Skip to main content

தாய்ப்பாசத்தின் கற்பிதமும் உண்மையும் - ஏங்கல்ஸும் ஹைடெக்கரும்



தமிழ்நாடு அம்மா பாசத்துக்கு பெயர் போனது - ஒப்பிடுகையில் தாயைப் போற்றும் காட்சிகள் பழைய இந்திப் படங்களில் உண்டு. மலையாளத்திலும் உண்டு. ஆனால் தமிழ் சினிமாவிலே நீண்ட காலமாக அம்மா செண்டிமெண்ட் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. அம்மா செண்டிமெண்ட் பாடல்கள் அனேகமாக ஹிட் தான். மலையாளத்திலும் இந்தியிலும் நான் பார்த்தவரையில் அம்மா பாடல்களை தாலாட்டு பாடல்கள் விட அதிகம். தந்தை-மகன் / மகள் உறவு அங்கு தாய்-மகன் உறவை விட அதிகமாக அங்கு கொண்டாடப்படுகிறது. ராஜ்கிரண்என் ராசானின் மனசிலேபடத்தில் காலமான அம்மாவை நினைத்து கதறி பாடும் காட்சியில் நடித்து வருகிறார். அப்போது அந்த ஸ்பாட்டில் வேறு ஒரு படத்தில் நடித்து வரும் கவுண்டமணி அதைப் பார்த்து விட்டு ஒரு நண்பரிடம் வேதனையுடன் கேட்கிறார்: “ஏன்யா இவனுக்கு மட்டும் தான் அம்மாவா? நம்மள எல்லாம் நாயா பெத்துச்சு?” இந்த அம்மா பாச மிகை தமிழ் பண்பாட்டின் ஒரு சுவாரஸ்யமான அம்சம். நாம் இதை மானுடவியலை தொட்டு, சற்று உளவியல் சார்ந்து ஒரு பக்கமும், தத்துவார்த்தமாக இன்னொரு பக்கமும் அலசிப் பார்ப்போம்.


ஏங்கல்ஸ் தனதுகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்நூலில் (லூயிஸ் மோர்கனை மேற்கோள் காட்டி) துவக்க கால குடும்ப அமைப்பில் பெற்றோர்-குழந்தை உறவானது தனிமனிதனின் சுயநலத்தின் உச்சமாக பார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார். அதே நேரத்தில், நீடித்த குடும்பத்தினுள் ஒரு பொதுவுடைமை சொத்தாக குழந்தைகள் கருதப்பட்டனர் (ஆனால் அன்னிய குடும்ப குழந்தைகள் அன்னியர்களே). அதாவது, அந்த சமூகங்களில் ஒரு குழந்தை நீடித்த குடும்பத்தின் சொத்து. தன் சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா உள்ளிட்டோரையும் அக்குழந்தை தன் பெற்றோராகவே பார்க்கிறது. அவர்களும் அப்படியே அக்குழந்தை மீது பாசம் காட்டி கவனித்துக் கொள்கிறார்கள். ‘அப்பா’, ‘அம்மாஎன்றே அவர்களை அழைக்கும் பண்பு அச்சமூகங்களிலும் நம்மைப் போன்ற இந்திய சமூகங்களில், குறிப்பாக தமிழ் சமூகத்தில், உள்ளதாக ஏங்கல்ஸ் குறிப்பிடுகிறார்நிலப்பிரபுத்துவ காலத்தில் குடும்ப அமைப்பு உருமாறுகிறது. அப்போது இதில் ஒரு மாற்றம் வருகிறது. அப்பா, அம்மா மட்டுமே ஒரு குழந்தையின் பிரதான பொறுப்பாளர்கள் (caretakers). குடும்பம் என்றாலே பெற்றோரும் குழந்தையும், கூடவே தாத்தா, பாட்டி என ஒருமுகப்படுகிறது. சித்தப்பா, பெரியப்பாக்கள் தத்தம் குடும்பங்களை இவ்வாறு பார்த்துக் கொள்கிறார்கள். அவரவர் வருமானம், சொத்து அந்தந்த குடும்பத்தின் சொத்தாகிறது. மனிதர்கள் ஒன்றாக வாழும் ஒரு சமூக அமைப்பில் குடும்ப பாசம் மட்டுமே பொதுநலத்தின் இடத்தில் சுயநலத்தை பிரதானப்படுத்துகிறது. இது ஒரு முரணை தோற்றுவிக்கிறது; அறம் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது - ஒரு ஊரில் உள்ள குழந்தைகள் பசியில் வாடும் போது ஒரு அன்னை தன் பிள்ளைக்கு மட்டுமே கவனமாக பசியாற்றுகிறாள். தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளில் தன் குழந்தையை மட்டுமே தனியாக அழைத்து வந்து உணவளிக்கிறாள். ஆம், இன்று கூட்டுக்குடும்பத்து குழந்தைகளுக்கு சேர்த்து உணவளிக்கும் அன்னையர் உண்டு. ஆனால் எப்போதும் தன் குழந்தையே அவர்களுக்கு ஸ்பெஷல். இது தவறு அல்லவா? சுயநலம் அல்லவா? ஆனால் இந்த முரணில் இருந்தே தனிச்சொத்துக்கான நியாயங்களை உருவாக்கினார்கள் என ஏங்கல்ஸ் கருதுகிறார். அது வேறொரு விவாதம். நாம் தாய்ப் பாசத்துக்கு வருவோம்.


