமற்றவை என்றும் விமர்சனம் உண்டு. இரண்டுமே மிகை தான் - சங்கர் பிரம்மாண்டமாக படமெடுப்பதால் அவர் சிறந்த இயக்குநரா?

3. எனக்கு பதின்வயதில் தல்ஸ்தாயின் பிரம்மாண்டமான நாவல்கள் மீது ஒரு மயக்கம் இருந்தது. சமீப காலம் வரை அவரை புனைவுகளின் கடவுள் என சொல்லி வந்தேன். ஆனால் இப்போது என் பார்வை மாறி வருகிறது. அவரது நாவல்களை திரும்ப படிக்கையில் அதில் வடிவம் சார்ந்து நிறைய கோளாறுகள் - குடும்பம், மதம், ஒழுக்கம், வரலாறு குறித்த பிரச்சாரத்துக்காக அவர் தேவையில்லாமல் எழுதி சேர்ப்பதாக - தோன்றுகிறது. ஜெ.மோவின் “விஷ்ணுபுரம்”, “பின் தொடரும் நிழலின் குரல்” போன்ற நாவல்களிலும் இந்த மாதிரியான ‘தொப்பை’ நிறைய உண்டு. வேறு சிலர் செண்டிமெண்டுக்காக, உணர்ச்சித் தளும்பலுக்காக கூடுதல் பக்கங்களை எழுதி சேர்ப்பார்கள். நாவலை தொடராக எழுதும் போதும் இப்படி நடப்பதுண்டு. அதனால் 150 பக்கங்களோ 400 பக்கங்களோ நாவல் ஒன்று தான். நீளத்தை கதையின் தேவையே தீர்மானிக்க வேண்டும்.

4.  இதே போலத் தான் 100 கதைகளை எழுதுவதும் 10 கதைகளை எழுதுவதும் ஒன்று தான் - நீங்கள் முக்கியமாக கருதுகிற விசயங்களை சிறுகதை வடிவில் பரிசீலிக்க எத்தனை கதைகளை எழுத வேண்டுமோ அத்தனை எழுதலாம்.  மனுஷ்யபுத்திரன் தான் தமிழில் மிக அதிகமாக நவீன கவிதை எழுதியவர். அவருக்கு அடுத்தபடியாக தேவதேவன். ஆனால் கவிதைகளின் எண்னிக்கையால் அவர்கள் மதிப்பிடப்படக் கூடாது. தொடர்ந்து கவிதையில் இருக்கும் தேவை ஏற்படும் ஒருவர் எழுதிக் குவிக்கலாம். இன்னொருவர் அவ்வப்போது கவிதைக்குள் வந்து விட்டு விலகலாம். எந்த பாதகமும் இல்லை. 

5. நான் 2017இல் இருந்தே நாவல்கள் எழுத முயன்று வருகிறேன். இரண்டு நாவல்களை ஒரு லட்சத்து 60 ஆயிரம் சொற்களுக்கு மேல் எழுதி விட்டு திருப்தியில்லாமல் வைத்து விட்டு அடுத்த நாவலுக்குள் சென்று விட்டேன். நான் நினைத்திருந்தால் இரண்டையும் அவசரமாக முடித்து பிரசுரித்திருக்கலாம். ஆனால் எழுத்தாளனுக்கு தமிழில் வருமானம் இல்லாததால் இது போல நாவலை ஒத்தி வைக்கும் சாவகாசம் கிடைக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக என் பிரசுரங்களை கவனிப்பவர்கள் நான் புனைவை விட்டு முழுக்க விலகி விட்டேன், கட்டுரை மட்டுமே எழுதுகிறேன் என நினைக்கலாம். ஆனால் தினமும் 200-500 சொற்களாவது என் நாவலில் எழுதி சேர்க்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. எப்படி மதிப்பிடப் படுகிறேன் என்பது குறித்து எனக்கு கவலையும் இல்லை. என் நான்காவது நாவல் பிரசுரமானதும் நான் ஒரே நாளில் ஹருகி முராகாமி ஆகி விட மாட்டேன் என எனக்குத் தெரியும். என் திருப்திக்காக மட்டுமே பதிப்பிக்கிறேன்.

