இன்று என் மகனின் பிறந்த நாள். நான் அவனுடைய படங்களைப் பதிவேற்றியோ அவனைப் பற்றி அப்டேட் செய்தோ மூன்று வருடங்களுக்கு மேல் இருக்கும் - ஏனென்றால் நான் அவனைக் கண்டோ அவன் குரல் கேட்டோ அத்தனை ஆண்டுகள் ஆகின்றன. நியாயமாக நான் இன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் நான் இன்று கண்களில் நீருடன் தான் எழுந்து கொண்டேன். இன்றைய தினம் சபிக்கப்பட்டதாகி விட்டது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த துயரம் தான் என்னை மிகவும் உருக்குலைக்கிறது. மிகவும் கசப்பு நிறைந்தவனாக, புதிய நண்பர்களை நாடாதவனாக, எங்கும் பயணிக்க, புதிய அனுபவங்களைப் பெற விரும்பாதவனாக, எளிதில் உணர்ச்சிவயப்படுகிறவனாக, நேரில் சின்னச்சின்ன வியசங்களுக்கு மிகுதியாக கோபாவசம் கொள்பவனாக இந்த ஆண்டுகளில் மாறி விட்டேன். 2018-19 முழுக்க நான் அவ்வப்போது சாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். தற்கொலையை பலமுறைகள் திட்டமிட்டேன். நான் ஒரு டைப் ஒன் நீரிழிவு நோயாளி என்பதால் அது எனக்கு எளிது - தூக்கு மாட்டி தொங்க வேண்டாம். உயரத்தில் இருந்து குதிக்க வேண்டாம். இன்சுலினை கூடுதலாக எடுத்துக் கொண்டு ஒரே நாளில் கோமா நிலைக்கு சென்று விடலாம். அந்த நேரத்து வலியை மரத்துப்போக வைக்க மருந்தும் உண்டு. ஆனால் எழுத்து மட்டுமே இந்த கட்டத்தில் என்னைக் காப்பாற்றியது. இன்னும் ஒரு புத்தகத்தை எழுதி விட்டு உடனே சாகலாம் என நான் அதைத் தள்ளிப் போட்டபடியே இருப்பேன். ஒரு கட்டத்தில் அந்த வேட்கையை கடந்து விட்டேன் - ஏன் வேட்கை என்று சொல்லுகிறேன் என்றால் காமத்தை, பசியைப் போல அது நமக்குள் கட்டளையிடும். அக்குரலை நான் கேட்டிருக்கிறேன்.
ஒரே சிக்கல் என்னால் முன்பு போல நிலைத்து ஒரு புத்தகத்தில் வேலை செய்ய முடியவில்லை என்பது. குறிப்பாக நாவல்களை எழுதி முடிப்பதில் இது தடையாகியது. நாவல் எழுத மனநிம்மதி, மகிழ்ச்சி, நிதானம் எவ்வளவு அவசியம் என அப்போது நான் (அவை இல்லாமல் ஆன போது) புரிந்து கொண்டேன்.
கடந்த சில வருடங்களில் என் மனநிலை மேம்பட்டிருக்கிறது - ஆனால் நான் இன்னும் ஒரு காயம்பட்ட வனவிலங்கு தான். எப்போது ஒரு பாதுகாப்பின்மை, யாராலோ தாக்கப்படும் அச்சம், ஆறாத ரணத்தின் உணர்வு; எல்லா நிலைகளிலும், சிரிக்கும் போதும், இயல்பாக, மகிழ்ச்சியாக இருக்கும் போதும் நான் மனதுக்குள் அந்த ரணத்தை உணர்ந்தபடி, அதன் எரிச்சலுடன் தான் இருந்தாக வேண்டும். அந்த ரணம் தான் என் மகன்.