தாய்ப் பாசத்தில் அப்படி என்ன மகத்துவம்? தன் மரபணுவின் தொடர்ச்சியான குழந்தை மீது அன்னை காட்டும் பாசமானது சுயநலம் தானே? அவள் ஒன்றும் பக்கத்து வீட்டுக் குழந்தையை கருவறையில் சுமக்கவோ பாலூட்டவோ இல்லையே? இன்னொரு விசித்திரம் - நல்லதங்காள் கதை தெரியும் அல்லவா? அவளைப் போல தற்கொலைக்கு முயலும் தாய்மார் இன்றும் தம் பிள்ளைகளை கொன்றுவிட்டே தம் உயிரை மாய்க்கிறார்கள். தன்னை விட்டால் தன் குழந்தைக்கு இந்த உலகில் பொறுப்பாளர்கள் இருக்க முடியாது, தத்தெடுக்கும் பெற்றோர்  வந்தாலும் அவர்கள் தனக்கு இணையாக முடியாது என்றே இந்த அன்னையர் நம்புகிறார்கள். இன்னொரு பக்கம், தாய் இறந்த பின் அவளிடத்துக்கு வரும் சித்திகளின் பாரபட்சமான கவனிப்புக்காக சித்திக் கொடுமை எனும் பயன்பாடு தோன்றியது. நிறைய கதைகள், படங்கள் இதைப் பற்றி உள்ளன. அண்மையில் கூட நான் ஒரு சித்தி தன் கணவரின் குழந்தையை சிறுக சிறுக துன்புறுத்தி, கடைசியில் மாடியில் இருந்து தள்ளி விட்டு கொன்ற சம்பவத்தைப் பற்றி படித்தேன். பிறக்காத தன் குழந்தைக்கான தனிச்சொத்தை, கவனிப்பை இந்த குழந்தை பறித்து விடுமோ எனும் பயமே இக்கொலையின் தூண்டுதல். இது ஒரு மீக்கடுமையான உதாரணம் என்றாலும் சித்திக் கொடுமையும், குழந்தைகள் கொல்லப்படுவதும், தாய்ப் பாசத்தின் ஒரு எதிர்மறை வெளிப்பாடாகும் என்று சொல்வேன். திருமணத்துக்கு அப்பாலுள்ள காதல் உறவுக்காக ஓடிப் போக முனையும் பெண்கள் தம் பிள்ளைகளை விஷமூட்டிக் கொன்று விட்டு கூலாக ஓடிப் போவதும் நடக்கிறது. தன் முந்தைய குடும்பம், அதனால் தனக்கு கிடைத்த குழந்தை என்பதை ஒரு முற்பிறவி போல கருதும் இப்பெண்கள் அடுத்த ஒரு குடும்பத்தை அமைக்கும் போது பூஜ்யத்தில் இருந்து மீண்டும் துவங்க வேண்டும், பழைய குடும்பத்தின் குழந்தை, தன் குழந்தையே ஆனாலும், தனிச்சொத்தை பகிர, பாசத்தை பகிர வந்து விடக் கூடாது என ஆழ்மனத்தில் நினைக்கிறார்.


