அவன் யானையின் கண்களை
குளோசப்பில் எடுக்க வந்திருந்தான்
தன் பெரிய லென்ஸை திருகி
ஒரு சட்டகத்துக்குள்
கொண்டு வந்து கொண்டிருக்கும் போது
யானை ஒரு காலை முன்னெடுத்து வைத்தது
அது அவனை ஏனோ அதிருப்தியாக்கியது.
அவன் சில அடிகள் பின்னுக்கு சென்று
மீண்டும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு
தன் இலக்கை சிறைப்பிடித்தான்.
காற்று ரம்மியமாக வீசியது.
ஒளி நிறங்களுடன் துவந்தம் செய்து
தன்னை அழித்து அழித்து மீள் சமைத்தது.
தொலைவில் ஒரு மயில் அகவுகிறது.
அகண்டு கிடக்கும் புல்வெளி
சிலிர்த்தது பிடரிமயிரைப் போல.
அவனுக்கு தன்
கலைக்குள் அந்த உலகம்
நழுவி விழுந்து விட்டதாக
அது ஒரு அபூர்வ தருணம் என்று
தோன்றியது.
புன்னகை.
மீண்டும் நெற்றி சுருங்க கவனம்.
இப்போது யானை மீண்டும் அசைந்தது.
அவன் பார்த்துக் கொண்டிருக்க
அது விரைந்து முன் … னே … றிட
லென்ஸ், அவன் மனத்தில் வரைந்து வைத்த ஒளிச்சட்டகம்,
அவனுக்கும் உலகுக்குமான கற்பனையான தொலைவு
என ஒவ்வொன்றாக போய் விழுந்தன
எல்லையற்ற சுடர்விடும் ஆகாய நீலத்துள்.
இப்போது தான் எங்கிருக்கிறோம்
எனக் குழம்பினான்.
சுதாரிக்கும் முன் யானை தும்பிக்கையை
நீட்டி அவன் தலையில் இருந்த
தொப்பியைப் பறித்தது.
அவன் ஒரு குழந்தையைப் போல
வியப்புடன் அந்த நாடகம் தன்முன் அரங்கேறுவதை
வேடிக்கை பார்த்தான்.
யானை தொப்பியை லாவகத்துடன்
தன் நெற்றியில் வைத்துப் பார்த்தது.
தன் தலை அவ்வளவு பெரிது
என யானை அதுவரை யோசித்ததில்லை.
ஒரு கவிஞன் ஒவ்வொரு சொல்லாக எடுத்து
எடையிட்டு கீழே வைப்பது போல
அது தொப்பியை எடுத்து எடுத்துப் பார்த்தது.
யாரோ ஹலோ சொல்வதைப் போல
காற்றில் அதை ஆட்டியது.
தன் மனதுக்குள் அதை
மீண்டும் மீண்டும் எடுத்தது
மீண்டும் மீண்டும் அணிந்தது.
அந்த தொப்பி
தன் தலையை விட சிறிதாக இருக்கிறதே
என ஒரு கணம் தோன்றியதே என்னவோ
தும்பிக்கையை நீட்டி
எடுத்த இடத்தில் திருப்பி வைத்தது.
வியப்பு முழுக்க அடங்கும் முன்பே
அவன் பார்த்துக் கொண்டிருந்தான்
அவன் தலையை விட
தொப்பி
பெரிதாகிக் கொண்டே வந்தது.
Comments