Skip to main content

கிஷோரில் இருந்து சாட்டை முருகன்களை வரை ஆதரிக்கிற நடுநிலையாளர்கள்




சாட்டை முருகன் கைதை ஒட்டி கண்டனம் தெரிவித்து எழுதிய சமஸ் அதற்குள் சில குழப்பமான caveatsகளையும் வைக்கிறார். முதலில், தான் “அவதூறு, வசை, பொய்ப் பிரச்சாரம், வன்மத் தாக்குதல்களுக்கு எந்த இடத்திலும் 'நடுநிலை' என்ற பெயரில் இதுவரை இடம் அளித்ததும் இல்லை” என்கிறார். இது சரி என்றால் முதல்வர் ஸ்டாலின் ஒரு தந்தை, தாய்க்கு பிறந்தவர் அல்ல என சாட்டை முருகன் கூறியது வசையாகாதா? சாட்டை முருகன் ஒரு தலைவரை இவ்வாறு வசைபாடும் போது அவருடைய பெற்றோரின் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். இது வசை, அவமதிப்பு அல்லவென்றால் வேறென்ன? சமஸ் ஒரு மாற்றுப் பெயரை அளிக்கிறார் - தவறான கருத்து! ஆஹா!

 “'கருத்துச் சுதந்திரம் எப்போதும் தவறான கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையையும் உள்ளடக்கியதுதான்.'”


எனக்கு உண்மையிலேயே புரியவில்லை - திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்தே சகிப்புத்தன்மை இல்லாமல் மாற்றுக்கருத்தாளர்களை கைது செய்து வருவதாக சமஸ் கூறுகிறார். இதை திமுக ஆதரவு எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் கண்டிப்பதில்லை என்று வேறு வருந்துகிறார். அட, யார் அந்த ‘தவறான கருத்து’ கூறி கைதான மேதைகள், போராளிகள் என்று பார்த்தால் “ஹலோ நான் தாங்க அது” என கைதூக்குபவர் நமது கிஷோர் கெ ஸ்வாமி.


“தமிழக அரசு சமீப காலமாக இணையவெளியில் இப்படிப் புழங்குவோர் மீது காவல் துறை வழி  எடுத்துவரும் நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது. 'எல்லோர் குரல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்;  களங்கங்கள் ஏற்படா வண்ணம் இந்த ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்' என்கிற  முதல்வரின் முனைப்புக்கு  எதிரானது.” என்கிறார் சமஸ்.


 கிஷோர் யார்? அவர் தொடர்ந்து பெண்களை அவதூறு பண்ணுவது, பாலியல் தொந்தரவு பண்ணுவது, தலைவர்களை பாலியல் அவதூறு செய்து மிரட்டுவதையே தொழிலாக பண்ணி வந்தவர். அவர் சொல்லுவதை அரசியல் சமூகக் கருத்து என சமஸ் கூறுகிறாரா? 


“பல கோடிப் பேரின் பிரதிநிதியான ஓர் அரசு பெரிய உள்ளத்தோடுதான் இவற்றை அணுக வேண்டும்.”


கிஷோர் கெ ஸ்வாமி கவின் மலர், நடிகை ரோகிணி போன்றோருக்கு செய்த அவதூறுகள், தொந்தரவுகளை அவர் சமஸ் தனக்கு ஒரு மகள்  மகள் இருந்து அவருக்கு செய்திருந்தால் அதை மன்னிக்க வேண்டிய “தவறான கருத்து” எனக் கூறி பெரிய உள்ளத்துடன் ஏற்றுக் கொள்வாரா? மாட்டார். அவர் மட்டுமல்ல, எந்த அறிவுள்ள மனிதனும் ஏற்க மாட்டான். கிஷோரில் இருந்து மாரிதாஸ், மதன் போன்றவர்கள் எந்த காத்திரமான அரசியல் விவாதங்களுக்குள்ளும் வராமல் அவதூறுகள் பரப்புவது, பாலியல் மிரட்டல்களில் ஈடுபடுவது என்றே பிஸியாக இருப்பவர்கள் - இவர்களை கருத்தாளர்கள் எனும் பட்டியலில் கொண்டு வருவதே ஆபத்தானது.


“இப்படி நான் எழுதுவதன் அர்த்தம், இன்று கைதுசெய்யப்பட்டிருக்கும் 'சாட்டை' துரைமுருகன் போன்றவர்களின் கருத்து அல்லது போக்குக்கான என்னுடைய ஆதரவு அல்ல என்று நண்பர்கள் சரியாகவே புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.” என்கிறார் சமஸ் அடுத்து. அவர்களுடைய ‘கருத்துக்களை’, ‘போக்கை’ அவர் ஆதரிக்கவில்லை, சரி. வேறெதைத் தான் ஆதரிக்கிறார்? அவர்கள் வசைபாடும் உரிமையையா? அதையும் இல்லையா? வேறெதை?