 தாய்ப்பாசத்தின் தன்னலம் இவ்வளவு சிக்கல்களை தன்னுள் அடக்கியது. நான் மேலே குறிப்பிட்ட மிதமிஞ்சிய எதிர்மறை நிகழ்வுகளை விதிவிலக்குகள் என நாம் எடுத்துக் கொண்டாலும், மாறி வரும் குடும்ப அமைப்பு நமது தமிழ் சமூகத்தில் பெற்றோரின் பாசத்தில் உள்ள சுயநலத்தை எதிர்கொள்ளவே தாய்ப்பாசத்தை கொண்டாடுகிறது என எனக்குத் தோன்றுகிறது. கு. அழகிரிசாமியின்ராஜா வந்திருக்கிறார்இதைத் துல்லியமாக படம்படிக்கும் கதை - தீபாவளி அன்று வீட்டுக்கு வரும் அழுக்கான ஏழைச்சிறுவனை தனது பிள்ளைகளில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளும் அன்னை அவனை குளிப்பாட்டி அவனுக்கு புதிய துணி அளித்து தீபாவளியை அவனுடன் கொண்டாடுகிறாள். சமூகவுடைமையையும் சுயநலத்தையும் அன்னையின் ஊடாக ஒரு புள்ளியில் இணைக்கிற இக்கதை மிகவும் நெகிழ்ச்சியாக இருப்பது அதனால் தான். மார்க்ஸிம் கார்க்கியின்தாய்நாவலும் இத்தகைய ஒரு முயற்சியே

மனுஷ்யபுத்திரனின்அம்மா இல்லாத முதல் ரம்ஜான்அன்னை இறந்து போன பின் வரும் முதல் ரம்ஜானைப் பற்றி பேசுகிறது. அப்பா காலை உணவு அருந்தாமல் தொழுகைக்கு செல்கிறார். தங்கை சம்பிரதாயத்தை மீறி எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வைக்கிறாள். சின்னக் குழந்தையான தம்பிக்கு மட்டும் வற்புறுத்தி புத்தாடை அணிவிக்கிறார்கள். உறவுகளும், அண்டை வீடுகளும் அனுப்பிய பட்சணங்களை திருப்பி அனுப்பி விடுகிறார்கள். குடும்பத்தினர் அமைதியாக ரம்ஜானை கொண்டாடாமல் கலகம் செய்கிறார்கள்; அம்மாவுக்காக துக்கம் அனுஷ்டிக்கிறார்கள். ஒரு திருவிழா அல்லது பண்டிகை வரும் போது மரணம் நேர்ந்தால் ஒரு குடும்பத்தில் நடக்கக் கூடிய ஒரு சூழலே இக்கவிதையிலும் வருகிறது. அப்போது அக்குடும்பம் தனியாக விடப்படுகிறது. சமூகம் இன்னொரு பக்கம் கொண்டாட்டத்தில், சடங்குகளில், மகிழ்ச்சித் திளைப்பில் ஈடுபடுகிறது. கடும் தனிமையில், கைவிடப்படுத்தலில் பிடிவாதமாக பண்டிகையை மறுப்பது பாசத்தை வலியுறுத்துவதாக, கசப்பான அன்பைக் கொண்டாடும் தருணமாக அக்குடும்பத்தினருக்கு மாறுகிறது.


நானந்த

முதல் ரம்ஜானை

பத்திரமாய் வைத்திருப்பேன்


ஏனெனில் அது

அல்லாவை எதிர்த்து

அம்மாவுக்காக

கொண்டாடப்பட்ட ரம்ஜான்


என மனுஷ்யபுத்திரன் முடிக்கிறார். இல்லாமல் போன அன்னையின் பாசத்தை சமூகத்தின் தன்னலத்துக்கு எதிரிடையாக வைக்கும் முயற்சி இது. சமூகத்தின் தன்னலம் சமூகத்திடம் அன்னையர் இருக்கிறார்கள் என்பதில் இருந்து வருகிறது. இந்த அன்னையரை நோக்கித் தான் இக்கவிதை ஒரு விதத்தில் பேசுகிறது எனலாம். அன்னையர் இப்படி மிதமிஞ்சிய தன்னலத்தின் குறியீடாக இருக்கிறார்கள்.


