முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நிறைவான நாள்



இன்றுடன் கிளப் ஹைவுஸில் தினமும் ஒரு மணிநேரம் என வார நாட்களில் மட்டும் வாசித்து மைக்கேல் இன்வுட்டின் Heidegger நூலை வாசித்து முடித்து விட்டோம். நானும் ஆயுஷும் இந்நூலின் ஒரு பகுதியை ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இணைந்து படித்திருக்கிறோம் என்றாலும் ஏழெட்டு பேராக கூட்டாக வாசித்து நூலை முடித்தது இதுவே முதன்முறை. அவ்விதத்தில் மிகவும் எழுச்சியூட்டிய விவாதங்களும், புத்துணர்ச்சியும், நிறைவும் அளித்ததாக வாசிப்பு நாட்கள் அமைந்தன. வழக்கமான கிளப் ஹவுஸ் அரட்டைகளில் எதையும் கற்றுக்கொள்ளாமல் உணர்ச்சிகளும் சிந்தனைகளும் சிதறிக்கொண்டே போவதை நான் கவனித்திருக்கிறேன். அல்லது தினமும் மாலையிலும் இரவிலுமாக பாடுகிறார்கள். அவர்கள் இடையே தினமும் வித்தியாசமாக இப்படி தத்துவம் வாசித்து விவாதித்தது ஒரு சாதனையாகத் தோன்றியது. இந்த சிக்கலான ஊடகத்தை ஒழுங்காக ஒரு விசயத்தை கற்பதற்கு பயன்படுத்தி இருக்கிறோம் எனும் திருப்தி. 

இதன் முடிவில் அமர்ஜீத் போன்ற ஏற்கனவே தத்துவத்தில் ஆய்வு செய்திருக்கும், ஹைடெக்கரில் நல்ல வாசிப்புள்ள நண்பர் எங்களுக்கு கிடைத்தார். நேஹா, ஆயுஷ் மற்றும் எனக்கு ஹைடெக்கர் மீதுள்ள புரிதல் அதிகமானது. ஹபீப் இமானுவல் கேண்டில் இருந்து யுடர்ன் எடுத்து ஹைடெக்கர் வசம் வந்து விட்டார். இந்த வாசிப்பு பருவத்தில் அவர் ஹைடெக்கர் குறித்து சில நல்ல கட்டுரைகளை எழுதி விட்டார். நந்தினி, அனிதா போன்றோர் தத்துவ வாசிப்புக்கு பரிச்சயம் பெற்றிருக்கிறார்கள். சிமி முதல் சில வாரங்கள் வாசிப்பில் இருந்து பின்னர் அவருடைய வேலைகள் அதிகமாகியதால் நிறுத்திக் கொண்டார். ராஜ் போன்றோர் தொடர்ந்து கலந்து கொண்டனர். தினமும் எங்கள் வாசிப்பில் 5-8 பேர் கேட்பதற்காக வந்தனர். இன்று ஜமாலன் வந்திருந்தார். என்னுடைய ஆசை ஹபீபைப் போல தத்துவத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வாசித்து எழுதும் இளைஞர்கள் இன்னும் ஐந்து பேர் தமிழில் உருவாக வேண்டும் என்பது. அப்படி ஒன்று எதிர்காலத்தில் நிகழ்ந்தால் அவர்களைக் கொண்டு ஒரு சிறிய தத்துவ இதழைக் கூட தமிழில் நடத்த முடியும். அது தமிழுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும்.


ஹபீபைப் போல நானும் இந்த விவாதங்களின் போது எழுந்த சிந்தனைகள், கேள்விகளைத் தொகுத்து ஐந்துக்கும் மேல் கட்டுரைகளை எழுதினேன். இன்னும் நிறைய எழுத ஆசைப்பட்டேன் - ஆனால் நடுவே தினமும் நாவலில் கூடுதலாய் நேரம் செலவிட நேர்ந்திட தத்துவத்தின் அழைப்பு மணிக்கு கதவைத் திறக்க முடியாமல் ஆயிற்று. என்னைப் போன்று எல்லா பக்கமும் கால் பாவி நிற்போருக்கு இது ஒரு சிக்கல்: தத்துவத்தில் நிபுணத்துவம் பெறுவது என் நோக்கம் அல்ல, தத்துவம் என் சிந்தனைகளைத் தொகுக்கவும், விவாதம் செய்ய ஒரு கூர்மையான மொழியைப் பெறவும் உதவுகிறது. இன்னும் சொல்லப் போனால் தொடர்ந்து தத்துவம் வாசிக்கும் போது யோசிக்கும், அதை ஒட்டி சொற்களைத் திரட்டும் வேகம் அதிகரிக்கிறது. இது புனைவெழுத்தை, கவித்துவத்தை பாதிக்குமா என தமிழில் ஒரு அச்சம் உள்ளது. இது தேவையற்றது. தத்துவத்துக்கான மனம் புனைவெழுத்தின் போது விழிப்பதில்லை. கவிதை வாசிக்கும் மனம் ஒரு கிரிக்கெட் போட்டியைக் கண்டு ஆவேசப்பட்டு கத்தும் போது கூட சேர்ந்து கத்துவதில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் நூறு மனங்கள் இயங்குகின்றன.


