முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்கள், ஆண்கள், சுதந்திரம்


பெண்கள், ஆண்கள், சுதந்திரம்

பேஸ்புக்கில் உள்ள ஆண், பெண் எழுத்தாளர்களைப் பற்றி நண்பர் மானசீகன் ஒரு பதிவு எழுதி இருந்தார். அதில் பெண் எழுத்தாளர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட டெம்பிளேட்டை உடைத்துக் கொண்டு எழுதுவதில்லை, “முகநூல் நவீன எழுத்தை” ஆண்களே கட்டி எழுப்புகிறார்கள் என்கிறார். நான் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை என்றாலும் (என்னவித கலகம் அது என விவாதம் திரும்ப வேண்டாம் என்று) ஆண்களை விட துணிச்சலாக பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதே என் நம்பிக்கை. ஒரே சிக்கல் பெண்கள் கலகம் பண்ணினாலும் அது ஆண்களால் ஒரு நுகர்வாக மாற்றப்படுகிறது. அவர்களை நிம்மதியாக ஒரு போட்டோ போடக் கூட நாம் அனுமதிப்பதில்லை. 

நான் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் எழுதவில்லை என்றாலும், எனக்கு சாத்தியமுள்ள சுதந்திரத்தில் சிறு பகுதி கூட முகநூலின் பெண் எழுத்தாளர்களுக்கு இல்லை. பொதுவெளியிலும் அப்படித் தான். அட, என் பேஸ்புக் பக்கத்தில் சுயவிபரத்தைப் பாருங்கள் - அதில் எங்கே வேலை பார்க்கிறேன் போன்ற தகவல்களை மறைத்து விட்டேன். பயம் தான் காரணம். வேறு பலரையும் போல நான் ஒன்றிய அரசைப் பற்றின விமர்சனக் கட்டுரைகளை, கார்ட்டூன்களை என் பக்கத்தில் வெளியிடுவதில்லை. ஒரு சமூகவலைதளப் பதிவுக்காக நான் என் வேலையை இழக்கத் தயாரில்லை. நாளை தமிழ்நாட்டுக்கு வந்து விட்டால் இந்த பயம் இருக்காது என்றாலும் இப்போதைய என் நிலையை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும்.
 எனக்கு தரப்பட்ட எல்லைக்குள் இருந்து தான் என்னாலே எழுதவும் செயல்படவும் முடிகிறது. எனில் பெண்கள் உள்ளிட்ட மற்றவர்களின் சுதந்திரம் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்.

இன்னும் இரண்டு விசயங்களை சுட்டிக்காட்ட நினைத்தேன். அதற்காகத் தான் இந்த பதிவே:

1) பெண்ணியத்திற்கு முக்கியமாக மூன்று அலைகளைக் குறிப்பிடுவார்கள். அதில் மூன்றாம் அலையானது பிரெஞ்சு பின்னமைப்பியல் சிந்தனையாளர்களால் முக்கியமாக உருவானது. எனக்கு அவ்வகை சிந்தனையாளர்களை மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு அடுத்தபடியாக வந்த ஆண்மையியல் ஆய்வாளர்களை (masculinity studies) என் முனைவர்பட்ட ஆய்வின் போது பயன்படுத்தி இருக்கிறேன். ஆக, பாலின ஆய்வுகளைப் (gender studies) பொறுத்தமட்டில் முதலிரு அலைகளின் போது எழுத கருத்துக்களுடன் என்னால் உடன்பட முடிவதில்லை. ஏனென்றால் அவை ஆண்-பெண் எனும் இருமையை உடல் சார்ந்து கட்டி எழுப்பப்படுகின்றன. சமூகத்தில் ஏற்கனவே உள்ள அந்த இருமையை தமது அரசியலுக்காக பயன்படுத்தி ஒரு விரோத சூழலை வளர்க்கிறார்கள் இப்பெண்ணியவாதிகள்.

 ஆண்-பெண் தன்னிலைகளை உடலைக் கடந்தவை, அவை மொழிக்குள் சாராம்சவாதத்தால் தோன்றி, அதே மொழிக்குள் உருமாறி மற்றொன்றாக ஆகக் கூடியவை எனக் கூறும் பின்நவீன பெண்ணியமும், பாலின விவாதங்களும் எனக்கு உவப்பானவை. ஆரம்ப கால இறுக்கமான, உடல்சார்ந்த பெண்ணியத்தை அம்பை உள்ளிட்டோர் இங்கு முன்னெடுத்தார்கள். அதுவே இன்றும் பேஸ்புக் உரையாடல்களில் பிரதானமாக உள்ளது. அதற்கு மாற்றாகவே இலக்கியத்தில் லீனா மற்றும் அவர் உருவாக்கிய பெண்ணிய அலையை சேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால் இந்த பலவகைப்பட்ட பெண்ணியவாதிகள் இடையில் கொடுக்கல் வாங்கலும் தொடர்ந்து உள்ளது. 

