முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் அரசமைப்பு சட்டத்துக்குள் வைக்கப்பட்ட வெடிமருந்துகள்


நமது அரசமைப்பு சட்டம் ஒப்பற்றது என்றெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் போதெல்லாம் அது எந்தளவுக்கு மாநில உரிமைகளுக்கு விரோதமாக, ஒன்றிய அரசிடம் அளவுக்கு மீறிய அதிகாரத்தை கொடுத்திருக்கிறது, இதைச் செய்த அந்த மேதைக்கு கும்பி பாகம் தான் கொடுக்க வேண்டும் என கடுங்கோபம் வருகிறது. எழுபதுகளின் துவக்கத்தில் மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களவைக்கான இடங்களை அதிகப்படுத்துவோம் எனும் ஒரு அநீதியான, இந்தி-மைய அரசியல் முடிவை நம் ஒன்றிய அரசியல்வாதிகள் எடுத்து அதை சட்டமாக்குகிறார்கள். அதைச் செய்யும் முன் அனைத்து மாநிலங்களிடமும் கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அந்த சட்டத்தின் விளைவாகவே உ.பி, பீகார் உள்ளிட்ட நான்கு இந்தி மாநிலங்களில் வெல்லும் கட்சியே ஒன்றிய ஆட்சியை பிடிக்க முடியும் என்றாகியது. பிற மாநில மக்கள் தம் முக்கியத்துவத்தை இழந்தனர். இதன் நீட்சியாகத் தான் இந்திராகாந்தி நடத்திய மதவாத அரசியல், பாகிஸ்தானுடனான போர், அதைக் கொண்டு தேசபக்தியை வளர்ப்பது, அயோத்தியில் ராமனுக்கு கோயில் கட்டுவதை தேசிய பிரச்சனை ஆக்கியது சாத்தியபட்டது. ஒரு சின்ன முடிவு தான், ஆனால் அதன் விளைவுகள் பாரதூரமானவை. இது ஏன் அநீதியான முடிவு என்றால் அந்த வரலாற்று சந்தர்பத்தில் நாம் இந்தியா முழுக்க மக்கள் தொகையை கட்டுப்படுத்த தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். இப்பிரச்சாரத்தை படித்த, முற்போக்கு மாநிலங்கள் பொருட்படுத்தி பின்பற்றிய மாநிலங்கள் விரைவில் மக்கள் தொகை வலிமையை இழந்து, மக்களவையில் தம் பிரதிநுத்துவ இடங்களும் பாதியாவதை தாமதமாக உணர்ந்தனர். இப்போது தமிழ்நாட்டு மக்களின் மகப்பேறு சராசரி 1.5 என்கிறார்கள். அதாவது ஒரு குழந்தைக்கு மேல் நாம் பெறுவதில்ல. ஆனால் உ.பி போன்ற இந்தி மாநில மக்களோ 3 குழந்தைகளுக்கு மேல் சராசரியாக பெற்றுக் கொள்கிறார்கள். விரைவில் மாநிலங்களவையின் இடங்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்படும் போது இந்த இந்தி மாநிலங்கள் இன்னும் அதிகமான இடங்களைப் பெறப் போகின்றன. விளைவாக அந்த மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும். இங்கு தான் அநீதியின் உச்சமே வருகிறது - அதிக வரியை வழங்குவது குறைந்த ம்க்கள் தொகை கொண்ட மாநிலங்கள். ஆனால் அதிக நிதியைப் பெறுவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள். அதாவது ஒழுங்காக அரசின் கோரிக்கையை பின்பற்றிய மாநிலங்களுக்கு தண்டனை, அதைப் பின்பற்றத் தவறிய மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரமும், கூடுதல் நிதியும். இப்போது கேட்போம் - மக்களாட்சி என்பது மக்களின் வரியால் நடப்பது. அப்போது அதிக நிதி அளிக்கும் மாநிலத்துக்குத் தானே அதிக அதிகாரமும் நிதிப்பங்கீடும் தரப்பட வேண்டும்? அல்லது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே எண்ணிக்கையில் மக்களவை இடங்கள் தரப்பட வேண்டும். ஆனால் அப்படி செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இந்த சட்டத்தை உருவாக்கியவர்கள் தம் வாக்கதிகாரம் மக்கள் தொகை அதிகமான இந்தி மாநிலங்களில் இருந்தே வருகின்றன. ஆகையால் தென்னிந்தியாவை சுரண்டி, அதை நிரந்தரமாக அதிகாரமற்றதாக மாற்றும் சட்டத்தை இந்திக்காரர்கள் இயற்றினர்.

