முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதப்பிரச்சாரகர்களுடன் சேர்ந்து கடவுளைக் கொல்வது




நான் பிறந்த வளர்ந்த பகுதியில் கிறித்துவர்கள் அதிகம். பள்ளியில் குறிப்பாக என்னுடன் படித்த மாணவர்களில் இஸ்லாமியர் எனக்கு நெருக்கமாக இருந்தனர். அல்லது அவர்களுடைய ஆவேசமான, சினேகமாக, வெளிப்படையான குணம் எனக்குப் பிடித்திருந்தது. நான் பொதுமைப்படுத்த விரும்பவில்லை என்றாலும் இஸ்லாமியர் குறித்த என் மனப்பதிவு இது தான்; இஸ்லாமியர் இணக்கமாக ஒரு கூட்டான சமூகமாக வாழ்வதும், இந்துக்கள், கிறித்துவர்களைப் போல முழுக்க ‘நவீனப்படாமல்’ இருப்பதும் எனக்குப் பிடித்திருந்தது. மற்ற மதங்களில் ஒருவர் காலமானால் பக்கத்து வீட்டாருக்கே தெரிந்திருக்காது. ஆனால் நான் கவனித்த வரையில் ஈமச்சடங்குகளில் இஸ்லாமியர் பெருங்கூட்டமாக கலந்து கொண்டு ஆறுதல் அளிப்பதும் உதவுவதும் என்னைக் கவர்ந்தது. அதே போல, மத்திய வர்க்கத்தைப் பொறுத்தமட்டில் அதிக சிக்கலில்லாத பெண்கள் இஸ்லாமிய பெண்களே என்றும் என் அவதானிப்பு. அவர்களுடைய குடும்பச் சூழல் அவர்களை (இந்து, கிறித்துவப் பெண்களைப் போல) முற்போக்கு சிந்தனை, பிற்போக்கான மரபார்ந்த நம்பிக்கைகள், நவீன உலகம், பழமையான இறுக்கமான க்கடமைப்புகள் இடையே மூச்சுமுட்ட வைப்பதில்லை என நினைக்கிறேன். அந்த விதத்தில் ‘இயல்பான’, சிக்கலில்லாத, சற்றே (நல்ல அர்த்தத்தில்) ‘பின்நவீனக்’ குடும்ப அமைப்பு அவர்களுக்கு சாத்தியப்படுகிறது. இதுவொன்றும் அறுதியான கருத்தல்ல - நான் பேசி, பழகிய அளவில் சொல்கிறேன். (கல்வியும், வசதி வாய்ப்புகளும் அதிகமாக இஸ்லாமிய குடும்பங்களும் இந்து, கிறித்துவக் குடும்பங்களைப் போலவே மாறும்.) கூடவே அவர்களுடைய சுவையான உணவுப் பழக்கம், நெருக்கமான சொந்தங்கள் கொண்ட வாழ்க்கை முறை. இன்னொரு விசயம் - இதை நான் சொன்னதும் ‘ரொம்ப பிற்போக்கான கருத்து’ என நீங்கள் முகம் சுளிப்பீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இதுவும் ஒரு முக்கிய எதார்த்தமே - நான் பார்த்தவரையில் இஸ்லாமிய இளைஞர்களில் ஒரு பகுதியினர் பள்ளிக்கல்வியை முடித்து விட்டு நேரடியாக வணிகத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள். இது ஒருவிதத்தில் நல்லதே; ஏனென்றால் நவீனக் கல்வி நம்மை ஒரு இறுக்கமான அசெம்பிளி லைன் வாழ்க்கைக்கு தயாராக்கி பரஸ்பரம் அந்நியர்களாக்கி விடுகிறது. படித்து வெளிவந்ததும் இதயம் துடிக்கும் ஒரு ரோபோ ஆகி விடுகிறோம். படிப்பையும், நவீன வாழ்க்கையையும் எட்டியே வைக்கும் போது ரத்தமும் சதையுமான ஒரு வாழ்க்கைக்குள் நுழைய இந்த இஸ்லாமிய இளைஞர்களால் முடிகிறது. படித்த இஸ்லாமிய இளைஞர்களிடம் ஒரு ‘புத்திசாலித்தனம்’ , சிந்தனையின் விலகல், அடுத்த மனிதன் மீதான ஒரு சிறிய சந்தேகம், கேள்வியுணர்வு வந்து விடுகின்றன; ஆக, கல்வியால் நன்மை இருக்குமளவுக்கு தீமையும் உண்டு.