மணவுறவில் விரிசல் வரும் போது பெண்கள் அநேகமாக குழந்தையை அப்பாவிடம் இருந்து பிரித்து விட வேண்டும் எனத் தவிக்கிறார்கள். பழிவாங்கும் உணர்வு அவர்களைத் தூண்டியபடி இருக்கிறது. இந்த விசயத்தில் சமூகமும் ஓரளவுக்கு சட்ட அமைப்பும் பெண்களின் சார்பாகவே இருக்கிறது. (நீங்கள் பெரும்பணக்காரராக, அதிகாரம் மிக்கவராக இருந்தால் மட்டுமே இதில் விதிவிலக்கு இருக்கும்.) காலம் எவ்வளவு விரைவில் எல்லாவற்றையும் கலைத்து நிராதரவாக்கி விடும் என்பதை நான் தாமதமாகத் தான் உணர்ந்தேன். மரணம், வேலைநீக்கம், குடும்பத்தை இழப்பது எல்லாம் இப்படி ஒரே நாளில் நிகழ்ந்து விடும்; முந்தின நாள் கூட அப்படி ஒன்றை நாம் எதிர்பார்க்க மாட்டோம்; நிகழ்ந்த பின் அதை ஏற்பதும், அதற்கு ஏற்ப வாழ்க்கையை மாற்றி அமைப்பதும் சிரமம். இந்த எளிய உண்மையை நான் ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டிருக்கவில்லை. சொல்லப் போனால் ஊடகங்களில், சமூகத்தில் யாரும் இதைப் பற்றி பேசுவதில்லை. நாம் குடும்ப உறவுகளை நிரந்தரமானவை, மகத்தானவை என ரொமாண்டிசைஸ் பண்ணிக் கொண்டே இருக்கிறோம். ஆட்டம் கலைந்ததும் அப்படி ஒன்று நிகழவே இல்லை என்பது போல சமூகமும் நம்மைக் கடந்து விடும். ஒருவேளை இந்த புரிதல் ஏற்கனவே இருந்திருந்தால் நான் ஒரு அப்பாவாக பட்டும்படாமல், அன்பு வைக்காமல் ஆரம்பத்திலேயே விலகி இருந்திருப்பேன். ஆனால் உலகம் அதன் பொய்களால் என்னை ஏமாற்றி விட்டது.
நான் என் மகனைப் பிரியும் வரை தினமும் அவனைக் குளிப்பாட்டுவது, அவனுக்கான உணவைத் தயாரித்து அளிப்பது, அவனுடன் விளையாடுவது என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தேன். சில இலக்கிய கூட்டங்களுக்குக் கூட அழைத்து சென்றிருக்கிறேன். எனக்கு அவனைப் பற்றிய பெரிய கனவுகள் இருந்தன. நான் சிலரைப் போல பிள்ளைகளை மருத்துவர், பொறியியலாளர், பில்லியனர் ஆக்க வேண்டும் என்றெல்லாம் கனவு காணவில்லை; அது குப்பை வாழ்க்கை. எனக்குத் தெரிந்ததை அவனுக்கு சொல்லித் தர வேண்டும், என் நம்பிக்கைகள், சிந்தனைகளின் படி வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். (குழந்தைகளுக்கு நாம் தர முடிகிற மிகப்பெரிய செல்வம் அது தான் என நம்புகிறேன்.) ஒரு உயரிய சிந்தனையாளனாக, ஆளுமையாக உருவாக்க கனவு கண்டேன். ஆனால் இப்போது அவன் என் அணுக்கம் இல்லாமல், என் தாக்கம் இல்லாமல் வளருகிறான், வளரப் போகிறான் என நினைப்பது எனக்கு அளப்பரிய வருத்ததைத் தருகிறது.
இந்த அபத்தமான சட்ட அமைப்பு எனக்கு என் மகனுடன் செலவழிக்க இனி மாதத்தில் சில மணிநேரங்களை அளிக்கலாம். ஆனால் அது பசித்திருப்பவருக்கு ஒரே ஒரு பருக்கையை அளந்து அளிப்பதற்கு சமம்.