6. தமிழ் எழுத்தாளர்களில் பலவித மாறுபட்ட ஆர்வங்கள் கொண்டோர் உள்ளனர். ஓவியம், சிற்பக்கலை, வரலாறு, விவசாயம், வணிகம், பங்குச்சந்தை, விளையாட்டு, இசை, நாட்டார் வழக்கு, தத்துவம், சினிமா, அரசியல், போராட்டங்கள், தொழிற்சங்கம், பதிப்பு, ஜோசியம், கோயில், மாயமந்திரங்கள், சடங்குகள், சமையல் என்று. ஆனால் அவர்களில் ஒரு பகுதியினர் இந்த ஆர்வங்களை எழுத்தில் பெரும்பாலும் கொண்டு வர மாட்டார்கள். இன்னொரு பகுதியினரை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய ஒரு புத்தகத்துக்கும் இன்னொன்றுக்கும் சம்மந்தம் இருக்காது - தமிழ்ச்செல்வன் சமையல் பற்றி புத்தகம் எழுதினார்; தத்தம் ஊர்களின் வட்டார வழக்கை, நாட்டார் பழக்கங்களை தொகுத்த பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன், கதைகளை தொகுத்த கி.ரா, பதிப்பிக்கப்படாத நூல்களைத் தொகுப்பதில், பதிப்பு வரலாற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்ட கடற்கரய், உலக சினிமா நூல் கொண்டு வந்த எஸ்.ரா., ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி எழுதிய பி.ஏ கிருஷ்ணன், தமிழ் சினிமா வரலாற்றை எழுதிய அஜயன் பாலா என இப்பட்டியல் நெடியது. நான் கூட குங்பூ பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். ஐரோப்பாவையும், ஆசியாவையும் எடுத்துக் கொண்டால் காப்கா கட்டிடக்கலை பற்றி நிறைய எழுதினார் என்றும், அவை பதிப்பிக்கப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். கட்டிடத்துக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்மந்தம்? முராகாமி ஓட்டப்பயிற்சி பற்றியும், கல்ட் அமைப்புகள் பற்றியும் புத்தகங்கள் எழுதினார். அவை ஒன்றும் வெகுஜன ஊடகத்துக்கான நூல்களும் அல்ல. தரமான புத்தகங்கள். சார்த்தர், காமு போன்றோர் தத்துவத்திலும் இலக்கியத்திலும் ஒரே சமயம் ஆர்வம் காட்டினர். Story of the Eye நாவலை எழுதிய ஜார்ஜ் பத்தாய் இலக்கிய போர்னில் இருந்து தீவிரமான தத்துவ நூல்களை வரை எழுதியவர். தமிழில் துரதிஷ்டவசமாக இப்படி ஒரு மரபு இல்லை. நம்முடைய இலக்கியவாதிகள் மடி பார்ப்பவர்கள். ஏதோ இலக்கியத்தில் எழுந்து இலக்கியத்தில் பல்துலக்கி துப்பி இலக்கிய டிபன் சாப்பிடுவது போல அறுபதுகளில் இருந்து இங்கு இயங்கிய சிறுபத்திரிகை எழுத்தாளர்களை கவனித்தால் நமக்கு ஒரு மயக்கம் ஏற்படும். இவர்களாலே இலக்கியவாதி என்றால் இலக்கியம், இலக்கியம் சம்மந்தமான எழுத்துக்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனும் பார்வை இங்கு வலுப்பட்டது; நம்முடைய சாதீய மனப்பான்மைக்கும் இதற்கும் ஒரு தொடர்பு உண்டு எனவும் தோன்றுகிறது - எனக்கு இந்த எழுத்து ஒழுக்கத்துடன் உடன்பாடில்லை. அவ்வப்போது நம் மனத்தை ஆக்கிரமிக்கிற ஆர்வங்களில் முழுசாக நேரம் செலவழித்து விட வேண்டும். ஏனென்றால் அந்த காலகட்டத்தை கடந்து விட்டால் பின்னர் திரும்ப சென்று எழுத முடியாது. கடந்த சில ஆண்டுகளாக எனக்கு தத்துவம் குறித்து எழுத ஆர்வம் மேலிடுகிறது. நான் அதைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டால் பத்து வருடங்களுக்குப் பிறகு என் மனம் தத்துவத்தை விட்டு இன்னொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். இப்போது எனக்குள் எழும் சிந்தனைகளும் அப்போது மறைந்து போகும். எழுத்துக்காக அல்ல வாழ்க்கை, வாழ்க்கைக்காகவே எழுத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...