ஆனால் மற்றொரு பிரச்சனையே தத்துவத்தை விட பெரிது: வாசிக்க வாசிக்க எழுத குறைவான நேரமே வாய்க்கிறது. எனக்கு எழுத்தில் இருக்கும் பெரும் நெருக்கடியே வாசிப்பு தான். வாசிப்பு நான் எழுத வேண்டிய நேரத்தை அப்படியே தின்று விடுகிறது. தினமும் நான்கைந்து மணிநேரம் எழுத வேண்டி வரும் போது, அந்த நான்கு மணிநேரம் அப்படி ஆறு, ஏழு என வளரும் போது நான் ஒன்றுமே வாசிப்பதில்லை (செய்திக்கட்டுரைகள், முகநூல் பதிவுகள், புத்தகங்களில் ஒன்றிரண்டு பக்கங்கள் மேய்வதை தவிர்த்தால்.) எழுத்தாளர்கள் நிறைய வாசிக்க வேண்டும் எனக் கேட்பவர்கள் இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்றும் பேச வேண்டும்.


ஆனால் இந்த கூட்டு வாசிப்பு எப்படியும் ஒரு கட்டாயமாவதால் தொடர்ச்சியாக படிக்க முடிகிறது. சில நாட்களில் வாசிக்க ஆற்றலோ ஆர்வமோ இல்லாத போது மற்றவர்கள் வாசிப்பு, பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கலாம். மனம் விழிக்கும் போது கூட சேர்ந்து விவாதிக்கலாம். 


கிளப் ஹவுஸில் இதைப் போல பிற நண்பர்கள் முக்கிய இலக்கிய நூல்களை - நாவல்களை - எடுத்து தினமும் படித்து சில நிமிடங்கள் அதை வைத்து கலந்துரையாடலாம். அதாவது படித்து வந்து பேசாமல், கூட்டாக படித்து பேசலாம். அது ஒரு உத்வேகமான, கிளர்ச்சியான அனுபவமாக இருக்கும். குறிப்பாக படிக்க சிக்கலான படைப்புகளை இதற்கு எடுத்துக் கொள்ளலாம். தஸ்தாவஸ்கியின் நாவல்கள், சரமாகோ போன்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளின் நாவல்கள், புரூஸ்டின் In Search of Lost Time, தமிழில் நகுலனின் நாவல்கள், சம்பத்தின் “இடைவெளி”, கோணங்கியின் கதைகள், பா.வெங்கடேசனின் “பகீரதியின் மதியம்”, ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” இப்படி பல படைப்புகள் இத்தகைய வாசிப்புக்கு தோதானவை (ஜி.நாகராஜனையும், புதுமைப்பித்தனையும் தினமும் ஒரு லிப்டில் ஏறி இறங்கும் அவகாசத்தில் போனில் படித்தே முடித்து விடலாம்.). புனைவு வாசிப்பில் (தத்துவம் சாத்தியப்படுத்துவது போன்ற) அவதானிப்புகள், அலசல்கள் இரண்டாம் பட்சமே. ஒன்றாக சேர்ந்து வாசித்து ஒரே சமயம் உணர்வெழுச்சி அடையும் போது அந்த புத்தகத்தின் ஆழம் கூடும். தினமும் வாசிக்க ஒரு உத்வேகமும் உண்டாகும்.


நாங்கள் அடுத்து நாளையில் இருந்து ஹைடெக்கரின் மாஸ்டர்பீஸான “இருத்தலும் காலமும்” (Being and Time) நூலை எடுத்துக் கொள்ளலாம் என இருக்கிறோம். ஒன்று அதை ஒன்றிரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டு முழுக்க படித்து விட வேண்டும். அல்லது முதலிரு பாகங்களை மட்டும் (பாதி நூல்) படித்து விட்டு அடுத்தொரு தத்துவத்துக்கு தாவ வேண்டும். என் ஆசை முழுநூலையும் கூட்டாகப் படிக்க வேண்டும் என்பதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...