முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமையல் எனும் வேலையில் சமத்துவம்



நடந்து வரும் சமையலறை ஒழிப்பு விவாதத்தின் நீட்சியாக கார்ல் மார்க்ஸ் (கணபதி) ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் சமையலறையில் இருந்து வெளியேறும் பெண் மீண்டும் ஒரு வேலைக்கு தானே சென்றாக வேண்டும், அந்த வேலையில் சுரண்டல் இல்லையா, அதில் அநீதி இல்லையா, ஏன் நாம் வேலை என்பதை மகத்துவப்படுத்தும் இடத்துக்கு வந்து சேர்கிறோம் என அவர் கேட்கிறார். நான் இங்கு கார்ல் மார்க்ஸ் விவாதத்தை திசைதிருப்புவதாக நினைக்கிறேன். ஏனென்றால் வேலையில் உள்ள அந்நியமாதல், பொருளாதார சுரண்டல் சார்ந்த பிரச்சனையை அல்ல நாம் சமையலறை விசயத்தில் பேசுவது; மாறாக சமையல் என்பது குடும்பத்துக்குள் ஒரு ஊதியமற்ற உழைப்பு என்பதும், அதைத் தவிர்க்க முடிவதில்லை என்பதுமே பிரச்சனை. 


சமையலறை உழைப்பில் சம்பளம் இல்லை என்பதும், அதில் இருந்து விடுதலை இல்லை என்பதுமே பிரச்சனையின் அடிப்படை. ஒரு கணவன் அவ்வேலைக்கு 20-25,000 மாதம் கொடுக்கத் தயாரானாலும் அதை பெண்கள் அடிமைத்தனமாக நினைக்கப் போவதில்லை. நான் சொல்வது சமைக்க விரும்பும் பெண்கள் விசயத்தில் மட்டுமே. ஒருவேளை அந்த கணவன் சமையல் வேலையை பகிர்ந்து கொண்டாலும் அவள் ஆறுதல் கொள்வாள் (இன்னொரு பக்கம் பால் அடையாள நெருக்கடி குறித்து எரிச்சலும் கொள்வாள். உன் சமையல் நன்றாக இல்லை என அவள் அவ்வப்போது இடித்துரைக்கவும் கூடும். அல்லது நீயே இனி மொத்தமாக சமையலை பார்த்துக் கொள் என கைகழுவி விடவும் கூடும். அப்போது கணவன் எரிச்சலடைவான். இந்த இரண்டுமே ஒரே நெருக்கடியின் இரு பக்கங்கள் தாம்.)


சம்பளம் இல்லாத பட்சத்தில், ஒரு சமையற்காரரை வேலைக்கு அமர்த்தினாலும் பெண்கள் நிம்மதி அடைவார்கள். (என்ன அவரது சமையலில் குற்றம் கண்டுபிடித்தபடியும் இருப்பார்கள். ஏனென்றால் உணவு நமது தன்னிலையுடன், அடையாளத்துடன் பின்னிப் பிணைந்தது.) இப்போது ஒரு சமையற்காரியை சுரண்டலாமா எனும் கேள்விக்கு பிரசித்தமில்லை - அவளுக்கு சம்பளம் கொடுக்கிறோமே. அடுத்து அவருக்கு இந்த வேலையை ஏற்கவோ மறுக்கவோ உரிமை உண்டு. ஆனால் வீட்டு மனைவிக்கு அது இல்லை.


 அடுத்து, வேலைக்குப் போகாத பெண்கள் சமையலறையில் உழைப்பது ஒருவகையில் குடும்பத்துக்கான அவளது பங்களிப்பு அல்லவா என்று கேட்டால் இல்லை என்பேன். ஒரு குடும்பப் பெண்ணாக இருப்பதே அவளுடைய பங்களிப்பு, சமையலோ வீட்டைப் பெருக்குவதோ அல்ல. உ.தா., நீங்கள் ஒரு கடையில் விற்பனைப் பிரிவில் சேர்ந்தால் அதுவே உங்கள் பணி, கடையை பெருக்கி சுத்தமாக வைத்திருப்பது அல்ல. 


கார்ல் குறிப்பிடுவது பாலின சுரண்டலையும் கடந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு, உழைப்பின் அந்நியமாதல் சார்ந்த பெரிய பிரச்சனை. ஆனால் நான் இங்கு பேசுவது வேறு - இது குடும்பத்தை எந்த ஊதியமும், ராஜினாமா வாய்ப்பும் அற்ற தொழில்ற்சாலையாக நாம் மாற்றி வைத்திருப்பதன் பிரச்சனை.


சரி சமையலை உழைப்பாக மாற்றினால் அதிலுள்ள உணர்வுரீதியான அம்சம் போய் விடுமே என சிலர் நினைக்கலாம். அது சிக்கலென்றால் சமையலைக் குறைத்துக் கொண்டு, உணவை மூன்று வேளைகளில் இருந்து ஒன்றாக மாற்றிக் கொண்டு, அதை சமைப்பதையும் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக பகிர்ந்து கொள்ளலாம். அல்லது சமூதாய சமையலறை அல்லது சமையற்காரர்கள் எனும் சாத்தியங்களை பரிசீலிக்கலாம். அங்கு சாப்பாட்டுக்கு பணம் கொடுப்பது நமக்கு உறுத்தலாக இருக்காது. தனிப்பட்ட முறையில் நான் முதலிரண்டு தெரிவுகளையே விரும்புவேன். ஏனென்றால் மனைவிக்கு ஊதியம் என்று வந்து விட்டால் சம்பளத்தில் பாதி அதற்கே போய் விடும்.