என் மகன் என்னைப் பற்றி என்னை நினைத்துக் கொண்டு வளருகிறான் என அடிக்கடி யோசிக்கிறேன். பொதுவாக இத்தகைய பிள்ளைகள் தம் தகப்பன்களை வெறுத்தபடித்தான் வளர்வார்கள். அப்படியே தான் அவர்கள் வளர்க்கப்படவும் செய்வார்கள். நான் அவன் மீதுள்ள வெறுப்பினால் அவனை பிரிந்து விட்டதாகத் தான் அவனுக்குள் ஆழமாக ஒரு உணர்வு இருக்கும். அந்த தன்னிரக்கமும், தாழ்வுணர்வும், அதை மறைப்பதற்கான கோபமும் தான் என் மகனை இனி மேல் செலுத்தும். இது எந்த விதத்தில் நியாயம் என எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அதில் சற்றும் உண்மை இல்லை. ஆனால் இந்த சட்ட அமைப்பும், சமூக அமைப்பும் அந்த பொய்யை இனி உண்மையாக்கி விடும்.
எனக்கு இது குறித்து சில கேள்விகள் உள்ளன:
1. ஒரு பொருளை நாம் வாங்கியதும் அதற்கு குறைந்த பட்ச உத்தரவாதத்தை ஒரு நிறுவனம் அளிக்கிறது. என்னுடைய போனை நான் அதைக் கையில் எடுத்ததும் உடைந்தாலோ அதை இன்னொருவர் பிடுங்கிக் கொண்டாலோ இந்த நாட்டு சட்டம் அதை அனுமதிக்காது. ஆனால் என் மகன் மட்டும் எப்படி என்னால் எப்போதும் பார்க்க முடியாதவனாக, பேச, வளர்க்க முடியாதவனாக ஆகிறான்? அதெப்படி அவன் என் மகனாகவும், மகனல்லாமலும் ஒரே சமயம் இருக்கிறான்?
2. எனில் சட்டத்தைப் பொறுத்தமட்டில் தந்தை-மகன் உறவு, தகப்பன் எனும் அடையாளம் பெயரளவிலானது மட்டும் தானா? எந்த சான்றிதழிலும் 90% அம்மாவின் பிள்ளை, 10% அப்பாவின் பிள்ளை என எழுதுவதில்லையே? சான்றிதழ் சொல்லுவது வேறு, வாழ்க்கை வேறா? அப்பா என்பவர் விந்துக் கொடையாளர் மட்டும் தானா? பெற்றெடுத்து, பால் கொடுப்பதால் மட்டுமே குழந்தை மீது தாய்க்கு 90% உரிமை வந்து விடுமா? இது சரி எனில் ஏன் சட்டம் இதை வெளிப்படையாக பதிவு பண்ணுவதில்லை?
3. ஒரு குழந்தையின் செலவுக்கான பணத்தை அப்பா அளிக்க வேண்டும், அல்லது ஒரு பகுதியை பங்களிக்க வேண்டும், ஆவணப்படியும் அவரே அப்பாவாக நீடிக்க வேண்டும், அவருடைய சொத்தில் அக்குழந்தை வாரிசு, ஆனால் அதனை வளர்க்கும், அதனுடன் நினைத்த போது நேரம் செலவிடும் உரிமை மட்டும் இல்லையென்றால் அது என்னவிதமான அநீதியான உறவு? சட்டம் இப்படித் தான் பார்க்கிறதென்றால் நான் எப்படி என் மகனுக்கு அப்பாவாக இருக்க முடியும்?