நமது வெகுஜன ஊடகங்களில் இந்த சுயநலம்-பொதுநலம் இருமையை, அதனால் தோன்றும் அறமின்மையை எதிர்கொள்ளும் நோக்கில் தான் முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட ராஜ்கிரணின் மிதமிஞ்சிய அம்மா பாச கதறல்களும், இன்றைய தனுஷ்களின்அம்மா அம்மா நீ எங்கே அம்மாக்களும்வருகின்றன. “வேலை இல்லா பட்டதாரியில்இந்த பாசத்தின் அநீதியும் பேசப்படுகிறது - தன் பெற்றோரின் தன் தம்பியை அதிகம் பொருட்படுத்துவதாக, தன்னை உதாசீனிப்பதாக தனுஷின் பாத்திரமான ரகுவரன் தொடர்ந்து புகார் செய்தபடி இருக்கிறான். அடுத்து, இந்த சுயநலத்தை கடந்து போகும் நோக்கில் தாயின் மரணத்துக்கு மகன் ஒரு மறைமுகக் காரணம் என காட்டப்படுகிறது. இதனால் குற்றவுணர்வு கொள்ளும் மகன்திருந்துகிறான்’. வேலைக்கு செல்கிறான். அந்த வேலையும் கூட அவனுடைய தாயின் கண்களைப் பெற்ற இளம்பெண்ணின் தகப்பனின் நிறுவனத்திலே அவனுக்கு அவளால் கிடைக்கிறது. அந்த பெண் தொடர்ந்து வெண்ணிற ஆடையில் ஒரு தூய ஆன்மாவைப் போல காட்டப்படுகிறாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு தன் அன்னையே நினைவுக்கு வருகிறாள். இது அவனை உருமாற்றுகிறது. அன்னை சமூகத்தையே தன் மகனாகக் காண்பதற்குப் பதிலாக சமூகமே அன்னையாக மாறுவதாக காட்டப்படுகிறது. இன்னொரு பக்கம் வில்லனின் மகன் தன் தந்தையுடன் அதிக அணுக்கமாக இருப்பதாக, அதனாலே திமிர்த்தனமாக இருப்பதாக காட்டுகிறார்கள். இது பழைய எம்.ஜி.ஆர் படங்களில் வரும் அதே கதையாடல் தான். அன்னையரின் பாசம் எவ்வளவு சமூகவிரோதமானது, சமூகவுடமை நோக்கிய கனவுக்கு, அறத்துக்கு எதிரானது என்பதை மறைக்கவே இவ்வகை கதையாடல்களை நாம் பிடித்து தொங்கிக் கொண்டே இருக்கிறோம்

நமக்கு உண்மையில் அன்னையர் மீது எந்த பாசமும் இல்லை. ஏனென்றால் உயிருடன் இருக்கும் போது நாம் அவர்களை மதிப்பதில்லை


அப்படி என்றால் தாய்ப்பாசம் உண்மை இல்லையா? இந்த கேள்விக்கான விடையானது நாம் உண்மையை எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது. உண்மை என்றால் என்ன?