 தொலைவிலோ அண்மையிலோ இருந்து பார்க்கையில் “இஸ்லாமிய ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்று சற்றே பொறாமைப்பட்டுக் கொள்வேன். (இஸ்லாமிய பெண்களின் உரிமைப்பிரச்சனைகளை நான் இங்கே கொண்டு வரப் போவதில்லை; அது வேறு பிரச்சனை.) ஆனால் தீவிர மதவாத (வஹாபிய) மனநிலை கொண்ட இஸ்லாமிய குடும்பங்களின் தூய்மைவாதத்துடன் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. பதின்வயதில் இருந்தே (கலை இலக்கியப் பெருமன்ற நண்பர்கள் வழி) எனக்கு இது குறித்து புரிதல் உண்டு. ஆனாலும் யார் நட்பாக நெருங்கினாலும் தடையின்றி பழக அவர்களால் முடியும்; இன்னொரு பக்கம், ‘நம்மவர்களோ’ சாதி, மொழி, ஊர்ப்பின்னணி என ஒவ்வொன்றையும் மதிப்பிட்டே நம்மை அங்கீகரிக்கலாமா என கடைசி வரை ஊசலாடிக் கொண்டிருப்பார்கள்.


ஒருவேளை நான் இந்த பிறவியில் இஸ்லாமியனாக பிறந்திருந்தால் கூடுதலாக மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் என பகற்கனவு கண்டதுண்டு. ஆனால் அந்த மதம் நோக்கி நான் நகர்ந்ததில்லை. எம்.ஸி.ஸியில் என் ஜூனியராக படித்த ஒரு நண்பர் அண்மையில் என்னைத் தொடர்பு கொண்டார். அவருடைய இஸ்லாமிய பெயர் எனக்கு புதிதாக இருந்தது. இந்துப் பெயரை சொன்னதும், பழைய புகைப்படத்தைக் கண்டதும் யார் என அடையாளம் கண்டுகொண்டேன். அவர் இஸ்லாத்துக்கு மாறி விட்டார். எப்படி எனக் கேட்டால் கல்லூரியில் படிக்கும் போதே தனக்கு அந்த நாட்டம் இருந்ததாகவும் (எங்களுக்கு அப்போது இது தெரியாது), பின்னர் மதம் மாறி ஒரு இஸ்லாமியப் பெண்ணை மணந்ததாகவும் என்னிடம் கூறினார். இப்போது குழந்தை, உறவுக்காரர்கள் என நிம்மதியான வாழ்க்கை. அப்போது தான் நான் ஏன் ‘இப்படி’ ஒரு திசையை எடுக்கவில்லை என யோசித்தேன் - ஒரு முக்கிய காரணம் என் வளர்ப்பு: 


பொதுவாக நம்பிக்கையாளர்கள் எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும், கொள்கைக்கும் முழுமையாக மாறவும் தம்மை ஒப்புக்கொடுக்கவும் செய்வார்கள். என் அப்பா என்னை வேறுவிதமாக வளர்த்தார். அவருக்கு தாய், தந்தைப் பாசம், குடும்ப அமைப்பின் மகத்துவம், வேலையின் மகத்துவம், கடவுளின் மகத்துவம் என எதிலும் நம்பிக்கை இல்லை. அவர் இந்த கருத்துக்களை, கட்டமைப்புகளை தொடர்ந்து தூஷணை செய்வதைக் கேட்டே நான் வளர்ந்தேன். என் இளமைப் பருவ அனுபவங்களும் உறவுகள், நம்பிக்கைகள், உழைப்பு, கல்வி என ஒவ்வொன்றிலும் பல முரண்களைக் காட்டின. எதையும் சந்தேகிப்பதும் கேள்வி கேட்பதுமே சிறந்தது என அப்பா எனக்கு மறைமுகமாகக் கற்றுக் கொடுத்தார். சொல்லப் போனால் தன்னிடம் ஒரு மகனாக நான் பாசம் வைக்க வேண்டும் என்று கூட அவர் கோரவில்லை. “உன்னைப் பெற்று எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்தேன் தெரியுமா?” என என் அப்பாவோ, அம்மாவோ ஒரு தடவை கூட என்னிடம் கூறியதில்லை.

 இது ஓரளவுக்கு “தளைகள்” இன்றி வளர எனக்கு உதவியது. எனக்கு பெரிதாக உதவிய இன்னொரு விசயம் என்னுடைய “கால்”. அதைப் பார்க்கும் போதெல்லாம் இந்த உலகம் “சரியானதாக”, “நேரானதாக” இருக்க வேண்டியதில்லை என நினைப்பேன். “நேரற்ற” உலகில் “நேரான” கடவுளை, குடும்பத்தை, அமைப்புகளை நான் சுலபத்தில் ஏற்பதில்லை.


