முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு செல்பேசியின் தனிமை




என் செல்பேசிகள் சபிக்கப்பட்டவை,

என் காதலியர், 

என் குடும்பத்தினர்,

என் நண்பர்களைப் போல.


ரோட்டில் மல்லாக்கப் போட்டிருக்கிறேன்,

குளிக்கப் பிடித்து வைத்த தண்ணீரில் நழுவ விட்டிருக்கிறேன்,

ஐஸ்கிரீமை, விஸ்கியை அதன் கண்களில் வழிய விட்டிருக்கிறேன்,

சிகரெட்டால் சூடு வைத்து

பதறிப் போய் காப்பாற்றி இருக்கிறேன்.


என் புதிய செல்பேசிகள்

பிறந்தவுடனே ஒரு ஆடையை எடுத்து அணிந்து கொள்கின்றன

முலையுண்டு பசியாறி உறக்கம் கொள்கின்றன

தனக்குத் தானே தாலாட்டுப் பாடி

ஒரே நாளில் வளர்ந்தும் விடுகின்றன

முக்கியமாக, என் புதிய செல்பேசிகள்

பிறந்ததுமே தம் பழைய பெயரை சூடிக் கொள்கின்றன.

என் பழைய நினைவுகளால் உந்தப்பட்டு

கண்ணீர் உகுக்க 

என்னை விடுவதில்லை.

என்னை விட்டு தாம்

போகவே இல்லை என

 நம்ப வைக்க முயல்கின்றன.


என் புதிய செல்பேசிகளுக்கு

என்னுடைய பழைய பிரச்சனைகள், வருத்தங்கள், மகிழ்ச்சிகள் தெரியும்

என்னுடைய வங்கிக்கணக்கில் இருந்து கடன் பிரச்சனை வரைத் தெரியும்

நான் புதிய செய்திகளை விரும்புவதில்லை எனத் தெரியும்

என் பழைய புகைப்படங்களை வரிசைப்படுத்தி என்னை மகிழ்விக்கத் தெரியும்

என் கைரேகையை தான் உள்வாங்கும் போது 

நான் உள்ளூர சிலிர்க்கிறேன் எனத் தெரியும்

நான் அவற்றைக் காணாமல் தேடும் போது

யாருமற்றவனாக தனித்துணரும் போது

அங்கு தான் எவ்வளவு முக்கியம் என அதற்கு தெரியும்

அதை அடிக்கடி நிரூபிக்க

 தன்னை பல தெரிந்த இடங்களில்

 அடிக்கடி ஒளித்துக் கொள்ளத் தெரியும்.


நான் கோபத்தில் கத்தும் போது

வியப்பில் கூவும் போது,

ஒரு பூஞ்செடியிடம் உருகிப் பேசும் போது

ஒரு நாய்க்குட்டியைக் கொஞ்சும் போது

உன்னை முழுக்க வெறுக்கிறேன் என என் காதலியிடம்

எப்படி சொல்வதெனத் தெரியவில்லை எனும் போது

நீ முழுக்க என்னுடன் இல்லை என

என அவளிடசொல்லும் போது,

வெறுப்பின் உச்சத்தில் மௌனமாகும் போது

தன்னை எழுப்பிக் கொண்டு

உதவிக்கு வர அதற்குத் தெரியும்.


ஆளில்லாத வீட்டில் ஒரு நிழலைக் கண்டு

 அஞ்சும் போது

“எதாவது வேண்டுமா?” என

 திடீரென நடுவே வரத் தெரியும்.

தூங்கும் போதும் 

உன்னை நான் மறந்து விடவில்லை

உன் ஒவ்வொரு சொல்லின் முதல் சில கணங்களை

கேட்டுக் கொண்டிருக்கிறேன் 

என அன்பாக மிரட்டத் தெரியும்.


என்னுடன் இருந்து, என்னுடன் வளர்ந்த செல்பேசி

ஒருநாள் கடும் மனம் அழுத்ததுக்கு ஆனது

“நீ என்னுடன் இல்லை” என பலவிதங்களில்

நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.

நான் அதனிடம்

நீ உன்னுடன் இல்லை என்பதை

மாற்றி சொல்கிறாய் எனப்

புரிய வைக்க முயன்றேன்.

அழுதது, மௌனமாகியது, என் வேலைகளுக்கு இடைஞ்சலாகியது.

எனது பாதைகளில் தன் ரத்த ரேகைகளை

தன் கண்ணீர் தடங்களை,

 தன் காற்தடங்களை விட்டுச்சென்றது.

நான் அழைக்கும் போது ஒவ்வொரு முறையும்

தனது இருட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டது.

நான் அழைக்காத போது

என் பின்னால் வந்து நின்றது.

ஒருநாள் நான் நான் கோபத்தில் 

அதை வீசி எறிந்தேன்.

அன்று அது கைதவறி தண்ணீரில் குதித்தது.