 உண்மையை நாம் பொதுவாக உலகப்பொதுவான விழுமியங்கள் சார்ந்து மதிப்பிடுகிறோம். தாய்ப்பாசம் என்பது ஒரு பெண் தன் உடலை, தன் ஆற்றலை, காலத்தை, மகிழ்ச்சியை ஒரு குழந்தைக்காக தியாகம் செய்வதற்கான சிறந்த உதாரணம். குடும்பத்துக்குள் இத்தகைய தியாகங்கள் மகத்துவமானவை என்பது ஒரு உலகப்பொதுவான விழுமியம். ஒரு தாயோ தந்தை தன் பிள்ளைகளிடத்து சுயநலமாக இருப்பது, இருக்கிற உணவை தான் மட்டுமே உண்டு பிள்ளைகளை பட்டினி போடுவதை நம்மால் கற்பனை பண்ணவோ, சகிக்கவோ முடியாது. ஏனென்றால் அது உலகுதழுவிய விழுமியம். அடுத்து, உண்மையை நிரூபணம் சார்ந்து பார்க்கிறோம். நிரூபிக்க முடிவதெல்லாம் உண்மை, அல்லாவிடில் பொய். மார்ட்டின் ஹைடெக்கர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையை இதில் வைக்கிறார். அவர் உண்மையை இவ்வாறு மறுவரையறை செய்கிறார் - உண்மை என்பது ஒரு விழுமியத்தை சுமப்பதோ, நிரூபிக்கத்தக்கதோ அல்ல. ‘உண்மைசொல்வது என்பது பொய் சொல்லாமல் இருப்பதல்ல, மாறாக அது உலகில் தன் இருத்தலை சொந்தமாக (authentic) உணர்தல் மட்டுமே. Authentic என்பதற்கு அசல் என்பதே நேரடியான பொருள். ஜெர்மனில் இது Eigentlichkeit. அதாவது போலியாக அல்லாமல் அசலாக இருப்பது. ஹைடெக்கரில் இதை சற்றே வேறுபட்ட ஒரு பொருளில்தன்னுடையது’, ‘தனதானதுஎன ஒரு மனிதன் இவ்வுலகில், காலத்துக்குள் சொந்தமான முறையில் இருத்தல் என விளக்குகிறார் - எனக்கு சொந்தமான வீடு, எனக்கே எனக்கேயான மனைவி, குழந்தை, எனக்கு சொந்தமான பணம், நான் எழுதுகிற நாவல், அதற்கு நான் பயன்படுத்தும் எனக்கு சொந்தமான லேப்டாப், என்னுடைய பேனா என. நான் என் லேப்டாப்பின் தட்டச்சு பலகையில் கைவைத்து தட்ட ஆரம்பிக்கும் போது அது என் லேப்டாப் எனும் தன்னுணர்வு இயல்பாக அங்கு தோன்றி விடுகிறது. எப்படி? அந்த லேப்டாப் ஒவ்வொரு முறையும்ஹலோ நான் உங்களுக்கு சொந்தங்க. நான் உங்களுக்காகவே பிறந்திருக்கேங்கஎனக் கூறுமா? இல்லையே. ஆனால் அது என் அறையில், என் மேஜையில், எனக்கு கையெட்டும் தொலைவில் உள்ளது. ஏனென்றால் அது எனக்கு சொந்தமானது என்பது முக்கியம் அல்ல. அது என் நண்பனுடையதாகவோ, அலுவலக பயன்பாட்டுக்காக எனக்கு அளிக்கப்பட்டதாகவோ இருக்கட்டும், பிரச்சனை இல்லை. அது நான் எடுத்து பயன்படுத்தும் விதமாக உள்ளதே அதை எனது சொந்தமான இருத்தலின் (authentic being) பகுதியாக்குகிறது. நான் நாளை ஒரு தபால் பெட்டிக்குள் கடிதம் இடும் போது அந்த தபால் பெட்டியும் அந்த தருணம் எனக்குசொந்தமாகிறது”. (அந்த சமயம் இன்னொருவர் வந்து குறுக்கே தன் கையை விட்டால் கோபப்பட மாட்டீங்க? அது இந்த சொந்தமெனும் உணர்வாலும், அக்கணத்தைய இருத்தலாலுமே வருகிறது.)

 உங்கள் உலகில் ஒவ்வொன்றும் உங்கள் சொந்தமெனும் நம்பிக்கை உங்கள் அனுபவம், புரிதல், பகுத்தறிவு சார்ந்தது மட்டுமல்ல; இருத்தலை பொறுத்தமட்டில் அது உங்கள் செய்கையினூடே தோன்றுவது. ஒரு தாய் தன் மகனைக் காண்கையில்இதோ என் மகன்என யோசித்து விட்டுவாடா என் செல்லமேஎன சொல்லப் போவதில்லை. அவள் காலையில் எழுகையில், அப்போது தூங்கிக் கொண்டிருக்கும் அல்லது எழுந்து உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கும் அவளுடைய மகன் இருக்கிற உலகில் தான் அவள் எழுகிறாள். அதைப் போய் பார்க்காமலே அவள் அறிவாள். அவள் கட்டிலில் இருந்து கீழே கால் வைக்கும் முன்பே அங்கு தரை உள்ளது என அறிவாள். இந்த உலகில் ஒரு நாளில் அவளுடைய செயல்கள் இப்படித் தான் உள்ளன. இருத்தலைப் பொறுத்தமட்டில் இதுவேஉண்மைஎன ஹைடெக்கர் கூறுகிறார்