மாற்றுக்கருத்து சொல்லும், விமர்சனம் வைக்கும் உரிமையை. கருத்துரிமையை. ஆனால் கருத்துரிமைக்கும் வசையுரிமைக்கும் சம்மந்தம் இல்லையே. சமஸ் எதைத்தான் ஆதரிக்கிறார்?


என்னுடைய ஊகம் சமஸ் தமிழகத்தில் திமுக எதிர்ப்புக்காக அதிமுகவால் ஆரம்பத்திலும் பாஜகவால் பின்னரும் நிதியளித்து வளர்க்கப்படும் நா.த.க மற்றும் பாஜகவின் மறைமுக கடிநாய்களின் இருப்பை அவசியம் என நினைக்கிறார் என்பது. அதை நேரடியாக சொல்ல அவரால் முடியாது. என்ன பிரச்சனை என்றால் பாஜகவின் வளர்ப்புநாய்களாக ஊடகங்களில் பேசும் “வலதுசாரி ஆதரவாளர்கள்” எந்த தர்க்கபூர்வமான, காத்திரமான கருத்துக்களையும் சொல்வதில்லை. அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் நடுவே புகுந்து குழப்புவது, மதவெறியை தூண்டும் விதமாக பேசுவது, திராவிட மரபு குறித்த பொய்ச்செய்திகளை பரப்புவது, வாரத்துக்கு ஒருமுறை ஆட்சியை கலைப்பேன், மனிதவெடிகுண்டுகளை அனுப்பி மாநிலத்தை ஆள்வோரைக் கொல்லுவேன் என மிரட்டுவதே.

இத்தகையோரை நம் தனிப்பட்ட வாழ்வில் நாம் சகித்துக்கொள்ள மாட்டோம். கவின்மலர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் உறுதியானவர்கள் என்பதால் இந்த பாலியல் அவதூறுகளை, அதற்கு அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை பொறுத்துக் கொண்டு தொடர்ந்து போராடினார்கள். ஆனால் ஒரு பலவீனமான பெண் என்றால் தற்கொலை செய்திருப்பார். அப்போதும் சமஸ் “தவறான கருத்தை” சொல்லும் உரிமையை நாம் பறித்து விடக் கூடாது எனக் கூறுவாரோ? 


இவர்களை தனிவாழ்வில் ஒருவிதமாகவும், சமூக, அரசியல் வெளியில் மட்டும் வேறுவிதமாகவும் நடத்தி நாம் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? ஒரே காரணம் இவர்களே இன்று தமிழகத்தில் வலதுசாரி சிந்தனை, மதவாதம் காலூன்ற பேசுகிற சக்திகள் என்பது. இந்த ஐயம் எழக் கூடாது எனும் நோக்கிலேயே முன் ஜாமீன் போல சமஸ் அடுத்தொரு பதிவு இடுகிறார். அதில் தான் அஜ்மல் கசாபுக்கே தூண்டுத்தண்டனை அளிக்கக் கூடாது என முன்பு எழுதியவர் என்கிறார். எனில் என்ன சொல்ல வருகிறீர்கள் சமஸ், சாட்டை முருகனையும் கிஷோர் கெ ஸ்வாமியையும் எதிர்ப்பவர்கள் கசாபின் ஆதரவாளர்கள் என்றா? கசாப் ஒரு இந்தியன் அல்ல. ஆனால் இடதுசாரிகள் அப்சல் குருவுக்காக பேசினார்கள், காஷ்மீரின் தன்னாட்சிக்காக பேசினார்கள், அயோத்தி பிரச்சனையில் இஸ்லாமியருக்காகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களின் போது விவசாயிகள் பக்கமும் நின்றார்கள். நீங்களும் இந்த சந்தர்பங்களில் சிறுபான்மை மக்களுக்காக, போராளிகளுக்காக நின்றவர் என்றால் அதைப் பற்றி சொல்லலாமே, எதற்கு கசாபை இழுத்துக் கொண்டு வருகிறீர்கள் சமஸ்? என்னவிதமான அரசியல் இது?