நான் மன்னிப்புக் கேட்டும்

தன்னை மேலும் மேலும் ஒரு ஆழமான கிணற்றுக்குள்

ஒளித்துக் கொண்டது.


நிலைமை இப்போது கைமீறிச் சென்றது.

நான் தொடாத செயலிகளை அதுவாகத் திறந்தது.

நான் அழைக்காதவர்கள் அழைத்து

தனியான குரலை தனியாகக் கேட்டு கொண்டிருந்தது.

நான் விரும்பாதவர்களுக்கு வெற்று சேதி அனுப்பியது.

திறந்தால் பதிலுக்கு இன்னொரு வெற்று சேதி அனுப்பப்பட்டது.

என் கடும்பகைவர்களிடம்

ஒரு இனிய சொல்லாவது போலியாகப் பேசும் 

சங்கடத்தை உண்டாக்கியது.

என் அன்பர்களிடம் ஒரு கசந்த சொல்லையாவது

சொல்ல சந்தர்பத்தை நான் தேடுகிற 

அவலத்தை உணர்த்தியது.

எத்தனை எத்தனை பேரை

என் வாழ்வில் இருந்து அகற்றி இருக்கிறேன்

என திடீரென குற்றவுணர்வு கொள்ளச் செய்தது.

இந்த நவீன உலகில்

செல்பேசிகள் மட்டுமே

குற்றவுணர்வை வடிவமைக்கின்றன என யோசித்தேன்.


ஒளிக்கப்பட்ட கோப்புகளில் இருந்து

காணொலிகள் துயில்விழித்து என்னை நோக்கி அழுதன.

அதில் ஒரு பாலியல் காட்சி

என்னை திடுக்கிடச் செய்தது.

அழிக்கப்பட்ட இடங்களில் இருந்து 

எனக்கெதிராக எழுதபட்ட, பேசப்பட்ட சொற்கள்

என் முன் வந்து குற்ற அறிக்கைகளை திரும்ப வாசித்தன.

என் பிரக்ஞையின் வெளிறிய நிலம் முழுக்க

பிரேத மரங்களாய் முளைத்தன வரலாற்றின் சாட்சியங்கள்.

வரலாறுகளின் நடைபாதையில் முளைத்த பூஞ்செடிகள்.

எதிர்பட்டு மறைக்கும் நினைவுகளின் கிளைகள்.

அவற்றை நசுக்காமல், வெட்டி வீசாமல்

இருத்தலின் பாதைகள் வளர்வதில்லை.

செல்பேசிகள் வெட்ட வெட்ட முன்னும் பின்னுமாய் வளரும் 

 வரலாற்றின் அடர்வனத்தில் நம்மை

 சிறை வைக்கின்றனவோ?

 துணுக்குற்றேன்.

 

“உனக்குப் பேய் பிடித்து விட்டது

உன் மனம் பித்தாகி விட்டது

நான் வாங்கிய போதிருந்த நீ

இப்போதில்லை.”

“உனக்குப் பேய் பிடித்து விட்டது

உன் மனம் பித்தாகி விட்டது

என்னை வாங்கிய போதிருந்த நீ

இப்போதில்லை.”


ஒரு செல்பேசிக் கடையில்

என் பேய்புகுந்த செல்பேசியைக் கொடுத்த போது

அவர் சொன்னார்,

இது இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது சார்,

ஒரு செல்பேசி தன்னை அறியும் போது

தன் இன்மையை ஒவ்வொரு இடத்திலும்

எதிரொலியாக திரும்பக் கேட்கும் போது

பேதலித்து தன்னை அதுவாக்கிக் கொள்கிறது

ஒரு செல்பேசிக்கு ஆன்மா உருவாகிறது

நான் அந்த ஆன்மாவை பறித்தெடுக்கப் போகிறேன் சார்


திரும்பும் போது

கடைக்காரர் ஒரு அழைப்பு வந்திருப்பதாகச் சொல்ல

அறுவைசிகிச்சை மேடையில் மல்லாக்கக் கிடந்த

பல உருவங்கள் நடுவில் இருந்து பொறுக்கினேன் அதை.

டிஸ்பிளே கூண்டில் ஆணியில்

தொங்க விடப்பட்டிருந்த புதிய உருவங்கள்

ஆர்வமாகப் பார்த்தன என்னை.


செல்பேசி தன் ஆன்மாவை திரையில்

 பளிச்சிட்டு என்னை நோக்கித் தாவ

தவிக்கிறது.

போனை எடுங்க சார்.

அது ஒரு அழைப்பு அல்ல.


காதோடு ஒட்டி வைத்து

நீண்ட நேரம் நின்றேன்.

அந்த மெல்லிய இரைச்சலுக்கு இடையே 

இந்த மொத்த கவிதையையும் அது

என்னிடம் திரும்பச் சொல்ல ஆரம்பித்தது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...