Skip to main content

பிக்பாஸும் Squid Gamesஉம்




Squid Games தொடரில் ஒரு காட்சி வருகிறது. பிக்பாஸ் வீட்டைப் போன்று ஒரு இடத்தில் நூற்றுக்கணக்கானோரை சிறைவைத்து அவர்களை நாளொன்று ஒரு ஆபத்தான விளையாட்டில் பங்கேற்க செய்கிறார்கள். ஒருநாள் மதிய உணவுக்கு ஒரே ஒரு முட்டையே கொடுக்கிறார்கள். பங்கேற்பாளர்களுக்கு பசி தாள முடியாமல் போகிறது. ஒருவர் முட்டைக்காக இன்னொருவரை அடித்துக் கொன்று விடுகிறார். உடனே இறந்தவருக்கு போக வேண்டிய பரிசுத்தொகையும் இறுதி வெற்றியாளருக்கான மொத்த பரிசுத்தொகையுடன் போய் சேர்வதைக் காட்டுகிறார்கள். ஒரு உயிர் போய் விட்டதே என பதறியவர்களை அதனால் தமக்கு வரப் போகும் பெரும்பணம் அதிகமாகக் கூடும் எனும் எண்ணம் அப்பதற்றத்தை நீக்கி மகிழ்ச்சியடைய வைக்கிறது. அதன் பிறகு அங்கு பணி செய்யும் காவலாளி ஒருவர் உணவை மிகக்குறைவாக அளிப்பதற்கான காரணத்தை சொல்லுகிறார்: உணவு இல்லாமல் ஆகும் போது, பக்கத்து தட்டில் உள்ளதை பிடுங்கியாவது சாப்பிட வேண்டும் என ஆசை ஏற்படும் போது, இனி இப்படித்தான் சாப்பிட்டாக வேண்டுமோ என பயம் வரும் போது, பக்கத்தில் இருப்பவன் செத்தால் தனக்கு கூடுதல் உணவும், அதிக பரிசுத்தொகையும் கிடைக்குமே என நம்பிக்கை வரும் போது பங்கேற்பாளர்களுக்குள் பகைமை வளர்ந்து சண்டை ஏற்படும், அவர்கள் பரஸ்பரம் அடித்துக் கொள்ள, எளியோர் அழிந்து வலியோர் மட்டும் பிழைப்பர். “இன்று இரவு அவர்கள் பசியில் பரஸ்பரம் அடித்துக் கொண்டு சாகப்போகிறார்கள்” என அந்த காவலாளி சொல்லுகிறார். அப்படியே நடக்கவும் செய்கிறது.


பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் ரேஷன் படி அளந்தே உணவு தரப்படுகிறது என அறிவோம். ப்ரியங்கா தான் முன்பு தட்டு நிறைய வழித்து வழித்து தின்றவள், இப்போது ரெண்டே சப்பாத்தியில் திருப்தி அடைய வேண்டி இருக்கிறதே என அங்கலாய்ப்பதைக் கேட்டேன். இதற்கு முந்தைய பருவங்களிலும் உணவுப்பற்றாக்குறை அங்குள்ளோரின் எரிச்சலை அதிகப்படுத்தி சண்டையை வளர்ப்பதை கண்டிருக்கிறோம். உ.தா., மலையாள பிக்பாஸ் மூன்றாவது பருவத்தில் யார் அதிகமாக தேநீர் அருந்துகிறார்கள், அதனால் தேயிலை தூள், பால் குறைகின்றன என்பதை வைத்து பெரிய மோதல்கள் நிகழ்ந்தன, குழந்தைத்தனமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. பிக்பாஸில் பசிக்கும் வெறுப்புக்குமான தொடர்பை நான் Squid Games பார்த்த பின்னரே சரிவர விளங்கிக் கொண்டேன்.


டயட், விரதம் இருப்பவர்களுக்கு இது தெரியும் - உணவு குறைய குறைய நம் கோபம் அதிகமாகும். ஒருமாதிரி எரிச்சல் நம் நரம்புகளில் சதா பற்றி எரியும். சட்டென யாராவது சீண்டினாலும் கத்தி கூச்சலிட்டு பிரச்சனை பண்ணத் தோன்றும். பசியுடன் இருக்கையில் நிறைய பேர் சூழ வாழ்வது சிரமம். பிக்பாஸ் நிர்வாகத்தினர் உணவு ரேஷனை ஒரு சவால் என்று சொல்லி நியாயப்படுத்தினாலும் அவர்களுடைய நோக்கம் வேறு.


Squid Gamesஇன் ஒரு மென்மையான வடிவமே பிக்பாஸ்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...