நியாயமாக இவர்களை மொத்தமாக உள்ளே அனுப்ப வேண்டும். எனக்கு திமுக மீதுள்ள வருத்தமே இந்த அவதூறாளர்களை, சமூக, மத விரோதப் பேச்சாளர்களை, பெண்களையும் தலைவர்களையும் பாலியல் மிரட்டல் செய்து பணம் பறிக்கவும் வாயை மூட வைக்கவும் செய்பவர்களை அது மென்மையாக கையாள்கிறது என்பதே. ஆனால் சமஸோ இப்படி ஒரு தரப்பு இருக்கட்டுமே என்கிறார். நியாயமாக இந்த அரசு அவதூறு பரப்புவதையே தன் தொழிலாக வைத்திருக்கும் எச்.ராஜாவின் கருத்துக்கள் எந்த ஊடகங்களிலும் வரக் கூடாது என தடை விதித்து, அவரை கைது பண்ண வேண்டும். (அதை தமிழக பாஜக தலைமையே பட்டாசு வெடித்து தமக்குள் ரகசியமாக கொண்டாடும் என நினைக்கிறேன்.) அடுத்து, செய்தி சேனல்களுடன் ஒன்றிய அரசின் முகவர்கள் வைத்துள்ள புரிந்துணர்வை, ஏற்பாட்டை தரவுகளுடன் அம்பலப்படுத்தி அவர்கள் தமிழக துரோகிகளாக அறிவிக்க வேண்டும். அல்லது அப்படி செய்வோம் என எச்சரிக்க வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் சில சேனல்களும் பத்திரிகைகளும் பணத்துக்காகவும், சாதி மத வெறி காரணமாகவும் தொடர்ந்து பாரபட்சமாக, தமிழக மக்களுக்கு விரோதமாக பாஜகவை ஆதரிக்கிறது. இதை கண்டும் காணாதது போல தமிழக அரசு செல்வது இங்கு ஒரு மோசமான பிற்போக்குவாதம் பரவிட வழிவகுக்கும். 


அடுத்து, நா.த.க, ம.நீ.மை போன்ற கட்சிகளின் நிதி ஆதாரங்கள் குறித்து ஒரு விசாரணை நடத்தி எவ்வளவு கறுப்புப்பணத்தை வைத்திருக்கிறார்கள், அதை யார் அளித்தது, எப்படி கட்சியை துவங்கி இவ்வளவு விரைவில் பெரும் பணத்தை செலவழிக்க அவர்களால் முடிந்தது என மக்கள் முன் அம்பலபடுத்த வேண்டும். 


அடுத்து சாதிவெறியைத் தூண்டும் மோகன் ஜி போன்றோரின் படங்கள் வெளியாகாதிருக்கும் பொருட்டு ஒரு வலுவான சட்டத்தை இங்கு இயற்ற வேண்டும். அதையும் மீறி தலித்துகளையும் சிறுபான்மையினரையும் பொறுக்கிகளாகவும், வஞ்சகர்களாகவும் சித்தரிக்கிற இயக்குநர்களை கைது செய்ய வேண்டும்.  


ஆனால் திமுக அரசு இதையெல்லாம் செய்தால் சமஸ், ஶ்ரீதர் சுப்பிரமணியம் போன்றோர் ஐயோ கருத்து சுதந்திரத்துக்கு ஜலதோஷம் பிடித்துவிட்டதே என கையைப் பிசைந்து கொண்டு புலம்ப தொடங்கி விடுவார்கள். எனக்கு சத்தியமாகப் புரியவில்லை - கருத்து சுதந்திரத்துக்கு பொருள் பிற்போக்குவாதம், மக்கள் விரோதம், வலதுசாரி ஆதரவு என நடுநிலையாளர் அகராதியில் பொருளை மாற்றி விட்டார்களா?


ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்: எந்த கட்டத்திலும் வலதுசாரிகளை, இந்துத்துவர்களை, மதவாதிகளை மற்றமையாக மதித்து அவர்களுடைய உரிமைக்காக களமாடக் கூடாது. ஒருநாளும் அதிகார மையங்களை மற்றமையாக கருதி பரிந்து பேசக் கூடாது.


ஆனால் ஏன் நடுநிலையாளர்கள் இது தெரியாதது போன்றே எப்போதும் வலதுசாரி அரசியல் மீது மழைத்தண்ணீர் பட்டுவிடக் கூடாது என அவசரமாக குடைபிடிப்பவர்களாக இருக்கிறீர்கள்? ஏன் வலதுசாரிகளுக்கு ஜல்ப் பிடித்துவிடக் கூடாது என்று சதா பதறுகிறவர்களாக இருக்கிறீர்கள்? அதற்காக கருத்து சுதந்திரத்தை ஒரு கடவுளாக பாவிப்பவர்கள் என வேடம் போடுகிறீர்கள்?


உங்களுடைய பிரச்சனை உண்மையில் கருத்து சுதந்திரம் அல்ல என்று மட்டும் தெரிகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...