நான் இரு பத்தாண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் நித்ய சைதன்ய யதியின் ஆசிரமத்துக்கு ஒரு இலக்கிய கருத்தரங்குக்காக சென்றிருந்தேன் (ஜெ.மோ ஏற்பாடு). காலை ஆறுமணிக்கு பங்கேற்பாளர்கள் நாங்கள் சமையலறைக்கு சென்று அன்றைய சாப்பாட்டுக்கான தயாரிப்பு வேலைகளில் பங்கெடுத்தோம். அதன் பிறகு 7:30-8 மணிக்கு காலை உணவை எடுத்துக் கொண்டோம். அப்போது உணவின் சுவை, தரம் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, இது நாங்கள் சேர்ந்து செய்த காலை உணவு எனும் மனநிறைவும், உரிமையுணர்வும் எங்களுக்கு இருந்தன. ஆசிரமத்தையே ஒரு கம்யூனிட்டி கிச்சனாக மாற்றும் அந்த நடைமுறை எனக்குப் பிடித்திருந்தது. இதையே நீங்கள் செமினரிகளில் பார்த்தீர்கள் எனில் அங்கு (நான் பார்த்த வரையில்) தனியாக சமையற்காரரை வைத்திருப்பார்கள். பிரதர்கள் தம் பிரார்த்தனை, வேலைகள் என ஈடுபட்டிருப்பார்கள்; சாப்பிடும் நேரத்துக்கு உணவுக்கூடத்துக்கு வந்து விடுவார்கள். இது இயல்பாகவே ஒரு படிநிலையை முன்னெடுக்கும் அமைப்பாகும். இதையே நாம் வீட்டுக்குள்ளும் கொண்டு வந்திருக்கிறோம்.


சீக்கியர்களின் லங்கார்களிலும் அநேகமாக இப்படியே தன்னால்ர்வலர்களே சமையலில் ஈடுபடுகிறார்கள், சமையற்காரர்கள் அல்ல. முன்னர் நம் ஊர்களில் திருமணத்திற்கு முந்தின நாள் ஊரே ஒன்று கூடி சமையலில் உதவுவதை கண்டிருக்கிறோம். சிலர் காய்கனிகளை நறுக்குவார்கள், சிலர் சமையலில் ஈடுபடுவார்கள். விருந்தின் போது இதே ஊர்மக்களே முன்வந்து உணவை விளம்பவும் செய்வார்கள். இவர்கள் ஊதியம் கேட்பதோ தம்மை மேலாகவோ கீழாகவோ கருதுவதோ இல்லை. ஆனால் இன்று இதே ஊர் இளைஞர்கள் சமூக சமையற்கூடங்களில் பங்காற்ற விரும்புவதில்லை. சமையல் வேலையில் இருந்து விளம்புவதற்கு வரை கேட்டரிங் அமைப்புகள் தோன்றி விட்டன. இளைஞர்கள் பல ஊர்களுக்கும் கொண்டு சில பத்தாண்டுகளுக்கு முன்பு இலவசமாக சமூகப்பணியாக செய்ததை இப்போது ஊதியத்துக்காக செய்கிறார்கள். விளைவாக, சமைப்பவர்கள், சாப்பிடுகிறவர்கள், அதற்கு செலவு செய்யும் பெண் வீட்டார் என மக்களிடையே இடையே ஒரு அந்நியமாதல், பிரிவினை தோன்றி விட்டது.


நம் வீடுகளைப் பொறுத்தமட்டில், நான் மேலே சொன்ன அந்த ஆசிரம மாடல் மேலும் நியாயமானது, சமத்துவமானது என்கிறேன் - சப்பாத்தி சுடுவதானால் ஒருவர் மாவு பிசைந்து, திரட்டிக் கொடுக்க இன்னொருவர் சுடலாம், ஒருவர் காய் நறுக்கி, மசாலா பொருட்களை எடுத்தளிக்க இன்னொருவர் குருமா செய்யலாம். உணவு மேஜையில் பொருட்களை கொண்டு வைப்பதிலும், பாத்திரம் கழுவுவதிலும் அடுத்தவர்கள் பங்களிக்கலாம். நகரங்களில் தனி வீடெடுத்து தங்கும் இளைஞர்களும் இதையே தான் பின்பற்றுகிறார்கள். அவர்களிடையே இதனால் தான் முரண் வருவதில்லை. ஒருவர் நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என பிகு பண்ண முடியாது. ஆனால் திருமணமானதும் வசதியாக ஒரு அநீதியான முறைமைக்கு தம்மை ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள். அதாவது ஆசிரமத்தில் இருந்து செமினரிக்கு வந்து விடுகிறார்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...