இப்படி அதிக மக்கள் தொகை கொண்டோரை அதிகார மிக்கவர்களாக மாற்றிய நம் இந்திக்கார தலைவர்கள் அடுத்து என்ன செய்கிறார்கள் பாருங்கள் - உ.பியில் முஸ்லீம்கள் அதிக பிள்ளைகளைப் பெற்று, அதிக மக்கள் தொகையை பெற்றிருக்கிறார்கள் எனும் பிரிவினைப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் நோக்கில் அங்குள்ள முஸ்லீம்களை இலக்காக்கும் ஒரு மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு சட்டத்தை கொண்டு வரப் போகிறார் யோகி ஆதித்யநாத். நியாயமாக இச்சட்டத்தை ஒட்டுமொத்தமாக இந்தி மாநிலங்கள் மீது கொண்டு வந்து அவர்களைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் ஒன்றிய அரசு, ஆனால் செய்ய மாட்டார்கள். நம் சட்டங்கள் எவ்வளவு அநீதியானவை, மக்களாட்சிக்கு விரோதமானவை, இந்திக்கார அரசியல்வாதிகளின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்டவை என கவனியுங்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டதில் இருந்து மாநிலங்கள் ஒன்றியத்துக்கு எதிராக கிளர்ந்தது அனேகமாக நடந்ததே இல்லை. ஆனால் பலமுறை தனக்கு சட்டபூர்வமாக அளிக்கப்பட்ட மிதமிஞ்சிய அதிகாரத்தால் ஒன்றிய அரசு எமெர்ஜன்ஸி, சீக்கியர்களை வேட்டையாடியது, பழங்குடிகளை ஒடுக்கி  நிலங்களில் இருந்து துரத்தியது, மொழி உரிமைக்காக, சுற்றுச்சூழலுக்காக போராடிய மக்களை சுட்டுக் கொன்றது, மாநிலங்களை அங்கு வாழும் மக்களின் அனுமதி இன்றி துண்டாடியது, ஒரு மாநிலத்தை திறந்தவெளி சிறைச்சாலை ஆக்கியது, ஒரு மாநிலத்தை நினைத்த வேகத்தில் யூனியன் பிரதேசம் ஆக்கியது, அண்டை நாடுகளுக்கு எதிராக தேவையில்லாமல் போரிட்டு அங்கும் தேசத்தை துண்டாக்கியது, அண்டை நாட்டில் போர் நடந்து லட்சக்கணக்கான தமிழர்கள் சாக மறைமுகமாக உதவியது என இந்த அரசமைப்பு அதிகாரத்தைக் கொண்டு ஒன்றிய அரசுகள் இதுவரை செய்த மானிடத்துக்கு எதிரான குற்றங்களின் பட்டியல் முடிவற்றது. ஒன்றிய அரசு சம்மந்தப்பட்ட மாநில மக்கள், நீதிமன்றம், சமூக செயல்பாட்டாளர்களிடம் கலந்தாலோசித்து மட்டுமே எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டும், அதுவும் சம்மந்தப்பட்ட மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி பெரும்பான்மை பெற்ற பின்னரே முடிவெடுக்க வேண்டும் என இந்த அரசமைப்பை உருவாக்கிய ஞானி ஒரு நிபந்தனையை சேர்த்திருந்தால் இந்த குருதி ஆற்றை, அநீதிகளை, மக்கள் விரோத செயல்களை நாம் தவிர்த்திருக்கலாம். வெள்ளை அரசு தன்னிச்சையாக நடந்து கொண்டதன் விளைவாகவே பிரிவினை வன்முறை நடந்து லட்சக்கணக்கானோர் வீணே கொல்லப்பட்டனர் எனக் கூறும் நாம் சுதந்திரத்துக்குப் பின் சுதேசி அரசையும் அப்படியே மாற்றி வைத்திருக்கிறோம் என உணரவில்லை - அந்த காலம் முதலே தென்னகத்தில் இருந்து பெரியார், அண்ணா போன்று வெகுசிலரே இந்த ஆபத்தை உணர்ந்திருந்தார்கள் என்பது வரலாறு. மிச்ச பேரின் கண்களை 'தேசபக்தி' மறைத்து விட்டது. 