4. இந்த உலகில் பலவிதமான உறவுகள் உள்ளன. அவற்றில் குழந்தை-அப்பா உறவு தான் சற்று வித்தியாசமானது: நான் என் முதல்வரை விமர்சித்தாலும் கூட அவரை நான் நேரில் சந்திக்க விண்ணப்பம் வைக்கலாம். முதல்வர் மட்டுமல்ல என் பிரதமரைக் கூட நான் நேரில் சந்திக்கலாம். என் நண்பர்களை நான் எப்போதும் வேண்டுமெனிலும் அவர்களுடைய விருப்பத்தைப் பொறுத்து சந்திக்கலாம், உரையாடலாம். நான் வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் முழுக்க முழுக்க என்னுடையவை. நான் ஒரு கணினியை வாங்கும் போது இதை நீங்கள் குறிப்பிட்ட தினங்களில் சில மணிநேரங்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என எந்த நிறுவனமும் கூறுவதில்லை. கர்த்தர், அவதாரமெடுக்கும் இந்துக் கடவுள்கள் கூட இந்த பூமியில் எல்லாரிடமும் பழகினர், அனைவருக்கும் சந்திக்கக் கிடைக்கக் கூடியவர்களாக இருந்தனர். நாட்டை விட்டு தப்பித்து சென்ற நித்தியானந்தா கூட தான் என்ன பண்ணுகிறேன், எங்கிருக்கிறேன் என நமக்கு அப்டேட் பண்ணியபடி இருக்கிறார். ஆனால் உடைந்த குடும்பத்தில் பிள்ளைகள் மட்டும் நமக்கு காட்டப்படாமல் மறைக்கப்படுகிறார்கள். அவர்களைத் தேடி நாம் அலைந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களை எப்போது தாய்மார் அனுமதிக்கிறார்களோ, எவ்வளவு நேரம் சட்டம் அனுமதிக்கிறதோ அப்போதே பார்க்கலாம். பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு, மறைந்து வாழும் நித்தியானந்தாவுக்கு என் மீது உள்ள பந்தம் கூட, அவர்கள் என் தேடலுக்கு அணுக்கமாக உள்ள அளவுக்கு என் குழந்தை இருக்க முடியாதா? எனில் ஒரு தகப்பனாக என் இடம், அடையாளம் இந்த உலகில் ஆகக் கடைநிலையில் உள்ள ஒன்றா?
நான் செய்த ஒரே தவறு இப்பிரச்சனையின் துவக்கத்திலேயே சட்ட உதவியை நாடவில்லை என்பது. ஏனென்றால் நான் அப்போது இதைப் பற்றி பேசவே முடியாதபடிக்கு உருக்குலைந்து போயிருந்தேன். நான் இதில் இருந்து தப்பிக்கும் நோக்கில் அதிகமாக எழுத்திலும் வேலையிலும் என்னை மூழ்கடித்தேன். ஆனால் தப்பித்து ஓட ஓட என் துன்பம் என்னை மூச்சுத்த்திணறடித்துக் கொண்டே இருந்தது. ஒருவேளை அப்போதே சட்டரீதியாக என் மகனை மாதத்தில் சில மணிநேரங்கள் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால், அது என் துக்கத்தை சற்றே தணித்திருக்கலாம், ஆனால் என்னை ஊடறுக்கும் இந்த வேதனை போகவே போகாது. வாழ்க்கையில் எல்லா விசயங்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புபவன் நான் எனும் போது, இப்படி ஒரு கையாலாகாத நிலைக்கு ஆட்படுத்தப்பட்டிருப்பது இன்னும் வேதனை தருகிறது.
ஒரு பகுத்தறிவாளனாக இந்த பிள்ளைப்பாசம் போன்ற செண்டிமெண்டுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் புத்திக்குப் புரிந்த ஒன்று என் மனதுக்குப் புரியவில்லை. என் பகுத்தறிவு இதன் முன் தோற்றுக் கொண்டே இருக்கிறது. அதைக் காண என்னை நினைத்தே எனக்கு மிகவும் அவலமாக இருக்கிறது. உணர்வுகளின் அலைகழிப்புக்கும் பிரக்ஞையின், பகுத்தறிவின் கூர்மைக்கும் நடுவே தத்தளிப்பது இன்னொரு புறம் வேதனையாக இருக்கிறது.
நான் இதை இங்கு எழுத மூன்று காரணங்கள்:
1. என்னை இப்படி அரிக்கும் வலியை எழுதி வெளியேற்றுவது ஆறுதல் அளிக்கும்.
2. என் நண்பர்கள் என் குடும்பத்தைப் பற்றிக் கேட்கும் போது நான் அதைப் பற்றி பிறகு சொல்கிறேன் எனத் தள்ளிப் போட்டபடி இருப்பேன். இங்கு தெளிவுபடுத்த வேண்டும் என நினைத்தேன்.
3. என்றாவது ஒருநாள் என் மகன் இதைப் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னை வெறுக்கும் படி என்னதான் சொல்லப்பட்டிருந்தாலும், நான் வெறுக்கத்தக்கவன் அல்ல என அவன் பல வருடங்களுக்குப் பிறகாவது புரிந்து கொள்ள வேண்டும்.
Comments