இந்தஉண்மைக்கும்சிந்தித்து உணரும் உண்மைக்கும் என்ன வித்தியாசம்? இதை அறிய நாம் இரண்டு விசயங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டுக்கு அல்லது அறைக்கு வெளியே ஒரு எரிமலை வெடித்துக் கொண்டிருக்கிறது என நான் கூறுகிறேன். அதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஏனென்றால் இதற்கு முன்பு அங்கு எரிமலையை நீங்கள் காணவில்லை. திடீரென எரிமலை அங்கு தோன்ற முடியாது. நான் மிகவும் வலியுறுத்தினால், என்னுடன் வேறு சிலரும் அதை வலியுறுத்தினால், நீங்கள் எழுந்து வெளியே போய் அது உண்மையா எனப் பார்த்து உறுதி செய்வீர்கள். உண்மையென்பது இப்படி நம் உலகில் வெளியிலும் காலத்திலும் தோன்றுவது மட்டுமே, அது தர்க்கத்துக்கும், அனுபவத்துக்கும் உட்படுவது மட்டும் அல்ல என ஹைடெக்கர் கூறுகிறார். உங்கள் முகத்தில் கரி படிந்திருக்கிறது என நான் சொன்னால் அதை கண்ணாடியில் பார்க்காமல் உங்களால் மறுக்கவோ ஏற்கவோ முடியாது. உலகில் ஒன்று இருந்தால் மட்டுமே, அதை உங்களால்சொந்தம் கொண்டாடமுடிந்தால் மட்டுமே அதுஉண்மைஆகிறது. இதுவே, உங்கள் காதலி உங்களிடம்நீ என்னை நேசிக்கவில்லை. நீ என்னிடம் பொய் சொல்லுகிறாய்எனக் கூறுகிறாள் என வையுங்கள். இல்லை என மறுக்கிறீர்கள். நீங்கள் நேசிப்பது உண்மை தான் என்பதற்கு உங்கள் நடவடிக்கைகளை அவளுக்கு நினைவுபடுத்தி நிரூபிக்க முயல்கிறீர்கள். ஆனால் அவள் அதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்க தயாராக இல்லை. அப்போது தான் அது காதலில் சாத்தியமில்லை என உங்களுக்குப் புரிகிறது. மனம் உடைந்து கண்ணீர் விட்டு தழுதழுக்கப் பேசிப் பார்க்கிறீர்கள். அவள் அதை நடிப்பென நினைக்கிறாள். அப்போது தான் உங்களுக்குப் புரிகிறது - அவளாகவே நம்பினால் உண்டு; நீங்களாக அதை உண்மையெனப் புரிய வைக்க முடியாது. ஏனென்றால் நேசத்திற்கு இந்தஉலகில்இடமில்லை. ஒரு எரிமலையை, மழையை, வெயிலையைப் போல அதைக்காட்டமுடியாது. அது அருவமான ஒன்று. அருவமான விசயங்களை உண்மையென நிரூபிப்பதே நம் உலகில் மிகப்பெரிய சாகசமாக, சாதனையாக மாறுகிறது. அதற்காகவே மிக அதிகமான நேரமும், சொற்களும், ஆற்றலும் செலவிடப்படுகின்றன. இப்போது மீண்டும் தாய்ப் பாசத்துக்கு வருவோம். தாய்ப்பாசத்தைகாட்டமுடியுமா? அதற்கு பொருண்மையான இருப்பு உண்டா? அதை நம் இருத்தலின் சொந்தமாக கருத முடியுமா? தாய்ப்பாசம்உண்மையானதா?”


இவ்விசயத்தில், ஹைடெக்கர் ராஜ் கிரணை, தனுஷை தழுவிக் கொள்வார் என நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு தாய் தன் பாசத்தை அந்த கணத்தில் தன் மகன் / மகளிடம் காட்டுவதே உண்மை. அதை அவள் தன் குழந்தையைக் கண்டதும் செய்கிறாள், அவளை எதுவும் செலுத்த வேண்டியதில்லை, அவளுடைய குழந்தை இந்த உலகில் இருக்கையில், அதே உலகை அவளும் பகிர்ந்து கொள்கையில், அவள் தானாகவே அவனை நோக்கி செலுத்தப்படுகிறாள் என அவர் கூறுவார். அதுவே பாசத்தின்உண்மை”. அந்த பாசத்தின் பின்னால் இருந்து செலுத்துவது சுயநலமா, அவள் தன் பிள்ளையைப் போல இன்னொரு தாயின் பிள்ளையை நேசிப்பாளா? அவள் தன் பிள்ளைக்கு இணையாக இச்சமூகத்தின் எல்லா பிள்ளைகளையும் நேசிப்பாளா என்பது ஹைடெக்கருக்கு முக்கியம் அல்ல. (அது நம் இருத்தலை மீறிய கேள்விகள். அக்கேள்விகளை அவர் தொழில்நுட்பத்தின் [சமூக சடங்குகள், அந்நியமாதலை உருவாக்கும் போக்குகள்] பகுதியாகப் பார்க்கிறார்.) ஆக, ஹைடெக்கர் அன்னையரின் பக்கம் தான்


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...