இப்போது தமிழ் நாட்டை துண்டாக்குவோம் என சங்கிகள் கொக்கரிக்கும் போது அதை நான் அரசியலமைப்பின் பின்னணியில் வைத்தே பார்க்கிறேன். குறைந்த பட்ச கல்வி அறிவு கொண்ட மக்கள் அன்று இருந்திருந்தால் இந்த அரசியலமைப்பு சர்வாதிகார தன்மை கொண்டதாக இயற்றப்பட்டதை எதிர்த்திருப்பார்கள். ஆனால் நாம் தான் படிக்காத மாக்கான்களின் தேசம் ஆயிற்றே. அன்றைக்கு இந்த மேதைகள் அரைத்த மிளகாயின் எரிச்சல் அவ்வப்போது உயிரைப் பறிக்கும் போது கத்துகிறோம், கூவுகிறோம், ஆனால் தீர்வை யோசிப்பதில்லை.
முதலில் நாம் இந்த அரசியலமைப்பை கடவுளாக்கி கொண்டாடுவதை நிறுத்தி அதை நீதியின் பாற்பட்டதாக, சர்வாதிகாரத்துக்கு எதிரானதாக மாற்றி ஒன்றியம் தன்னிச்சையான அதிரடி முடிவுகளை எடுக்கும் சாத்தியத்தை நீக்கி, அமெரிக்க செனட் அமைப்பைப் போல இந்த தேசத்தின் ஆட்சி முறையை மாற்றுவோம். இப்போதுள்ள அரசியலமைப்பை அடிமைகள் மட்டுமே ஆதரிப்பர். தமிழ்நாடு உடைக்கப்பட்டால் அந்த சிறுபான்மையான மதவாதிகள் மட்டுமே கொண்டாடுவர். ஏனென்றால் அவர்கள் பிழைப்புவாதிகள்!
நாம் ரொம்ப காலமாக ஆடுமாடுகளாக இருந்து விட்டோம். போதும்!
இதை எதிர்த்து தொடர்ந்து பேசுவோம், செயல்படுவோம், நாம் மாறினால் இந்த அரசுயலமைப்பும் ஒருநாள் முற்போக்கானதாக, மாநில உரிமைகளுக்கு இடமளிப்பதாக மாறும்!

மாறாக, எந்த மாநிலத்தில், யூனியன் பிரதேசத்தில் இருந்தால் என்ன, யார் எப்படி ஆண்டால் என்ன, நமக்கு சோறு தான் முக்கியம் என சிரித்துக் கொண்டிருந்தால் நாம் விரைவில் கல்வி, இணையம், கேள்வி கேட்கும் உரிமை, சமத்துவம் இல்லாதவர்களாகி விடுவோம். தெருக்களில் சதா ராணுவம் நின்று நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கும் சூழல் வரும். நம் வணிகங்கள் நசியும்,  நம் பிள்ளைகள் வருடக்கணக்காக பள்ளிக்கு செல்ல முடியாத நிலைமை வரும். நம்மால் சொந்தமாக ஒரு சேனல் நடத்தவோ, சினிமா எடுக்கவோ முடியாது, நம்மால் நம் மொழியில் எல்லா இடங்களிலும் பேச முடியாது, நம்மால் ஒரு புத்தகத்தை வெளியிட முடியாது எனும் நெருக்கடி நிலை சட்டரீதியாகவே ஏற்படுத்தப்படும். இந்த கொடுமைகளை காங்கிரஸ் அரசென்றால் சற்று நிதானித்து செய்யும்,  பாஜக அரசு ஒரே இரவில் செய்யும் என்பது தான் வித்தியாசம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...