நான் எழுத வந்த போது இங்கே பெண்ணிய உரையாடல்களும் ஆண்களின் கொடும் அமைதியும் இருசாரிகளாக பிரிந்திருந்தனர். குடும்பத்தில், வேலையிடத்தில், சமூகத்தில் பெண்கள் செலுத்தும் மென்-வன்முறை உண்டு. அதை யாரும் பேசுவதில்லை. அதனாலே நான் சில கட்டுரைகளை அந்த கோணத்தில் ஆண்மையியல் நோக்கில் எழுதினேன். குறிப்பாக, நெருக்கடிக்கு உள்ளாகி பலவீனப்படும் ஆண்மையின் உளவியல் சினிமா, இலக்கியப் பிரதிகளின் பின்னணியில் ஆய்வு செய்து எழுதினேன், வாசக சாலையின் கூட்டமொன்றில் பேசவும் செய்தேன். அதன் நீட்சியாகவே “மீ டூ” இயக்கம் குறித்து அதன் பிரச்சனைகளை மையப்படுத்தி ஒரு நூலும் எழுதினேன். அதிலுள்ள வாதங்களுடன் நான் இன்றும் உடன்பட்டாலும், அதன் அறச்சிக்கல் குறித்த தெளிவு எனக்கு அண்மையில் தான் ஏற்பட்டது. இன்றுள்ள நிலையில் நிச்சயமாக அந்நூலை நான் எழுத மாட்டேன். (அதைப் பற்றி வேறொரு குறிப்பு எழுதியிருக்கிறேன்.) ஆக, இன்றும் எனக்கு பின்னமைப்பியல் பெண்ணியவாதமே ஏற்கத்தக்கது என்றாலும் ஆரம்பகால பெண்ணியவாதத்தை பின்பற்றுவோரின் அரசியல் நியாயத்தையும், அறத்தையும் புரிந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு ஆணாலும் தன் மொழியிலும் உரையாடல்களிலும் இருத்தலிலும் பெண்மையின் “இருமையற்ற நிலையை” எட்ட முடியும், அதுவே அவனது இலக்காக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சுருக்கமாக, ஆண்கள் பெண்களைப் போல் இருக்க முயல வேண்டும். அதுவே அவர்களின் உளநலனுக்கும் நல்லது.

அதே நேரம் ஆண்கள் தம்மளவிலும் “பெண்மையின் இருத்தலில்” இருக்கையில், பெண்களுடனான உறவில் தடையற்ற ஆண் தன்மையை முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். “தடையற்ற” என நான் சொல்வது வன்முறையாலான, கெட்டவார்த்தைகளை உதிர்க்கும், களிப்பை மட்டும் முன்னெடுக்கும் செயல்களை அல்ல. பெண்ணியம் ஏற்படுத்தி உள்ள குற்றவுணர்வை தாண்டிச் செல்வது, பெண்களிடம் பாசாங்கில்லாமல், அரசியல் சரிநிலை இல்லாமல் இருப்பதையே நான் வலியுறுத்துகிறேன். ஏனென்றால் பெண்களே இத்தகைய ஆண்களை விரும்புவதில்லை.

 நம்மிடம் நிறைய கசடுகள் உள்ளன, ஆனால் அந்த கசடுகளை தடையற்று வெளிப்படுத்தும் போதே நமது தன்னிலை முழுமையாகிறது, அப்போதே நேர்மையானவர்கள் ஆகிறோம். கசடுகளை சேர்த்து வைத்து, மறைத்து வைத்து என்றோ ஒருநாள் வெளிப்படும் போது நாம் வன்முறையாளர்கள் ஆகிறோம்.

 மேலும் ஆண் பாலின அடையாளம் ஒரு புனைவு தானே, அதை ஏன் எடுத்து அணியக் கூடாது? அது நாம் என்றால் தானே கவலைப்பட வேண்டும்? நாம் அதை எடுத்து அணியாத போது பெண்கள் பெண்மையுடன் ஆண்மையையும் சேர்த்து அணிகிற நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள். ஆகையால் பெண்களிடம் ஆண்கள் முழுக்க முழுக்க மென்மையாக, கனிவாக, நளினமாக, நாகரிகமாக நடந்து கொள்வதுடன் நான் உடன்படவில்லை. அத்தகைய உறவுகள் நிலைக்காது. இது புரியாததாலே பேஸ்புக்கில் ஒரு இளம் ஆண் எழுத்தாளர் பஷீரின் “பூவன் பழம்” கதையை கண்டித்து ஒரு பதிவு எழுதி இருந்தார். ஏனென்றால் பெண்ணிய கோணத்தில் அது அவருக்கு தவறான கதையாகப் படுகிறது. பஷீரின் சிறப்பு என்னவென்றால் இதை (சீண்டலை, மிரட்டலை, செல்லமாக அடித்தலை) ஒரு உன்னதமான விளையாட்டாக மாற்ற அவரால் முடிந்தது, அதை மிக எளிதாக, அனைவருக்கும் புரியும்படியாகவும் அவரால் சொல்ல முடிந்தது. பெண்ணிய கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு படித்தாலும் இன்றும் அக்கதையின் சேதி யாருக்கும் புரியும். அக்கதையின் சுருக்கத்தை அளிக்கிறேன். அது நான் அடுத்து சொல்ல வரும் விசயத்தை தெளிவாக்கி விடும்:

