முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிர்த்தல் - ஆர். அபிலாஷ்



என் பால்கனியை ஒட்டிய

வேப்பமரத்தின் சொரசொர்ப்பான அடர்பழுப்பு பட்டை மீது

இவ்வளவு மழையிலும்

ஊளையிடும் காற்றுக்கு அசைந்து கொடுக்காமல்

துளிகள் முலைக்கணுக்களாய் தொங்கும்

ஜொலிக்கும் இலைகளுக்கு மத்தியில்

நடந்து செல்லும் சிற்றெறும்பே

உன் வழியில் எதிரே வந்தமர்ந்த சோப்புக்குமிழியில்

எதைக் கண்டாய்?

அதன் கதவுகளை அவ்வளவு சன்னமாக

தட்டிப் பார்த்து விட்டு

நீ வந்த வழியிலே

திரும்ப சென்று விட்டு

மீண்டும் வந்த போது

அது அதே இடத்தில்

சிறிய ஊடுருவும் நடுக்கத்துடன் இருந்தது.


தன் ஷணப்பொழுது வாழ்வை

இந்த உலகில் உன்னுடன் மட்டுமே

பகிர்ந்து கொள்ள அது காத்திருந்தது

உன் நடை எனும் கூரக்கத்தியால்

அதை நீ அதன் மாரைப் பிளப்பாய் என

அல்லது இன்னும் மென்மையாய்

ஒரு குழந்தையின் நம்பிக்கையுடன்

நீ அதன் கதவைத் தட்டி உள்ளே புகுந்து

 பார்ப்பாய் எனும் ஏக்கத்துடன்

காத்திருந்தது

ஒவ்வொரு உயிரையும் போல

தன் அன்பின் உச்சத்தை தன் அழிதலில் மட்டுமே

காண முடியும் என அதுவும்

நம்பியது.

அது தன் உயிர்த்தலை தன் இன்மையுடன்

பிணைத்திருந்தது.


திரும்ப வந்த நீ

மற்றொரு முறை தொடாமல் தொட்டுப் பார்த்தாய்

ஆனால் நடுக்கம் அலைபாயும் கண்ணாடிப் பரப்பின்

அருகில் வந்ததும் நீ நின்று விட்டாய்

நீ உன் சக எறும்புகள் விட்டுச் சென்ற

வாசனைத் தடத்தைத் தொடர்ந்து

அப்புறம் சென்று விட்டாய்

அப்போது உன் தோற்றம்

பல்கிப் பெருகி ஒருமுறை நடுங்கியது.

நீ மறைந்ததும் ஊடுருவும் நடுக்கம்

காற்றில் தடுமாறும் ஊடுருவலாகியது

ஒரு பக்கம் பிதுங்க மறுபக்கம் வளைந்தது


நீ அதை ஊடுருவி சென்று விட்டாய்

என நம்பி உன் பக்கம் வந்து

கையால் உன் சிறிய முகத்தைத் தொட்டுப் பேசிய

எறும்பிடம் நீ மறுசைகை பண்ணிய போது

அது இல்லாமல் ஆகியிருந்தது.


உனக்குப் பின் வந்த உன் மற்றொரு சகா

ஈரமாய் படிந்திருந்த வட்டத்தைக் கண்டு

திகைத்து நின்றது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...