முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அ.மார்க்ஸும் காந்தியும்

அ.மார்க்ஸும் காந்தியும் 

நேற்று கிளப்ஹவுஸில் ஜீரோ டிகிரியின் அறையில் அ.மார்க்ஸுடன் நடந்த உரையாடல் ஒரு புத்துணர்ச்சியான அனுபவமாக இருந்தது. அ.மார்க்ஸிடம் ஒரு சிறப்பு மற்ற எழுத்தாளர்களைப் போன்ற தற்புகழ்ச்சி, ரசிகர் மன்றம், அடுத்தவர்கள் பற்றின புகார்கள், ஒப்பாரி அவர் பேச்சில் இல்லை என்பது. அவருடைய அரசியலானது புரட்சிகர, அதிரடி அரசியல் அல்ல. அவருடைய தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகள், மக்களுடனான பணி, ஆக்டிவிஸ்ட் அனுபவங்களான கனிந்த ஒரு அணுகுமுறையை பேச்சில் வெளிப்படுத்தினார். நேற்று கேள்வி கேட்டவர்களிடம் அவர் உடன்படாத போது கூட கோபமாகவோ சலிப்பாகவோ அதை வெளிப்படுத்தாமல் இன்னொரு கதையை, கருத்தை சொல்லி கடந்து விட்டார். முடிந்தவரை பொறுமையாக, நிதானமாக விளக்க முயன்றார். இந்த நாட்டில் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது, மாறுபட்ட தரப்புகளுக்கு சமத்துவமான ஒரு வெளியை மட்டுமே உருவாக்க முடியும் எனும் நிலைப்பாடு அவருக்கு இருப்பது தெரிந்தது. காந்தியின் அரசியலை பிரதானப்படுத்தி அவர் பேசியதை இந்த கோணத்தில் நான் விளங்கிக் கொண்டேன். சித்தாந்த ரீதியாக மட்டுமே காந்தியை புரிந்து கொள்ளக் கூடாது என வலுயுறுத்தும் பொருட்டு நிறைய சம்பவங்களை தொடர்ந்து குறிப்பிட்டார். நானும் அஜயன் பாலாவும் காந்தி குறித்து எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு அவர் “காந்தியை ஆர்.எஸ்.எஸ் காரகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஜெயமோகனும் ஓரளவுக்கு மேல் காந்தியை பொருட்படுத்தி எழுதவில்லை. நானும் அவரை ஒரே புள்ளியில் நின்று காந்தியை பார்க்கவில்லை.” என்று கூறினார். எனக்கு இதைக் கேட்ட போது மற்றொரு விசயம் தோன்றியது: 
காந்தியை ஆர்.எஸ்.எஸ் பாஜக எதிர்ப்பது உண்மை தான், ஆனால் அதற்குக் காரணம் காந்தி முற்போக்கானவர், சனாதனத்தை எதிர்த்தவர் என்பதல்ல. மதவாத தேசியவாதிகளுக்கும் சிறுபான்மையினரின் உரிமைக்காக, சாதி, மதவாத எதிர்ப்புக்காக முன்னின்ற முற்போக்காளர்களுக்கும் நடுவில் ஒரு சமரசப் புள்ளியாக மாறிப் போனார் என்பதாலே ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபையினர் கடுமையான எரிச்சலுக்கு ஆளானாரக்ள். அதனாலே என்னதான் சனாதனம், பிற்போக்குவாதம் காந்தியிடம் இருந்தாலும் இன்றும் பாஜகவால் காந்தியை தம்முடைய கொள்கையின் முகவராக மாற்ற முடியவில்லை. ஏனென்றால் காந்தி இந்துமதத்தின் அத்தனை கசடுகளையும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டு விட்டு, இஸ்லாமியரையும் கிறித்துவர்களையும் சமமாக மதிக்க வேண்டும், ஒரு இந்து ஒரு இஸ்லாமிய, கிறித்துவ சகோதரனுக்காக தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்பார். காந்தியால் பெரியார் பாணியில் ஒரு பெண் குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறி சுயமரியாதையுடன் துணிச்சலுடன் வாழ வேண்டும் எனக் கோர முடியாது. அதனால் இந்திய கலாச்சாரம் அழிந்து விடுமே என அவர் அஞ்சுவார். ஆனால் பெண்கள் ஆண்களை திருத்த வேண்டும், பெண்களுக்காக ஆண்கள் தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்று சொல்வார். சபரிமலை பிரச்சனையின் போது காந்தியின் ஆன்மா பெண்களுக்காகத் தான் பேசியிருக்கும். இப்படி இரண்டு பக்கமும் அவர் கோல் அடிப்பதால் நமது மத்திய வர்க்கத்தினரிடம், கல்வியற்ற ஏழைகள் மத்தியிலும் பிரசித்தமானார். வைதீகத்தை எதிர்த்து ஒழித்தாலோ அல்லது அதிலிருந்து வெளியேறினாலோ தான் சாதிக்கொடுமை தீரும் எனக் கூறிய அம்பேத்கரோ, இன்னொரு பக்கம் சிறுபான்மை மதத்தினர் இந்துக்களுக்கு இணையான உரிமை இல்லாமல் வாழ வேண்டும், அல்லது அனைவரும் இந்து மதத்துக்குள் வர வேண்டும், இல்லாதவர்கள் வெளியேறட்டும் என வலியுறுத்திய இந்துமகாசபையினர், ஆர்.எஸ்.எஸ்காரர்களும் காந்தி தம் அரசியலை காலி பண்ணுவதை உணர்ந்து அவரை எதிர்த்து நின்றனர். இதில் அதிகம் பாதிப்புக்குள்ளானது அம்பேத்கரியர்கள் தாம். ஒருவேளை காந்தி இல்லாவிட்டால் அவர்களால் இன்னும் வெளிப்படையாக சாதிய கொடுமைகளை எதிர்த்து போராடியிருக்க, பிரிட்டீஷ் ஆட்சியாளர்களிடம் வாதிட்டு தனி வாக்காளர் உரிமையை பெற்றிருக்க முடியும். இன்னொரு பக்கம், காந்தி இல்லாமல் போயிருந்தால் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பான காலத்தில் மிகப்பெரிய மதக் கலவரங்கள் இங்கே வெடித்து மோசமான அழிவுகள் ஏற்பட்டிருக்கும். ஒருவேளை, பாகிஸ்தானைப் போல நாம் ஒரு மத அடிப்படையினால தேசமாக அரசியலமைப்பு ரீதியாக உருப்பெற்றிருப்போம். இதனால் தான் காந்தியால் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தவர்கள், கிட்டத்தட்ட தம் அரசியல் வெளியை இழந்தவர்கள் என ஆர்.எஸ்.எஸ்காரர்களை, இந்துத்துவர்களைக் குறிப்பிடலாம்.