பஷீரின் கதையில் ஒரு இளம் தம்பதி வருகிறார்கள். தன் கணவனிடம் மனைவி தனக்கு ஆரஞ்சுப் பழம் வேண்டும் எனக் கேட்கிறாள். வெளியே கடும் மழை. வெள்ளப்பெருக்கு. அவன் தன் மனைவிக்காக துணிந்து வெளியே சென்று கடும் போராட்டங்களுக்குப் பிறகு ஆரஞ்சுப் பழம் கிடைக்காமல் பூவன் (வாழைப்) பழங்களை வாங்கி தன் மடியில் கட்டிக் கொண்டு வெள்ளம் மிகுந்த நதியில் நீந்திக் கடந்து வீட்டுக்கு இரவில் வருகிறான். அங்கே திருடனுக்கு பயந்து அவன் மனைவி கதவை அடைத்து வைத்து கையில் ஒரு வெட்டுக்கத்தியுடன் காத்திருக்கிறாள். பின்வாசல் வழி உள்ளே வரும் அவன் அவளிடம் பழங்களைக் காட்டுகிறான். அதை ஏற்க முடியாது எனக் கூறி முரண்டு பிடித்து அவள் அழுகிறாள். அவன் உடனே கத்தியை எடுத்து ஓங்கியபடி “இது என்ன?” என மிரட்டுகிறான். அவள் அழுகை ஓய்ந்து பயந்து போய் “இது ஆரஞ்சு” என்கிறாள். அப்படியே அவளை முழுக்க ஏற்க வைப்பதுடன் கதை முடிகிறது. காதலின் லீலையை, பாலின விளையாட்டின் உச்சத்தை இதை விட அழகாக வேறு யாராவது சித்தரிக்க முடியுமா?

2. மானசீகன் சொல்வது உண்மை தான் - எனக்கு பேஸ்புக்கில் (அன்றாட உலகிலும்) பெண்களை ரசித்து கொண்டாடுவதுடன் உடன்பாடில்லை. பெண்ணழகை நான் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் ரசிப்பதுண்டு. ஆனால் அதே சமயம் இது பொய், அது கட்டமைக்கப்பட்டது என என் மனம் எச்சரித்தபடியே இருக்கும். இது எனக்குள்ள ஒரு சிக்கல், உள்முரண். இது கிட்டத்தட்ட அனைத்து ஆண்களிடமும் உண்டு; அதனாலே தாம் மிகவும் ரசித்த பெண்களை தொடர்ந்து அருகில் இருந்து பார்க்க வாய்ப்பு அமையும் போது அவர்களுக்கு “அலுப்பு” ஏற்பட்டு வேறு பெண்களை நாடிப் போகிறார்கள். ஏனென்றால் அதே பெண்கள் எந்தளவுக்கு அழகற்றவர்கள் எனும் உண்மையை அவர்கள் எதிர்கொள்ள விரும்பவில்லை.  பெண்களின் “அழகை” அவர்களுடைய பேச்சிலும், உடலிலுமே நாம் நாட வேண்டும், “தோற்றத்தில்”அல்ல என நான் நினைக்கிறேன் (புக்காவஸ்கி தன் புனைவுகளில் அதிர்ச்சிகரமாக இதையே கூறுகிறார்). ஆனால் இது மிக மிக சிரமமானது. ஆனால் ஒருநாள் நம் மனத்தை இதற்கு பழக்கிட முடியும் என நம்புகிறேன். இது ஏன் முக்கியமென்றால், பெண்ணின் தோற்ற அழகை ரசிக்க ரசிக்க அவர்களிடம் இருந்து நாம் விலகிச் சென்றபடியே இருக்கிறோம், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளைத் தேடுவதை போல. பெண்களை ஆராதிப்பது ஒருவிதத்தில் பெண்களை வெறுப்பதாகும். இந்த பெண் அழகைப் பற்றி ஒரு புத்தகத்தை ஒருநாள் எழுத வேண்டும் என எனக்கு விருப்பமுண்டு.

என்னைத் தொடர்ந்து வாசிப்பதற்காக மானசீகனுக்கு என் நன்றி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...