இளமையில் நான் சாமியார்களை சந்தித்த போதும், ஆன்மீக உரைகளைக் கேட்ட போதும் ஆர்வம் கொண்டேன், ஆனால் அவர்கள் சொல்வதை மனப்பூர்வமாக நம்பவில்லை. வேதாகமம், திருக்குரான் போன்ற நூல்கள் என்னிடம் அளிக்கப்பட்ட போதும் அவற்றை ஒரு இலக்கிய நூலைப் போலத் தான் கண்டேன். இறைவாக்கு என நான் நம்பவில்லை. ஆனாலும் சாமியார்கள் என்னை ஈர்த்துக் கொண்டே இருந்தார்கள். கூடவே தத்துவமும். எந்த மதத்தவரும் மெய்யியல் சார்ந்து உரையாடினால் அவர்களுடன் சிறிது தூரம் சென்று விடுவேன். எதிர்கொண்ட எல்லா மதங்களிலும் என் மனம் ஈடுபட்டு பின்னோடி விடும். பிறகு மீண்டு வருவேன். இறைவனை, மதத்தை நம்பாத நான் ஏன் மதத்தின் மெய்யியல் உரைகளால் ஈர்க்கப்படுகிறேன் எனக் குழம்பினேன். அது வாழ்வனுவத்தின் இருத்தல் மீதான ஈர்ப்பே, கடப்புநிலை அனுபூதி மீதான ஆர்வமே என பின்னால் இருத்தலியல்வாதம், குறிப்பாக ஹைடெக்கரின் தத்துவம் எனக்குப் புரிய வைத்தது. ஆனாலும் அதிலும் ஒரு சன்னமான மீமெய்யியல் (metaphysics) ஒட்டிக் கொண்டிருந்தது. உலகுக்கும் ஆகாயத்துக்கும் இடையில் என்னை இது ஊசலாட வைத்தது. இது ஏன் என பின்னர் நாகார்ஜுனர் தன் பௌத்தம் மூலம் எனக்குப் புரிய வைத்தார். இந்த மீமெய்யியலின் சாராம்சவாதமே சிக்கல், அந்த பொய்மையை கண்டுணர முடிவதே பெரிய விடுதலை என ஒரு திசையை அவர் எனக்குக் காட்டினார். 


இப்போது சாமியார்களும், மெய்யியல் உரையாளர்களும், மதப்பிரச்சாரகர்களும் எனக்கு வேடதாரிகளாக புலப்பட்டார்கள். அவர்களுடைய கருத்துக்கள், வாதங்கள் எங்கே சுற்றி வந்தாலும் நாகார்ஜுனர் முன் தவிடுபொடியாகி விடும். இந்த பின்னணியை எதற்கு இங்கே சொல்கிறேன் என்றால் இன்று ஒரு இஸ்லாமியர் எனக்கு அவருடைய சமயநெறியை புரிய வைக்கப் போகிறேன் என உள்பெட்டியில் செய்திகளாக அனுப்பிக் கொண்டிருந்தேன். நான் பௌத்தத்தை நம்புகிறேன் என்ற போது அதிலுள்ள போதாமைக்கும் இஸ்லாமே பதிலளிக்க முடியும் என்றார். அவருடைய பதிலில் இருந்து அவருக்கு பௌத்தமும் தெரியாது, இஸ்லாமிய மெய்யியலும் தெரியாது எனப் புரிந்து கொண்டேன். நான் அவரைப் போன்றோரிடம் சொல்ல விரும்புவது இதுதான் - ஆன்மீகத்தை  காட்டி குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போல என்னை அடுத்தவர்கள் மயக்கி அழைத்து செல்லும் பருவத்தை நான் இப்போது கடந்து விட்டேன். 


பொறுமையும் விடுதலைக்கான ஆர்வமும் உண்டெனில் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நாகார்ஜுனரைக் கற்றுத் தருகிறேன். உங்கள் சிறையில் என்னையும் ஏன் அடைக்க வேண்டும்? இறைவனைக் கொன்று விட்டால் இருள் விலகி விடும். உங்களுடைய கணிசமான துன்பங்களும் அகன்று விடும்.

என்ன அதை வாழும் ஒவ்வொரு நொடியும் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காக புத்தியைப் பழக்க வேண்டும். மதப்பிரச்சாரகர்களே, உங்கள் நேரத்தை வீணடிக்காமல் என்னிடம் வாருங்கள். நீட்சே சொன்னது போல நாம் மெய்யியல் கொலைகாரர்கள் ஆவோம். இறைவனைக் கொல்வதன் ஒரு பிரச்சனை கொல்லக் கொல்ல அவன் உயிர்த்தெழுந்து கொண்டே இருப்பான் என்பது. ஆனால் அவன் சாவதற்கும் உயிர்ப்பதற்கும் இடைப்பட்ட நொடியில் நாம் முழுமையான நிம்மதியுடன், உயிர்ப்புடன் வாழலாம். சாகத்தக்க இறைவனின் கட்டளைகளை எனக்கு ஏன் சொல்லித் தருகிறீர்கள்? அவரை எப்படிக் கொள்வதென நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன். வாங்க பாஸ்! இறைவனின் கழுத்தை நெரிப்போம்!

கருத்துகள்

Ram இவ்வாறு கூறியுள்ளார்…
Abhilash, where to go for Jagarjunars preachings....????
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நாகார்ஜுனரைப் பற்றி நானே எழுதியிருக்கிறேன். என் பிளாகில் தேடுங்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...