 அதனாலே என்னதான் ஜெ.மோ காந்தியைப் போற்றி எழுதினாலும், அவருடைய அரசியலில் ஒரு பகுதி காந்தியை முழுக்க ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்காது என நினைக்கிறேன். எப்படி அயோத்திதாசரை ஜெ.மோ அவரது வைதீக எதிர்ப்புக் கொடுக்கை பிடுங்கி விட்டு சாந்தப்படுத்திய பின் முன்வைத்தாரோ அப்படியே காந்தியையும் செய்தார். ஜெ.மோ மட்டுமல்ல அவரது சீடகோடிகள் எழுத்தில் வடிக்கும் காந்தியும் இப்படி சாந்தப்படுத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட காந்திகள் தாம். இன்றும் பாஜகவினர் நேருவை நேரடியாக தாக்குவார்கள், வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை எழுப்புவார்கள், ஏன் காங்கிரஸ் தலைமை நரசிம்ம ராவை பொருட்படுத்தி பாராட்ட வில்லை எனக் கோபிப்பார்கள், ஆனால் காந்தி விசயத்தில் தொடர்ந்து மௌனம் சாதிப்பார்கள். ஆனால், ஒருநாள் ஜெ.மோ பாணியில் அவர்களும் காந்தியின் கொம்புகளை பிடுங்கி அவரை 'நல்ல பிள்ளையாக்கி' தம் அரசியல் களத்தில் கொலு வைப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. 

இந்த கோணத்தில் இருந்து பார்க்கும் போது அ.மார்க்ஸ் ஏன் காந்தியை ஆதரிக்கிறார் என்பது புரிகிறது - அரசியலை வெறுமனே வலது-இடது என இருமையாக்கிடாமல் இருக்க, அந்த ‘தூய’ அறத்துடன், லட்சியத்துடன் மதத்தை மதவாதம் ஆக்காமல் பார்த்துக் கொள்ள, மக்களுடன் மக்களாகப் புழங்க காந்தியே அவர் மனத்தில் ஒரு சரியான தலைவராக இருக்கிறார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.